Sep 30, 2021

எழுத்தாளர் போப்பு

தொகுப்பு : ராதிகா விஜய்பாபு

            உடல் சார்ந்தும் உணவு சார்ந்தும் பல உண்மைகளை உணர்ந்து கற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் அந்தத் தகவல் அனைவரையும் சென்றடைந்து பயன் பெறும் வகையில் உடல் குறித்தும், உணவு குறித்தும், பல நூல்களைப் படைத்தும் மொழிபெயர்த்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளராக போப்பு உள்ளார்.

            எழுத்தாளர் போப்பு அவர்களின் இயற்பெயர் போ.புருஷோத்தமன்.

            விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் எனும் ஊரில் போத்திராஜ் பால நாகம்மாள் தபதியருக்கு 1960 ஆம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி போப்பு ஆறு குழந்தைகளில் முதல் குழந்தையாக பிறந்தார். சிறுவயது முதலே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 12 வயது முதலே நூலகங்கள் வழியாக கதைகள், கவிதைகள், நாவல்கள் என படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தனது பதினைந்தாம் வயதில் முதல் கவிதையை படைத்து இருக்கிறார். மாணவப் பருவத்தில் சக மாணவனின் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இலக்கிய உலகத்திற்கு அழைத்து வந்தது. அண்ணாவின் உரை, பாரதிதாசனின் கவிதைகள், பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் என இவர் இலக்கிய ஆர்வத்திற்கு விருந்தாக அமைந்தார்கள்.

            இவர் மனைவியின் பெயர் அலமேலு. இவருக்கு  மீனா, துர்கா என்று இரண்டு மகள்கள், இருவருக்கும்  திருமணம் முடித்து பாண்டிச்சேரியில் வசிக்கிறார்கள்.

            கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புப் பணி, இயற்கை சார்ந்த உணவகம், அக்குபங்சர் மருத்துவம் என வேறுபட்ட அனுபவம் கொண்ட போப்பு அவர்கள் கோவிலாங்குளம் கிராமத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து மதுரையில் தன் தொழில் கல்வியை முடித்தார். கோவையில் 3 வருடம் எல் ஜி பி  இல் பணியாற்றினார்.   பின் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் இல் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தக் காலகட்டத்தில் ஓசூர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு ஏற்பட்டு கையெழுத்து பத்திரிக்கையால் கவிதை, கட்டுரை, கதை என எழுத ஆரம்பித்து பின் அப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் அதன் பிறகு சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாக சென்று பத்து ஆண்டுகள் அங்கு வாசம் செய்தார்.

            1990 ஆம் வருடம்  கருப்பு மை என்ற சிறுகதை முதல் முறை கல்கி இதழில் பிரசுரமானது . அதே ஆண்டு இவர் எழுதிய இரண்டாம் சிறுகதையான வேரில் துடிக்கும் உயிர்கள் என்ற கதை உரத்த சிந்தனை என்ற அமைப்பின் மூலம் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதை தேர்வு செய்யப்பட்டு செம்மலரில் வெளியானது.

        1993 இல் கூடுகளை விட்டு கவிதைத் தொகுப்பு வெளியானது, பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2005ஆம் ஆண்டு நாளைக்கு மழை பெய்யும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 2010ல் புதுச்சேரிக்கு குடிபெயர்ந்து முழுநேர எழுத்தாளராக அரசியல், சுற்றுச்சூழல், நாவல் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மாற்றுமருத்துவம் உடல் மீதான ஈடுபாட்டின் பேரில் அக்குபங்சர் பயின்று தற்பொழுது பல நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.

            ஆரோக்கியத்தைப் பற்றியும் ஆரோக்கிய உணவுகளை பற்றியும் பல கட்டுரைகள் படைத்ததோடு இல்லாமல் ஓசூரில் அமுது நல உணவு என்ற  ஆரோக்கியமான உணவு வகைகளை முன்னிறுத்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.

            சில மொழிபெயர்ப்பு நூல்களை படித்து ஏற்பட்ட அதிருப்தியால் பட்டினி வயிறும் டப்பா உணவும் என்ற நூலை மாறும் உணவு கலாச்சாரமும் நோய்களும் என்ற உலக சுகாதார நிறுவன ஆய்வறிக்கையை மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்ப்பு கட்டுரைகள் இங்குள்ள மக்களை சென்றடையும் விதமாக  மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் மொழி பரிமாற்றமாக படைத்துள்ளது இவரது சிறப்பு.

          உடலுக்கு நன்மை பயக்கும் உணவு முறை குறித்து இந்து இதழில் உயிர் வளர்த்தேனே என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்துள்ளார்.

            புதிய வாழ்வியல் இதழில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரைத்தொகுப்பு உயிரே போற்றி உணர்வே போற்றி என்ற நூலாக வெளிவந்துள்ளது. உடல் நலனுக்கு ஏற்ற புதிய உணவு முறையை அறிமுகம் செய்யும் நம்ம சாப்பாட்டு புராணம் என்னும் இவரது நூல் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.தற்பொழுது மாலைமலர் பத்திரிக்கையில் கிச்சனில் பயன்படுத்தும் பொருட்களின் தன்மை பயன்பாடு பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

            நாடகம் எழுதுவது, மேடைப் பேச்சு, நாடகக் குழுவை நடத்துவது, சந்தியா பதிப்பகம், வம்சி பதிப்பகங்களில் நூல்கள் சரிபார்க்கும் வேலை என பல துறைகளிலும் தடம் பதித்துள்ளார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவண்ணாமலை கிளை வளர்ச்சிக்கு பவா செல்லதுரை ஆதவன் தீட்சண்யா மற்றும் கருப்பு கருணா ஆகியவர்களுடன் இணைந்து பங்காற்றியுள்ளார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்காக தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.

வெளிவந்துள்ள நூல்கள்

    1.       கூடுகளை விட்டு - கவிதைத் தொகுப்பு

    2.       நாளைக்கு மழை பெய்யும் - சிறுகதைத் தொகுப்பு

    3.       நம்ம சாப்பாட்டுப் புராணம் - உணவியல் நூல்

    4.        என் உடல் என் மூலதனம் - உடலியல் நூல்

    5.        உணவுக்கு முதல் வணக்கம் - உணவியல் நூல்

    6.        உணவே போற்றி உயிரே போற்றி - உணவியல் நூல்

    7.       காயமே இது மெய்யடா - உடலியல் நூல்

    8.       நிலவைக் காட்டி அமுது ஊட்டி - உணவியல் நூல்

    9.       உயிர் வளர்த்தேனே - உணவியல் நூல்

    10.    கல் கிழவி - சிறுகதைத் தொகுப்பு

    11.    நிலம் - உணவு - நலம் உணவு, உடலியல்

மொழியாக்க நூல்கள்

    1.       பட்டினி வயிறும் டப்பா உணவும்

    2.       தடுப்பூசி வரலாற்று மோசடி

    3.       நோய்க்கு அஞ்சேல்

    4.       நுகர்வெனும் பெரும்பசி

    5.       எண்ணை மற மண்ணை நினை

    6.       முடையும் வாழ்வு

    7.       என்பெயர் டேவிட்

    8.       ஒரு வழிப்பறிக்கொள்ளையனின் ஒப்புதல் வாக்கு மூலம்

    9.       பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் 

பெற்றுள்ள விருதுகள்

* இலக்கியச் சிந்தனை நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்புக்கான விருது

 *தமுஎகச வின் மொழி பெயர்ப்புக்கான விருது

இணைய இணைப்புகள்



Sep 21, 2021

எழுத்தாளர் எஸ். வி. வேணுகோபாலன்

 தொகுப்பு : சி.பி.மல்லிகா பத்மினி

            எழுத்தாளர் எஸ். வி. வேணுகோபாலன் 1959-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.ஆர். வரதாச்சாரி - சுகந்தா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டம். இரண்டரை வயதில் தாயை இழந்தார். தாயின் முகத்தை அறியாத சோகம் இவருக்குள் உண்டு. தந்தை அண்மையில் 90-ஆவது வயதில் காலமானார். இவரது இணையர் ராஜேஸ்வரி தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர். இவர்கள் சடங்கு மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். கட்டிடக்கலை (Archaeology) பட்டதாரியும், திறமையான ஓவியருமான மூத்த மகள் இந்து திருமணமானவர். மகன் நந்தா கல்லூரி மாணவர்.

            தோழர் எஸ்.வி.வி. இந்தியன் வங்கியில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து, 2019 டிசம்பரில் ஓய்வு பெற்றார். இவர் புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

            தோழர் எஸ்விவி யின் பணிகள் ஆச்சரியமூட்டுவதாக உள்ளன. மனிதர், இடைவிடாது பலப்பல பரிமாணங்களில் இயங்கிக் கொண்டே இருப்பவர். எழுத்தாளர் என்றால் அதற்குள்.. கதை, கட்டுரை, கவிதை, புத்தக அறிமுகம், இதழாசிரியர் பணி, பாராட்டுக் கடிதம், நூல்கள், கட்டுரைகள், குறிப்பாக குழந்தைகளை கொண்டாடும் கட்டுரைகள் என பலப்பல பரிமாணங்களில் பரிமளிக்கின்றார். மேலும், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்க செயல்பாட்டாளர் மற்றும் கதைசொல்லி என தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்குபவர். வெகுவேகமாக வாசிக்கும் திறன் பெற்ற இவர், அடுத்தவரின் எழுத்தை கொண்டாடுவதில் பேரானந்தம் அடையும் பண்பாளர்.

            இளவயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் உண்டு. இவரது தாய்வழி பாட்டனார் இராஜகோபாலாச்சாரியார் வேலூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர்; நிறைய வாசிப்பவர். தாயை இழந்த எஸ்விவி, தாத்தாவின் நிழலில் வளர்ந்ததில் வாசிப்பு நாட்டம் தொற்றிக்கொண்டது. இவரது அண்ணன் தான் நூலக அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

            தமது பதினோரவது வயதிலிருந்தே பேச்சுப்போட்டி, மேடை நாடக நடிப்பு, கவிதை எழுதுதல் என்று திறமை காட்டியவர், பள்ளிப் படிப்பு முடியும் வரை இலக்கியப் போட்டிகளில் தொடர்ந்து பல பரிசுகளை தட்டிச் சென்றுள்ளார். பள்ளி தமிழாசிரியர்கள் தொடர்ந்து இவரை ஊக்கப் படுத்தியுள்ளனர். கல்லூரி வந்த பின்பும் எழுத்து மற்றும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் குவிப்பது தொடர்ந்தது. 

            மகாகவி பாரதியின் பாடல்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பாரதி பிறந்தநாள் விழாவினை வெகு விமரிசையாக நடத்தியுள்ளார்.

            எழுத்தாளர் அழகியசிங்கரின் அறிமுகம் வாய்க்க, அவரோடு இணைந்து கையெழுத்து பத்திரிகை நடத்தியுள்ளார். அதில் நிறைய கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

             1977 இல் 'ஆனந்த விகடன்' இதழின் மாணவர் பக்கத்திற்கான போட்டியில் இவரின் 'ஷா கமிஷன்' எனும் சிறுகதை தேர்வு செய்யப்பட்டு பிரசுரம் ஆனது. 'கணையாழி'யில் ஒரு சிறுகதை அதே காலத்தில் வந்தது. 

            இந்தியன் வங்கியில் சேர்ந்தபின் தொழிற்சங்கப் பணியில் மிகவும் தீவிரமாக இயங்கிய போதிலும், வாசிப்பு ஒரு பக்கமும், கட்டுரைகள் எழுதுவது ஒரு பக்கமும் தொடரவே செய்தன. வங்கி ஊழியர் இதழான பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து முக்கிய பங்காற்றியுள்ளார்.

            தோழர் எஸ்.வி.வி.யின் நெருங்கிய நண்பரான ஓமியோபதி மருத்துவ நிபுணர் பி.வி. வெங்கட்ராமன் அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளை வைத்து இவர் எழுதிய கட்டுரைகள் பெரிய வரவேற்பு பெறவே, "நலம் நலம் அறிய ஆவல்" எனும் முதல் புத்தக ஆக்கம், 2005 உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதையடுத்து, மேலும் மூன்று உடல்நலக் கட்டுரை தொகுப்புகள்  வெளிவந்தன.

            அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்கள் மீதான நிறைய கட்டுரைகள் தீக்கதிர், செம்மலர், தினமணி, தி இந்து தமிழ் போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. தி இந்து டாக்கீஸ் இணைப்பில் திரைக் கலைஞர்கள், இசைப் பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள் குறித்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. புத்தக வாசிப்பு, கல்வி, குழந்தைகள் குறித்த கட்டுரைகள், தி இந்து தமிழ் நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளியாகி உள்ளன. 

            பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் முதல் தொகுப்பு, இவர் வங்கிப்பணி நிறைவு செய்த 2019 டிசம்பர் மாதம், கீழ் வெண்மணி நாளில் 'தர்ப்பண சுந்தரி' எனும் பெயரில் நீதியரசர் கே.சந்துரு அவர்களால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில், 'உதிர்ந்தும் உதிராத' எனும் தொகுப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஜி. செல்வா வெளியிட்டார். அந்த நூல், முக்கிய ஆளுமைகள் மறைவின்போது எஸ்விவி எழுதி, பல்வேறு இதழ்களில் வெளியான புகழஞ்சலி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

            குழந்தை கல்வி வல்லுநர் பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள், எஸ்விவி யின் "தர்ப்பண சுந்தரி" சிறுகதை தொகுப்பு நூலினை சிலாகித்து அறிமுகம் செய்து எழுதிய வரிகளில் சில.. 

"அம்மாவின் புளிக் குழம்பில் மிதக்கும் பிரியம் போல (அம்மாவின் மகன்) ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரியம் மிதந்து கொண்டிருக்கிறது. தோழர் எஸ்.வி.வி. யின் பிரியம்! சில கதைகளில் பிரியம் வெள்ளமாய் கரைந்தோடுகிறது- குறிப்பாக மரணங்களை சொல்லும் கதைகளில்."

”கதைகள் பேசும் பேச்சு கம்மி; மனப்பேச்சுக்களைத் தூண்டுவது தான் அதிகம்"

"எ.ஸ்.வி.வி. யின் செல்ல மகள் இந்து வரைந்த அட்டை ஓவியம் மிக அருமை. எஸ்.வி.வி. யின் பிரியம் இன்னும் பல தொகுப்புகளாய் வளர வேண்டும்."

            கவிதைகளை பொறுத்தவரை, ஆனந்த விகடனின் சொல் வனம் பக்கங்களில், தி இந்து தமிழ் நாளிதழின் தேநீர்ப் பகுதியில், செம்மலர், வண்ணக்கதிர், தீக்கதிர், கணையாழி, மலர்த்தும்பி, நவீன விருட்சம் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. 

            ஆங்கில இந்து நாளிதழின் ஓபன் பேஜ் பக்கங்களிலும, பேங்க் ஒர்க்கர்ஸ் ஃபோரம் எனும் கேரள வங்கி ஊழியர் மாத இதழிலும் ஆங்கில கட்டுரைகளும், கவிதைகளும் வெளிவந்துள்ளன. 

            கொரோனா ஊரடங்கு காலத்தில் பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணையதளத்தில் 'இசை வாழ்க்கை' எனும் தொடர் 50 வாரங்களை தாண்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. புத்தகம் பேசுது இதழில் வாசிப்பு ரசனை, குவிகம் மின்னிதழில் திரை ரசனை, புதிய ஆசிரியன் இதழில் உறவுகள் தொடர்கதை என்று மொத்தம் மூன்று தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

            இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்நாடு) தொழிற்சங்கத்தில் துணை பொதுச்செயலாளராகவும், அகில இந்திய சம்மேளனத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டுள்ளார்.

            வங்கி அரங்க முற்போக்கு ஊழியர் அமைப்பின் செயலாளராக, சமூக செயல்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். இதுவரை இவரது ஏழு நூல்கள் வெளி வந்துள்ளன.

 வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த, தொகுக்க வேண்டிய கட்டுரைகள் ஏராளம். 500-க்கும் அதிகமாக. இதில் புதிய ஆசிரியன் இதழில் 11 ஆண்டுகளாக வெளிவந்த கட்டுரைகள் மட்டுமே 125-க்கும் அதிகமானவை. THE HINDU / BANK WORKERS FORUM இரண்டிலும் வந்திருக்கும் 25 ஆங்கிலக் கட்டுரைகளும் தொகுக்க வேண்டியுள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்

1)நலம் நலம் அறிய ஆவல்- 2005

2) உடலும் உள்ளமும் நலம்தானா - 2009

3) எல்லோரும் நலமுற்றிருக்க - 2014

4)உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே - 2015

5)இசைத்தட்டாக சுழலட்டும் வாழ்க்கை - 2019 

 6)தர்ப்பண சுந்தரி- 2019

7) உதிர்ந்தும் உதிராத - 2019 

பெற்ற பரிசுகள்

1) 'கடைசி நாள் படுக்கை' எனும் சிறுகதைக்காக, 2009 கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.

2) சின்னக்குத்தூசி நினைவு கட்டுரைப் போட்டியில் பொருளாதார பிரிவுக்கான சிறந்த கட்டுரையாளராக 2015-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளார்.  

இணைய இணைப்புகள்




Sep 7, 2021

கவிஞர் இரா.தெ.முத்து

 தொகுப்பு : கு.ஹேமலதா

            "தேசிய இனங்கள் மற்றும்  மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டவும்,மெய்யான சமத்துவ பார்வையை உருவாக்கவும் சோஷியலிச சிந்தனை வழியாகவே சாத்தியமாகும்.அந்த மாற்றத்தை நோக்கிய பாதையை இடதுசாரிகளே முன்னெடுப்பார்கள்" என்ற கருத்தில் உறுதியாக இருக்கும் கவிஞர் இரா.தெ.முத்து அவர்கள் 7.3.1961 இல் இசக்கியம்மாள் - இராமையா தம்பதியருக்கு மூத்த மகனாக, கன்னியாகுமரி மாவட்டம்,  ஆரல்வாய்மொழியில் பிறந்தார்.

         இராமையா தென்கரைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட தோழர் இரா.தெ.முத்து அவர்கள் கவிஞர், எழுத்தாளர், கலை இலக்கிய விமர்சகர், அரசியல் பண்பாட்டு செயற்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர், புத்தகம் பேசுது ஆசிரியர் குழு உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர். மனைவி பாக்கியலட்சுமி, இரு மகள்கள் சிந்து மற்றும் இலக்கியா ஆவர்.

            எழுத்தாளர் பொன்னீலனை வகுப்பாசிரியராகவும் துணைத்தலைமை ஆசிரியராகவும் கொண்ட அவரது பள்ளி காலத்தில் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக  பல தமிழ் போட்டிகளில் பங்கேற்றும்,பல கவிதைகள் எழுதியும் பரிசுபெற்றுள்ளார்.அச்சிறுவயதிலேயே 'சங்க இலக்கிய' நூல்களை வாசிக்கும் ஆர்வம் மேலோங்கி,உள்ளூர் நூலகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

            பல அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள்,சமூக நாடகங்களின் தாக்கத்தினால் தன்னுடைய பதினான்காவது வயதில் 'தாயின் மடியில்' என்ற நாடகத்தை எழுதியுள்ளார். பல உள்ளூர் நாடக குழுக்களுக்கும் நாடகங்கள் எழுதித் தரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டவர்.

            தனது  குடும்ப வாழ்வாதாரம் நிமித்தமாக தங்கள் சொந்த ஊரிலிருந்து குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறும் சூழல் ஏற்பட்டு,தனது  மேற்படிப்பை சென்னையில் தொடர்ந்தார்.சென்னை பல்கலைகழகத்தில் தொலைநிலைக்கல்விசார் நேர்முக வகுப்பில் கவிஞர் அக்னிப்புத்திரனிடம் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த வேளை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மேல் உள்ள ஈடுபாட்டில் படிப்பை பாதியில் விட்டு கட்சியின் முழுநேர பண்பாட்டுப் பணிக்கு  வந்துவிட்டார்.

            1982 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து நாற்பதாண்டுகளாக அதன் பண்பாட்டுப் பணிகளில்  ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.தமுஎகசவின் உறுப்பினராக ஆரம்பித்த அவரது பயணம் ஒன்றுபட்ட சென்னை மாவட்டப் பொருளாளர், வடசென்னையின் முதல் மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாநில துணைப்பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், மாநில துணைத்தலைவர் என பல பொறுப்புகளில் அவரது பணி தொடர்கிறது. தமுஎகசவின் பல மாநில நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

            1982-84 ஆண்டுகளில் தன் சொந்த ஊரான ஆரல்வாய்மொழியில் தமுஎகச கிளை இல்லாத அவ்வூரில் இவரது பொறுப்பில் கிளை ஆரம்பிக்கப்பட்டு அதன் கிளை செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்தியுள்ளார்.அங்கு இருந்த அறிஞர் அண்ணா கல்லூரி பேராசிரியர்கள் சிலர்  தமுஎகசவின் கிளை உறுப்பினர்களாக  இருந்தமையால்,உள்ளூர் இளைஞர்களின் இலக்கிய சிந்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு ஆரம்பித்த 'சிற்பம்' கையெழுத்து இதழின் ஆசிரியராக சில காலம் பொறுப்பேற்றுள்ளார்.அதே காலகட்டத்தில் இலங்கையில், தமிழ் போராளிகளை சுட்டுக்கொன்ற இலங்கை அரசை கண்டித்து தமிழகத்தில் பல தமிழ் எழுச்சி பேரணிகள் நடந்தது.அதில் ஆரல்வாய்மொழியில் நடந்த மாபெரும் பேரணியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தியவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                      1984 ஆம் ஆண்டு  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த தமுஎகச மாவட்ட மாநாட்டில் இவர் வாசித்த கவிதையினால் ஈர்க்கப்பட்ட அன்றைய தமுஎச வை உருவாக்கிய முதல்பொதுச்செயலாளர் கே.முத்தையா அவர்கள்  அக்கவிதையை 'பூமியே புல்லரிக்க' என்ற தலைப்பில்  செம்மலர் இதழில் வெளியிட்டார். இதுவே கவிஞர் இரா.தெ.முத்து அவர்களின்  பிரசுரமான முதல் கவிதையாகும். இந்நிகழ்வு அவரை தொடர்ந்து பல கவிதைகள் புனைய பெரும் உந்துசக்தியாக அமைந்தது.

        இதனைத் தொடர்ந்து இவரது படைப்புகள் தீக்கதிர், செம்மலர், இளைஞர்முழக்கம், மகளிர்சிந்தனை, சுபமங்களா, தினத்தந்தி, புத்தகம் பேசுது, இந்து தமிழ்திசை, நக்கீரன், கணையாழி போன்ற முன்னணி ஏடுகளில் வெளிவர ஆரம்பித்தது.படைப்புகள் மட்டுமின்றி இவர் பங்கேற்ற கலந்துரையாடல்களும் பிரசுரமாகி உள்ளன.

            இவரது முதல் கவிதை தொகுப்பு நூல் 'மாநகர மனிதன்' 2003 ஆம் ஆண்டு சந்தியா பதிப்பகத்தின் வெளியீட்டில் வெளிவந்தது.

            மகாகவி பாரதியின் அதிகம் அறியப்படாத ஆன்மீக கதைகளின் உள்ளீடான அரசியல்,வரலாறு போன்ற செய்திகளை ஆய்வு ரீதியாக 'பேசாப் பொருளை பேசிய  பாரதி'என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேட்டில் 2011 ஆம் ஆண்டு 16 வாரங்கள் தொடர்ந்து எழுதியுள்ளார் கவிஞர் இரா.தெ.முத்து அவர்கள்.அவரின் இரண்டாவது நூலாக இத்தொடரை பாரதி புத்தகாலயம்  வெளியிட உள்ளது.

            அன்றைய முன்னணி எழுத்தாளுமைகள் முதல் இன்றைய சமகால எழுத்தாளர்கள் வரை, அவர்களது முதல் படைப்பு பிரசுரமான அனுபவங்களை 'முதல் பிரவேசம்' என்ற பெயரில் தொடராக புத்தகம் பேசுது மாத இதழிற்காக ஒருங்கிணைத்து இயங்கியவர். மேலும் செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சாகித்யஅகாடமி ,சென்னைப் பல்கலைக்கழகம்,பாரதி புத்தகாலயம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், இயல் இசை நாடக மன்றம், சிகரம் அறக்கட்டளை ,கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு போன்ற பல அமைப்புகள் முன்னெடுக்கும் ஆய்வு அமர்வுகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், கவிதைகள் முன் வைத்து பங்களிப்பு செய்து வருகிறார். ஜெயா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர், புதியதலைமுறை, வின் தொலைக்காட்சிகளிலும், சரிநிகர் யூடியூப் சேனலிலும் இவரது நேர்காணல்கள் பல ஒளிபரப்பாகியுள்ளன.

            'சூடும் சுடரும்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதைகளை பிரசுரித்த 'தாய்' வார இதழின் ஆசிரியர் வலம்புரிஜான் மற்றும் சென்னை தொலைக்காட்சியின் இளையபாரதம் நிகழ்வில் கவிதை வாசிக்க உதவிய நிலையப் பொறியாளர் இராமசாமி  ஆகியோரை தொடக்ககாலத்தில் தன் கவிதைகளுக்கு உத்வேகமும் ஆதரவும் தந்தவர்கள் என நினைவு கூர்கிறார்.

வெளிவந்துள்ள நூல்

# மாநகர மனிதன் (2003)

விருதுகளும் பரிசுகளும்

# மதுரை தமிழ்ச் சங்கம் மாணவர்களுக்காக நடத்திய தமிழ்ப் போட்டியில் முதல் வகுப்பில் வென்று நற்சான்றிதழ் (1977)

# தமிழுக்கு நீதி கேட்டு தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கான தமுஎகச பாராட்டுச் சான்றிதழ் (2000)

# 'முகம்'மாமணி அவர்களின் இலக்கிய வட்டத்தின் சார்பில் 'இலக்கியப் புரவலர்' விருது (2005)

இணைய இணைப்புகள்