Jun 15, 2021

எழுத்தாளர் அசோகன் முத்துச்சாமி

தொகுப்பு : அங்கன்ன வெங்கடேஷ் 

            எழுத்தாளர் அசோகன் முத்துச்சாமி அவர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை முத்துசாமி - தாயார் ஜெயலட்சுமி.

            அவரது பூர்வீகம் திண்டுக்கல் என்ற போதிலும் அவர் பிறந்தது 17.02.1959 அன்று மதுரையில். உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள். படிப்பு: தியாகராசா கல்லூரியில் பியுசி பின் அமெரிக்கன் கல்லூரியில் கணிதம் இளங்கலை பட்டப்படிப்பு.


            பட்டப்படிப்பிற்கு பின் திண்டுக்கல்லிலும் மதுரையிலும் சிறு சிறு வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த சுதா என்பவரை 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2 மகன்கள். திருமணம் முடித்த மூன்றாவது மாதமே தன் இணையருடன் பெங்களூரூ சென்றார்.

            அங்கு அவரது சித்தப்பா மற்றும் உறவினர்களுடன் இணைந்து டயர் வியாபாரம் செய்து வந்தார். பின்னர் அவரது தந்தையார் சேலத்திற்கு குடிபெயர்ந்த போது, அசோகன் அவர்களும் பெங்களூரூவை விட்டு 1997 இல் சேலம் வந்தார். தன் தந்தையுடன் இணைந்து பேட்டரி கடை நடத்தி வந்தார். தன் உறவினருடன் இணைந்து சேலத்திலும் டயர் வியாபாரம் செய்து வந்தார். பின்னர் 2000 இல் எல் ஐ சி முகவராகவும் செயல்படத் துவங்கினார்.

            அவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே  பொதுவுடமை சித்தாந்தத்தின் மீதான ஈர்ப்பால் , அதனை மிகத் தீவிரமாக பின்பற்றத் தொடங்கினார். அதனால் அவருடைய செயல்பாடுகள் சற்று வேகமாகவும், தீர்க்கமாகவும்  இருக்கும். அவருக்கு அந்த காலகட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பின் வாசிப்பும் அதிகமாகியது. பிறகு மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதனடிப்படையில் தனது பயணத்தை மார்க்சிய வழியில் துவங்கினார்.

            அவர் பெங்களூருவில் இருந்த காலத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிமுகமாக, அதில் தன்னை இணைத்துக்கொண்டு மிகத் தீவிரமாகப் பணியாற்றினார்.  1997 இல் சேலம் வந்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். விவசாய சங்கத்திலும், வாலிபர் சங்கத்திலும் தொடர்ந்து பணியாற்றினார்.

            நரேந்திர மோடி குஜராத்தை ஆண்டு கொண்டிருந்த காலம், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் மீது மிகவும் காத்திரமாக தனது எதிர்வினைகளை ஆற்றிக்கொண்டிருந்தார். தோழர் அசோகன் அவர்களின் எழுத்தாற்றலும், விமர்சனப் பார்வையும் அவருக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பும் வந்து சேரக் காரணமாக அமைந்தது. சேலம் மாவட்டத்தின் தமுஎகசவின் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை பொறுப்பேற்றுள்ளார் (2003, 2006, 2009).

            அப்போது அவர் செய்த பல முன்னெடுப்புகளால், சேலம் மாவட்ட தமுஎகச அனைவராலும் மெச்சத்தக்க வகையில் மிகத் திறம்பட நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் இரண்டு கலை இரவுகள், உபகதை உட்பட இரண்டு நாடக ஏற்பாடுகள், மூன்று கலை மாலை - கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி ஒரு உயிர்ப்பான இயக்கமாக மாற்றியதில் தோழருக்கு பெரும்பங்குண்டு.

            வாசகர் வட்டம் துவங்கி, வாரம்தோறும் தோழர்களை இணைத்து நாட்டின் பல பிரச்சனைகளை, அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை, சினிமா என பல்வேறு துறைகளில், அன்று நடைமுறையிலிருந்த விஷயங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து, பொதுவெளியில் இயக்கம் நடத்த வேண்டிய விஷயங்கள் குறித்தான முன்னெடுப்புகள் எடுத்து நடைமுறைப்படுத்தினார்.இந்த வாசகர்வட்டம், பல இளைய தோழர்களை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் தூண்டி செயல்பட வைத்ததில் பெரும் பங்காற்றியது.

            பாரதி கிருஷ்ணகுமார், பொன்வண்ணன், வசந்தபாலன், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்களை சேலத்துக்கு அழைத்து விழாக்களை நடத்தியுள்ளார். ஆண்களுக்கான சமையல் பயிற்சி வகுப்பு ஒன்றும் சேலத்தில் சிறப்பாக நடத்தினார். அந்த நிகழ்வு பல ஆண் தோழர்கள், சமையலறைக்குள் நுழைவதற்கு காரணமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பல தோழர்கள் சமையல் செய்யவும் இணையருக்கு சமையலில் துணை புரியவும் காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது.

            பதினைந்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்து பிரவாகம் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டார். சேலம் மாவட்ட தமுஎகச செயல்பாடுகளை செம்மைப்படுத்தவும், இளைய தோழர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்ற தோழர்களை அழைத்து கருத்துப் பகிர்வும் பாராட்டும் நடத்தி, இலக்கியத்தின் பால் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்த ஒரு உந்துசக்தியாக இருந்தார். பல அமைப்புகளுடன் இணைந்து, இணக்கமாக செயலாற்றினார்.

            சாளரம் என்ற ஒரு மாத இதழை சேலம் மாவட்ட தமுஎகசவின் சார்பாக பிரசுரித்து, தோழர்களுக்கு எழுதுவதற்கான, கருத்துக்களை பகிர்வதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தினார். அன்றாடம் வரும் அரசியல் செய்திகளின மீது தனது கருத்தையும் எதிர்வினையும் காத்திரமாக முன்வைப்பதில்  தோழர் அசோகன் என்றுமே தயங்கியதில்லை. தொடர்ச்சியாக சமூக ஊடகத்தில் தனது கருத்தை பதிவு செய்து வந்திருக்கிறார். குஜராத் கலவரம் சார்ந்த சமயத்தில்  நரபலி நரவேட்டை என்ற நூல் எழுதி வெளியிட்டிருந்தார். சாவர்கர் என்ற நூல் அவர் கைவண்ணத்தில் வெளிவந்தது, அதைத் தொடர்ந்து பல கட்டுரைகளை  ஆர்குட், பிளாக் போன்றவற்றில் எழுதி  வந்தார்.

            பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார். அமெரிக்க பேரரசின் இரகசிய வரலாறு  என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை  நல்லி - திசை எட்டும்அமைப்பு வழங்கியது.

            சேலம் தமிழ்ச் சங்கம் அவருக்கு சிறந்த  செயற்பாட்டாளர்கான விருது வழங்கி கௌரவித்தது. எழுத்துப் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த தோழர் திடீரென 28.05.2012 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.

வெளிவந்துள்ள நூல்கள்

நரபலியும் நர வேட்டையும்

சாவர்க்கர் உண்மை சரித்திரம்

பகத்சிங் ஒரு வீர வரலாறு

போலி தேசபக்தர்கள்

கப்' பஞ்சாயத்து -சதியின் மற்றொரு கோரமுகம்

குளிர்பானங்கள் கொலை பானங்களா?

அகழியும் கோட்டை கொத்தளங்களும்

புத்தன் சிரிக்கிறார்

பசுத்தோல் போர்த்திய புலி

மதவெறி பாசிசத்திற்கெதிரான போராட்டம்- அனுபவமும் படிப்பினைகளும்

மொழிபெயர்ப்புகள்

அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு -ஜான் பெர்க்கின்ஸ்

அயோத்தித் தீர்ப்பு கரசேவையின் ஆயுதம் (நூரணி,ரோமிலா தாப்பர் ,ராஜேந்திர சச்சார்,டி.என் ஜா,அந்தியரஜூனா,ஜாவித் ஆலம்) கட்டுரை தொகுப்பு

இடதுசாரிகளும் புதிய உலகமும் - மார்த்தா ஹர்னேக்கர்

காலனியம் - பிபன் சந்திரா

பண்டைய கால இந்தியா -டி என் ஜா

வரலாறு சமூகம் நில உறவுகள் - இஎம்எஸ் நம்பூதிரிபாட்

இப்போதே நிர்மாணிப்போம் 21ம் நூற்றாண்டிற்கான சோசலிசம்- மைக்கேல் எ. லெபோவிச்

பகத்சிங் விடுதலை போரில் புரட்சி இயக்கம்- இர்பான் எஸ்.ஹபீப்

இணைய இணைப்புகள்