Jun 16, 2021

எழுத்தாளர் கம்பம் ரவி

 தொகுப்பு : த. எழிலரசி

            கம்பம் ரவி அவர்களின் இயற்பெயர் ரவிச்சந்திரன். ரவி அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். முதலில் கம்பம் வர்த்தகர்கள் சங்க அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக தொடங்கி, தற்போது புகைப்படக் கலைஞராக உள்ளார். கண்ணில் பட்ட காகிதங்களை எல்லாம் வாசிக்கும் சிறுவயது பழக்கம், கவிதையின் மீது ஈர்ப்பினை உருவாக்கியது.

            1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கம்பத்தில் பிறந்த இவரின் பெற்றோர் மு . ரங்கசாமி- அங்கம்மாள் மனைவியின் பெயர் வசந்தி. நவநீதகிருஷ்ணன், ஆதித்யா என்ற குழந்தைகள் இவர்களுக்கு இருக்கிறார்கள். மகன் கல்லூரி படிப்பை (B.Tech food technology) முடித்துவிட்டு பெங்களூருவில் பணிபுரிகிறார். மகள் தற்போது கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

            சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்து உள்ளார். தினமலர் வாரமலரில் வெளிவந்த கவிதைகள் இவருக்கு கவிதை எழுதுவதில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எழுதிய கவிதைகள் எதுவும் பிரசுரமாகாத நிலையில், பள்ளி நண்பன் அ.கற்பூரபூபதி கொடுத்த தமிழ்ப்பாவை இதழின் முகவரி முதல் கவிதையை அச்சேற்ற உதவியது. தொடர்ந்து தினமலர் நகர்மலரில் இவருடைய கவிதைகள் வெளிவந்தன. 1989 இலிருந்து 2003 வரை தொடர்ந்து கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன.

            சமூக ஆர்வலராக சமுதாய பிரச்சினைகளையும் தினமணி ஆராய்ச்சி மணியில் கடிதங்களாக எழுதியுள்ளார். தோழர் இதயகீதன் அவர்களோடு கிடைத்த தொடர்பால் கம்பம் ரவி தமுஎகசவில் உறுப்பினராக இணைந்தார். அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் ஹைக்கூ கவிதைகளை விரும்பி வாசித்துள்ளார். கவிஞர் புத்தூரான், சின்ராஜ் , புதியவன் , தமிழ்மணி , உமர் பாரூக், மாயவன், சிவாஜி என நிறைய நண்பர்கள் அவரின் கவிதைகளை படித்துவிட்டு நட்பு பாராட்டி உள்ளனர்.

            2011 ஆம் ஆண்டு இவரின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து பிடி மண் என்ற நூல் வெளிவந்துள்ளது தோழர் இதயகீதன் மற்றும் உமர் பாரூக் அவர்களின் முயற்சி நூல் வெளிவர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்த கவிதைத் தொகுப்பை படித்துவிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பாராட்டி தினசரியில் இவரின் ஹைக்கூவைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தற்போது திருக்குறள் சாராம்சத்தை ஹைக்கூ கவிதையில் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

            ஆர் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய பன்னாட்டு தேசிய அளவிலான கருத்தரங்கில் கம்பம் ரவியின் பிடி மண்ணின் அரசியல் சிந்தனைகள் பற்றிய கட்டுரை முனைவர் மு .செந்தில்குமார் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. கம்பம் ரவியின் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு கல்லூரி மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வெளிவந்துள்ள நூல்

பிடி மண் (ஹைக்கூ தொகுப்பு)

பெற்ற பரிசுகள், விருதுகள்

1.       சென்னை கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை நடத்திய ஹைக்கூ கவிதைகள் நூல் போட்டியில் முதல் பரிசும் பாராட்டும் - 2011

2.       சென்னை தமிழ் படைப்பாளர் சங்கம் முதலாம் ஆண்டு விழா ஹைக்கூ கவிதைகள் பரிசும் பாராட்டும் - 2012

3.       சென்னை நம் உரத்த சிந்தனை மாத இதழ் தேனி மாவட்ட நான்காம் ஆண்டு விழா கவியரங்க பாராட்டு சான்றிதழ் ­2014

4.       சி.பா.ஆதித்தனார் நினைவு விருது (தேனி மாவட்டம்)- 2014

5.       சென்னை பாவையர் மலர் மாத இதழ் பாவையின் பொக்கிஷ விருது - 2015

இணைய இணைப்பு