Jun 22, 2021

எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன்

 தொகுப்பு : இரா. ஜெயலட்சுமி

          "கவிதையின் கதவை நாம் போய் தட்டிக் கொண்டே இருக்கலாம்ஆனால் நாம் தகுதியான பிறகுதான் கவிதை நம்மை பற்றிக் கொள்ளும்எனக்கு அந்த கதவு தாமதமாகத்தான் திறந்தது."  என்று கூறும் கவிஞர் ஸ்டாலின் சரவணன், 27.08.1979 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிறந்தார்.

          பெற்றோர் வை.மாரிக்கண்ணு - கஸ்தூரி ஆகிய இருவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்மூத்த சகோதரிகள் இருவருடனும் இளைய சகோதரர் ஒருவருடனும் பிறந்தவர் ஸ்டாலின் சரவணன். இவருடைய இணையர் சிவரஞ்சனி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்இவர்களுக்கு இரண்டு மகன்கள், சுபாஷ் ஜவஹர் மற்றும் சித்தார்த்.


          தன் பள்ளிப்படிப்பை கறம்பக்குடியில் உள்ள அரசுப்பள்ளியில் துவங்கி தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில் உள்ள தூய வளனார் மேல்நிலை பள்ளியில் நிறைவு செய்தார்புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், தன் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த இவர், தற்போது புதுகோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டமும் பெற்றவர்

          சிறுவயதிலிருந்தே புத்தகவாசிப்பைத் தொடங்கினாலும், தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகுதான் தீவிர வாசிப்பிற்குள் நுழைந்ததாகக் கூறுகிறார்இவருடைய தந்தை காங்கிரஸ் இயக்க மேடைப் பேச்சாளராக இருந்தமையால், இளவயதிலேயே மேடைப் பேச்சிற்கான விதை தூவப்பட்டது எனலாம்                                  

          பள்ளிப் பருவத்தில்  பாரதியார், வைரமுத்து, மு. மேத்தா போன்றவர்களின் கவிதைகளால் ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் யூமா வாசுகி, ஆதவன் தீட்சண்யா, யவனிகா ஶ்ரீராம், தேவதச்சன் போன்றவர்களின் படைப்புகளால் எழுத்து முயற்சியாக விரிவடைந்தது.   கவிஞர் ரமேஷ் ப்ரேமின் "உப்பு" கவிதை தொகுப்புதான், கவிதையின் வேறொரு கோணத்தையும் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தந்ததாக கூறுகிறார்.

            கல்லூரிப்படிப்புக்குப் பிறகான காலகட்டத்தில் கவிதைகள், கதைகள், உள்ளூர் அரசியல் நிலவரங்கள் ஆகியவற்றைப் பொருண்மையாகக் கொண்ட மாத இதழ் ஒன்றை நண்பர்களோடு சேர்ந்து நடத்தி வந்ததுகளச்செயல்பாட்டுக்கும் இலக்கியப் பணிகளுக்குமான தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது.

          1999 ஆம் ஆண்டிலிருந்து எழுத ஆரம்பித்த இவரின் கவிதைகளும் கட்டுரைகளும், ஆனந்த விகடன், காலச்சுவடு, தடம், உயிரெழுத்து, உயிர்மை, கணையாழி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

                    புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச தலைவர், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கள செயல்பாட்டாளர், சுவாரசியமான மேடைப்பேச்சுகளை நிகழ்த்தக்கூடியவர் என்று பன்முகம் கொண்டவரான ஸ்டாலின் சரவணன், கவிதைத் தொகுப்புகளைப் பற்றி மட்டுமல்லாமல் கட்டுரை, பத்தி எழுத்து, சிறுகதைத் தொகுப்பு, நாவல் ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களைப் பற்றியும் விரிவாக உரைகள் அளித்துள்ளார்.  2020 ல் மும்பைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழர் கலைகள் பற்றிய பேருரை ஒன்றை இணைய வழியில் நிகழ்த்தினார். நேரடி மற்றும் இணையவழி கவிதைப் பயிலரங்குகளின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நவீன கவிதைகள் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்கிறார்.

          அன்றாட வாழ்வின் பாடுகளை, அதிகாரத்துக்கெதிரான போர்க்குரலை தொடர்ந்து தன் கவிதைகளின் மூலம் முன்வைத்துவரும் ஸ்டாலின் சரவணன், தீவிரமான அரசியல் பிரக்ஞையுடன் கவிதை வெளியில் இயங்குபவர்.

            இவரது முதல் கவிதை தொகுப்பான "தேவதைகளின் வீடு" வெளிவந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குங்குமம் இதழில் வெளிவந்த சிறந்த 100 கவிதைகளில் ஒன்றாக இதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. கவிஞர் வைரமுத்துவால் சிறப்பு செய்யப்பட்ட 100 கவிஞர்களில் ஸ்டாலின் சரவணனும் ஒருவர்.

          சூழல் அமைப்புகளிலும் இணைத்துக் கொண்டு பணி புரிபவர்கஜா புயல் நிவாரண பணிகளில் இவரது களப்பணி, பகுதி மக்களால் பெரிதும் மதிக்கதக்கதாக இருந்தது.

          ஸ்டாலின் சரவணன், சினிமா மீதும் தீராத ஆர்வம் கொண்டவர்.  "திரையில் விரியும் இந்திய மனம்என்ற தலைப்பில் இந்திய சினிமா குறித்த ஒரு தொடரை உயிர்மை இணையத்தளத்தில் எழுதிவருகிறார். இவரது சினிமா கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது.   கவிஞனின் பார்வையில் திரையில் விரியும் கதைக்களத்தை அணுகும் இவரது கட்டுரைகள் தனித்துவமானவை. "பனிவீடு" என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

        இவரது "ஆரஞ்சு மணக்கும் பசி" தொகுப்பைச் சேர்ந்த ஏழு கவிதைகள் சாகித்ய அகாதமி வெளியீடாக வரவிருக்கும் தமிழ்க்கவிஞர்களின் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று தனிமைக்காலத்தில் இவர் எழுதிய கவிதைகள் திரு.என். கல்யாணராமன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

            ஸ்டாலின் சரவணனின் கவிதைகள் மருதநிலத்தின் மண்ணிலிருந்து முளைப்பவை. அதிகாரத்தால் துண்டாடப்படும் எளிய மக்களின் கேவல், இவர் கவிதைகளினூடாக எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இலக்கிய உரையாடல்களில் தன்னைக் கரைத்துக்கொண்டு அன்றாடத்துக்கும் கவிமனத்துக்கும் இடையேயான ஒரு சிறு புள்ளியில் கவிதைகளைக் கண்டெடுக்கும் ஸ்டாலின் சரவணன், இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருகிறார்

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைத் தொகுப்பு

தேவதைகளின் வீடு (2014, அகரம் வெளியீடு),

ஆரஞ்சு மணக்கும் பசி (2016, உயிர்மை வெளியீடு),

ரொட்டிகளை விளைவிப்பவன் (2018, உயிர்மை வெளளியீடு)

பெற்றுள்ள விருதுகள்

படைப்புக் குழும விருது- 2019

சௌமா விருது -2019

தோழர் சுப்பராயலு நினைவு விருது  - 2019

இணைய இணைப்புகள்