Nov 16, 2021

எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்

தொகுப்பு: சு. இளவரசி

"வெறும் ஒத்துழைப்பு, உற்சாகம் கடந்து குடும்பத்திற்குள் ஜனநாயகம் என்பது குறிப்பாக ஒரு மாற்று சமூகம் பற்றிய கருத்துடையோருக்கும் களத்தில் செயல்படுவோருக்கும் அத்தியாவசியத் தேவை. அமைப்புகளுக்குள்ளேயே இது பற்றிய அக்கறையும் கருத்தும் ஆழமாக வேர் விடாத நிலையில் குடும்பத்திற்குள் ஜனநாயகம் என்பது வெறும் பகட்டுச் சொற்கட்டாகத்தான் இருந்து வருகிறது. இதன் விளைவுகளை, வீச்சை விரிவான அளவில் விவாதிக்க வேண்டியுள்ளது" என்று கூறும் எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் அவர்கள் இக்கருத்தோட்டத்தை தனது படைப்புகளுக்குள்  இழையோடவிட்டவர். சமூகத்தால் அறிந்துகொள்ளப்பட வேண்டிய சமகால எழுத்தாளர்.

எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் அவர்களின் இயற்பெயர் வை. இராமச்சந்திரன். அன்றைய தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் காரைக்கால் பாதையில் அமைந்த நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட கிராமமான கோனேரிராஜபுரம் என்ற ஊரில் 14 - 07 – 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த ஊர் தேவாரப் பாடல்களில் திருநல்லம் என்று குறிப்பிடப்படுகிறது.

சென்னையை வாழ்விடமாக கொண்டது இவரது குடும்பம். ரயில் பெட்டி ஆலைத் தொழிலாளியான இரா. வைத்தியநாதன் அவர்களுக்கும் எஸ். நாகலட்சுமி  அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

சென்னை ரயில்வே தொழிலாளர் குடியிருப்பின் இரு பாலருக்கமான பள்ளியில் முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ (பொருளாதாரம்) மற்றும், எம். ஏ (தமிழ்) படித்துள்ளார்.

திருநெல்வேலியில் தொழிற்சாலையை கொண்டுள்ள சென்னை நிறுவனமொன்றில் 35 ஆண்டுகால பணிக்குப் பின்னர் 2010 இல் ஓய்வு பெற்று, தற்பொழுது சென்னையில் வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

பள்ளி நாட்களில் மட்டுமின்றி கல்லூரி நாட்களிலும் வாலிபாலும், ஹாக்கியும் விளையாடியிருக்கிறார். ஹாக்கியில் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு பெற்று ஒரு முறை அனைத்திந்திய பல்கலைக்கழகப் போட்டியில் பங்கேற்றிருக்கிறார், அரசியல் ஆர்வம் உந்தித்தள்ளவே விளையாட்டுகளிலிருந்து வெளியேறி விட்டிருக்கிறார்.

வீட்டில் வாசிப்புச் சூழல் இருந்து வந்ததும்,  தவிர தொழிற்சாலை குடியிருப்பில் சிறப்பானதொரு நூலகம் இருந்ததும்  இவரின் ஆரம்பகால வாசிப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே தீவிரமான வாசகனாகிவிட்டார்.

கல்கி, மு.வ., அகிலன், நா.பா, ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து பின்னர் கா.நா.சு, செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், கு.ப.ரா, ஜானகிராமன் என்று வாசிக்க ஆரம்பித்து, இடையில் சிரஞ்சீவி, மேதாவி, பி.டி.சாமி ஆகியோரையும் தேடித்தேடி வாசித்தார்.

சோவியத் எழுத்துகளின் தாக்கத்தால் எழுத வந்ததாகவே குறிப்பிடுகிறார். பெரிதும் அறியப்பட்ட கார்க்கி, ஷோலகோவ், குப்ரின், கோகோல், தாஸ்தாவெஸ்கி, செக்காவ், டால்ஸ்டாய் ஆகியோர் மட்டுமின்றி வேரா பனோவா, கபூர் குல்யாம், சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றோரின் படைப்புகளின் உத்வேகத்தால் எழுதும் ஆர்வம் இவருக்கு முகிழ்த்ததாம்.

எழுபதுகளின் துவக்கத்திலிருந்தே  கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தவர், 1973 வாக்கில்தான் 'நாடாக்காரர்கள்' சிறுகதையை எழுதினார்.

சென்னை நகர உதிரிப் பாட்டாளிகளின் வேலையின்மையை பேசக் கூடிய 'நாடாக்காரர்கள்' எனும் சிறுகதை  கணையாழி மே - ஜூன் 1974 இதழில் வெளியானது. மாதாந்திர அளவில் தேர்ந்தெடுக்கப்படாமையால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்க முடியாமற்போனது என்று அந்த ஆண்டுக்கான கதையை தெரிவு செய்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இலக்கியச் சிந்தனையின் ஆண்டுக்  கூட்டத்தில் கூறியதோடன்றி, அவ்வப்போது தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகவும், சென்னை மொழியில் இலக்கியம் படைக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டாகவும் இக்கதையைக் குறிப்பிட்டு வந்தார். 

மேலும் இவரது படைப்புகள் அவள் விகடன், இளைஞர் முழக்கம், செம்மலர், கணையாழி, கல்கி, கலை, தாமரை, தீக்கதிர், தேன்மழை, நவீன விருட்சம்,  பிரக்ஞை, மகளிர் சிந்தனை, ஜெயந்தி போன்ற பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கிறது.

'அஸ்வமேதம்' (புதினம்) 1976ல் எழுதப்பட்டது. அன்றைய பிரதமர் வெளியிட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக அணிகளிடையே குறிப்பாக இடதுசாரிகள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், கிளர்ச்சிப் பிரசுரமாக பயன்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டது. அவசர நிலை முடிவுறுவதற்கு முன்னர் பிரசுரிக்க முயன்றாலும் அவை முழுமையடையவில்லை. பின்னர் இவரது வழிகாட்டியும், தத்துவ ஆசானுமான ரயில்வே சங்க செயல்தலைவர் தோழர் ஆர். இளங்கோவன் 2011 இல் தனது மகன் திருமண விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகளை அச்சிட்டு மணவிழா பரிசாக அளித்திட்டார். பின்னரே பரவலாக படிக்கப்பட்டு 2018 இல் இரண்டாம் பதிப்பினைக் கண்டது.

தமிழில் வெளியான நேர்க்கோட்டில் அமையாத புதினங்களில் 'அஸ்வமேதம்' ஒன்றாகும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவசர நிலையின் இருபத்தைந்தாவது ஆண்டையொட்டி நடைபெற்ற தமுஎகச கூட்டமொன்றில்  தோழர் கமலாலயன் இப்புதினம் குறித்த ஆய்வுரையொன்றை  அளித்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவசர நிலையின் பொழுது இவர் எழுதிய "மாத்யரும் மஹிஷாசுரமர்தினியும்" என்ற கவிதை, அரக்கர்களை அழித்திட எருமை வாகனமேறி வரக்கூடிய மகிஷாசுரமர்த்தினியை அரக்கர்களே போற்றிப் பாடுவதாக அமைந்திருந்தது.

ரயில்வே தொழிற்சங்கத்தின் செயல்தலைவராக இருக்கக்கூடிய தோழர் ஆர்.இளங்கோவன் மற்றும் எழுத்தாளர் தோழர் எஸ்ஏபி ஆகிய இருவரும் இவரை தொடர்ந்து எழுதத் தூண்டும் தூண்டுகோல்கள்.

மக்கள் எழுத்தாளர் சங்கத்திலும் பின்னர்  பெயர் மாற்றம் கண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும்  உறுப்பினராக இருந்து வருகிறார்.

காலங்காலமாய் இருந்து வரும் மக்கள் ஒற்றுமையையும் மதநல்லிணக்கத்தையும் குலைத்து இந்துக்களின் ஏக பிரதிநிதிகளாக தங்களை நிலைநாட்டிக் கொள்ள முயலும் ஜகத்குருக்களையும், காவிப்படையினரையும் பற்றி உணரச்செய்து, பிற்போக்கு சக்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து ஜனநாயக திசை வழியை நோக்கி இறை உணர்வு கொண்டோர் கொள்ளாதோர் என்ற வேறுபாடின்றி பெண்களையும் ஆண்களையும் புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தும் வரலாற்று கடமையின் காரணமாக இவரின் படைப்புகள் தான் சார்ந்திருந்த பிராமண சமூகத்தை மையமாக கொண்டதாக அமைந்திருப்பதாக்க கூறுகிறார்.

1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுக் காலத்தில்  மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிரமாக இருந்து வந்திருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணங்கள், அறிக்கைகள் போன்றவற்றை அத்தருணத்தில் மொழி பெயர்த்து வந்திருக்கிறார்.

குறிப்பாக சுதந்திரப் பொன்விழாவையொட்டி களத்தில் போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய ஐம்பதுக்கும் மேற்பட்ட  தொடர்களை மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் எழுதினர். அத்தொடர்களை மொழி பெயர்க்கும் பணியை தீக்கதிர் ஆசிரியர் குழு இவருக்கு அளித்தது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலும், தீக்கதிரிலும் ஒரே நேரத்தில் அது பிரசுரிக்கப்பட்டது.

இது தவிர மார்க்சிஸ்ட் கட்சியின் நவீனப்படுத்தப்பட்ட திட்டம் குறித்து அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களின்  கட்டுரைகளையும் மொழி பெயர்த்துள்ளார். ஏகாதிபத்திய உலகமயமாக்கல் குறித்த காஸ்ட்ரோவின் சிறப்புவாய்ந்த இரு சொற்பொழிவுகள் இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன.

இப்பணிகள் யாவும் இவரது அரசியல் பார்வையை கூராக்கியது என்றே கருதுகிறார். இதன் வெளிப்பாட்டை 90 க்குப் பிந்திய இவரது சிறுகதைகளில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும். 

கிளிண்டன் இந்தியா வந்தபோது, தீக்கதிரில் இவர் எழுதிய கட்டுரைத் தொடரும், தற்போது பல்வேறு பதிப்புகளைக் கண்ட புத்தகங்கள் பற்றி தீக்கதிர் - வண்ணக்கதிரில் வெளியாகும் 'தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்' தொடரும் இவரது பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

தீக்கதிர் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ்களில் உலகமயம் பற்றிய பல்வேறு கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகமயத்திற்கு எதிராக "கொத்து பரோட்டா" எனும் நாடகத்தை இவர் எழுதி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க விடயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் அதன் கொள்கைகளிலும், செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

"மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வமான சமூகவெளியே அடிப்படைத் தேவை" என்ற தீர்க்கமான கருத்தோட்டம் கொண்டவர். அக்கருத்திற்கு முன்னோடியாக திகழும் எழுத்தாளர் இராமச்சந்திர வைத்தியநாத் அவர்களும், அவர்களின் படைப்புகளும் சமூகப்பரப்பில் பரவலாக பேசப்பட வேண்டியது காலத்தின் அவசியம்.

வெளிவந்த நூல்களின் பட்டியல்

1.20ம் நூற்றாண்டின் சுருக்கமான வரலாறு ( மொழிபெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2000

2.ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல் ஃபிடல் காஸ்ட்ரோ (மொழி பெயர்ப்பு)  2001 இரண்டாம் பதிப்பு 2009

3.சோசலிசமும் மத பீடங்களும் – ரோஸா லக்ஸம்பர்க் ( மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2009

4.அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ (மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம் ) 2010

5.மார்க்சிய பார்வையில் அன்னை தெரசா – விஜய பிரசாத் ( மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2010

6.அஸ்வமேதம்  (புதினம்) 1976ல் எழுதப்பட்டது  2011ல் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பு 2018

7.சென்னப்பட்டணம் – மண்ணும் மக்களும் ( வரலாறு) 2016

8.ஸ்டிரைக் (புதினம்) 2017

9.பூர்ணாஹூதி (சிறுகதைத் தொகுப்பு) 2018

பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்

*அனந்தநாராயண சர்மாவின் பால்ய கால அனுபவங்கள் -  கணையாழி குறுநாவல் போட்டி - இரண்டாவது பரிசு - 1991

*கண்ணகி நகர் – கல்கி பவள விழா குறுநாவல் போட்டி - முதல் பரிசு -2016

*கை படாமல்  குச்சி  ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கை படாமல் கப், கோன் குல்ஃபி சாப்பிடுவது எப்படி? – 2016ன்  இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தெரிந்தெடுத்தார்.   

*சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்-  சென்னை புத்தகத் திருவிழாவில் சிறந்த வரலாற்று நூல்– 2017.

*பூர்ணாஹூதி - சிறந்த சிறுகதைக்கான தமுஎகசவின் 2017ம் ஆண்டு விருது.

*சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும் - 2018ம் ஆண்டுக்கான சிறந்த வரலாற்று புத்தகமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது.

இணைய இணைப்புகள்

Nov 11, 2021

கவிஞர் ச. விசயலட்சுமி

 தொகுப்பு : சி.பேரின்பராஜன்

"கவிதை... சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான மக்கள் வாழ்க்கையை நேர்கோட்டில் காட்டும் பாதை. என்னளவில் கவிதை என்பது.. சமூகத்திற்குப் பங்காற்றுவதாக இருக்க வேண்டும். தனிமனித விருப்பம் சார்ந்த கவிதைகள் என்பது ஆயுள் காலம் நெடுமைக்கும் போதுமானதல்ல. "

"பெண் ... அவள் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நிறுவனத்தை நடத்துபவளாக இருக்கிறாள். குடும்ப நிறுவனம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கருத்தியலில் "மட்டும்" ஆண் விழிப்போடு இருக்கிறான். குடும்ப நிறுவனத்தை உருவாக்குவதும் தொடர்வதும் ஆணாதிக்கத்தின் இறுகப் பற்றியக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறது."

"எல்லா விடுதலைக்குமான வேர்.. பொருளாதார விடுதலை. ஆனால் அதுமட்டும் போதாது. தான் சுரண்டப்படுகிறோம் என்பதை உணராத பொருளாதாரச் சுதந்திரத்தால் யாதொரு பயனுமில்லை "...

இப்படி பல்வேறு தளங்களில் தனது கருத்தினை ஆழமாகவும் உறுதிபடவும் உரைப்பவர் கவிஞர் ச.விசயலட்சுமி. இவர்  ஒரு ஆசிரியர்., எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, கவிஞர் என பன் முகம் காட்டும் பாவை.

 "கூவம் எனது நதிக்கரை" , என பெருமை பொங்க பறைசாற்றும் இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்டோபர் 23, 1972 இல் பிறந்தார். இவரது தந்தை சம்பத் அவர்களுக்கு போளூர் அருகே நம்மியந்தல் என்ற கிராமம்தான் பூர்வீகம். தாயார் மைதிலி வாணியம்பாடி அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிந்தாதிரிப்பேட்டை, ஆவடி மற்றும் மந்தைவெளியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவியாக.. ஆசிரியர் வேதநாயகம் அவர்கள் தந்த உற்சாகத்தில் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு டிபன் பாக்ஸ் பரிசுப் பெற்றதில் துவங்கியது இலக்கிய ஆர்வம்.

1993ல் பிரசிடென்சி கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், 1995 இல் அதே கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், 1996இல் புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் பட்டமும் பெற்றார்.  1998 இல் நெட் தேர்ச்சி பெற்றார். 2002 இல் பிரசிடென்சி கல்லூரியில் பி.எச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

10ம் வகுப்பு முடிந்தவுடனே திருமண பந்தத்தில் இணைக்க குடும்பத்தில் அழுத்தம் தரப்பட்டபோது.. பெருங்கிளர்ச்சி செய்து மேற்படிப்புக்கு உறுதி வாங்கி மேல்நிலைப்பள்ளி சேர்க்கைக்கு பின்தான், தனது அத்தை சுபத்ரா அவர்களின் மகன்.. இந்து ஆங்கில நாளிதழில் ப்ரூஃப் ரீடராக இருந்த சு.பழனிக்குமாரை திருமணம் செய்து கொண்டு கல்வியை தொடர்ந்து.‌. கர்ப்பிணியாக +2 தேர்வு எழுதினார். கல்லூரி படிப்புக்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோது தந்தை வழி  பாட்டி மண்ணம்மாள், சித்தப்பா மூர்த்தி அவர்களின் உறுதியான ஆதரவால் தனது கனவுக் கல்லூரியான மாநிலகல்லூரியில் நிறைமாத கர்ப்பிணியாக சேர்ந்து, பேராசிரியர்கள், சக மாணவர்களின் ஆதரவோடும் பால்குடி மறவா கைகுழந்தையோடு கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

எழுத்து மற்றும் வெகுஜன தகவல்தொடர்பு மீதான அவரது ஆர்வத்தினால் கல்லூரி பத்திரிகைக்கு கட்டுரைகளை வழங்கவும், அகில இந்திய வானொலியில் இளையபாரதம், திரைப்படப்பாடல் தொகுப்பு மற்றும் தூர்தர்ஷன் பொதிகை ஆகியவை மூலம் தனது எண்ணங்களை கவிதை மற்றும் சிறுகதை வடிவில் ஒலிபரப்பும் வாய்ப்பும் , நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் திறனும் பெற்றிருந்தார். இதன் மூலம் கிடைத்த கவியரங்க வாய்ப்புகள் கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர் பொன் செல்வகணபதி, கவிஞர் மு.மேத்தா போன்ற ஆளுமைகளின் அறிமுகத்தையும் தொடர்பையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுத்தந்தது.

கல்லூரி இரண்டாமாண்டு காலகட்டத்தில் கம்பன் கழகம் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு முதல் பரிசாக ₹500 வெற்றி பெற்றதன் நினைவாக தனது குழந்தைக்கு காதணி வாங்கி இன்றளவும் தனது மகளிடம் இருப்பதை பெருமையுடன்  நினைவு கூறுகிறார். "பவல் மூர் ஹெட்" நிறுவனம் நடத்திய பரிசுத்தொகை அதிகம் கொண்ட கட்டுரைப்போட்டியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இது போல பல போட்டிகளில் வென்ற சான்றிதழ்கள்தான்  நுழைவு தேர்வு எழுதி பல பேருக்கு கிடைக்காத பி.எட் சேர்க்கையை இவருக்கு தூய கிறிஸ்தோபர் கல்வியியல் கல்லூரியில் எளிமையாக பெற்றுத்தந்தது. இங்கும்  தமிழ்த்துறை பேராசிரியர் லில்லி ஸ்டூவர்ட் அவர்களின் ஆதரவில் கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு வாகை சூடியும் பாரதியாரின் குயில் பாட்டை நாடகமாக வடிவமைத்து, இயக்கி, நடித்தும் முத்திரை பதித்துள்ளார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வினில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றார்.

மாணவர்களிடம் வாசிப்பைத் தூண்டுதல் என்னும் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு நூல்களைக் கொடுத்து வாசிக்க வைத்தல் என்ற "புத்தகப் பூங்கொத்து" திட்டத்தின் சோதனை முயற்சியை இவர் அரும்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளியில் செய்ததன் மூலம் வகுப்பறையில் மாணவர்களை வாசித்து கதைகூற வைத்தல் என்பது சாத்தியம் என்ற முடிவு கிடைத்தது.

ஒரு ஆசிரியராக...

ஒரு கதையை நாடகமாக்குவது, நாடகக்கருத்தைக் கவிதையாக்குவது, கவிதைக் கருத்தை நாடகமாக்குவது  என ஒரு கருத்தை, செய்தியை மொழி வழியாக வெவ்வேறு வடிவங்களுக்கு கொண்டு செல்லும் பயிற்சியை அளித்ததோடு

கதைகளை விளக்குவது, மாணவர்களையே புதிய கதைகளை உருவாக்கச் செய்வது, நேரிடையாகவும்,தொலைப்பேசி மூலமாகவும் படைப்பாளர்களோடு  உரையாட வைத்தல்... என இளந்தலைமுறையை இலக்கிய உலகத்தின் ருசியறிய செய்து‌.. இவர் பயிற்சி தந்த மாணவர்கள்.. பல்வேறு இலக்கிய போட்டிகளில் பரிசுகள், வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளை வென்றிருக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் நீடித்த...ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்பு நடத்தி இலக்கியத்திற்கான தனது ஆதரவை வழங்கிய, "முரண் களரி" என்ற இலக்கிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

மாநிலக்கல்லூரி மாணவர்கள் இணைந்து "வாழை" என்னும் மாணவர்களுக்கான வழிகாட்டி அமைப்பை உருவாக்கி, தர்மபுரி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மேம்பாட்டிற்காக தன்னார்வ தொண்டு செய்த நிறுவனத்தில்  குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

2015 சென்னை பெருமழை துயர் மிகு சூழலில் "சென்னை எழும்"  என்ற வாட்ஸப் குழுவை துவங்கி நண்பர்களை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றி, வெள்ளம் வடிந்த பின்னும் அந்த விளிம்பு நிலை மக்களுக்கு தொடர் உதவிகளை கொண்டு சேர்க்கும் அறப்பணியை ஆற்றியுள்ளார்.

2006 ம் வருடம் வரை "பொன்னி" என்ற புனைப்பெயரிலும், அதன் பின் இயற்பெயரிலும் படைப்புகளை வெளியிடத் துவங்கி‌.. கவிக்கோ", தினமலர், ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழ்  இதழ்களில் அவரது கவிதைகள்  கட்டுரைகளும், உயிரெழுத்து, உயிர்மெய், கனவு, புதுவிசை, செம்மலர், மணல்வீடு, கல்வெட்டு பேசுகிறது, ஹெல்த், இனியொரு, இளைஞர் முழக்கம், உயிரோசை, அந்திமழை, வெப் உலகம் போன்ற  தமிழின் குறிப்பிடத்தக்க இதழ்களில் இவரது பல கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

விஜய், கலைஞர், புதுயுகம், மக்கள், பொதிகை போன்ற பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.

 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி  மாநாட்டில்  "தமிழ்க் கவிதைகளில் பெண்ணுரிமை" என்ற தலைப்பில்  கட்டுரையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு பெற்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் மாநிலக்குழு உறுப்பினராக  இருந்துள்ளார்.

 2015 இல் "போர் மண்டலத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் ஊடறு.காம், கொத்தகலா கல்வியியல் கல்லூரி மற்றும் இலங்கையின் மலையக பெண்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த 'பெண்கள் சந்திப்பு' நிகழ்ச்சியிலும், பின்னர்,பினாங் (மலேசியா), மட்டக்களப்பு (இலங்கை) மற்றும் சிங்கப்பூர் (தேசிய நூலகம்) ஆகியவற்றில் ஊடறு.காம் ஏற்பாடு செய்த 'பெண்கள் சந்திப்பு' நிகழ்ச்சிகளிலும் அவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

இவருடைய "காளி" சிறுகதை கேரள அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் துணைபாடமாக இருக்கிறது.

 பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவற்றில் கலந்து கொண்டு கட்டுரை அளித்திருக்கிறார். உரையாற்றியிருக்கிறார். சாகித்ய அகாதமி நடத்திய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

"உயிரெழுத்து" இதழில் வெளியான இவரது சில கவிதைகள்..

 "உயிரெழுத்து கவிதைகள்" என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு புத்தகத்தில் வெளியிட்டும்,. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கொலம்பியா ஜர்னல் இதழிலும், சர்வதேச அளவிலான கவனம் பெற்ற National Translation Month மின்னிதழிலும் இவரது கவிதையை மொழி பெயர்த்து வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆப்கன் பெண்களின் வரலாற்றை, வலிகளை, குரலை, பார்வையை, வாழ் நிலையை  முதன் முதலாகப் பதிகிற வகையில் "லண்டாய்" எனும் வாய்மொழி வடிவத்தையும் தமிழுக்கு முதலாவதாக அறிமுகப்படுத்திய பெருமையுடையவர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தயாரிக்கப்பட்ட முதல் கலைத்திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் தமிழ்ப் பாடத்தின் கலைத்திட்டம் வடிவமைப்புக் குழுவில் பங்கேற்றதுடன் சிறப்புத் தமிழ்ப் பாடநூல் எழுதி, தயாரித்துள்ளார்.

இரண்டு மகள்களில் மூத்தவர் நிவேதிதா ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங் முடித்து மெக்கானிகல் இன்ஜினியரான கோபிநாத் என்பவரை மணந்து ஆதவ் என்ற பேரக்குழந்தையை நல்கியுள்ளார். இளையவர் பாரதி ஜர்னலிஸம் முடித்து பத்திரிகையாளராக பணிபுரிகிறார். தற்போது பத்திரிக்கை துறையிலிருந்து ஓய்வு பெற்ற கணவரோடும், இளைய மகளோடும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

 1. " தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை ", தி பார்க்கர் பதிப்பகம் (2002)

 2. "பெருவெளிப்பெண்"  மித்ரா (2007)

 3." எல்லா மாலைகளிளும் எரியும் ஒரு குடிசை" உயிரெழுத்து  (2011)

 4. "பெண்ணெழுத்து களமும் அரசியலும் " பாரதி புத்தகாலயம் (2011)

 5. "லண்டாய்" ஆஃப்கன் நாட்டுப்புற மற்றும் நவீன கவிதைகள். தடாகம் (2014)

 6. " என் வனதேவதை" மின் புத்தகம் அந்தமில் ஆப்  2016

 7. "பேரன்பின் கனதி" பாரதி புத்தகாலயம் (2018)

 8. " காளி "(சிறுகதை தொகுப்பு) பாரதி புத்தகாலயம்.  (2018)

பெற்ற விருதுகள் /பரிசுகள்

1. அரிமா சக்தி விருது – இலக்கியம்

2.ஜெயந்தன் விருது – இலக்கியம்- மொழிபெயர்ப்பு

3.ரோட்டரி கிளப் – நல்லாசிரியர் விருது

4. சங்கமம் 4 – மனிதநேயத் திருச்சுடர் விருது

இணைய இணைப்புகள்

கவிஞர்.ச.விசயலட்சுமி நூல்கள்

கவிஞரின் வலைப்பூ

நேர்காணல்

காணொளி நேர்காணல்

Oct 12, 2021

எழுத்தாளர்.பழனி.சோ.முத்துமாணிக்கம்

 தொகுப்பு: முனைவர் பேரா.மீனாசுந்தர்

            நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்என்று பாவேந்தன் பாடியதை உயிர்மூச்சாகக் கொண்டு , சமூக அவலங்களைச் சாடும் படைப்பாளியாக இயங்கிக் கொண்டிருப்பவர் பழனி. சோ.முத்துமாணிக்கம். “என் கண்முன் நடமாடும் மாந்தர்களே என் கதை கவிதைகளுக்குள் கதைமாந்தர்களாக உலாவுகிறார்கள்எனக் கூறும் சோ. முத்துமாணிக்கம், தஞ்சை நண்பர்களுக்கு மணிமுத்தாகவும் பழனி வட்டாரத்தில் தமிழ்ச்சுடர் மணிமுத்தாகவும், செம்பவளமாகவும் புனைமுகங்கள் காட்டி நிற்கிறார்.

            பழனி வட்டம் அமரர்பூண்டி என்னும் சிற்றூரில் சோமசுந்தரம் நாச்சம்மாள் இணையருக்கு, 01/07/1950 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள சரசுவதி தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை பயின்றார். ஆயக்குடியில் உள்ள .டி..உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு ( அந்நாள் S.S.L.C } வரை பயின்றார். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பையும் இளம் அறிவியல் ( வேதியியல் ) பட்டப் படிப்பையும் முடித்தார். மதுரை காமராசர் பல்கலையில் தமிழ் முதுகலை மற்றும் இளம் முனைவர் ( எம். & எம்.பில் ) பட்டங்களைப் பெற்றார்.  இவருடைய மனைவி சரளா அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கோவையில் இருக்கும் இவர்களுடைய மூத்த மகள் மலர்விழி, வீட்டிலிருந்தே மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.சென்னையில் வசிக்கும்  இரண்டாவது மகள் முனைவர் பூங்குழலிபுதிய தலைமுறை  தொலைக்காட்சியில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.

            இளம்அறிவியல் பட்டம் பெற்றபின் அறிவியல் ஆய்வுப் படிப்புக் கனவுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஓராண்டு மளிகைக் கடையில் வேலைபார்த்தார்.வேலையில்லாப் பட்டதாரிகளுக்குப் புகலிடம் கொடுக்கக் கலைஞர் அவர்கள் உருவாக்கியஇளைஞர் அணியில் ‘ ( youth service corps ) சேர்ந்து முதுகுளத்தூர் வட்டம் அலங்கானூரில் ஓராண்டு பணிபுரிந்தார். அதற்கடுத்து காட்பாடி கல்புதூரில் பள்ளித்துணை ஆய்வாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ஓராண்டு வேலைசெய்தார். 1974-முதல் பாரத அரசு வங்கியில் பணிநிறைவடையும் வரை (2010) உழைத்தார்.

             தன் பதிமூன்றாம் அகவையிலேயே இவருக்குக் கதைகளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் பொன்னியின் செல்வன் கல்கி. வளர்த்தெடுத்தவர் கடல்புறா சாண்டில்யன்.கல்லூரி நுழைவுக்குப்பின் மு.. , திரு.வி.. , செயகாந்தன் ஆகியோர் வழிநடத்தத் தொடங்கினர். கல்லூரியில் பாவலர் மன்றம் எனும் அமைப்பைத் தொடக்கி அதன்  செயலராக இயங்கியுள்ளார். கொடுக்கப்படும் ஈற்றடி அமையும் வண்ணம் வெண்பா எழுதுவோர் வாரம் ஒருமுறை கூடி அரங்கேற்றுவர்.

            தேவநேயப் பாவாணர்,பெருஞ்சித்திரனார்,தமிழ்க்குடிமகன் ஆகியோர் நட்பால் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். ’ தமிழ்ச்சுடர்எனும் கையெழுத்து மாத  இதழைத் தன் இருபதாவது அகவையில் தொடங்கினார். பின்னர் அது அச்சிதழாக மலர்ந்து இரண்டாண்டுகள் சுடர்வீசியது. பூம்புனல், முதியோர் காவலன் ஆகிய சிற்றிதழ்களின் பொறுப்பாசிரியராக விளங்கினார். வள்ளலார், தாயுமானவர்,பாரதி, பாவேந்தன் ஆகியோரின் பாடல்களைப் படித்தபின் கவிதை எழுதும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. தமிழக அரசின் இதழாக வெளிவந்ததமிழரசுநடத்திய வெண்பாப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.

            தெசிணி அவர்கள் நடத்திய கவிதை , துளிர் , மகளிர் சிந்தனை, செம்மலர் , வண்ணக்கதிர், கவிதை உறவு, கல் ஓசை, தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்ச்சுடர், மகாகவி, முங்காரி, பூம்புனல், ஓடம், ஏணி, முதியோர் காவலன், பொதிகை மின்னல், குயில், வெல்லும் தூயதமிழ், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி முதலிய இதழ்களில் இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. கொலீக் ( colleague ) என்ற வங்கி மாத இதழில் இவருடைய ஆங்கிலக் கவிதை ஒன்று ( AIM  AND THEME ) வெளிவந்துள்ளது.

            பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடந்த அனைத்துலகக் கருத்தரங்கங்கள், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்(FOSSILS) நடத்தும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார்.பாரதியார் பல்கலை வெளியிட்ட சங்க இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு நூல்களில் இவருடைய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலக்கியச் சொற்பொழிவுகள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் எனப் பலவற்றிலும் பங்கேற்பவராகவும் நடுவராகவும் இயங்கி வருகிறார்.

            பழனி பாரத அரசுவங்கி ஊழியர் சங்கத்தின் செயலராகவும், பழனி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும் (UNITED FORUM OF BANK UNIONS,PALANI) பொறுப்பு வகித்துள்ளார்.

            ஒரு பதிப்பாளராகஎரிமலைப் பூக்கள் ‘ , ‘ உலகம் என்பது என் வீடுமுதலிய நூல்களைத் தன்  பூமலர் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

            மரபுக் கவிஞராக இருந்து புதுக்கவிதைக்கு வந்தவர் இவர். தோழர் இரா.சு.மணி அவர்களுடைய நட்பால் .மு.. வில் 1992-இல் இணைந்தார். .மு... பழனிக் கிளையின் செயலராகவும், திண்டுக்கல் மாவட்டக் குழு உறுப்பினராகவும், திண்டுக்கல் மாவட்ட இணைச் செயலராகவும் மாவட்டச் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நாள் மாவட்டத் துணைத் தலைவராகவும், மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

            இவருடையஆணிவேர்கள்சிறுகதைவெல்லும் தூயதமிழ்மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘ எதிர் நீச்சல்என்னும் சிறுகதை திண்டுக்கல் அகில இந்திய சனநாயக மாதர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘ ஓரால மரவிழுதாய்என்ற மரபுக் கவிதை, திருப்பரங்குன்றம் .மு.. நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

            என்று முடியும் இந்த வழக்கு ?’ என்று இவரால் படைக்கப்பட்ட நாடகம் கணக்கன்பட்டி பாரதி கலைக்குழுவினரால் பன்முறை மேடையேற்றப் பட்டது. ‘ வானவில்லைத் தேடிஎன்ற நாடகம் திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரால் அரங்கேற்றப் பட்டது.

            கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக.நாட்டுப் புறவியல் ஆய்வாளராக,நாடக ஆசிரியராக,சிறார் இலக்கிய எழுத்தாளராக விளங்கும் இவருடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வெளிவந்துள்ள படைப்புகள்

            1.       ஆய்வுகள்..தீர்வுகள்  (கவிதைகள்.)

2.       இயக்கவியல்- தமிழ்ப் புதினங்களின் வழி  (ஆய்வுக்கட்டுரை)

3.       ஆணிவேர்கள்   (சிறுகதைத்  தொகைநூல்

4.       உயிரின் விலை (நாடகங்கள் )

5.       உலகம் என்பது என் வீடு ( கவிதை)

6.       தமிழ் இலக்கியப் பாடல்கள் தரும் இன்பம் ( கட்டுரைகள்)

7.       மதமா ? மனிதமா ?   ( கட்டுரை..சிறுநூல் வரிசை )

8.       நீலத் திமிங்கலம் முதல் பிக்பாஸ் வரை .(கட்டுரைகள்)

9.       மாணவன் ஆசிரியரான கதை  ( சிறுவர் கதைகள் )

பெற்ற  பரிசுகள் &  விருதுகள்

1.       திருப்பூர் தமிழ்ச் சங்க விருது.(29/02/2004) ’ஆணிவேர்கள்நூலுக்கு

2.       கே.ஆர்.ஜி.நகப்பன் என் இராஜம்மாள் அறக்கட்டளை, குகை,சேலம் அளித்த இலக்கியப் பரிசு.(29/08/2004) ‘உயிரின் விலைக்காக

3.       பயணம் பதிப்பகத்தின் சிறந்த கட்டுரை நூல் (2019)’நீலத் திமிங்கலம் முதல் பிக்பாஸ் வரை’-தோழர் வி..லெனின் நினைவுப் பரிசு.

4.       நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் வழங்கியநற்றமிழ் நாவலர்விருது.

5.       பழனி தமிழ்ச் சங்கம் வழங்கியபாரதியார் விருது

படைப்புகளின்மேல் ஆய்வு

*‘ஆணிவேர்கள்’ –நூலை இளம் முனைவர் (எம்.பில்) பட்டத்துக்காக இருவரும், முதுகலைப் பட்டத்துக்காக ஒருவரும் ஆய்வுசெய்துள்ளனர்.

*’உயிரின் விலை’ – கோவை துடியலூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் (பி..) படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.இந்நூலை இளம் முனைவர்(எம்.பில்) பட்டத்துக்காக ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.

* ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் பாடத்திட்டத்தில் வெளியானகவிச் சோலையில்,குறும்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

இணைய இணைப்புகள்