Nov 11, 2021

கவிஞர் ச. விசயலட்சுமி

 தொகுப்பு : சி.பேரின்பராஜன்

"கவிதை... சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான மக்கள் வாழ்க்கையை நேர்கோட்டில் காட்டும் பாதை. என்னளவில் கவிதை என்பது.. சமூகத்திற்குப் பங்காற்றுவதாக இருக்க வேண்டும். தனிமனித விருப்பம் சார்ந்த கவிதைகள் என்பது ஆயுள் காலம் நெடுமைக்கும் போதுமானதல்ல. "

"பெண் ... அவள் விரும்பியோ விரும்பாமலோ குடும்ப நிறுவனத்தை நடத்துபவளாக இருக்கிறாள். குடும்ப நிறுவனம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கருத்தியலில் "மட்டும்" ஆண் விழிப்போடு இருக்கிறான். குடும்ப நிறுவனத்தை உருவாக்குவதும் தொடர்வதும் ஆணாதிக்கத்தின் இறுகப் பற்றியக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறது."

"எல்லா விடுதலைக்குமான வேர்.. பொருளாதார விடுதலை. ஆனால் அதுமட்டும் போதாது. தான் சுரண்டப்படுகிறோம் என்பதை உணராத பொருளாதாரச் சுதந்திரத்தால் யாதொரு பயனுமில்லை "...

இப்படி பல்வேறு தளங்களில் தனது கருத்தினை ஆழமாகவும் உறுதிபடவும் உரைப்பவர் கவிஞர் ச.விசயலட்சுமி. இவர்  ஒரு ஆசிரியர்., எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, கவிஞர் என பன் முகம் காட்டும் பாவை.

 "கூவம் எனது நதிக்கரை" , என பெருமை பொங்க பறைசாற்றும் இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்டோபர் 23, 1972 இல் பிறந்தார். இவரது தந்தை சம்பத் அவர்களுக்கு போளூர் அருகே நம்மியந்தல் என்ற கிராமம்தான் பூர்வீகம். தாயார் மைதிலி வாணியம்பாடி அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிந்தாதிரிப்பேட்டை, ஆவடி மற்றும் மந்தைவெளியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவியாக.. ஆசிரியர் வேதநாயகம் அவர்கள் தந்த உற்சாகத்தில் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு டிபன் பாக்ஸ் பரிசுப் பெற்றதில் துவங்கியது இலக்கிய ஆர்வம்.

1993ல் பிரசிடென்சி கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், 1995 இல் அதே கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், 1996இல் புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் பட்டமும் பெற்றார்.  1998 இல் நெட் தேர்ச்சி பெற்றார். 2002 இல் பிரசிடென்சி கல்லூரியில் பி.எச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

10ம் வகுப்பு முடிந்தவுடனே திருமண பந்தத்தில் இணைக்க குடும்பத்தில் அழுத்தம் தரப்பட்டபோது.. பெருங்கிளர்ச்சி செய்து மேற்படிப்புக்கு உறுதி வாங்கி மேல்நிலைப்பள்ளி சேர்க்கைக்கு பின்தான், தனது அத்தை சுபத்ரா அவர்களின் மகன்.. இந்து ஆங்கில நாளிதழில் ப்ரூஃப் ரீடராக இருந்த சு.பழனிக்குமாரை திருமணம் செய்து கொண்டு கல்வியை தொடர்ந்து.‌. கர்ப்பிணியாக +2 தேர்வு எழுதினார். கல்லூரி படிப்புக்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியபோது தந்தை வழி  பாட்டி மண்ணம்மாள், சித்தப்பா மூர்த்தி அவர்களின் உறுதியான ஆதரவால் தனது கனவுக் கல்லூரியான மாநிலகல்லூரியில் நிறைமாத கர்ப்பிணியாக சேர்ந்து, பேராசிரியர்கள், சக மாணவர்களின் ஆதரவோடும் பால்குடி மறவா கைகுழந்தையோடு கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

எழுத்து மற்றும் வெகுஜன தகவல்தொடர்பு மீதான அவரது ஆர்வத்தினால் கல்லூரி பத்திரிகைக்கு கட்டுரைகளை வழங்கவும், அகில இந்திய வானொலியில் இளையபாரதம், திரைப்படப்பாடல் தொகுப்பு மற்றும் தூர்தர்ஷன் பொதிகை ஆகியவை மூலம் தனது எண்ணங்களை கவிதை மற்றும் சிறுகதை வடிவில் ஒலிபரப்பும் வாய்ப்பும் , நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் திறனும் பெற்றிருந்தார். இதன் மூலம் கிடைத்த கவியரங்க வாய்ப்புகள் கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர் பொன் செல்வகணபதி, கவிஞர் மு.மேத்தா போன்ற ஆளுமைகளின் அறிமுகத்தையும் தொடர்பையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுத்தந்தது.

கல்லூரி இரண்டாமாண்டு காலகட்டத்தில் கம்பன் கழகம் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு முதல் பரிசாக ₹500 வெற்றி பெற்றதன் நினைவாக தனது குழந்தைக்கு காதணி வாங்கி இன்றளவும் தனது மகளிடம் இருப்பதை பெருமையுடன்  நினைவு கூறுகிறார். "பவல் மூர் ஹெட்" நிறுவனம் நடத்திய பரிசுத்தொகை அதிகம் கொண்ட கட்டுரைப்போட்டியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வெற்றி பெற்றுள்ளார்.

இது போல பல போட்டிகளில் வென்ற சான்றிதழ்கள்தான்  நுழைவு தேர்வு எழுதி பல பேருக்கு கிடைக்காத பி.எட் சேர்க்கையை இவருக்கு தூய கிறிஸ்தோபர் கல்வியியல் கல்லூரியில் எளிமையாக பெற்றுத்தந்தது. இங்கும்  தமிழ்த்துறை பேராசிரியர் லில்லி ஸ்டூவர்ட் அவர்களின் ஆதரவில் கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு வாகை சூடியும் பாரதியாரின் குயில் பாட்டை நாடகமாக வடிவமைத்து, இயக்கி, நடித்தும் முத்திரை பதித்துள்ளார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வினில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றார்.

மாணவர்களிடம் வாசிப்பைத் தூண்டுதல் என்னும் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு நூல்களைக் கொடுத்து வாசிக்க வைத்தல் என்ற "புத்தகப் பூங்கொத்து" திட்டத்தின் சோதனை முயற்சியை இவர் அரும்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளியில் செய்ததன் மூலம் வகுப்பறையில் மாணவர்களை வாசித்து கதைகூற வைத்தல் என்பது சாத்தியம் என்ற முடிவு கிடைத்தது.

ஒரு ஆசிரியராக...

ஒரு கதையை நாடகமாக்குவது, நாடகக்கருத்தைக் கவிதையாக்குவது, கவிதைக் கருத்தை நாடகமாக்குவது  என ஒரு கருத்தை, செய்தியை மொழி வழியாக வெவ்வேறு வடிவங்களுக்கு கொண்டு செல்லும் பயிற்சியை அளித்ததோடு

கதைகளை விளக்குவது, மாணவர்களையே புதிய கதைகளை உருவாக்கச் செய்வது, நேரிடையாகவும்,தொலைப்பேசி மூலமாகவும் படைப்பாளர்களோடு  உரையாட வைத்தல்... என இளந்தலைமுறையை இலக்கிய உலகத்தின் ருசியறிய செய்து‌.. இவர் பயிற்சி தந்த மாணவர்கள்.. பல்வேறு இலக்கிய போட்டிகளில் பரிசுகள், வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளை வென்றிருக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் நீடித்த...ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்பு நடத்தி இலக்கியத்திற்கான தனது ஆதரவை வழங்கிய, "முரண் களரி" என்ற இலக்கிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

மாநிலக்கல்லூரி மாணவர்கள் இணைந்து "வாழை" என்னும் மாணவர்களுக்கான வழிகாட்டி அமைப்பை உருவாக்கி, தர்மபுரி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மேம்பாட்டிற்காக தன்னார்வ தொண்டு செய்த நிறுவனத்தில்  குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

2015 சென்னை பெருமழை துயர் மிகு சூழலில் "சென்னை எழும்"  என்ற வாட்ஸப் குழுவை துவங்கி நண்பர்களை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றி, வெள்ளம் வடிந்த பின்னும் அந்த விளிம்பு நிலை மக்களுக்கு தொடர் உதவிகளை கொண்டு சேர்க்கும் அறப்பணியை ஆற்றியுள்ளார்.

2006 ம் வருடம் வரை "பொன்னி" என்ற புனைப்பெயரிலும், அதன் பின் இயற்பெயரிலும் படைப்புகளை வெளியிடத் துவங்கி‌.. கவிக்கோ", தினமலர், ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழ்  இதழ்களில் அவரது கவிதைகள்  கட்டுரைகளும், உயிரெழுத்து, உயிர்மெய், கனவு, புதுவிசை, செம்மலர், மணல்வீடு, கல்வெட்டு பேசுகிறது, ஹெல்த், இனியொரு, இளைஞர் முழக்கம், உயிரோசை, அந்திமழை, வெப் உலகம் போன்ற  தமிழின் குறிப்பிடத்தக்க இதழ்களில் இவரது பல கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

விஜய், கலைஞர், புதுயுகம், மக்கள், பொதிகை போன்ற பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.

 2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி  மாநாட்டில்  "தமிழ்க் கவிதைகளில் பெண்ணுரிமை" என்ற தலைப்பில்  கட்டுரையைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு பெற்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் மாநிலக்குழு உறுப்பினராக  இருந்துள்ளார்.

 2015 இல் "போர் மண்டலத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் ஊடறு.காம், கொத்தகலா கல்வியியல் கல்லூரி மற்றும் இலங்கையின் மலையக பெண்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த 'பெண்கள் சந்திப்பு' நிகழ்ச்சியிலும், பின்னர்,பினாங் (மலேசியா), மட்டக்களப்பு (இலங்கை) மற்றும் சிங்கப்பூர் (தேசிய நூலகம்) ஆகியவற்றில் ஊடறு.காம் ஏற்பாடு செய்த 'பெண்கள் சந்திப்பு' நிகழ்ச்சிகளிலும் அவர் உரை நிகழ்த்தியுள்ளார்.

இவருடைய "காளி" சிறுகதை கேரள அரசின் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் துணைபாடமாக இருக்கிறது.

 பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவற்றில் கலந்து கொண்டு கட்டுரை அளித்திருக்கிறார். உரையாற்றியிருக்கிறார். சாகித்ய அகாதமி நடத்திய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

"உயிரெழுத்து" இதழில் வெளியான இவரது சில கவிதைகள்..

 "உயிரெழுத்து கவிதைகள்" என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு புத்தகத்தில் வெளியிட்டும்,. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கொலம்பியா ஜர்னல் இதழிலும், சர்வதேச அளவிலான கவனம் பெற்ற National Translation Month மின்னிதழிலும் இவரது கவிதையை மொழி பெயர்த்து வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளனர்.

ஆப்கன் பெண்களின் வரலாற்றை, வலிகளை, குரலை, பார்வையை, வாழ் நிலையை  முதன் முதலாகப் பதிகிற வகையில் "லண்டாய்" எனும் வாய்மொழி வடிவத்தையும் தமிழுக்கு முதலாவதாக அறிமுகப்படுத்திய பெருமையுடையவர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தயாரிக்கப்பட்ட முதல் கலைத்திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் தமிழ்ப் பாடத்தின் கலைத்திட்டம் வடிவமைப்புக் குழுவில் பங்கேற்றதுடன் சிறப்புத் தமிழ்ப் பாடநூல் எழுதி, தயாரித்துள்ளார்.

இரண்டு மகள்களில் மூத்தவர் நிவேதிதா ஸ்டரக்சுரல் இன்ஜினியரிங் முடித்து மெக்கானிகல் இன்ஜினியரான கோபிநாத் என்பவரை மணந்து ஆதவ் என்ற பேரக்குழந்தையை நல்கியுள்ளார். இளையவர் பாரதி ஜர்னலிஸம் முடித்து பத்திரிகையாளராக பணிபுரிகிறார். தற்போது பத்திரிக்கை துறையிலிருந்து ஓய்வு பெற்ற கணவரோடும், இளைய மகளோடும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

 1. " தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை ", தி பார்க்கர் பதிப்பகம் (2002)

 2. "பெருவெளிப்பெண்"  மித்ரா (2007)

 3." எல்லா மாலைகளிளும் எரியும் ஒரு குடிசை" உயிரெழுத்து  (2011)

 4. "பெண்ணெழுத்து களமும் அரசியலும் " பாரதி புத்தகாலயம் (2011)

 5. "லண்டாய்" ஆஃப்கன் நாட்டுப்புற மற்றும் நவீன கவிதைகள். தடாகம் (2014)

 6. " என் வனதேவதை" மின் புத்தகம் அந்தமில் ஆப்  2016

 7. "பேரன்பின் கனதி" பாரதி புத்தகாலயம் (2018)

 8. " காளி "(சிறுகதை தொகுப்பு) பாரதி புத்தகாலயம்.  (2018)

பெற்ற விருதுகள் /பரிசுகள்

1. அரிமா சக்தி விருது – இலக்கியம்

2.ஜெயந்தன் விருது – இலக்கியம்- மொழிபெயர்ப்பு

3.ரோட்டரி கிளப் – நல்லாசிரியர் விருது

4. சங்கமம் 4 – மனிதநேயத் திருச்சுடர் விருது

இணைய இணைப்புகள்

கவிஞர்.ச.விசயலட்சுமி நூல்கள்

கவிஞரின் வலைப்பூ

நேர்காணல்

காணொளி நேர்காணல்