Nov 16, 2021

எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்

தொகுப்பு: சு. இளவரசி

"வெறும் ஒத்துழைப்பு, உற்சாகம் கடந்து குடும்பத்திற்குள் ஜனநாயகம் என்பது குறிப்பாக ஒரு மாற்று சமூகம் பற்றிய கருத்துடையோருக்கும் களத்தில் செயல்படுவோருக்கும் அத்தியாவசியத் தேவை. அமைப்புகளுக்குள்ளேயே இது பற்றிய அக்கறையும் கருத்தும் ஆழமாக வேர் விடாத நிலையில் குடும்பத்திற்குள் ஜனநாயகம் என்பது வெறும் பகட்டுச் சொற்கட்டாகத்தான் இருந்து வருகிறது. இதன் விளைவுகளை, வீச்சை விரிவான அளவில் விவாதிக்க வேண்டியுள்ளது" என்று கூறும் எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் அவர்கள் இக்கருத்தோட்டத்தை தனது படைப்புகளுக்குள்  இழையோடவிட்டவர். சமூகத்தால் அறிந்துகொள்ளப்பட வேண்டிய சமகால எழுத்தாளர்.

எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத் அவர்களின் இயற்பெயர் வை. இராமச்சந்திரன். அன்றைய தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் காரைக்கால் பாதையில் அமைந்த நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட கிராமமான கோனேரிராஜபுரம் என்ற ஊரில் 14 - 07 – 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த ஊர் தேவாரப் பாடல்களில் திருநல்லம் என்று குறிப்பிடப்படுகிறது.

சென்னையை வாழ்விடமாக கொண்டது இவரது குடும்பம். ரயில் பெட்டி ஆலைத் தொழிலாளியான இரா. வைத்தியநாதன் அவர்களுக்கும் எஸ். நாகலட்சுமி  அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

சென்னை ரயில்வே தொழிலாளர் குடியிருப்பின் இரு பாலருக்கமான பள்ளியில் முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ (பொருளாதாரம்) மற்றும், எம். ஏ (தமிழ்) படித்துள்ளார்.

திருநெல்வேலியில் தொழிற்சாலையை கொண்டுள்ள சென்னை நிறுவனமொன்றில் 35 ஆண்டுகால பணிக்குப் பின்னர் 2010 இல் ஓய்வு பெற்று, தற்பொழுது சென்னையில் வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

பள்ளி நாட்களில் மட்டுமின்றி கல்லூரி நாட்களிலும் வாலிபாலும், ஹாக்கியும் விளையாடியிருக்கிறார். ஹாக்கியில் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு பெற்று ஒரு முறை அனைத்திந்திய பல்கலைக்கழகப் போட்டியில் பங்கேற்றிருக்கிறார், அரசியல் ஆர்வம் உந்தித்தள்ளவே விளையாட்டுகளிலிருந்து வெளியேறி விட்டிருக்கிறார்.

வீட்டில் வாசிப்புச் சூழல் இருந்து வந்ததும்,  தவிர தொழிற்சாலை குடியிருப்பில் சிறப்பானதொரு நூலகம் இருந்ததும்  இவரின் ஆரம்பகால வாசிப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே தீவிரமான வாசகனாகிவிட்டார்.

கல்கி, மு.வ., அகிலன், நா.பா, ஜெயகாந்தன் என்று ஆரம்பித்து பின்னர் கா.நா.சு, செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணியன், கு.ப.ரா, ஜானகிராமன் என்று வாசிக்க ஆரம்பித்து, இடையில் சிரஞ்சீவி, மேதாவி, பி.டி.சாமி ஆகியோரையும் தேடித்தேடி வாசித்தார்.

சோவியத் எழுத்துகளின் தாக்கத்தால் எழுத வந்ததாகவே குறிப்பிடுகிறார். பெரிதும் அறியப்பட்ட கார்க்கி, ஷோலகோவ், குப்ரின், கோகோல், தாஸ்தாவெஸ்கி, செக்காவ், டால்ஸ்டாய் ஆகியோர் மட்டுமின்றி வேரா பனோவா, கபூர் குல்யாம், சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றோரின் படைப்புகளின் உத்வேகத்தால் எழுதும் ஆர்வம் இவருக்கு முகிழ்த்ததாம்.

எழுபதுகளின் துவக்கத்திலிருந்தே  கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தவர், 1973 வாக்கில்தான் 'நாடாக்காரர்கள்' சிறுகதையை எழுதினார்.

சென்னை நகர உதிரிப் பாட்டாளிகளின் வேலையின்மையை பேசக் கூடிய 'நாடாக்காரர்கள்' எனும் சிறுகதை  கணையாழி மே - ஜூன் 1974 இதழில் வெளியானது. மாதாந்திர அளவில் தேர்ந்தெடுக்கப்படாமையால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்க முடியாமற்போனது என்று அந்த ஆண்டுக்கான கதையை தெரிவு செய்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இலக்கியச் சிந்தனையின் ஆண்டுக்  கூட்டத்தில் கூறியதோடன்றி, அவ்வப்போது தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகவும், சென்னை மொழியில் இலக்கியம் படைக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டாகவும் இக்கதையைக் குறிப்பிட்டு வந்தார். 

மேலும் இவரது படைப்புகள் அவள் விகடன், இளைஞர் முழக்கம், செம்மலர், கணையாழி, கல்கி, கலை, தாமரை, தீக்கதிர், தேன்மழை, நவீன விருட்சம்,  பிரக்ஞை, மகளிர் சிந்தனை, ஜெயந்தி போன்ற பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கிறது.

'அஸ்வமேதம்' (புதினம்) 1976ல் எழுதப்பட்டது. அன்றைய பிரதமர் வெளியிட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக அணிகளிடையே குறிப்பாக இடதுசாரிகள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், கிளர்ச்சிப் பிரசுரமாக பயன்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டது. அவசர நிலை முடிவுறுவதற்கு முன்னர் பிரசுரிக்க முயன்றாலும் அவை முழுமையடையவில்லை. பின்னர் இவரது வழிகாட்டியும், தத்துவ ஆசானுமான ரயில்வே சங்க செயல்தலைவர் தோழர் ஆர். இளங்கோவன் 2011 இல் தனது மகன் திருமண விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகளை அச்சிட்டு மணவிழா பரிசாக அளித்திட்டார். பின்னரே பரவலாக படிக்கப்பட்டு 2018 இல் இரண்டாம் பதிப்பினைக் கண்டது.

தமிழில் வெளியான நேர்க்கோட்டில் அமையாத புதினங்களில் 'அஸ்வமேதம்' ஒன்றாகும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவசர நிலையின் இருபத்தைந்தாவது ஆண்டையொட்டி நடைபெற்ற தமுஎகச கூட்டமொன்றில்  தோழர் கமலாலயன் இப்புதினம் குறித்த ஆய்வுரையொன்றை  அளித்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவசர நிலையின் பொழுது இவர் எழுதிய "மாத்யரும் மஹிஷாசுரமர்தினியும்" என்ற கவிதை, அரக்கர்களை அழித்திட எருமை வாகனமேறி வரக்கூடிய மகிஷாசுரமர்த்தினியை அரக்கர்களே போற்றிப் பாடுவதாக அமைந்திருந்தது.

ரயில்வே தொழிற்சங்கத்தின் செயல்தலைவராக இருக்கக்கூடிய தோழர் ஆர்.இளங்கோவன் மற்றும் எழுத்தாளர் தோழர் எஸ்ஏபி ஆகிய இருவரும் இவரை தொடர்ந்து எழுதத் தூண்டும் தூண்டுகோல்கள்.

மக்கள் எழுத்தாளர் சங்கத்திலும் பின்னர்  பெயர் மாற்றம் கண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும்  உறுப்பினராக இருந்து வருகிறார்.

காலங்காலமாய் இருந்து வரும் மக்கள் ஒற்றுமையையும் மதநல்லிணக்கத்தையும் குலைத்து இந்துக்களின் ஏக பிரதிநிதிகளாக தங்களை நிலைநாட்டிக் கொள்ள முயலும் ஜகத்குருக்களையும், காவிப்படையினரையும் பற்றி உணரச்செய்து, பிற்போக்கு சக்திகளின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து ஜனநாயக திசை வழியை நோக்கி இறை உணர்வு கொண்டோர் கொள்ளாதோர் என்ற வேறுபாடின்றி பெண்களையும் ஆண்களையும் புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தும் வரலாற்று கடமையின் காரணமாக இவரின் படைப்புகள் தான் சார்ந்திருந்த பிராமண சமூகத்தை மையமாக கொண்டதாக அமைந்திருப்பதாக்க கூறுகிறார்.

1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுக் காலத்தில்  மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிரமாக இருந்து வந்திருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவணங்கள், அறிக்கைகள் போன்றவற்றை அத்தருணத்தில் மொழி பெயர்த்து வந்திருக்கிறார்.

குறிப்பாக சுதந்திரப் பொன்விழாவையொட்டி களத்தில் போராடிய கம்யூனிஸ்டுகள் பற்றிய ஐம்பதுக்கும் மேற்பட்ட  தொடர்களை மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் எழுதினர். அத்தொடர்களை மொழி பெயர்க்கும் பணியை தீக்கதிர் ஆசிரியர் குழு இவருக்கு அளித்தது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலும், தீக்கதிரிலும் ஒரே நேரத்தில் அது பிரசுரிக்கப்பட்டது.

இது தவிர மார்க்சிஸ்ட் கட்சியின் நவீனப்படுத்தப்பட்ட திட்டம் குறித்து அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களின்  கட்டுரைகளையும் மொழி பெயர்த்துள்ளார். ஏகாதிபத்திய உலகமயமாக்கல் குறித்த காஸ்ட்ரோவின் சிறப்புவாய்ந்த இரு சொற்பொழிவுகள் இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன.

இப்பணிகள் யாவும் இவரது அரசியல் பார்வையை கூராக்கியது என்றே கருதுகிறார். இதன் வெளிப்பாட்டை 90 க்குப் பிந்திய இவரது சிறுகதைகளில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும். 

கிளிண்டன் இந்தியா வந்தபோது, தீக்கதிரில் இவர் எழுதிய கட்டுரைத் தொடரும், தற்போது பல்வேறு பதிப்புகளைக் கண்ட புத்தகங்கள் பற்றி தீக்கதிர் - வண்ணக்கதிரில் வெளியாகும் 'தடம் பதித்த தமிழ்ப் பதிப்புகள்' தொடரும் இவரது பணிகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

தீக்கதிர் மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழ்களில் உலகமயம் பற்றிய பல்வேறு கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகமயத்திற்கு எதிராக "கொத்து பரோட்டா" எனும் நாடகத்தை இவர் எழுதி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க விடயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் அதன் கொள்கைகளிலும், செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

"மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வமான சமூகவெளியே அடிப்படைத் தேவை" என்ற தீர்க்கமான கருத்தோட்டம் கொண்டவர். அக்கருத்திற்கு முன்னோடியாக திகழும் எழுத்தாளர் இராமச்சந்திர வைத்தியநாத் அவர்களும், அவர்களின் படைப்புகளும் சமூகப்பரப்பில் பரவலாக பேசப்பட வேண்டியது காலத்தின் அவசியம்.

வெளிவந்த நூல்களின் பட்டியல்

1.20ம் நூற்றாண்டின் சுருக்கமான வரலாறு ( மொழிபெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2000

2.ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல் ஃபிடல் காஸ்ட்ரோ (மொழி பெயர்ப்பு)  2001 இரண்டாம் பதிப்பு 2009

3.சோசலிசமும் மத பீடங்களும் – ரோஸா லக்ஸம்பர்க் ( மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2009

4.அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ (மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம் ) 2010

5.மார்க்சிய பார்வையில் அன்னை தெரசா – விஜய பிரசாத் ( மொழி பெயர்ப்பு – சிறு பிரசுரம்) 2010

6.அஸ்வமேதம்  (புதினம்) 1976ல் எழுதப்பட்டது  2011ல் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பு 2018

7.சென்னப்பட்டணம் – மண்ணும் மக்களும் ( வரலாறு) 2016

8.ஸ்டிரைக் (புதினம்) 2017

9.பூர்ணாஹூதி (சிறுகதைத் தொகுப்பு) 2018

பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்

*அனந்தநாராயண சர்மாவின் பால்ய கால அனுபவங்கள் -  கணையாழி குறுநாவல் போட்டி - இரண்டாவது பரிசு - 1991

*கண்ணகி நகர் – கல்கி பவள விழா குறுநாவல் போட்டி - முதல் பரிசு -2016

*கை படாமல்  குச்சி  ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கை படாமல் கப், கோன் குல்ஃபி சாப்பிடுவது எப்படி? – 2016ன்  இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தெரிந்தெடுத்தார்.   

*சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்-  சென்னை புத்தகத் திருவிழாவில் சிறந்த வரலாற்று நூல்– 2017.

*பூர்ணாஹூதி - சிறந்த சிறுகதைக்கான தமுஎகசவின் 2017ம் ஆண்டு விருது.

*சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும் - 2018ம் ஆண்டுக்கான சிறந்த வரலாற்று புத்தகமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது.

இணைய இணைப்புகள்