Jun 8, 2021

எழுத்தாளர் பிரபஞ்சன்

 தொகுப்பு: வை. பாப்பு ராணி

            "கதைகள் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் மறைந்து போவதில்லை" என்று கூறும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.

            27.4.1945ஆம் ஆண்டு புதுச்சேரியில் சாரங்கபாணி – அம்புஜம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தென்னை மரங்களை வளர்த்து, அதிலிருந்து கள் எடுத்து விற்று வந்த சோலை விவசாயிகள் குடும்பத்தில் பிரபஞ்சனின் தந்தை சாரங்கபாணியும் ஒருவர்.

            படிக்காத இவருடைய தந்தை தன் மகனை ஒரு பேராசிரியர் நடத்திய பிரெஞ்சு பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். பின்னர், 11 ஆம் வகுப்பு வரை புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் பிரபஞ்சன் கல்வி பயின்றார். இவர்  ஆறாவது படிக்கும் போதே இவரது தந்தை இவரை பாண்டிச்சேரியில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று உறுப்பினர் ஆக்க முயன்றார். ஆனால் நூலகர் இவரை நூலகத்திற்குள் அனுமதிக்காதால் அவர் தந்தை பாண்டிச்சேரி முதலமைச்சரிடம் பேசி போராடி தன் மகனுக்கு நூலகத்திற்குச் சென்று படிக்கும் அனுமதியைப் பெற்றுதந்தார்.

            அவர் பள்ளியில் படிக்கும்போதே, அவருடைய தமிழாசிரியர் தந்த ஊக்கத்தினால் தமிழ் காப்பியங்களை விருப்பத்தோடு கற்றார். ஐரோப்பிய ரஷ்ய எழுத்தாளர்களின் புத்தகங்களை நூலகத்தில் படித்து முடித்து விட்டார்.

            பிரபஞ்சன் தன்னுடைய பள்ளிப்படிப்பை பாண்டிச்சேரியில் முடித்த பிறகு தஞ்சை அருகேயுள்ள கரந்தை தமிழவேள் உமா மகேஸ்வரனார் கல்லூரியில் தமிழ் இலக்கியம் கற்று, புலவர் பட்டம் பெற்றார். கூடவே இசையையும் கற்றுக்கொண்டார்.

            படித்துக் கொண் டிருக்கும் போதே, அவரது பதினாறாவது வயதில் 1961 ஆம் ஆண்டு என்ன உலகமடாஎன்ற அவரின் முதல் சிறுகதை பரணி இதழில் வெளிவந்தது. இதே ஆண்டில் ”கலைச்செல்வி இதழிலில்  பிரபஞ்சனின் முதல் கட்டுரை வெளியானது.

            1969-70 ல் திராவிடக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் திராவிட இயக்கத்தின் ஆதரவாளரானார். 1970 இல் இவர் பெற்றோர் இவருக்கு பிரமிளா ராணி என்பவருடன் திருமணம் செய்வித்து, அவரின் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தனர்.

            1971 ம் ஆண்டு கோவையை மையமாக கொண்டு இயங்கிய வானம்பாடி கவிதை இயக்கித்தினருடன் சேர்ந்து கவிதைகளை எழுதி வந்தார். வானம்பாடியில் இணைந்த பிறகு, பிரபஞ்ச கவி என்ற பெயரில் எழுதி வந்தவர், பிரபஞ்சன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

            கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் பிரபஞ்சன், தன் கவிதைகள் பற்றி சில சர்ச்சைகள் கிளம்பியவுடன் ரஷ்ய கவிஞர் மாயகாவஸ்கியின் கவிதைகளை படித்த பிறகு கவிதை எழுதுவதையே நி றுத்திக் கொண்டு விட்டதாக அறிவித்துவிட்டு சிறுகதைகள் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

            புதுச்சேரி  மாலைமுரசு நாளிதழில் பத்திரிகையாளராக பணியாற்றிக்கொண்டிருந்த பிரபஞ்சன் வாழ்க்கை நெருக்கடிகளால் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பிரபஞ்சன் சென்னையில் பத்திரிகையாளராக 1980-82 வரை குங்குமம் இதழிலும் 1985-87 வரை குமுதம் வார இதழிலும் ,1989-90 வரை ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார்.

            அந்த காலகட்டத்தில் தான் தன் நான்கு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டார். 1982 இல் ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், 1985 ல் நேற்று மனிதர்கள் ,1986 ல் பிரபஞ்சன் கதைகள்,1987 ல் விட்டு விடுதலையாகி ஆகியவைகள் வெளிவந்தன. பின்பு 1986 ல் ஆண்களும் பெண்களும் என்ற குறு நாவலையும் அதே ஆண்டு சுகபோக தீவுகள் என்ற புதினமும் ,1989 இல் மகாநதி,  1990 ல் மானுடம் வெல்லும் என்ற புதினங்களையும் எழுதி வெளியிட்டார்.

            சரித்திரக் கதைகளையே படித்துக்கொண்டிருந்த தமிழ் வாசகர்களுக்கு வானம் வசப்படும், மானுடம் வெல்லும், மகாநதி, சந்தியா போன்ற கதைளின் மூலம் தங்களைப் போன்ற எளிய மக்களின் முகங்களை கதைகளில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை தந்தார்.

            1995 ஆம் ஆண்டு வானம் வசப்படும் நாவலுக்காக சாகித்ய அகடாமி விருது பெற்றார். பிரபஞ்சனின் படைப்புகள் பலவற்றில் சென்னை மேன்ஷன் வாழ்க்கையில் அவர் சந்தித்த எளிய மக்களே வெளிவந்தனர். பிரபஞ்சன் தன்னைப் போன்ற சக எழுத்தாளர்களுக்காகவும் குரல் கொடுத்தவர் ஆவார். ஒரு படைப்பை இன்னொரு படைப்பால் தான் எதிர்க்க வேண்டுமே தவிர வன்முறையை பயன்படுத்தக்கூடாது என எழுத்தாளர்களின் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்தார்.

            பிரபஞ்சனின் வாசகர்கள் அவரின் பேரில் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். இவர் மொத்தமாக 57 ஆண்டுகளில் 86 புத்தகங்களை தொடர்ந்து எழுதியுள்ளார். பிரபஞ்சன் தான் நேசித்த புதுச்சேரியில் தனது இறுதிக் காலத்தில் வாழ்ந்து வந்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். புதுவை அரசு பிரபஞ்சனை கெளரவித்து, பத்து லட்சம் ரூபாய்க்கான பொற்கிழியை வழங்கியது. தனது 73 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

            புதுச்சேரி அரசு அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளித்தது.

வெளிவந்த படைப்புகள்

புதினங்கள்

·         வானம் வசப்படும்

·         மகாநதி

·         மானுடம் வெல்லும்

·         சந்தியா

·         காகித மனிதர்கள்

·         கண்ணீரால் காப்போம்

·         பெண்மை வெல்க

·         பதவி

·         ஏரோடு தமிழர் உயிரோடு

·         அப்பாவின் வேஷ்டி

·         முதல் மழைத்துளி

·         மகாபாரத மாந்தர்கள்

·         ஆண்களும் பெண்களும்

சிறுகதை தொகுப்புகள்

·         நேற்று மனிதர்கள்

·         விட்டு விடுதலையாகி

·         இருட்டு வாசல்

·         ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்

·         பிரபஞ்சன் சிறுகதைகள் தொகுப்பு

 நாடகங்கள் தொகுப்பு

·         முட்டை

·         அகல்யா

கட்டுரைகள் தொகுப்பு

·         மயிலிறகு குட்டி  போட்டது

·         அப்பாவின் வேஷ்டி

பபெற்ற விருதுகள்


 1982 தமிழக அரசு விருது (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்)

·         1983 இலக்கிய சிந்தனை விருது (பிரம்மம்) சிறந்த சிறுகதை விருது

·         1986 தமிழக அரசு விருது (நேற்று மனிதர்கள்)

·         1987 புதுவை அரசு விருது (ஆண்களும் பெண்களும்)

·         1991 இலக்கிய சிந்தனை விருது (மானுடம் வெல்லும்)

·         1995 சாகித்திய அகடாமி விருது (வானம் வசப்படும்)

·         1996 பாரதிய பாஷா பரிஷத் விருது (வானம் வசப்படும்)

·         1998 தினத்தந்தி ஆதித்தனார் விருது

·         1998 புதுவை அரசின் கலைமாமணி விருது

·         2006 புதுவை அரசின் தமிழ்மாமணி விருது

·         2007 சிறந்த எழுத்தாளர் விருது தமிழக அரசு

·         2014 க.நா.சு. வாழ்நாள் சாதனையாளர் விருது

·         2016 வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை - தேனி

பஇணைய இணைப்புகள்