Jul 9, 2021

எழுத்தாளர் கே.முத்தையா

 தொகுப்பு : கு.ஹேமலதா

             எளிமையான வாழ்க்கையும், அயராத உழைப்பும், கொள்கைபிடிப்பும் கொண்ட ஆளுமை தோழர்  கே.முத்தையா அவர்கள். சுதந்திர போராட்ட வீரர், தமிழக மாணவர் இயக்கத்தின் முன்னோடி, இதழாளர், முற்போக்கு எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர் என பன்முகத் தன்மை கொண்ட மூத்த பொதுவுடைமையாளர். தோழர் கே.முத்தையா  அவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள பொன்னாங்கண்ணிக்காடு  என்ற கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் கருப்பையா - வள்ளியம்மை.


             கே.முத்தையா அவர்களின் ஆரம்பக் கல்வி முடப்புளிக்காட்டுப் பள்ளியில் தொடங்கியது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க அவரது தந்தை அனுமதி மறுத்த காரணத்தால், அவரது சிறிய தந்தையின் முயற்சியால் சில நிபந்தனைகளுடன் முத்தையாவின் படிப்பு தொடர்ந்தது. பேராவூரணி ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியிலும், அதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பல தடைகளை தாண்டி படித்து முடித்தார்.

             பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே இரண்டாவது மாணவனாக தேர்ச்சிபெற்ற முத்தையாவை மேலும் படிக்க வைக்க விரும்பிய அவரது தந்தை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் B.A. பொருளாதாரப் படிப்பில் சேர்த்து விட்டார்.

             1938 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, திண்டிவனத்தில் நடைபெற்ற காங்கிரஸ் - சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் தோழர்கள் ஜீவானந்தம் மற்றும் ராமமூர்த்தி உரைகளை கேட்டு ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பல்கலைக்கழகத்திலும் கம்யூனிஸ்ட் மாணவர் குழுத் தலைவராகவும் செயல்பட்டார்.

             ஆங்கிலேய அரசின் தொடர் கண்காணிப்பில் இருந்த காரணத்தால் தன் மேல் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று உணர்ந்த கே.எம்., தன் கல்லூரி இறுதித் தேர்வை எழுதாமல், அங்கிருந்து தலைமறைவாகி திருச்சி பொன்மலையில் செயல்பட்ட ரயில்வே தொழிலாளர் சங்க அலுவலகத்தில் அடைக்கலம் பெற்று அன்றிலிருந்து முழு நேர கட்சிப் பணியை துவக்கினார். தோழர் சுந்தரய்யாவின் அழைப்பின் பெயரில், தென்மாநில கட்சி மையத்தில் வேலை செய்யப் பணிக்கப்பட்டார். நான்கு வருட கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான ஆங்கிலேய அரசின் தடை நீங்கிய காரணத்தால் முத்தையா அவர்களின் தலைமறைவு வாழ்க்கை முடிவுற்று 1942 இல் சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று 1946 ஆம் ஆண்டு வரை திறம்பட செயல்பட்டார்.

             22.6.1947 ல் திருச்சியில் ரயில்வே தொழிலாளியான நடேசன்பிள்ளை அவர்களின் இரண்டாவது மகளான யமுனாவை சாதி கடந்து திருமணம் செய்து கொண்டார். தோழர் யமுனா 1945-47 வரை  ஜனசக்தி அலுவலகத்தில் நூலகராக பணியாற்றியவர். 1948 இல் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை காரணமாக திருமணம் முடிந்து ஏழாவது மாதத்தில் முத்தையா அவர்களை கைது செய்த போது, கைதான தலைவர்களை விடுதலை செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் கைதாகி ஒரு மாத காலம் சிறையில் இருந்தவர் தோழர் யமுனா. கே.முத்தையா விடுதலையான பின், தோழர் யமுனா சென்னையில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார். முத்தையா அவர்களின் இயக்கப் பணிக்கு இறுதி வரை உறுதுணையாக இருந்தவர். அவர்களுக்கு  மல்லிகா மற்றும் வனிதா என்ற இரண்டு மகள்களும், இளங்கோ என்ற மகனும்  உண்டு.

             1951 ஆம் ஆண்டு வரை சிறைவாசத்தில் இருந்த முத்தையா விடுதலைக்கு பின் தோழர் ஜீவா ஆசிரியராக இருந்த ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையாகிய ஜனசக்தியில் 1952 முதல் 1962 வரை பத்தாண்டுக் காலம் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

             இதற்கிடையில் 1952 இல் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டமன்ற பொது தேர்தலில்  அதிராமபட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1963 இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது அதில் தன்னை இணைத்துக்கொண்ட முத்தையாவை 1964 இல் கட்சியின் மாநில குழு உறுப்பினராக தேர்வு செய்து கட்சியின் இதழான "தீக்கதிர்" நாளேட்டை நடத்தும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. தீக்கதிரில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமை கே. முத்தையா அவர்களையே சேரும். 1970 இல் ஆரம்பிக்கப்பட்ட செம்மலர் இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும்  பணியாற்றினார்.

             இமயவன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய முதல் நாவல் 'உலைக்களம்'. அதை தொடர்ந்து 1989 இல் 'விளைநிலம்' என்ற நாவலையும் படைத்து வெளியிட்டார். இந்த இரு நாவல்களும் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் போக்குகளைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்களாக கருதப்படுகிறது. 1968 இல் முத்தையா எழுதிய தமிழிலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்எனும் நூல், தமிழ் இலக்கியங்களை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது.

             நாடகத்துறையிலும் கே.எம். அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம். தமிழகம் முழுதும் பல நாடக குழுக்களை உருவாக்கினார். அதில் அவர் உருவாக்கிய மதுரை பீப்பில்ஸ் தியேட்டர்ஸ்  குழுவில் அவர் எழுதிய 'செவ்வாழை', 'ஏரோட்டி மகன்', 'புதிய தலைமுறை' போன்ற நாடகங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கவை.

             1975 ஆம் ஆண்டு செம்மலர் இதழில் எழுதும் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்' என்ற அமைப்பு உருவானது. அதனை உருவாக்கிய அமைப்புத் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் கே.முத்தையா. தமுஎசவின் முதல் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின் பல வருடங்கள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்டார்.

            தன் இறுதி காலத்தில் சுயசரிதை எழுத விரும்பிய கே.முத்தையா அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'கே.முத்தையா - எழுத்துலகில் அரைநூற்றாண்டு' என்ற நூலாக படைத்து 2015 ஆம் ஆண்டு தோழர் என்.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மேலும் கே.எம். அவர்களின் 69 ஆய்வு கட்டுரைகளையும் தொகுத்து 'தமிழ் இலக்கியம் - ஒரு பார்வை' என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.

             மேலும் கே.முத்தையா அவர்களுடன் பணியாற்றிய தோழர்களின் அனுபவங்களை 'கே.முத்தையா - வாழ்வும் பணியும்' என்ற நூலாக தொகுத்து சிவகங்கை தமுஎச மாவட்டக்குழு சார்பில் தோழர் ஜனநேசன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

             கே.எம்.என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.முத்தையா அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஜுன் 10 அன்று மதுரையில் காலமானார்.

வெளிவந்துள்ள நூல்கள் 

சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்(1981)

இராமாயணம் ஒரு ஆய்வு(1981)

வீர பரம்பரை

சட்டமன்றத்தில் நாம்

திமுக எங்கே செல்கிறது

இதுதான் அண்ணாயிசமா?

மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்

தத்துவத்தின் வறுமை ( காரல் மார்க்ஸ்-எழுதியது-தமிழாக்கம்)

தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் (1968)

நாவல்கள்

உலைகளம் (முதல் நாவல்) 

விளைநிலம்(1989)

நாடகங்கள்

செவ்வானம் (நாடகம்)

புதிய தலைமுறை (நாடகம்)

ஏரோட்டி மகன் (நாடகம் (2012)

இணைய இணைப்புகள்

கே.எம்.நூல்கள் 

கே.முத்தையா விக்கிபீடியா பக்கம்

கே.முத்தையா அவர்கள் குறித்த தீக்கதிர் கட்டுரை

தமிழ் இலக்கியம் - ஒரு புதிய பார்வை நூல் அறிமுகம் - புக்டே இணையதளம்