Jul 5, 2021

எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ

 தொகுப்பு:ரா.சண்முகலட்சுமி

                            கதைகளை வாசித்து வளர்கிற குழந்தைகளின் ஆழ்மனதில் உருவாகும் கருணை, நேசம் போன்றவைகளால் மட்டுமே இந்த உலகம் மாற்றம் பெறும் என்ற தீராத நம்பிக்கையுடன் நான் என் கதைகளுடன் குழந்தைகளிடம் ஆத்மார்த்தமாய் பேசிக் கொண்டு இருக்கிறேன்என கூறுபவர், ”குழந்தைகளுக்கு வழிகாட்டினால், பிற்காலத்தில், அவர்கள் நம் சமூகத்துக்கு நல்வழி காட்டுவர்என்பதைக் கொள்கையாக கொண்டு இயங்கி வருபவர், கவிதையிலிருந்து குழந்தை இலக்கியத்திற்கு வந்தவர், குழந்தை எழுத்தாளர்கள் மத்தியில் வித்தியாசமனவர்  சிறார் இலக்கிய  எழுத்தாளர்  கொ.மா.கோ.இளங்கோ அவர்கள்.

                            முதுபெரும் எழுத்தாளர் 'குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம், ’பன்மொழிப்புலவர்  ராஜேஸ்வரி கோதண்டம் தம்பதியரின் இளைய மகனான கொ.மா.கோ. இளங்கோ அவர்கள் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ராஜபாளையத்தில் பிறந்தார். இவர் இளநிலை இயந்திரவியலை இன்ஸ்டியூஷன் ஆஃப் மெக்கானிகல் இன்ஜினியரிங் கல்லூரியிலும், முதுநிலை வணிக மேலாண்மையை மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலும் பயின்று 30 ஆண்டுகளாக சிமெண்ட் கட்டுமான துறையிலும், சிமெண்ட் உற்பத்தித் துறையிலும் இந்தியா, ஐரோப்பியா, தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றியவர். தற்போது மேற்கு ஆப்ரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய சியாரோ லியோன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வித்யா வேதியியல் துறை ஆசிரியராக கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

                            இராஜபாளையம் பி. . சி. ஆர் மெமோரியல் பள்ளியில்  ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த  தருணம், தனது அப்பா புதிதாக கட்டிய வீட்டில் உருவாக்கிய ஜகன்நாத நூலகமே இவரது வாசிப்பு பயணத்தைத் துவக்கியது. தன் அப்பா வாங்கித்தந்த கோகுலம் மாத இதழின் வழியாக கோகுலம் சிறுவர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாகிறது. கோகுலம், பூந்தளிர், ரத்னபாலா போன்ற சிறார் இதழ்களும், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் சிரிக்கும் பூக்கள், மலரும் மொட்டும் பாடல் தொகுப்புகளின் வாசிப்பால் கவிதைகள் எழுதும் ஆர்வம் ஏற்படுகிறது.

                            மரபுக்கவிதைகள் குறித்து தன் அப்பா அளித்த பயிற்சியின் விளைவால் இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் வெள்ளிவிழாவில், சிறுவர் சங்க தொடக்க நிகழ்வில் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா முன்னிலையில் தன்னுடைய  முதல் கவிதையை வாசிக்கிறார். சில திருத்தங்களுடன்முத்து எங்கள் முத்துவாம்எனும் தலைப்பில் அக்கவிதை கோகுலத்தில் பிரசுரமாகும் போது அவருடைய வயது பதினொன்று. தொடர்ந்து கவிதைகள் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் குழந்தை கவிஞர்அழ.வள்ளியப்பா.

                            உயிர்களிடத்தில் அன்பு வேணும்என்ற இவரது முதல் சிறுவர் கதையும் கோகுலத்தில் பிரசுரமானது. இராஜபாளையத்தில் தொடங்கப்பட்டகோகுலம் சிறுவர் சங்கத்தின்செயலாளராக பொறுப்பேற்று, அவருடைய அம்மா, அப்பா, டாக்டர் கு.கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நண்பர்களோடு இணைந்து திருச்சி, திருநெல்வேலி, மதுரை வானொலி நிலையங்களில் பல்சுவை நிகழ்ச்சிகளில்  பங்கெடுத்து இலக்கியச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார்.  கல்லூரி காலங்களில் புதுக்கவிதைகளை எழுதிக் கொண்டே தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் இராஜபாளையம் கிளையின் செயலாளராக செயலாற்றியுள்ளார். நண்பர்களோடு இணைந்து கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட கிளைகளான இராஜபாளையம், சத்திரப்பட்டி, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், முறம்பு ஆகிய ஊர்களில் கவியரங்கங்களை நடத்தி தன் இலக்கிய ஆர்வத்தை ஆழப்படுத்திக் கொண்டார்.

                            கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு காத்திரமான புதுக்கவிதைகளை படைக்கத் துவங்குகிறார். 1998 ஆம் ஆண்டு வித்யா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறார். 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை எழுத்துலகிலிருந்து முற்றிலும் விலகி தன் முழுக்கவனத்தை சிமெண்ட் கட்டுமான துறையில் செலுத்தினார். “பொருளீட்டுவதிலேயே முனைப்புடன் இருந்து விட்டோம், இனி இச்சமூகத்திற்கு தன்னால் இயன்றவற்றை செய்திட வேண்டும்என  2011 லிருந்து  எழுத்துலகில் பயணிக்க தொடங்கி மீண்டும் புதுக்கவிதைகளை எழுதத் துவங்குகிறார்.

                            நவீன அறிவியல் சாதனங்களை கையாள்வதில் குழந்தைகள் மூழ்கிக் கிடப்படதையும், அவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதையும் உணர்ந்து 2013  இல் அவரது கவனம் குழந்தை இலக்கியத்தின் பக்கம் திசை திரும்பியது. ஓவியர் எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களின் படைப்புகளும் நேரடித் தூண்டுதல் காரணமாகவும் தன்னை முழுவதுமாக குழந்தை இலக்கியத்தில் இணைத்துக் கொள்கிறார்.

                            குழந்தைகளுக்கு தேவையானது, பரிவும், வழிகாட்டலுமே தவிர, போதனை குறிப்புகள் அல்ல என்ற அன்னி சுலிவன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய படைப்பில் அறிவியல், கணிதம், இலக்கியம், அன்பு, கருணை, தயை, விட்டுக்கொடுத்தல் ஆகிய பண்புகளை முன்னிலைப்படுத்தும் புனை கதைகளை படைக்கிறார். சிறார் இலக்கியத்தில் இன்றும் இவருக்கு வழிகாட்டியாக இருப்பது ரஷ்ய இலக்கியங்கள் தான். மகிழ்ச்சியான இளவரசன், ஜன்னலில் ஒரு சின்னஞ்சிறுமி- டோட்டோ-சான், லியோடால்ஸ்டாய் கதைகள், நிகோலோ நோசாவ் கதைகள் போன்ற புத்தகங்களும், அழ.வள்ளியப்பா, பொன்ராசன், பெரியசாமி தூரன், பாவலர் பெருஞ்சித்திரனார் போன்றோரின் படைப்புகளும்  சிறார்களுக்காக எழுதும் ஆர்வத்தை இவருள் ஆழமாக விதைத்துள்ளது.   

   குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்வை தமிழகம்  முழுவதும் பல ஊர்களில் நடத்த நூலகங்களுக்கு சென்ற போது நூலகருடன் ஏற்பட்ட விவாதத்தின் விளைவே இவரை இருமொழி கதைகளை எழுதத் தூண்டுகிறது. அதன் விளைவால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் உலக சிறார் இலக்கியத்தின் சிறந்த சித்திர கதைகளை தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்துள்ளார் கொ.மா.கோ.இளங்கோ. 2015 ஆம் ஆண்டு அவ்வாறு  மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகள் கதைப்புதையல் -I ,II என்ற தொகுப்புகள் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்து பெரும் வரவேற்பை பெற்று சிறார்களின் வாசிப்பு தளத்தை விரிவுபடுத்தி தேடலை ஆழப்படுத்தியுள்ளது.

                             நோசாவ் சிறார் கதைகள், டால்ஸ்டாய் கதைகள், நிகாலோ ராட்லவ் படக்கதைகள் புத்தகங்களும், மலையாள எழுத்தாளர் பிரபாகர் பழச்சி எழுதி ஓவியர், எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்தகால்நடை மருத்துவர்என்ற புத்தகமும் இவரை மொழிபெயர்ப்பில் ஈடுபட தூண்டியவை ஆகும். ஹிரோசிமா நாகாசி குண்டுவெடிப்பின் கதிரியக்க தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்வை மையப்படுத்தி ஜப்பான் மொழியில் தோசி மாருகி எழுதியமாயி சான்-ஹிரோசிமாவின் வானம்பாடிஇவருடைய முதல் மொழிபெயர்ப்பு நாவல் ஆகும்.

                            குழந்தை இலக்கியத்தில் புதிய தடத்தை ஏற்படுத்தி வரும் கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் யதார்த்தத்தோடு அதிபுனைவை மிகச்சரியாக கலந்து, குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழி நடையும், கதை சொல்லும் பாணியும் இவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுள் மிக முக்கிய படைப்பாளியாக மிளிரச் செய்கிறது. சமகால குழந்தைகளின் மனநிலையை கணக்கில் கொண்டு எழுத வேண்டிய கட்டாய காலத்தில் இருப்பதால் , காலத்துக்கு பொருந்தாத வரம் ,சாபம், முனிவர் போன்றவற்றை பயன்படுத்தாத படைப்புகளையே இவர் படைத்துவருகிறார்.

                            குழந்தைகளிடம் அறிவியல் பார்வையை விதைத்திட 2014 ம் ஆண்டு வெளிவந்த இவருடைய படைப்புஜிமாவின் கைப்பேசிஎனும் அறிவியல் புனைவு நாவல்  தமுஎகச விருதையும், திருப்பூர் இலக்கிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

                            இவருடைய சிறுவர் கதைகள் ஜெர்மன் நாட்டில் இயங்கி வரும்அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாட்டு அறிவியல் மேம்பாட்டு இணையம்உருவாக்கியுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஐந்தாம் வளர்நிலைத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில்செட்டை கிழிந்த வண்ணத்துப்பூச்சிஎன்ற கதையும்,ஆறாம் நிலை தமிழ்ப் பாடத்தில்உப்பளத்துக்கு வந்த வெள்ளையானைஎன்ற கதையும், ஏழாம் வளர்நிலைப் பாடத்தில்கதிரவனை ஒளித்த சிறுமிஎனும் கதையும் இடம் பெற்றுள்ளன.உலக அளவில் 11 நாடுகளை சேர்ந்த 36,000 பள்ளி மாணவர்கள் இதனால் பயன் பெறுகிறார்கள்.

                            குழந்தையாகவே இருப்பது மட்டுமே குழந்தைக்கான படைப்பை எழுதுவதற்கான அடித்தளம். சிறார்களின் மனநிலையில் அவர்களோடு பழகி, அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை நிறைய இருக்கிறது. குழந்தைகளின் உலகில் அவர்களோடு பயணிப்பது கற்பனைக் கடலின் அடிஆழம் வரை சென்று வந்த உணர்வைத் தரும். அவர்களுக்காக எழுதுவதால் உலகில் எங்கோ இருக்கும் ஒரு குழந்தையிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற ஆத்ம திருப்தியோடு தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ.

வெளிவந்துள்ள சிறார் இலக்கிய படைப்புகள்

        ·       பச்சை வைரம் (சிறுவர் நாவல்புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·       சூரியனை ஒளித்து வைத்த சிறுமி (சிறுவர் கதைகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·       நட்சத்திர கண்கள் (சிறுவர் கதைகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·       சஞ்சீவி மாமா (சிறுவர் நாவல்புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·       மந்திர கைக்குட்டை (சிறுவர் கதைகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·       பஷிராவின் புறாக்கள் (சிறுவர் நாவல்புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·         பிரியமுடன் பிக்காசோ (சிறுவர் நாவல்என்.சி.பி ஹெச் வெளியீடு)

        ·         ஓநாய் கண்டறிந்த உண்மை (சிறுவர் கதைகள்- புக்ஸ் ஃபார் சில்ரன்)

        ·         ஜிமாவின் கைபேசி (சிறுவர் அறிவியல் புனைகதை- புக்ஸ் ஃபார் சில்ரன்    

        ·         எட்டுக்கால் குதிரை (சிறுவர் நாவல்- புக்ஸ் ஃபார் சில்ரன்

        ·         குட்டி டாக்டர் வினோத் (சிறுவர் கதைகள்- ராஜேஸ்வரி புத்தக நிலையம்

        ·         ஆயிரங்கால் பூச்சி (சிறுவர் கதைகள்- பாலா பதிப்பகம்)

        ·         தேனென இனிக்கும் தீஞ்சுவை கதைகள் (சிறுவர் கதைகள்- பிரபாத் புக் ஹவுஸ்

சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள்

·         மாயி-சான் (ஹிரோசிமாவின் வானம்பாடிசப்பானிய சிறுவர் நாவல்- தோசி மாருகி-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         ராஜா வளர்த்த ராஜாளி- லியோ டால்ஸ்டாய் சிறுவர் கதைகள்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         சிறகடிக்க ஆசை-தெலுங்கில் பால சாகித்ய விருது பெற்ற சிறுவர் கதைகள்டி.சுஜாதா தேவி-சாகித்ய அகாடெமி வெளியிடு

·         ரெட் பலூன் -சிறுவர் நாவல்ஆல்பெர்ட் லாமொரிஸ்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் –லியோ டால்ஸ்டாய்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         அன்பின் பிணைப்பு -புஷ்பா சக்சேனா -நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT

·         தேனீக்களின் விந்தை உலகம் -எஸ்..பரூக் -நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT

·         மக்கு மாமரம் -.நா.பெட்னேகர்-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT

·         விடுமுறை வந்தாச்சு - ரவீந்திரநாத் தாகூர்-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT

·         மறக்கமுடியாத விலங்குகள் – ரஷ்கின் பாண்டே-நேரு குழந்தைகள் புத்தகாலயம்-NBT

·         சிவப்புக்கொண்டை சேவல் -உருசிய சிறுவர் கதை.ஓவ்சீனிக்கவ்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         வேட்டைக்காரன் மெர்கேன் -உருசிய சிறுவர் கதைகென்னடி பாவ்லிஷின்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குறும்புக்கார கன்றுக்குட்டி-உக்ரேன் நாட்டுக் கதை-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         மாஷாவின் மாயக்கட்டில் -உருசிய சிறுவர் கதைகலினா லெபெதெவா-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         தீப்பறவை -உருசிய நாடேடிக் கதை-வானம் பதிப்பகம்

·         அழகிய பூனை-வண்ட கக் -புக்ஸ் ஃபார் சில்ரன்

·         பெர்டினன்-மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குட்டன் ஆடு-மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குட்டித் தாத்தா-நடாலே நோர்டன் -புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குஞ்சுவாத்து பிங்மார்ஜோரி பிளேக், கர்ட் வீஸ் -புக்ஸ் ஃபார் சில்ரன்

·         தப்பியோடிய குட்டிமுயல்-மார்கரெட் வைஸ் பிரவுன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         மந்திர விதைகள்-மித்சுமாசா அனோ-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         உயிர் தரும் மரம்ஷெல் சில்வர்ஸ்டீன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்வண்ட கக்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         எலி எப்படிப் புலியாச்சு?–மர்சியா பிரெள்ன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         ராஜாவின் காலடிரோல்ப் மில்லர்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         அரோடின் ஊதாக்கலர் கிரேயான்கிரோகட் ஜான்சன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         கடைசிப் பூஜேம்ஸ் தர்பெர்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         ஆப்பிள் ஜானி-அலிகி-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         சிங்கத்தின் குகையில் சின்னக்குருவிஎலிசா க்லேவன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         வீ கில்லிஸ்மன்ரோ லீப்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         அன்புக்குரிய யானைகள்யுகியோ சுசியா-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         ஆர்தரின் சூரியன்ஹட்ஜாக் குல்னஷரியன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         காக்கை சிறுவன்டாரோ யஷிமா-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         குட்டியூண்டு முயல்ராபர்ட் கிராஸ்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         நீங்க என்னோட அம்மாவா?–பி.டி.ஈஸ்ட்மேன்-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         சக்கர நாற்காலிக் கால்கள்பிரன்ஸ் ஜோசப் குயை-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         சாலுவின் ப்ளூபெர்ரிராபர்ட் மெக்லோஸ்கே-புக்ஸ் ஃபார் சில்ரன்

·         வில்லி எலிஅல்டா தபோர்-புக்ஸ் ஃபார் சில்ரன்

பெற்ற விருதுகள், பரிசுகள்

·         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதுசிறந்த குழந்தை இலக்கிய நூல்ஜீமாவின் கைபேசி(2014)

·         இராஜபாளையம் மணிமேகலை மன்றம்சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளி – 2015 ஐஸ்வர்யா இலக்கிய விருது

·         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது – ‘எட்டுக்கால் குதிரை’ (2014)

·         திருப்பூர் இலக்கிய விருது – 2016, சிறந்த சிறுவர் இலக்கிய நூல் – ‘ஜீமாவின் கைபேசி

·         திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது – 2015 சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகம் – ‘மக்கு மாமரம்

·         நெய்வேலி புத்தகக் கண்காட்சி(நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) – ‘சிறந்த எழுத்தாளர் விருது – 2017’

·         வாசகசாலை இலக்கிய அமைப்பின்தமிழ் இலக்கிய விருதுகள்’ – 2020 – சிறந்த சிறுவர் இலக்கியம்சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

·         பாரதி தமிழ் இலக்கியப் பேரவை கம்பம்தமிழ் இலக்கிய விருதுகள் – 2020 – சிறந்த சிறுவர் இலக்கியம்சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

·         தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) – (The Bookseller’s and Publishers Association Of South India (BAPASI) நடத்திய 44வது சென்னை புத்தகக் கண்காட்சிசிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளருக்கானகுழந்தைக் கவிஞர்அழ வள்ளியப்பா விருது - 2021

இணைய இணைப்புகள்