Aug 1, 2021

நாடகவியலாளர் பிரளயன்

தொகுப்பு : சாமுண்டீஸ்வரி

            அரசியல் முதல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் வரை அலசி ஆராய்ந்து அதிகாரத்தின் முகத்திற்கு முன் உண்மையை பேசுபவை தான் பிரளயன் அவர்களின் நாடகங்கள். மிகச் சிறந்த நாடக ஆளுமைகளில் ஒருவராக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாடகச் சூழலில் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், திரை இணை இயக்குனர் என பன்முக திறன் கொண்டவர்.

            பிரளயன் அவர்கள் பிறந்து, வளர்ந்தது திருவண்ணாமலையில். இவரது இயற்பெயர் சந்திரசேகரன். தந்தையார் சண்முகசுந்தரம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். தாயார் கல்யாணசுந்தரி. இவருக்கு ஒரு சகோதரர் சண்முக அருணாச்சலம், தமிழாசிரியர். மூன்று சகோதரிகள். மனைவி பெயர் ரேவதி. மகன் சிபி பொறியியல் படித்து முடித்து, தற்போது சென்னை பெசன்ட் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

            பிரளயன் அவர்கள் திருவண்ணாமலையில் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி வாழ்க்கையில் தமிழ்மொழிக் கழகம் வாயிலாக நாடகத்தில் ஈடுபட்டுள்ளார். கல்லூரியில் நடக்கும் நாடகங்களிலும் பங்கேற்றிருக்கிறார். வானவில் பிலிம் சொசைட்டி மூலம் கலை தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியபோது, கல்லூரி ஆசிரியர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்ப்பது, அதை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகள் இவரின் கலை ஆர்வத்தை வளர்த்தன.

            1979 இல் தஞ்சாவூரில் தமுஎச (தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) நடத்திய நாடக விழாவில் திருவண்ணாமலையை சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் கவிஞர் வெண்மணி அவரின் நண்பர் மருத்துவர் செல்வராஜ் அவர்களையும் இணைத்துக் கொண்டு "பறிமுதல்", "வட்டத்துக்கு வெளியே" ஆகிய  இரண்டு நாடகங்களை நிகழ்த்தினார்கள். "பறிமுதல்" வசனமில்லா பாவனை நாடகம். இது ஊரைத் தாண்டி நிகழ்த்தப்பட்ட முதல் நாடகம். காற்று, கொல்லிப்பாவை போன்ற இதழ்களில் நவீன நாடகம் தொடர்பாக விவாதங்களைப் படித்த பின்னர் இவருக்கு நாடகம் மீதான ஆர்வம் உருவானது. எனினும், அப்போது இவருடைய பிரதான செயல்பாடு கவிதைகள் எழுதுவதாகவே இருந்தது.

          குழுவாக ஊரூராகப் பயணித்து நாடகம் நிகழ்த்துகிற ‘கலைப் பயணத்தை’ தென்னிந்தியாவில் அறிமுகம் செய்த கர்நாடகாவை சேர்ந்த "சமுதாயா" வின்  நிறுவனர் பிரசன்னா அவர்களின் பேச்சில் நாடகம் என்ற பெருவெளி கண் முன்னால் விரிந்த மாதிரி இருக்கிறது என்று பரவசமடைந்து, நாடகத்தின் மேல் மேலும் ஈர்ப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார் பிரளயன்.

            கல்லூரி படிப்பை முடித்த பிறகு பிரேம் சந்தின் "ராஜினாமா" என்கிற சிறுகதையை நாடகமாக அரங்கேற்றினார். பிறகு குடியாத்தத்தில் நடந்த சோசலிச வாலிபர் முன்னணி மாநாட்டில் "இந்தியா எனது தாய்நாடு" என்ற நாடகம் அரங்கேறியது. தமிழ்நாடகத்தில் இவருடைய முன்னோடிகள் என ந.முத்துசாமி மற்றும் மு.ராமசாமி ஆகியோரைச் சொல்கிறார்.

          1978 இல் இருந்து 1984 வரை பல கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்தார். இவருடைய கவிதைகள் வசன கவிதைகளாக  நீண்டதாக இருக்கும். இவருடைய 'சந்தேகி' கவிதைத் தொகுப்பினை 1990 இல் சென்னை புக்ஸ் வெளியிட்டது.

    1981இல் கணிதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, சென்னையில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு இளநிலை பயிற்சியாளராக வேலையில் அமர்ந்தார். அப்போது சென்னை மைலாப்பூரில் அவர் தங்கியிருந்த இடம் இலக்கம் 4, பிச்சுப் பிள்ளை தெரு,  இந்த முகவரியில் அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்தது. இன்றைக்கு முன்னணி தலைவர்களாக இருந்த பலர் அன்று இந்த முகவரியில்தான் தங்கி இருந்தார்கள். பாலு கார்மென்ட்ஸ் தொழிலாளர்கள் போராட்டம்,  முறைசாரா தொழிலாளர்களாக இருந்த டீக்கடை தொழிலாளர் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடந்தன.  அப்போது இங்குள்ள இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டதால் வேலையில் ஆர்வம் குன்றி மாற்று தளத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு மேலோங்கியது.  இப்படி ஆரம்பித்த அரசியல் ஈடுபாடு கலை வடிவத்தில் அமைந்து இவரை நாடகக்காரராக உருவாக்கியது.

            1981 இல் தமுஎச வின் மாநில மாநாடு பெரியார் திடலில் நடந்தது. சென்னை தோழர்களும் திருவண்ணாமலை தோழர்களும் இணைந்து "சொல்லித் தெரிவதில்லை" என்ற ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார்கள். 1984 இல் தமுஎச நடத்திய நாடக விழா வாய்ப்பு வரும்போது இவரே வசனம் எழுதி இயக்கிய "நாங்கள் வருகிறோம்" என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தோடு இவரை அமைப்பாளராகக் கொண்டு ‘சென்னைக் கலைக்குழு’ என்கிற நாடகக் குழுவும் உதயமாகிறது. ’நாங்கள் வருகிறோம்" எனும் இந்நாடகம் ”காண்பித்தலை காண்பிப்பது" என்ற பிரக்டின் அணுகு முறையில் அமைந்த நாடகமாகும்.

          ஒத்த கருத்துள்ள தோழர்களால் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது தான் "சென்னை கலைக்குழு".  சென்னை என்பது நவீன தொழிலாளி வர்க்கத்தினது  வாழ்வியல் மதிப்பீடுகளின் அடையாளம் என்று இவர்கள் இனம் கண்டு அந்த பெயரை வைத்தார்கள். சென்னை கலைக்குழுவின் அமைப்பாளராகவும், பொறுப்பாளராகவும் இன்று வரை இருக்கிறார்.

            நாடகம் ஆயுதமாக இருக்க வேண்டும். அது சமூக மாற்றத்தை முன்னெடுக்கவும் அதனை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது கண்ணோட்டம். சென்னை கலைக்குழு மூலம் 70 க்கும் மேற்பட்ட படைப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றில் 15க்கும் மேற்பட்ட நாடகங்கள் முழு நீள நாடகங்கள். புராண, இதிகாசகங்களை மீள்வாசிப்பிக்குள்ளாக்கிய ‘உபகதை’ எனும்  முழுநீள நாடகம் தமிழுக்கு இஅவரது பெரூமதியான பங்களிப்பு எனலாம். இதை அடைய ஒரு குழுவாக இவர் மேற்கொண்ட வலி நிறைந்த பயணங்கள் முக்கியமானவை.

           மேற்கத்திய நாடகக்காரர்களான பிரெக்ட், பிக்கெதார் போன்றவர்களின் கண்ணோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட நாடகங்களே இந்த குழுவின் தயாரிப்புகள். இவரின் நாடகத்தைப் பார்த்த பிறகு பார்வையாளர் ஒன்றும் புரியவில்லை என்று கூறுவதை இவர் தோல்வியாக கருதுகிறார். சென்னை கலைக்குழு உண்டு உறைவிட பயிலரங்காக ஓரிடத்தில் தங்கி நாடகத்தை தயார்ப்படுத்தும் வேலைகளை செய்கிறது. திறந்தவெளி அரசியல் நாடகங்கள், மேடை நாடகங்கள் இரண்டையும் நிகழ்த்துகிறார்கள்.  இந்த குழுவின் பிரதானமான செயல்பாடு எந்த ஒரு வரையறுக்கப்படாத இடத்திலும் (any undefined space) மக்களைத் தேடிச் சென்று நாடகத்தை நிகழ்த்துகிறது. இதனை அரசியல் வீதி நாடகம் என்றும் அழைப்பர்.

            சென்னை கலைக்குழு, வீதி நாடகம் என்ற சொல்லை 1987 -88 க்கு பிறகு அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியது. வீதி நாடகம் என்பது சாராம்சத்தில் போர்க்குணம் மிக்க ஓர் அரசியல் தன்மை கொண்ட கலைவடிவம். அது திட்டவட்டமாக அரசியல் மாற்றத்தை முன் வைத்து கோருகிறது

        வீதி நாடகத்தினை மக்கள் கலையாக உயர்த்தியதோடு அதன் புதிய எல்லைகளையும் தொட முயன்றவர் சப்தர் ஹாஷ்மி. 1989 இல் சப்தர் ஹாஷ்மி படுகொலைக்குப் பிறகு தேசமெங்கும் ஏற்பட்ட ஒரு வீச்சு இதன் தொடர்பாக சகல பகுதிகளிலும் வீதி நாடகங்கள் மீது பலரது கவனமும் அக்கறையும் திரும்பியதுஇத்தகைய சூழல் இவரது சென்னை கலைக்குழுவிற்கு புதிய பொறுப்புகளையும் கடமைகளையும் சுமத்தியது. பின்னர் இதனடிப்படையில் மாநிலம் முழுதும் பயணிக்கவும் பலருக்குப் பயிற்சியளித்து புதிய நாடகக்குழுக்களை உருவாக்கவுமான பணியிலே இவர் தீவிரமாக ஈடுபட்டார்.

            புதுவை மத்திய பல்கலைகழகம் நிகழ்கலைத் துறை அழைப்பின் பேரில் இவர் எழுதி இயக்கி அவர்களது மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட "பாரி படுகளம்" என்ற நாடகத்தை 13 முறை மேடை ஏற்றினார்கள்.  தேசிய நாடகப் பள்ளி நடத்திய பயிலரங்கில் இவர் எழுதி பேராசிரியர் ராஜுவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட "வஞ்சியர் காண்டம்" 23 முறை மேடையேறி உள்ளது. இரண்டு நாடகங்களும் சமூக வரலாறுடன் சம்பந்தப்பட்டது. தமிழின் தொன்மையான இலக்கியங்களில் உறைந்திருக்கும் வரலாற்றுக்கூறுகளை சமகால அரசியலோடு ஒப்பிடுகிற இந்நாடகங்கள் கலை குறித்த அவரின் ஆழமான பார்வைகளை உணர்த்துகிறது.  

            இவர் படைப்புகளில் ஒன்றான இலக்கம் 4, பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து என்ற நூலின் மையம், பிரளயன் அவர்களின் நீண்ட நேர்காணல் ஆகும். புதுவிசைக்குழுவை சேர்ந்த பேட்டியாளர்கள் ஆதவன் தீட்சண்யா, முனைவர் ராஜா ரவி வர்மா, கி. பார்த்திபராஜா, . பெரியசாமி, சம்பு, சிவா, மற்றும் மோகன் ஆகியோரோடு நடத்திய நீண்ட உரையாடல்களே இதன் உள்ளுறையாகும்.   இந்த நேர்காணல் இவரின் நாடகவியல் அனுபவங்கள், திரைத்துறை சார்ந்த கருத்துக்கள், அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் என்று நீண்டு பயணித்து தமிழ் பண்பாடு, இந்திய பின்னனியில்  நிகழ்கிற அரசியல் செயல்பாடுகள் என பல்வேறு தளங்களை நோக்கிச் செல்கிறது.

            பிரெஞ்சு நாவலான "குட்டி இளவரசன்" என்ற கதையை நாடகம் ஆக்கியுள்ளார். இளைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை "முற்றுப்புள்ளி" என்ற நாடகத்தில் காட்டியிருக்கிறார். மைஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன்முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முன்னெடுப்பிற்கு உதவும் வகையில் அங்குள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு ஒரு நாடகத்தைத் தயாரித்து அளித்தும் உள்ளார்.  மலேசியா மட்டுமல்லாமல் நார்வே,  இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று நாடகக் கலையில் பல பயிற்சி பட்டறைகளை நிகழ்த்தி, நாடகங்களைத் தயாரித்து , நெறியாள்கை செய்து நிகழ்த்தியுமுள்ளார். 

               அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி பல நாடகக் குழுக்களை உருவாக்குவதிலும் இவரது பங்கு மிகவும் கணிசமானது

          கடந்த இருபதாண்டுகளாக நாடகத்தை கல்வியின் ஒரு பகுதியாக, கற்பித்தல் முறையின் ஒரு வழியாக அறிமுகப் படுத்தும் ‘கல்வியில் நாடகம்’ முயற்சியில் வளரிளம் பருவத்து மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பல ப்யிலரங்குகளை நடத்தி வருகிறார்.  

            தராசு பத்திரிகையில் நிருபராக, தீக்கதிர் நாளிதழின் சட்டமன்ற செய்தியாளராக, ஸ்பான் மீடியாவில் (Span Media) நிருபராக, அறிவியல் இயக்க கலைப்பயண ஒருங்கிணைப்பாளர், அறிவொளி இயக்க கலைப்பயன ஒருங்கிணைப்பாளர், தேசிய நாடகப்பள்ளியின் பெங்களூர் மண்டல வள மையத்தின் நாடகப் பயிற்றுநர் மற்றும் ஆலோசகராக, தேசிய நாடகக் கல்லூரி பெங்களூருவில் வருகை தரு பேராசிரியராக, டி.வி.எஸ்.எஜுகேசனல் சொசைட்டியின் ஆலோசகர் மற்றும் ஆசிரியராக, தூர்தர்ஷன் புதுதில்லியில் 24/ 7 (DD - NEW DELHI) தெற்கு மண்டல நிருபராக, ASIAN COLLEGE OF JOURNALISM வருகைதரு பேராசிரியராக என்று பல பொறுப்புகளில் பணியாற்றியவர் நாடகவியலாளர் பிரளயன் அவர்கள்.

            தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை, இசைத்துறை, சிற்பத்துறை முதலானவற்றுக்கு வருகைதரு பேராசிரியராக (Visiting Professor) பணியாற்றி வருகிறார். தமுஎகச வின் மாநில செயற்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

  1. கல்வியில் நாடகம் -  பாரதி புத்தகாலயம்
  2. வஞ்சியர் காண்டம் - சந்தியா பதிப்பகம்
  3. இலக்கம் 4 பிச்சை பிள்ளை தெருவில் இருந்து - வாசல் பதிப்பகம்
  4. பாரி படுகளம் நாடகம்  சந்தியா பதிப்பகம்
  5. நவீன மத்தவிலாசப் பிரஹசனம்- சந்தியா பதிப்பகம் (அச்சிலுள்ளது)
  6. உபகதை - நாடகம்மருதா பதிப்பகம்
  7. சப்தர் ஹாஷ்மியின் நாடகக் கலை பற்றிய கட்டுரைகள் (மொழிபெயர்ப்பு) - சென்னை புக்ஸ் வெளியீடு. தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.
  8. காப்புரிமை கொத்தவால் (மொழிபெயர்ப்பு) - இந்தியா தியேட்டர் பாரம் வெளியீடு.
  9. சந்தேகி (கவிதைத் தொகுப்பு) சென்னை புக்ஸ் வெளியீடு.

பெற்றுள்ள விருதுகள்

புதுவை களம் நாடக இயக்கம் வழங்கிய "நாடகச்சிற்பி" விருது 2006.

Wisdom Magazine  வழங்கிய சிறந்த நாடகாசிரியர் விருது 2007.

News 7 வழங்கிய நாடக ரத்னா விருது 2019iN

இணைய இணைப்புகள்