கா.சி.தமிழ்க்குமரன் அவர்கள் கரிசல் காட்டு மக்களின் உணர்வுகளையும்,
மொழிகளையும், மன வலிகளையும், காயங்களையும், கண்ணீரையும் மனதின் குரல்களாக வெளிப்படுத்துவதில்
தனக்கென்று ஒரு தனி தடத்தை பதித்து வருகிறார்.
”ஒரு எழுத்தாளன்
தன்னைப்பற்றியே ஆராய்ந்து கொண்டிருப்பது இலக்கியம் இல்லை. தன்னை சுற்றிய
மனிதர்களின் வாழ்க்கையை, அவலங்களை, மகிழ்ச்சியை அவர்களுக்குள்ளே மறைந்துள்ள கதைகளை
அவதானிப்பதும், புரிந்துகொள்வதும்
அவற்றை நிஜமாக பதிவு செய்வதுமே இலக்கியம்” என்று கூறுகின்றார்
தூத்துக்குடி மாவட்டம்
சென்னம்பட்டி கரிசல் பூமியில் 27-11-1965-ல் பிறந்தார். தமிழ்குமரன் அவர்கள் பள்ளிப்படிப்பை
தூத்துக்குடியிலும் கல்லூரி படிப்பை அருப்புக்கோட்டையிலும் முடித்தார். இவரது
இணையர் திருமதி சந்திரா அவர்கள் நாகலாபுரத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி
வருகின்றார். இரு மகன்கள் உள்ளனர்.
தமிழ்குமரன் அவர்களின்
தந்தைதான் இவரது வாசிப்பு பயணத்திற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார். அம்புலிமாமா,
கல்கண்டு, குமுதம், ஆனந்த விகடன் ஆகிய
இதழ்கள்தான் வாசிப்பின் துவக்கப் புள்ளியாக
இருந்திருக்கிறது. இவர் அதிகமாக விரும்பிப் படிப்பது சிறுகதைகள் தான். அதேபோல
சிறுகதை எழுதுவதில் தான் தனக்கு நாட்டம் அதிகம் இருந்ததாக கூறுகிறார்.
1995ஆம்
ஆண்டு அறிவொளி இயக்கத்திலும், 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கத்திலும் இணைந்த எழுத்தாளர் தமிழ்க்குமரன் தன் வாசிப்பு மற்றும்
எழுத்துப் பயணங்களை தொடர்ந்து வருகிறார்.
"கணையாழி"
இலக்கிய பத்திரிக்கையில் தன் முதல் சிறுகதை சிறந்த சிறுகதையாக
தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துலகில் அறிமுகம் ஆனார்.
தமிழ்குமரன் அவர்களின்
முதல் சிறுகதைத் தொகுப்பு "மாயத்திரை"
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "ஊமைத் துயரம்" இந்த படைப்பு 2016ஆம் ஆண்டின் சிறந்த புத்தகமாக" நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ்"மற்றும் "கலை இலக்கிய பெருமன்றம்" இணைந்து "தனுஷ்கோடி
ராமசாமி விருது" வழங்கப்பட்டது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்
முதுகலை தமிழ் மாணாக்கர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக துணை நூலாகும்
சிறப்பையும் பெற்றுள்ளது. மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு "பொலையாட்டு" இந்த
புத்தகத்தை நெருஞ்சி இலக்கிய அமைப்பு சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத்
தேர்வு செய்துள்ளது.
எழுத்தாளர் சாத்தூர் லட்சுமணப்பெருமாள் அவர்களின் கதையால் ஈர்க்கப்பட்டு
"மருவாதி" என்னும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இதை இணையத்தில்
பார்க்கலாம்.
சிறுகதைகளைத் தொடர்ந்து, இவருடைய முதல் நாவல் விரைவில் வெளியாகவுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் சிறுகதைகளை மொழியாக்கம் செய்துவரும் எழில் சின்னத்தம்பி தமிழ்க்குமரன் அவர்களின் சகோதரர்.
தமிழ்க்குமரனின் கதைகள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகள் எளிய மனிதர்களின் வழக்குச் சொற்களில் இருந்து தேர்வு செய்யப்படுவது தனித்த அடையாளத்துடன் நிற்கிறது.
இதுவரை வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகள்
1. மாயத்திரை
2. ஊமைத் துயரம்
3. பொலையாட்டு
4. மருளாடி (விருதுநகர் மாவட்ட தமுஎகச படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு)
விருதுகளும், பரிசுகளும்
✪ "கணையாழி" இதழின் சிறந்த சிறுகதைக்கான பரிசு
✪ ”ஊமைத்துயரம்” நூலிற்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக தனுஷ்கோடி
ராமசாமி விருது
✪ "பொலையாட்டு" தொகுப்பிற்கு தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய
அமைப்பின் சிறந்த நூலிற்கான பரிசு.