தொகுப்பு: சி.பேரின்பராஜன்
"மனித வாழ்வு, ஆண்-பெண் சமத்துவம், பெண் விடுதலை, குழந்தைகளுக்கான விடுதலை, இவையெல்லாம் தான் எனது எழுத்துகளின் பேசுபொருளாக இருக்கிறது. இருக்கும்..." என பிரகடனம் செய்யும் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்கள் தன்னுடைய எளிய மொழிநடையால் அனைவரையும் ஈர்த்து, தனித்தடம் பதித்திருக்கிறார்.
1954ல்
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து
பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர்
அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும்... என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில்
துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு
முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும்,
இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலகபணியிலிருந்து
விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர். தற்போது தனது இணணயர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்
இரா.வெள்ளதாய் அவர்களுடன் சிவகாசியில்
வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த்
சென்னையில் தனது இணையர், மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார்.
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் "பாலகான சபா" என்ற நாடககுழு
அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி,
எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசை ஆளுமைகளுக்கே இசை கற்பித்த
ஆசான். எச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்திற்காகவும், தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்திற்காகவும் பாடல்கள் எழுதிய கவிஞர். தமிழ்ச்செல்வன்
அவர்களுடைய தந்தை எம்.எஸ்.சண்முகம் திராவிட இதழ்களில் சிறுகதை
எழுதிய எழுத்தாளர். இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. சிறிய
தந்தையாரும் கவிதைகள் எழுதும் வழக்கம் உள்ளவர்.
எழுத்தாளர் கோணங்கி
மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.
மாணவப் பருவத்திலேயே பள்ளி நாடகங்களுக்கு கதை வசனம் எழுத துவங்கியதிலிருந்து
எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
தந்தை, மற்றும் சிறிய தந்தையரின் இலக்கிய ஆர்வத்தால் வீட்டில்
குவிந்து கிடந்த புத்தகங்களை வாசித்து பெற்ற அனுபவம்.. அவரது வாசிப்பு தாகத்தை
அதிகரித்து.. பள்ளி பருவத்திலேயே சக நண்பர்களை இணைத்துக்கொண்டு நூலகம் நடத்துமளவு
வளர்ந்தது.
கல்லூரி காலங்களில்
நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்,
கு.அழகிரிசாமி என விரிவடைந்த வாசிப்புத் தளம அவரை எழுத்தாளராக வளர்த்தெடுத்தது. அவரது முதல் கவிதை "ஒருநாள் டைரி"
கோவில்பட்டியிலிருந்து வெளியான "நீலக்குயில்"என்ற
சிறுபத்திரிக்கையில் 1972 இல் வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவரின் கவனம்
பின்னர் சிறுகதை பக்கம் திரும்பியது.
இராணுவ பணியிலிருந்து
திரும்பிய பிறகு சிற்றிதழ்களில் வரும் முற்போக்கு கதைகளில் அழகியல் குறைவு இருக்கிறது
என்ற கருத்தோடு சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். அவரது முதல் சிறுகதை "திரைச்சுவர்கள்" 1978ல் தோழர் ஜீவானந்தம் ஆசிரியராக
இருந்த ”தாமரை” இதழில்
வெளிவந்தது. தொடர்ந்து செம்மலர் உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவந்தார்.
அவரது "வெயிலோடு
போய்.." என்ற சிறுகதை, "பூ" என்ற திரைப்படமாக மலர்ந்தது. தமிழக அரசின் 2008 ஆம் வருடத்தில் சிறந்த கதாசிரியர் விருதினை அவருக்கு
பெற்றுத் தந்தது. அதே படத்திற்காக ஆனந்த விகடனின் சினிமா விருதும்,
மக்கள் தொலைக்காட்சி விருதும் கிடைத்தது. கோவை வாசகர் வட்டம்
ஜெயகாந்தன் விருது தந்து சிறப்பு செய்தது..
புகழ்பெற்ற எழுத்தாளர்
சுதிர் கக்கர் தொகுத்த "INDIAN LOVE
STORIES" சிறுகதை தொகுப்பில்
அவரது "வெயிலோடு போய்" சிறுகதையின் ஆங்கிலவடிவம் இடம் பெற்றுள்ளது.
இச்சிறு கதை "13 தமிழ்க்கதைகள் " என்ற மலையாள நூலிலும் இடம்பிடித்தது. தின்டே துஸாட்
தொகுத்த "
L'arbre Nagalinga " பிரெஞ்சு
சிறுகதை தொகுப்பில் "குரல்கள்" என்ற இவரது சிறுகதையின் பிரெஞ்சு
மொழியாக்கம் இடம் பிடித்துள்ளது.
"பெண்மை
என்றொரு கற்பிதம்" கட்டுரை நூலை ஏ.ஜி.எத்திராஜுலு "ஸ்த்ரீத்துவம் ஒக
ஊகாலு" என்ற தலைப்பில் தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
இவரது படைப்புகளில்
4 மாணவர்கள் எம்.பில் பட்ட ஆய்வும்,
3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும்
செய்துள்ளனர்.
சிவகாசி அய்யநாடார்
ஜானகியம்மாள் தன்னாட்சி கலைக்கல்லூரியில் இவரது "வெயிலோடு போய் "
சிறுகதைத் தொகுப்பு தமிழ் இளநிலை வகுப்புக்கு பாடமாக
இடம்பெற்றுள்ளது.
மும்பை SNDT WOMENS UNIVERSITY யில் இவரது "சுப்புத்தாய்" சிறுகதையின்
மொழிபெயர்ப்பு பெண் தொழிலாளர்கள் பற்றிய பாடத்திற்காக இடம்பெற்றுள்ளது.
30க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர், பின்னர் அமைப்பு சார்ந்த தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டார். கவிதைகள், சிறுகதைகளைத் தொடர்ந்து கட்டுரைகள் படைக்கத் துவங்கினார். தமிழ்ச்செல்வன் அவர்களின் கட்டுரைகள் ஆழமான ஆய்வுகளை எளிய மொழியில் வழங்கும் தன்மை கொண்டவை.
அறிவொளி இயக்கம்
பணிகளுக்காக புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக 30க்கு மேற்பட்ட சிறு நூல்களை எழுதியுள்ளார்.
ஆண்-பெண் சமத்துவக்கருத்துக்களைப் பரவலாக்கவும்,
ஆண்களுக்கு உணர்வூட்டவும், பல நூல்களை எழுதியும், பல பயிலரங்குகளை நடத்தியும் வருகிறார்.
1978 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பல்வேறு பொறுப்புகளை
வகித்து மாநில செயலாளராக, தலைவராக பணியாற்றி தற்போது மதிப்புறு
தலைவராக தொடர்கிறார்.
பள்ளிக்கல்வியில் மிகப்பெரிய மாற்றங்கள் தேவை,
என்பதை உணர்ந்து, கடந்த பத்தாண்டுகளாக இரு பள்ளிகளில் மாணவ மாணவிகளோடு,
சில சோதனை முயற்சிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாடு
அரசு பாடநூல் தயாரிக்கும் குழுவில்,
மேலாய்வாளராக இப்போது பங்களிப்பு செய்து வருகிறார்.
வெளிவந்துள்ள நூல்கள்
1. வெயிலோடு போய் -1984-சிறுகதைகள்
2. வாளின் தனிமை-1992- சிறுகதைகள்
3. மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006
4. இருளும்
ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள்
5. ஜிந்தாபாத்
ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்
6. ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
7. இருட்டு
எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள்
8. அரசியல்
எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை
9. நான்
பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள்
10. வீரசுதந்திரம்
வேண்டி - (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
11. பெண்மை
என்றொரு கற்பிதம்
12. பேசாத
பேச்செல்லாம்
13. இருவர்
கண்ட ஒரே கனவு
14. சந்தித்தேன்
15. வலையில்
விழுந்த வார்த்தைகள்
16. அவ்வப்போது
எழுதிய நாட்குறிப்புகள்
17. ஒரு
சாப்பாட்டுராமனின் நினைவலைகள்
18. எசப்பாட்டு-ஆண்களோடு
பேசுவோம்
சிறு நூல்கள்
1. 1947
2. 1806
3. நமக்கான
குடும்பம்
4. வ.உ.சியின்
தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
5. அலைகொண்ட
போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர்
சங்கம்
6. தமிழக
தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
7. பிள்ளை
பெற்ற பெரியசாமி-படக்கதை
8. எது
கலாச்சாரம்?
9. அறிவொளி
புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல்.