May 13, 2021

எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன்

 தொகுப்பு: மேனகா சிவக்குமார்

            "மனிதன் அறிந்தோ அறியாமலோ ஒரு அரசியல் மிருகம்' என்னும் உண்மையின் வழியில், எந்த ஒரு படைப்பிலும் அரசியல் நிச்சயம் இருக்கும் . . இருக்கிறது. நான் எந்த அரசியலையும் சார்ந்தவனல்ல நான் நடுநிலையாளன் என்பது ஏமாற்று மோசடி"  என்று கூறும் எழுத்தாளர் ஜீவகாருண்யன் அவர்கள் 1985 இல் இருந்து மரபுக் கவிதைகள், சிறுகதைகள், புதினம், கட்டுரைகள் என்று  தற்போது வரை எழுதி வரும் இலக்கிய ஆளுமை.

       


     திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் என்ற ஊரில் விவசாய குடும்பத்தில் பச்சையப்பன் செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தோழர்  ஜீவகாருண்யன். இவருக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். இவரது துணைவியார் மலர்க்கொடி. மகள் ஜீவப்பிரியா. 63 வயதான ஜீவகாருண்யன் அவர்கள் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

            தன்னுடைய நாற்பத்தி இரண்வாவது வயதில் புற்று நோயில் இருந்து மீண்ட போது, அவர் சார்ந்து இயங்கிய தமுஎகச, சிஐடியு தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தோழர்கள் அனைவரும் இவரை சந்தித்து நம்பிக்கை அளித்தது வாழ்க்கையின் அர்த்தம் கிடைத்ததாக நெகிழ்ந்து கூறுகிறார்.

            சிறுவயதிலேயே தன் தந்தையின் வாயிலாக பக்தி இலக்கியங்கள்  அறிமுகமும், நூலகத்தில் புதினங்கள் மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகள் வாசிப்புதான் பின்னாட்களில் அவர் எழுத்தாளர் ஆவதற்கு அடிகோலியதாகக் குறிப்பிடுகிறார்.

            பள்ளி நாட்களில் ஆசிரியர் சங்கரன் அவர்கள் கட்டுரை எழுதத் தூண்டியதும், எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுதந்திர தின வெள்ளி விழா கொண்டாட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கெடுத்த அக்கட்டுரைப்போட்டியில் 49 மாணவர்களில் இவருக்கு முதல் பரிசு கிடைத்ததும், பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்ததும் பள்ளியில் உள்ள ஆசிரியர் அனைவரும் பாராட்டியதும் மறக்க  முடியாமல் நினைவில் நிலைத்து உள்ள பால்ய வயது அனுபவங்களாகக் கூறுகிறார்.

            பாரதி, பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் கவிதைகளில் ஆழ்ந்து வாசித்த ஜீவகாருண்யன் அவர்களுக்கு மரபுக்கவிதை எழுதுவது எளிதாக இருந்தது. நெய்வேலியில் இலக்கிய ஆர்வலர் 'வேர்கள்' மு ராமலிங்கம் அவர்களின் அறிமுகமும், தமுஎகசவின் தோழமையும் அவரது எழுதும் ஆர்வத்தை வளர்த்து, அவரது வாசிப்பிலும் எழுத்திலும் புதியதொரு திருப்புமுனை ஏற்படுத்தியது.

            ஜீவகாருண்யன் அவர்களது முதல் நூல் 'நீலவானத்தின் நித்திலங்கள்' இது ஒரு மரபு கவிதை நூல் வெளிவந்த ஆண்டு 1985.

 'மாற்றுக் கருத்தை மறுத்து இலக்கியம் படைப்பதற்கு மாற்றுக்கருத்து குறித்த நூல்களை ஆழ்ந்து பயிலவேண்டும்' என்ற கருத்துடன் பலதுறை நூல்களையும் வாசிக்கும் தீவிர வாசகராக மாறியுள்ளார்.

            மகாகவி பாரதியை தன்னுடைய எழுத்துலக ஆசானாகக் கருதும் இவர் சிறந்த கருப்பொருள்கள், தேர்ந்த நடை, அழகு போன்றவற்றால் பலரின் எழுத்துகள் இவரைக் கவர்ந்ததாக கூறுகிறார். ஆதர்ச எழுத்தாளர்களின் பட்டியல் புதுமைப்பித்தன் ஜெயகாந்தனில் தொடங்கி, த மு எ க ச படைப்பாளர்கள் என்று நீள்கிறது.

            சங்க இலக்கியத்தில் ஏற்கனவே பரிச்சயம் கொண்ட ஜீவகாருண்யன் செம்மொழி தமிழ் உயராய்வு மையம் மற்றும் த மு எ க ச  இணைந்து நடத்திய சங்க இலக்கிய பயிலரங்கில் கலந்து கொண்டதில், அனைத்து சங்க இலக்கிய நூல்களையும் பயிலும் ஆர்வம் கொண்டார். சங்க இலக்கியங்கள் குறித்து பிறமொழிகளில் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இவரது ஆவல்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் நெய்வேலி கிளைச் செயலாளர், கடலூர் மாவட்டச் செயலாளர் மாநிலக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.


வெளிவந்துள்ள நூல்கள்

1. நீல வானத்தின் நித்திலங்கள் மரபுக்கவிதை 1985

2. ஒரு நதியைப் போல... சிறுகதைத்தொகுப்பு 1998

3. களரி (புதினம்) மாத்ருபூமி கோவை பதிப்பு மேலாளர் திரு விஜயகுமார் குனிசேரி அவர்களால் மலையாளத்தில் மொழியாக்கம் பெற்று ஜனசக்தி வார இதழில் தொடராக வெளிவந்து ஆலிவ் பதிப்பகம் வழி நூலாக்கம் பெற்றுள்ளது 1998

4. தேடல் வெளி (புதினம்).  மதுரை பல்கலைக் கழக மாணவி திருமிகு பூங்குழலி அவர்களால் (எம் ஃபில்) ஆய்வு செய்யப்பட்டுள்ளது 1998

5. வேட்டைக்குத் தப்பிய விதைகள் - சிறுகதைத் தொகுப்பு

6. உயிர்க்கும் மனிதம் சிறுகதைத்தொகுப்பு 2003

7. சிரிக்க வைக்கும் நாட்டுப்புறக் கதைகள் குழந்தை இலக்கியம் 2003

8. பொற்கொடி (மரபுக்கவிதையில் குறுங்காவியம்) நெய்வேலி தமிழாசிரியை திருமிகு லலிதா அவர்களால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வழி (எம் ஃபில்) ஆய்வு செய்யப்பட்டுள்ளது -  2004

9. பூங்குழலி (மரபுக் கவிதையில் குறுங்காவியம்) 2004

10. வசந்தம் வரும் (குறு நாவல்களின் தொகுப்பு) 2005

11. காலபைரவன் (மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு)  2006

12. ஒளிப்பா! 200 - லிமரைக்கூ கவிதைதஃ தொகுப்பு 2007

13. நதியின் மடியில் புதினம் 2007

14. தமிழ் பாவை மரபுக் கவிதை நூல் 2008

15. வெளிச்ச விழுதுகள் மரபு கவிதை தொகுப்பு 2008

16. வளர்பிறைகள் தேய்வதில்லை சிறுகதைத்தொகுப்பு 2008

17. சமத்துவச் சுடர் ராமானுஜர் நாடகம் 2010

18. கவிச்சக்கரவர்த்தி கம்பர் நாடகம் 2011

19. கிருஷ்ணன் என்றொரு மானுடன் புதினம் 2013

20. வாழ்வளிக்க வந்த வள்ளல் வள்ளலார் வரலாறு வசன காவியம் 2014

21. மனிதனை நேசிக்கிறேன் புதுக்கவிதைத் தொகுப்பு 2015

22. புத்தம் சரணம் கச்சாமி புதினம் 2016

23. பூக்காத மலர் சிறுகதைத்தொகுப்பு 2017

24. எம் டி வாசுதேவன் நாயர் முதல் எச் சி ஆண்டர்சன் வரை (30 நூல் மதிப்புரை களின் தொகுப்பு) 2017

பெற்ற பரிசுகள், விருதுகள்

1. தமிழக அரசு விருது  (இருமுறை) 1998 & 2007

2. திருப்பூர் தமிழ்ச்சங்கவிருது (இருமுறை) 1998 & 2010

3. என் சி அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது

4. பாரத ஸ்டேட் வங்கி விருது

5. லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய பரிசு

6. இலக்கியச் சிந்தனை பரிசு 2000

7. சிவகாசி பாரதி இலக்கியச் சங்கத்தின் சி சு செல்லப்பா நினைவு பரிசு 2003

8. நாமக்கல் கூப் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2011

9. தினமணி நாளிதழ் மற்றும் நெய்வேலி புத்தகக்கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.

இணைய இணைப்புகள்

கிருஷ்ணன் என்றொரு மானுடன் நூலினை முன்வைத்து. .

ஜீவகாருண்யன் - விக்கிபீடியா பக்கம்

தமிழக அரசின் அரிசு அறிவிப்பு