May 14, 2021

கவிஞர் கலை இலக்கியா

 தொகுப்பு: ஜி.ஹேமலதா

            'எனக்கு கிடைத்த உலகத்தை எனக்கு தெரிந்த மொழியில், எல்லாருக்கும் உணர்த்த விரும்புவதே என் கவிதைகள். அவை மனித மனதின் உள்ளார்ந்த உணர்வுகளாக இருக்க வேண்டும்' என்று சொல்லும் கவிஞர் கலை இலக்கியா தமிழக பெண் எழுத்தாளுமைகளில் முக்கியமானவர்.

            கவிஞர் கலை இலக்கியா தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் பிறந்தவர். பெற்றோர் - சன்னாசி - அன்னகாமு. பள்ளி இறுதி படிப்போடு நேரடிக் கல்வி முடிந்து, இளங்கலை தமிழ் இலக்கியத்தினை தொலைநிலைக் கல்வியில் படித்தார். தொடர்ந்து படிக்க விரும்பிய அவரது ஆசையை,  குடும்பச் சூழல் காரணமாக கைவிட்டார்.

            இவரது கணவர் சி.காமுத்துரை. சிவபாரதி மற்றும் ராஜேஷ் கபிலன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் தேனி வீரபாண்டியில் வசித்து வந்தார்.

            ச.இந்திரா என்ற அவரது இயற்பெயரை தன் அன்புத் தோழி கலைவாணி  மேல் கொண்ட பிரியத்தால் தன் புனைபெயரோடு இணைத்து கலை இலக்கியாவாக மாற்றிக் கொண்டார். கலை இலக்கியா இடதுசாரி சிந்தனையும், மொழிப்பற்றும் கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தேனி மாவட்டப் பொருளாளராக பொறுப்பில் இருந்த இவர் பெண்ணிய படைப்பாளியாக திகழ்ந்தார்.

            பெண்களின் இன்னல்களை அவரது பார்வையில் தன் நுட்பமான மொழியில் எழுதக்கூடியவர். தமிழ் தேசியமும், மார்க்சியமும் தன் எழுத்துகளை செலுத்துகின்ற தத்துவமாக அவர் கருதினார். அவரது கவிதைகளில் சமூகத்தின் மீதான கோபமும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்தும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

            1996 முதல் தன்னுடைய மாணவ பருவத்தில் இருந்தே கவிதைகள் எழுதத் துவங்கி பல சிற்றிதழ்கள் வழியாக கவிஞராகப் பரிணமித்தவர் கலை இலக்கியா.            கலை இலக்கியாவின் பள்ளி தாவரவியல் ஆசிரியர் கவிஞர் வெண்மணி அவர்களின் முன்னெடுப்பில்,  அவரது முதல் கவிதை வத்தலக்குண்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சுப்ரமணிய சிவா' இதழில் வெளிவந்தது. கலை இலக்கியாவின் எழுத்துகளுக்கு அவரது ஆசிரியர்  ஒரு உந்துசக்தியாக இருந்துள்ளார்.

            அக்கினிக் குஞ்சு, ”சுப்பிரமணிய சிவா”, “கற்றூண்”, “யுகம்”, “அமுத பிரிதிவி”, ”விழி”, வண்ணக்கதிர், போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி அவருடைய இலக்கிய தொடர்பு விரிவடைந்தது.

            கலை இலக்கியாவின் முதல் கவிதை தொகுப்பான 'பிரம்ம நிறைவு' முகமது சபி அவர்களின் உதவியால் வெளிவந்தது. கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் உதவியோடு 'இமைக்குள் நழுவியவள்' வெளிவந்தது.

            அமங்கலமாக கருதப்படும் ஒப்பாரிப் பாடல்களை தாலாட்டாக வகைப்படுத்தி ,பெண்களின் உளவியலையும், வாழ்வின் பெருமை, சிறுமையை வெளிப்படுத்தியும்  தமிழர்களின் வாழ்வில் மரபுத்தொடர்ச்சியாக வரும் ஒப்பற்ற இலக்கியமாக வரையறுத்து அவர் எழுதிய ஒருங்கிணைத்த தொகுப்பு 'ஒப்பாரி பாடல்கள்'.

            திருக்குறளின் கடைசி பாலான காமத்து பாலில் 25 அதிகாரங்களை எடுத்து கதை வடிவில் அவர் எழுதிய நூல் 'காமக்கடல் நீந்தி'. விகடன் பிரசுரம் அதை வெளியிட்டது.

            கலை இலக்கியாவின் படைப்பு நூல்களை தவிர்த்து, அவரது கவிதைகள் மற்றும் நேர்காணல் அடங்கிய 'கலை இலக்கியா படைப்புலகம்' என்ற நூலை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் கலைஞர் பதிப்பகத்தின் ஒத்துழைப்புடன் கவிஞர் முபீன் சாதிகா அவர்களால் 2017 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிடப்பட்டது. இந்நூலில் உள்ள நேர்காணலில் பெண்ணியம், ஆண்-பெண் சமத்துவம், குடும்ப அமைப்பு, பெண்களுக்கு உரிய பொருளாதார, உளவியல் விடுதலை, தலித் இலக்கியம் என பல கேள்விகளுக்கு மிகையில்லாமல் எதார்த்ததோடு பதிலளித்துள்ளார். தன் எழுத்துலக அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

            அவர் ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார். இதில் கவிதைத் தொகுப்புகளும், கட்டுரை தொகுப்புகளும் அடங்கும்.

            இவர் மே 6 2019 அன்று நுரையீரல் புற்றால் கடும் உடல்நலக்குறைவிற்கு ஆளாகி காலமானார். எளிய சொற்களால் தன் கவிதைகளை வெளிப்படுத்தும் அவர் தன் இறுதி கால எழுத்துக்களில், தனிமை, ஒப்பாரி, இறப்பு என  இறப்பை பிரதிபலிக்கும் சொற்களால் கவிதைகளை நிறைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

            வெளிவராத தன்னுடைய கவிதை தொகுப்பினை சென்னை புத்தகக்கண்காட்சியில் தன் தோழர்கள் சூழ வெளியிட விரும்பிய கலை இலக்கியாவின் கனவை நிறைவேற்றும் விதம் அவரது  இறப்பிற்கு பின், அவரது வெளிவராத படைப்புகளை தொகுத்து, 'கலை இலக்கியா கவிதைகள்' என்ற நூலை தமுஎகச அறம் கிளையும், நம் பதிப்பகமும் 44 வது சென்னை புத்தகக்கண்காட்சியில் வெளியிட்டது.

            தமுஎகச அறம் கிளை கடந்த இரண்டு வருடங்களாக அவரது நினைவாக 'கவிஞர் கலை இலக்கியா நினைவு நூல் விமர்சனப் போட்டி'யை நடத்துகிறது. பல வாசகர்கள் இதில் பங்கேற்று பரிசு பெறுகின்றனர்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைகள்:

1.இமைக்குள் நழுவியவள்

2.பிரம்ம நிறைவு.

3.என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்.

4.பெண்மைத் தினவு

5.கலை இலக்கியா கவிதைகள்

 

கட்டுரைகள் :

1.அகமும் புறமும்

2.பாரதி ஆத்திச்சூடி கதைகள்

3.காமக்கடல் நீந்தி

4.ஆயிரம் பேர் தாதியுண்டு - ஒப்பாரி பாடல்கள்

 பரிசுகள்

1. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு

2. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய விருது

இணைய இணைப்புகள்

கலை இலக்கியா கவிதைகள்

கலை இலக்கியா சிறுகதைகள்

நூல் வெளியீடு குறித்த கட்டுரை

கலை இலக்கியா குறித்த விகடன் கட்டுரை

கலை இலக்கியா குறித்த விக்கி பீடியா பக்கம்