May 15, 2021

எழுத்தாளர் வெண்புறா

                                                                                                                     தொகுப்பு: ரா. ராம்குமார்

            "இலக்கியம் மனிதனுக்கு எதாவது செய்ய வேண்டுமென ஏன் நினைக்கிறீர்கள்?" என்று அதனைப் புனிதப்படுத்தும் போக்காளர்களுக்கு மத்தியில் படைப்புகளை எந்த விதத்திலும் புனிதப்படுத்தி விடாதீர்கள், உண்மையோடும் அறிவியல் பார்வையோடும் மனிதத்தை மையமாக கொண்டு எழுதுங்கள் எனக் கூறும் கவிஞர் வெண்புறா ஓவியம், கவிதை, களப்பணி என கலைஇலக்கியம் சார்ந்து செயல்பட்டு வருபவர்.

            கவிஞர் வெண்புறாவின் இயற்பெயர் சரவணன். இவர் பிறந்ததும், தற்போது வசிப்பதும் மதுரை திருப்பரங்குன்றம் நகரில். சிந்தாமணி - சுப்புலட்சுமி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்‌. இவரது இணையரின் பெயர் த. காமாட்சி, இவர்களுக்கு கா.ச. பாரதி சேகுவேரா, கா.ச. பகத் சிந்தன் என இரு மகன்கள். 

        இவரது இணையர் தோழர் த.காமாட்சி தேனி மாவட்ட அறிவொளி இயக்கத்திலும், 1996ஆம் ஆண்டு மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்ததமுஎ(க)ச 7ஆவது மாநில மாநாட்டு பரப்புரைக்காக வந்த 'சமம்கலைக்குழுவிலும் இயங்கியவர். இவர்களது காதல் திருமண வரவேற்பை 1997ஆம் ஆண்டு தமுஎசவும் சிபிஎம்மும் இணைந்து திருப்பரங்குன்றத்தில் நடத்தியது. தோழர் காமாட்சி தற்போது தமுஎகச திருப்பரங்குன்றம் கிளைச் செயலாளர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இயங்குகிறார்.

       இவர்களது மூத்தமகன் 'சேஉயர்நிலைக் கல்வியை தமிழ்வழி மாற்றுக் கல்விக்கான பட்டுக்கோட்டை 'இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளியில்பயின்றார்.

        தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை திருப்பரங்குன்றம் கோட்டை பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

            அப்பாவின் கட்டிடத் தொழில் மற்றும் அம்மாவின் வீட்டோரக் கடையில் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடியது. 7ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் தமுஎகச மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் அவர்கள். படிப்பில் பெரிய ஆர்வமில்லாத போதும் அந்த பருவத்திலே பள்ளியின் அடிப்படை வசதிகளுக்காக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் செய்தவர்.

            வாசிப்பை அறியாமல் இருந்தவர் மார்க்சிஸ்ட்டான தனது தந்தையின் அக்கறையினால் அரசியல் மாநாடு, கூட்டங்கள் என தொடங்கி அரசியல் தலைவர்களின் அறிமுகம், அவர்களைப் பற்றிய புத்தகங்கள், சோவியத் இலக்கியங்கள் என்று வாசிப்பு தொடங்கியது. ஓவியம் வரைவது இயல்பாக வந்ததால் தமுஎகசவின் தட்டிப் போர்டுகளில் வரையும் வாய்ப்பை அதன் முதல் செயலாளரும் ஓவியருமான தோழர் எழில் பரமசிவம் கொடுத்தார். இவர் தான் வெண்புறா என்னும் புனைப்பெயரையும் சூட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவரின் ஓவிய நுட்பங்கள் வண்ணச் சேர்க்கைக்கு தூண்டுகோலாக இருந்தவர் திருவண்ணாமலை ஓவியர் பல்லவன்.

            தமுஎகச கிளையின் மூலம்தான் இவரின் எழுத்து ஆர்வம் துவங்கியது. சந்தக் கவிதை தான் இவரின் முதல் ஈர்ப்பு. முதன்முதலில் இவர் எழுதிய கவிதை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து தமுஎகசவின் திருப்பரங்குன்ற கிளை துவக்க விழாவிற்காக எழுதியது. அந்த கவிதைக்கான பரிசாக விழாவை தலைமை தாங்கிய கவிஞர் வெண்மணியின் பாராட்டைப் பெற்றார். இதே போல திருப்பரங்குன்றம் "குன்றத்து கலாமன்றம்" நடத்திய பிரம்மாண்ட சமூக நாடகத்தில் ஒரு விதவைப் பெண்ணின் மறுமணத்தில் ஏற்படும் சிக்கல்களை அவள், அவளது தந்தை, வருங்கால கணவன் என மூவரும் தனித்தனியாக பாடுவது போன்ற சூழலுக்கு ஏற்ப இவர் எழுதிய பாடல் வரிகள் பெரும் வரவேற்பை பெற்றன.

            இதன் பின்னர் புதுக் கவிதைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அது சார்ந்த நூல்களை வாசித்தார். அப்போது "முற்போக்குக் கவிஞர் பேரவை" அமைப்பு வெளியிட்ட நான்கு கவிதை நூல்களில் ஒன்றான சு.வெங்கடேசனின் முதல் கவிதை புத்தகமான 'ஓட்டையிடாத புல்லாங்குழல்' வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலின் மூலம் பள்ளிப் படிப்போடு விட்டுப் போன நட்பின் தொடர்பும் கிடைத்தது. பின் அந்த அமைப்போடு இணைந்து பல கவியரங்குகளில் புதுக்கவிதைகள் வாசிக்கவும் எழுதவும் தொடங்கினார். இவரது கவிதைகளும் பாடல்களும் செம்மலர், வண்ணக்கதிர் இதழ்களில் வெளிவந்தன. சுனாமியின் போது அதனை மையமாக வைத்து எழுதிய சிறுகதையும் செம்மலரில் வெளிவந்தது. மேலும் சில சிறுகதைகள் பிரசுரமாகலேயே காணாமல் போயின. வெளிவந்த படைப்புகளும் ஆவணப்படுத்தப்படாமல் போய்விட்டன.

            தமுஎகச, கவிஞர் பேரவை அமைப்புகளின் தொடர்பின் மூலம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என தொடங்கி வைரமுத்து, மு.மேத்தா, மீரா, கந்தர்வன் என இவரின் வாசிப்புத் தளம் விரிவடைந்தது. சமூக அக்கறையுடனும் உழைக்கும் மக்கள் பற்றியும் பேசும் எழுத்துகள் இவருக்கு பிடித்தமானது. சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் எழுத்துக்களை மிகவும் ஆபத்தானதாக கருதுகிறார்.

            இவரது ஒரே தொகுப்பான 'தகிப்பின் குரல்' கவிதை நூல் 2008 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமுஎகச மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது. இது மட்டுமல்லாது தமுஎகச திருப்பரங்குன்றம் கிளையின் 'சொல்' என்ற கையெழுத்துப் பிரதி, இலக்கிய மலர்கள், சிபிஎம் மாநாட்டில் வெளியிடப்பட்ட 'பிடிமண்' எனும் கையடக்க பிரசுரம் என அனைத்திலும் இவரின் பிரதான பங்கு இருந்தது.

            கடந்த 27 வருடங்களாக கலை இலக்கிய இரவுகள், கவிதைப் பயிலரங்கம், பண்பாட்டு நிகழ்வுகள், தமுஎகச கிளை செயல்பாடுகள் என அனைத்து மேடைகளிலும் இவரின் ஓவிய வேலைப்பாடு தான் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக வலைத்தளங்களில் அரசியல், சமூகம் குறித்த தனது தீவிரமான பதிவுகளால் பெரும் வாசகர் வட்டத்தினை உருவாக்கியிருக்கிறார்.

            கவிஞர் வெண்புறா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மதுரை புறநகர் மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு

தகிப்பின் குரல்