May 15, 2021

எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன்

 தொகுப்பு: பு.கி.புவனேஸ்வரிதேவி

            சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் தன்னுடைய படைப்புகளில் ஜனநாயகத்துக்கு எதிரான அநீதிகளையும் , உரிமைகளை மறுக்கும் சர்வாதிகாரத்தினையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற கருத்தை நேரடியாக வலியுறுத்துகிறார். கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல துறைகளிலும் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்திருக்கும் செந்தில்நாதன் அவர்கள் பள்ளிப் பருவத்தில் தொடங்கிய வாசிப்பு எண்பது வயதைக் கடந்து, தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

            ச.செந்தில்நாதன் அவர்களின் தந்தையின் பெயர் டாக்டர் வே.சண்முகநாதன். தாயார் பெயர் பவானி அம்மாள்.

            இவர் மின்சார வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத வாய்மேடு எனும் சிற்றூரில் பிறந்தார். இவரோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். செல்வத்துள் சிறந்த செல்வமான கல்விச் செல்வத்தை தன்னுடைய அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக  வழங்க வேண்டும் என்பதற்காகவே தன் வருமானத்தின் பெரும்பகுதியை இவருடைய தந்தையார் செலவு செய்தார்.

            ஏட்டுக் கல்வி மட்டும் வாழ்க்கைக்கு உதவாது , அதோடு உலக நடப்புகளையும் வளரும் போதே குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சுதேசமித்திரன், மெயில், கல்கி, கல்கண்டு போன்ற புத்தகங்களை தபால் மூலம் வீட்டிற்கே வரவழைத்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். தமிழ்வாணனில் தொடங்கி பாரதி, பாரதிதாசன், ஜெயகாந்தன், மு.வரதராசனார், புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்றவர்களின் எழுத்துக்கள் சிறு வயதிலேயே இவரை ஈர்த்து வந்தது. மேன்மை பொருந்தியவர்களின எழுத்துக்களை படிக்க படிக்க அவர்களைப் போலவே தானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி மாணவப் பருவத்திலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.

             1967- ல் "தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு மதிப்பீடு" என்ற விமர்சன நூல் தான் இவருடைய முதல் படைப்பு.

            1970- ல் வழக்குரைஞராக பதிவு செய்தார். 1974 - ல் வழக்குரைஞர் தொழிலைத் தனியாகத் தொடங்கி நீதிமன்றப் பணிகளைத் துவங்கினார். வாசிப்பின் தொடர்ச்சியாக1975-ல் சிகரம் என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். அந்த சமயத்தில் தான் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனம் செய்தது. அதனால் "செம்மலர்" உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்டன. இந்த சமயத்தில் சிகரம் பத்திரிகை மூலம் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தனர. ஆனால் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு இழப்பீடு அதிகமானதால் ஐந்து ஆண்டுகளில் சிகரம் பத்திரிக்கை நின்றுபோனது.

            சிகரம் இதழில் எழுதி வந்த எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, செந்தில்நாதன் அவர்கள் மக்கள் எழுத்தாளர் சங்கத்தினைத் துவங்கினார். மக்கள் எழுத்தாளர் சங்கத்தினை காலத்தின் தேவைக்கேற்ப, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு இணைத்து பணிகளை விரிவாக்கிக் கொண்டார்.

            வாசிப்பின் வழியே அவர் கற்ற பண்பாடு வழக்குரைஞர் தொழிலும் தொடர்ந்தது. தன்னுடைய முதல் உதவியாளராக இருந்த அரிபரந்தாமன் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியதையும், தன் உதவியாளர்களாக இருந்த 28 பேர் உயர் பதவிகளில் பணியாற்றுவதையும் அகமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார் செந்தில்நாதன் அவர்கள்.

            வழக்குரைஞர் தொழிலை ஒரு வருவாய் ஈட்டும் தொழிலாக பாவிக்காமல் தன் சக எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் இடமாக மாற்றினார். இவர் பல சட்ட போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் மிக முக்கியமான வழக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய "மாதொருபாகன்" என்ற நாவலின் மேல் தொடுக்கப்பட்ட சட்ட விரோத வழக்குதான். அந்த வழக்கை எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றதை ஒரு வரலாற்று நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். இது போல் பல வழக்குகளை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

            பொதுவாக முற்போக்கு எழுத்தாளர்கள் பக்தி இலக்கியத்தை முற்றிலும் புறக்கணித்து விடுவார்கள். ஆனால், சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் பக்தி இலக்கியங்களும் தமிழும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை என்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் திருமூலர் பாடிய திருமந்திரத்தில் "தன்னை நன்றாகத் தமிழ் செய்யவே இறைவன் படைத்தான்" என்று பாடியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் தான் நம்முடைய பண்டைய பண்பாட்டின் அடையாளம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

         சமகாலத் தமிழ் இலக்கிய படைப்பாளியான ஈரோடு தமிழன்பன் அவர்களை மனம் திறந்து பாராட்டி மகிழ்கிறார். அவர் புதுக் கவிதை மரபுக் கவிதை இரண்டையும் அறிந்து தமிழ் இலக்கிய மரபுகளையும் அறிந்து அதேசமயம் முற்போக்குப் பார்வையோடு சமூகப் பிரச்சினைகளையும் அவருக்குரிய பாணியில் எழுதி வருகிறார். இவரை புதுக்கவிதையில தோன்றிய ஒரு மகாகவி என்று பெருமைப் படுத்துகிறார்.

        வாசிப்பில் மட்டுமல்லாமல் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதிலும் இவருக்கு நிகர் இவர் தான். மாணவப்பருவத்தில் இவருடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜெயகாந்தன் அவர்கள். ஆனால் அவருடைய படைப்புகளில் கருத்துச்சரிவு ஏற்பட்ட போது உரிய ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சித்தவர்களில் செந்தில்நாதன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

            படைப்பு விமர்சனங்களில் பாரதி, பாரதிதாசன், மு.வரதராசனார், பா.சிங்காரம், என்.ஆர்.தாசன்,. ராஜம் கிருஷ்ணன், கோமல் சுவாமிநாதன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தன்னுடைய  இயக்க இயல் பார்வையில் விமர்சனம் செய்தவர் இவர் ஒருவரே.

         செந்தில்நாதன் அவர்களுடைய வாசிப்புத் தளம் மிகப் பரந்து விரிந்ததாக இருந்தது. இவர் மாணவப் பருவத்திலிருந்தே குறிப்பிட்ட நூல்களை மட்டும் வாசிக்காமல் தனக்கு கிடைக்கப் பெற்ற அனைத்து வகையான நூல்களையும் வாசித்துள்ளார்.

            மார்க்சியம், காந்தீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற நூல்களையும் மரபின் தொடர்ச்சியாக பழந்தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், புனைவிலக்கியங்கள், சாதனை புரிந்த கவிஞர்களின் கவிதைகள், வாழ்க்கையை பேசும் படைப்பிலக்கியங்கள், அறிவு சிந்தனையை வளர்க்கும் ஆய்வு நூல்கள் என்று அனைத்தையும் பாரபட்சமில்லாமல் வாசித்துப் பழக வேண்டும் என்று புதிய வாசிப்பாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். பொழுது போக்கு அம்சங்கள் புதிது புதிதாக எத்தனை வந்தாலும் வீட்டில் மர நாற்காலியில் அமர்ந்து கொண்டு புத்தகம் படிக்கும் சுகம் அலாதியானது என்கிறார். அதனால் வாசிப்பு இயக்கம் என்பது இந்த உலகம் சுழலும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறுகிறார்.

      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளராக 17 ஆண்டுகள் இருந்திருக்கிறார். அதன் பின் ஒன்பது ஆண்டுகள் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக பணியாற்றினார். தற்போது அதனுடைய துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.

வெளிவந்த நூல்களின் பட்டியல்

கட்டுரை

1. மே தின வரலாறு- பாட்டாளிகள் வெளியீடு 1978

2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1998

3. இந்திய அரசியல் சட்டம் ஓர் அறிமுகம் 2000

4. தமிழ் தி.மு.க கம்யூனிஸ்ட்- சிகரம் வெளியீடு, சந்தியா பதிப்பகம் 2002

5. பண்பாட்டுப் புரட்சி என்றால் என்ன- ராம் பிரசாத் பப்ளிகேஷன்ஸ் 2006

6. மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம் - சந்தியா பதிப்பகம் 2016

7. இந்துச சட்டம் - தமிழ்நாடு பாடநூல் திட்ட வெளியீடு

புதினங்கள்

1. மங்களம்- சந்தியா பதிப்பகம் 2012

2. நீதியரசர் மா.மாணிக்கம் - சிகரம் வெளியீடு, சந்தியா பதிப்பகம் 2013

திறனாய்வு

1. தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு என்.சி.பி.எச்1967

2. விவாதங்கள் தொடரட்டும்- புதுமைப்பித்தன் பதிப்பகம் 2001

3. காதுகளைக் கடன் கொடுங்கள் - புதுமைப்பித்தன் பதிப்பகம் 2003

4. நிழலின் எதிர்வினைகள் - சந்தியா பதிப்பகம்  2004

5.சிகரம் ச.செந்தில்நாதனின் திறனாய்வுகள் - அன்னை முத்தமிழ் பதிப்பகம் 2010

சமயங்கள் -  புதிய பார்வை

1. சமயமும் சமய எதிர்ப்பும்- புதுமைப்பித்தன் பதிப்பகம் 2003

2. ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம் 2003

3. சிதம்பரம் கோயில் ஒரு சில உண்மைகள் - சிகரம் வெளியீடு- சந்தியா பதிப்பகம் 2007

4. தமிழ்மொழி நீதிமன்ற தீர்ப்புகள்- சிகரம் வெளியீடு - சந்தியா பதிப்பகம் 2007

5. ஆண்டவன் ஆகமம் நீதிமன்றம்- சிகரம் வெளியீடு- சந்தியா பதிப்பகம் 2008

6. அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு - புதுமைப்பித்தன் பதிப்பகம் 2009

7. முருகன் வணக்கத்தின் மறுபக்கம் -  சந்தியா பதிப்பகம் 2011

8. தில்லைக் கோவிலும் தீர்ப்புகளும்- சந்தியா பதிப்பகம் 2014

9. ஆலயமும் ஆகமமும - சந்தியா பதிப்பகம் 2016

10. தேவாரம் ஒரு புதிய பார்வை - சந்தியா பதிப்பகம் 2016

11. சைவ வைணவப் போராட்டங்கள் ஒரு மறுவாசிப்பு - சந்தியா பதிப்பகம் 2017

12. பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும் - சந்தியா பதிப்பகம் 2018

13. இலங்கை முருகனும் மலேசிய முருகனும் - சந்தியா பதிப்பகம் 2019

பெற்ற பரிசுகள், விருதுகள்

1. மங்களம் நாவல் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த நாவல் என்று தமிழ்நாடு அரசின் விருது பெற்றது.

இந்த நாவலை ஆய்வு செய்து சுரேஷ் மற்றும் சாந்தி என்ற இருவர்M.Phil பட்டம் பெற்றுள்ளனர். நெல்லை இந்துக் கல்லூரியில் இது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடப்படாமல் உள்ளது.

2. 2009 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறக்கட்டளையும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து " மக்கள் கவிஞர் "விருதை வழங்கினார்கள்.