May 15, 2021

எழுத்தாளர் ஸ்ரீரசா

                                                                                                                                        தொகுப்பு: வ.சு.வசந்தா

"அரசியலற்ற அழகியல் என ஒன்று தனித்து இல்லை. முறையாக புரிந்துகொண்ட, பயிற்சிபெற்ற எழுத்து முறைகளில் ஏற்படுகின்ற பொதுவான கோளாறுகள், அரசியல் ,அரசியலற்ற எந்த படைப்பையும் மதிப்பு குறைவானதாக மாற்றிவிடும். சரியான அழகியல் படைப்பு சரியான அரசியல் உள்ளதாகவும் இருக்கும்." என்று கூறும் எழுத்தாளர் ஸ்ரீரசாவின் இயற்பெயர் இரவிக்குமார்.

            இவரது பெற்றோர் வீ.சுப்பிரமணியன் - சு.அழகம்மாள். இணையர் மலர்விழி. இவரது மகள்கள் - ம.ர. கல்பனா தத், ம.ர. கலைமதி.

            மதுரை கோரிப்பாளையம் பிறந்த இடமாக இருந்தாலும் தாத்தா பாட்டியின் வளர்ப்பாக அருகில் உள்ள பொதும்பை தான் ஸ்ரீ ரசா அவர்களின் குழந்தைப் பருவம் தவழ்ந்த இடமாக இருந்தது.

            சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டவர். வீட்டுச் சுவர்கள், சுண்ணாம்பு அடித்த சுவர்களை கண்டால் ஓவியம்  தீட்டி விடுவார். மிருகங்கள் , பறவைகள், தினத்தந்தியில் வரும் படங்கள் ஆகியவை ஸ்ரீரசாவின் ஆர்வத்தைத் தூண்டின. இவரது தாத்தா பெரியகருப்பன் சுடுமண் கலைஞரும், சுதைக் கலைஞரும், நாட்டுப்புற ஓவியரும் ஆவார். அவர் செய்யும் சுடுமண் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையை பேரனிடம் கொடுப்பார். ஆக ஸ்ரீரசா அவர்கள் சிறந்த ஓவியரும் சுடுமண் சிற்பக் கலைஞருமாக வளர்ந்தார்.

    சிறுவயது சூழலே இவரை திறமைமிக்க ஓவியராகவும் எழுத்தாளராகவும் வடிவமைத்துள்ளது. சிறுவயதில் ராணி, ராணிமுத்து, குமுதம், ஆனந்த விகடனில் ஆரம்பித்த வாசிப்புத் தளம், நூலகம் சென்று படிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஜெயகாந்தன், கண்ணதாசன், எம் .எஸ். உதயமூர்த்தி என்று அவர் தேடல் தொடர்ந்து, பாரதி, வள்ளலார், விவேகானந்தர், காந்தி, புத்தர், அம்பேத்கர், மார்க்ஸ் என்று விரிவடைந்தது.

            அலங்காநல்லூர் ஓ.சு. செந்தமிழ்ச் செல்வம் நடத்திவந்த தமிழ் பிரியா மாத இதழில் இவரது முதல் ஓவியமும், கவிதையும் இடம்பெற்றது. முள், மதுரை ஆகிய இதழ்களிலும் இவர் படைப்புகள் வெளியாயின. மூட்டா மலர், அன்னம் விடு தூது, தினபூமி இதழ்களிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

            தீக்கதிர், செம்மலர் என்று இவரது எழுத்து, ஓவியங்களுக்கான தளங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்.

    எம்.பில். பட்டத்திற்காக "குதிரையெடுப்புபற்றிய நாட்டுப்புறவியல் ஆய்வேட்டை ஸ்ரீரசா கள ஆய்வு செய்து எழுதினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கல்விப்படத்தயாரிப்பாளராக கல்வி பல்லூடக ஆய்வு மையத்தில் பொறுப்பில் இருந்தார்.

   தமுஎகசவுக்கான சின்னத்தை வடிவமைத்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.

    மானுடம், மானுட மேன்மை, மானுட உயிர்ப்பு, உலக உயிர்ப்பு இவரது படைப்புகளில் மையக்கருத்தாக உள்ளது. 

"படை ..படை..மேன்மேலும் படை.."  என்பது எழுத்தாளர் ஸ்ரீரசாவின் அழைப்பாக இருக்கிறது.

 

வெளிவந்துள்ள நூல்கள்

1. குதிரையெடுப்பு  (நாட்டுப்புறவியல் ஆய்வு)

2. இலக்கியமும் சினிமாவும்

3. பாரதிராஜா திரைப்படங்கள்

4. கரித்துண்டுகள் ஒளிரும் காலம் (கவிதை)

5. மறுபடி மானுடம் (கவிதை)

6. உடைந்து கிடந்தது நிலவு (கவிதை)

7. சாதிலிங்கம் (கவிதை)

8. எதிர்கொள் (கவிதை)

9. துச்சம் (கவிதை)

10. ஆயிரந்தலை ஆதியரவம்(கவிதை)

11. கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?_ குழந்தைகள் திரைப்படங்கள் (திரைப்பட நூல்)

12. அரசியல் சினிமா_ முதல் பாகம் (திரைப்பட நூல்)

விருதுகள்

1. கரித்துண்டுகள் ஒளிரும் காலம் (கவிதை) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கவிதை விருது 

2. எதிர்கொள் (கவிதை) பாரதி இலக்கிய பேரவை விருது

3. சிறந்த கல்வி படத்தயாரிப்புக்கான (SIGNS AND COMMUNICATION) என்ற படத்துக்காக

தேசிய விருது_1990