May 15, 2021

எழுத்தாளர் அருணன்

 தொகுப்பு: நேயா புதுராஜா           

            "புத்தகம் வாசிக்காமல் நமது முன்னோர்களைத் தெரிந்து கொள்ள முடியாதது போலவே சமகால மனிதர்களையும்...இவர்களை தெரிந்துகொள்ளாமல் உங்களால் ஒழுங்காக வாழ இயலாது...ஆக வாழ வாசிப்பு அவசியம், இதற்கு மாற்றுகருத்து இல்லை" என கூறும் பேராசிரியர் அருணன் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர், மார்கசிய சிந்தனையாளர், கல்வியாளர், இலக்கியவாதி, சமூக ஆய்வாளர், தத்துவவாதி என பலமுகம் கொண்ட ஆளுமை. இவர் சிவகங்கை மாவட்டத்தில் திரு.இராமலிங்கம்-திருமதி பாக்கியம் அவர்களுக்கு மகனாக பிறந்தார், இரா.கதிரேசன் என்பது இயற்பெயர், அந்த குடும்பத்தின் முதல் பட்டதாரியாக ஆனவர். இவரது இணையர் முனைவர்.கே.லீலாவதி ஆவார், இவர்களுக்கு அருண் வசந்தகீதன் என்ற மகனும், வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர்.


            எழுத்தாளர்கள் அனைவருமே நல்ல வாசிப்பாளர்களாவே இருப்பார்கள் என்பதற்கிணங்க இவரது வாசிப்பு பயணம் தொடர்கதையில் ஆரம்பித்து கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் எனும் வழியே கு.அழகிரிசாமி என தொடர்ந்திருக்கிறது. தி.க. வெளியிட்டு இருந்த பெட்ரண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?" எனும் உரை இவரை நாத்திக வழியில் திருப்ப முதல் காரணமாகியது, மேலும் நாத்திகத்தை கொள்கையாகக் கொண்ட கட்சி இருக்கிறது என்பதை அறிந்து மார்க்சிஸ்டு கட்சியின் வெளியீடுகளை வாங்கிப் படிக்க ஆரம்பித்து பின் சோவியத் வெளியீடுகளாக வந்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என்று மேலும் உலக ஞானிகள் பலரின் புத்தகங்களையும் படித்திருக்கிறார், இந்தளவு வாசிப்பு விரிவடைய தான் முன்பு படித்த கதைகளும், ஆங்கில அறிவும் துணை புரிந்ததாக கூறுப்பிடுகிறார்.

            தீவிர வாசிப்பின் அடுத்த கட்டம் எழுதுதல். மார்க்சிஸ்டு தவைவராக இருந்த ஏ.கே.கோபாலன் அவர்களின் "நான் என்றும் மக்கள் ஊழியனே" நூலை படித்த அருணன் அவர்களுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டாகியிருக்கிறது, இதனால் அவரை பற்றிய கட்டுரையை தீக்கதிரில் எழுதி எழுத்துலகத்துற்குள் நுழைந்தார். இதுவே அவரது அரசியல் எழுத்தின் துவக்கம், அவரது ஆசான் கே.முத்தையா அவர்களின் தூண்டுதலின் பேரில் நாவல்களை பற்றிய மதிப்பீட்டை தொடங்கினார். செம்மலரில் இலக்கிய எழுத்து தொடங்கியது. இவரது முதல் நூல் "இந்திய கம்யூனிச இயக்க வரலாறு 1917-1934" என்பதாகும்.

            தொடந்து பல வரலாற்று, அரசியல், சமூக, தத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட அருணன் ஏராளமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் பல நூறு நூல்களின் பிழிவாகவும், தத்துவத் தெளிவைத்தருவனவாகவும் எழுதப்பட்டிருக்கிறது, ”தமிழகத்தின் இருநூற்றாண்டு சீர்திருத்த வரலாறுஎன்ற நூல் அருணன் அவர்களை சமூக ஆய்வாளர்களிடம் ஆழமான தாக்கத்தை உருவாக்கியதன் துவக்கம் என்று சொல்லலாம்.

            பிராமணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியல்ல, அது ஒரு சமூக கட்டமைப்பு. அதில் சாதியம், ஆணாதிக்கம், கொடூர மூடநம்பிக்கைகள் என்று மூன்று கூறுகளாக உள்ளது, இந்த கட்டுமானம் இன்று நேற்று அல்ல, வேதகாலம் முதல் இன்று வரை  தொடர்ந்து சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்துகிறது என்பதை எட்டு பாகங்களாக "காலந்தோறும் பிராமணியம்" என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். மேலும் யுகவாரியாக கடவுள் பற்றிய கருத்தியல்களையும், மதங்களின் தோற்றம் மற்றும் பரவலையும் விவரிக்கும் புத்தகமாக "கடவுளின் கதை" எனும் ஐந்து பாகங்கள் கொண்ட நூலும் இவரின் முக்கிய படைப்புகளில் ஒன்று. தமிழில் மார்க்சிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் இவரின் "மார்க்சிய அழகியல்" எனும் நூல் புராதன இலக்கியங்களை பற்றிய மார்க்சிய பார்வையைப் பற்றி கூறும் நூலாகும். இவர் காத்திரமான படைப்புகளுக்கு சொந்தக்கரார் என பெயர் பெற்றவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், கௌரவத்தலைவர் என்ற பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.  பேராசிரியரான இவர் தமுஎகசவை தன்னை வார்த்தெடுத்த பள்ளி என கூறிப்பிடுவார்.

            முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள், ஊடகம் மற்றும் இணைய வெளியில் பொதுஉரைகள் என பேராசிரியர் அருணன் அவர்கள் என்றும் சமூகத்திற்கான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார். ஆய்வாளராக மட்டுமில்லாமல், வரலாற்று, சமூக நாவல்களையும், பயணக்கட்டுரைகளையும் நூல்களாக தமிழிலக்கிய உலகிற்குக் கொடுத்திருக்கிறார். நிழல்தரா மரம், பூரு வம்சம், கடம்பவனம் போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

            "மனுவை எதிர்காமல் சமுகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட முடியாது, போராட்டமே வெற்றிக்கான வழி" எனும் முற்போக்கான பல முன்னெடுப்புகளோடு இன்றும் மார்க்சிய கருத்துகளால் மக்களுக்கான பணியில் தொடர்ந்து சமூக பங்காற்றி வருகிறார்.

 
பேராசிரியர் அருணன் அவர்களின் படைப்புகள்

கட்டுரை நூல்கள்

1)  காலந்தோறும் பிராமணியம்-8பாகங்கள்.

2) கொலைக்களங்களின் வாக்குமூலம்.

3) பெரியாரின் பெண்ணியம்.

4) இந்துமதவெறி:முகமும் முகமூடிகளும்

5) சங்கரமடத்தின் உண்மை வரலாறு.

6) கோட்சேயின் குருமார்கள்.

7) மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை.

8) இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.

9) கார்ல் மார்க்ஸ்:வாழ்வும் சிந்தனையும்.

10) லெனின்: வாழ்வும் சிந்தனையும்.

11) அண்ணா ஆட்சியை பிடித்த வரலாறு.

12) எம்.ஜி.அர்.: நடிகர் முதல்வரான வரலாறு.

13) வ.உ.சி.கடைசி காலத்தில் தடம் மாறினாரா?.

14) ஶ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை.

15) புத்தர்:தர்மமும் சங்கமும்.

16) தேவ அசுர யுத்தம் அரிய திராவிட யுத்தமா.

17) தமிழரின் தத்துவ மரபு-2 பாகங்கள்.

18) வாழும் கலை: ஓஷோ விவாதம் முன்வைத்து.

19) மானுட விசாரணை தத்துவ உரையாடல்.

20) தத்துவ ஞானம்.

21) கடவுளின் கதை-5பாகங்கள்.

22) விசாரணைகள்

நாவல்கள்

23) நிழல் தரா மரம்.

24) சரயூ (ராமாயண மறுவாசிப்பு). 

25) கடம்பவனம் 

26) பூரு வம்சம்

யண நூல்

27) லண்டன் டைரி(முதலாளித்துவம் பிறந்த நாட்டில் முப்பது நாட்கள்).

இலக்கிய ஆய்வு

28) வளரும் சிகரம் வைரமுத்து.( கவிஞரது படைப்புகள் பற்றிய திறனாய்வு).

29) பொங்குமாங்கடல் (கால் நூற்றாண்டு காலக்கலை- இலக்கிய கட்டுரைகள்)

30) தமிழ் இலக்கிய (வழி) வரலாறு.

31) முப்பெரும் கவிஞர்கள்(பாரதி-பாரதிதாசன்-பட்டுக்கோட்டை ஒப்பாய்வு).

32) கண்ணதாசன்.

33) மார்க்சிய அழகியல்.

34) மானுடம் தந்த கம்பன்.

35) கனவுகளின் மிச்சம். 

பெற்ற விருதுகள்

1) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் "வெள்ளையன் விருது".

2)இந்திய ஸ்டேட் வங்கியின் "இலக்கிய விருது".

3)ஜமால் முகமது கல்லூரியின் "நல்லிணக்க விருது".

4)எஸ்.ஆர்.வி.பள்ளியின் அறிஞர் போற்றுதலும் நிகழ்வில் "வாழ்நாள் சாதனையாளர் விருது".

இணைய இணைப்புகள்