May 15, 2021

எழுத்தாளர் அ.கரீம்

 தொகுப்பு: அ. புனிதவதி

            "எப்படியும் அனைவரும் ஒரு நாள் செத்துத்தான் போவோம். அந்தச் சாவுக்குப் பின்பும் ஒரு அர்த்தம் வேண்டும். சமூகத்திற்கு எந்தப் பங்களிப்பும் இல்லாமல் வாழ்ந்து மறைவதில் எந்தப்பயனும் இல்லை. அப்படி ஒரு வாழ்க்கை விலங்கின் வாழ்விற்கு ஒப்பாகும் " என்று மனித வாழ்விற்கு விளக்கம் அளிக்கும் எழுத்தாளர் அ. கரீம் தனது காத்திரமான, முற்போக்கு படைப்புகளின் மூலம் தனி முத்திரையைப் பதித்துவருகிறார்.


            இஸ்லாமிய சமூகத்தவரின் வாழ்வியல் கூறுகளை, சந்திக்கும் பிரச்னைகளை, விழுமியங்களைத் தனது படைப்புகளின் வழியே பதிவு செய்கிறார். கரீமின் படைப்புகளில் சமூகம் சார்ந்த சிந்தனையும், மனிதநேயமும் மையக்கருத்தாக இருப்பதைக் காணமுடிகிறது.

            ஆணாதிக்க சமூகத்திற்கு எதிராகவும், ஒடுக்கு முறைக்கு எதிராகவும் தனது  கதை மாந்தர்களின் வழியே உரத்துக் குரல் எழுப்புகிறார்  கரீம். முற்போக்கு சிந்தனையும், அழகியலும் மிளிரும் படைப்புகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர். அ. கரீம் கோவையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.

            பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது நடந்த கோவைக் கலவரத்தில் தனது உறவினர்கள் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த கரீம் அந்த அனுபவத்தை 15 ஆண்டுகள் கழித்து  2012 ஆம் ஆண்டு தனது முதல் படைப்பாக"மௌத்துக்களின் காலமது" என்ற சிறுகதையாகப் பதிவு செய்திருக்கிறார். இது "புதுவிசை" இதழில் பிரசுரம் ஆகியிருக்கிறது.

    தனது பள்ளிப்பருவத்தில் சரியாகப் படிப்புவராத, முட்டாள் மாணவன் என்று பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவரான அ. கரீம்  மூன்று சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

            பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கரீம் கடந்த 20 ஆண்டுகளாக கிளை மற்றும் மாவட்டப் பொறுப்புகளில் செயல்பட்டு, தற்போது மாநிலக் குழுவில் அங்கம் வகிக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1. தாழிடப்பட்ட கதவுகள்

2. சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை

3.  இருண்ட காலக்கதைகள்கூட்டுத் தொகுப்பு

4. அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி

விருதுகள்/ பரிசுகள்

"தாழிடப்பட்ட கதவுகள்" நூலிற்காக. .

* சுஜாதா உயிர் மெய் விருது 2016,

* கலை இலக்கியப் பெருமன்ற மாநில விருது

* தமுஎகச மாநில விருது

* புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது

* அசோகமித்திரன் நினைவுப்பரிசு ( ஒரு கதைக்கு )

* நெய்வேலி புத்தகக்கண்காட்சி வழங்கிய " சிறந்த கதைக்கரு விருது " ( அன்புள்ள அத்தா )

"சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை " நூலிற்காக - எழுத்தாளர் சௌமா விருது

இணைய இணைப்புகள்