May 15, 2021

எழுத்தாளர் இரா. நாறும்பூ நாதன்

                                                                                                                     தொகுப்பு: அருணா நவீன்

            ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே தனது வாழ்க்கையை எழுதி வைக்கிறான். கடந்த கால சம்பவங்களை வரலாறாக உயிர்ப்பித்து வைத்திருப்பது எழுத்துகளே. அப்படி வரலாற்றை, மனித அனுபவங்களைப் பதிவு செய்யும் எழுத்தாளர்களின் பட்டியலில் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் அவர்கள் தனித்துவமானவர். வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை சிறுகதைகளாக்கி அழகியலோடு பதிவு செய்துள்ளார்.

            நாறும்பூநாதன் அவர்கள் 1960ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று வரலாற்று சிறப்பு மிக்க இடமான கழுகுமலையில் பிறந்தார். நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் வித்துவான் ராமகிருஷ்ணன் மற்றும் சண்முகத்ம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மனைவி சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் ராமகிருஷ்ணன் என்ற திலக் கனடாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

            நாறும்பூநாதன் முதுகலை கணிதம் பயின்றுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்று, தனக்கு பிடித்த இலக்கியத் துறையில் முழுநேரமாக பணியாற்றி வருகிறார். தற்பொழுது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.

            தமிழ் ஆசிரியரான தன் தாத்தாவுடன் கழுகுமலையில் வசிக்கும் போது வரலாற்று கதைகளைக் கேட்டு கேட்டு வளர்ந்தார்.

            வாசிப்பு ஒரு நீண்ட பயணம். ஒரு பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தை புரிந்து கொள்ள முடியும். இது தான் நிறைய ஞானத்தை கொடுக்கும். வாசிப்பின் மூலமாக மட்டும் தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்என்று நாறும்பூநாதன் கூறுவதற்கு ஏற்றவாறே தனது நான்காவது வகுப்பின்போதே வாசிப்பை தொடங்கிவிட்டர். கழுகு மலையில் உள்ள அரசு நூலகத்தை அவரது அப்பா அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது தொடங்கிய வாசிப்பு விடுமுறை நாட்களில் கூட முழு நேரமும் நூலகத்திலேயே கழிக்கும் அளவிற்கு விரிவடைந்தது.

             கல்லூரி காலங்களில் எழுத்தாளர் உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி போன்ற நண்பர்களுடன் சேர்ந்து இலக்கிய நாவல்களை தொடர்ந்து வாசிக்கலானார். அவர் ரசித்து படித்த எழுத்தாளர்களுள் ஒருவர் மேலாண்மை பொன்னுச்சாமி. அவரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் கூறுகையில், "தம்பி நான் அஞ்சாப்பு தான்  படிச்சிருக்கேன், ஏதோ நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி எனது அனுபவங்களை கதைகளாக எழுதுகிறேன் ஒரு கட்டத்தில் நீயும் எழுதலாம்" என்று அவர் சொல்லியது ன் மனதில் ஆழமாக பதிந்ததெனக் கூறுகிறார் நாறும்பூநாதன்.

            அந்த காலக்கட்டத்தில் மொட்டுக்கள் என்னும் கையெழுத்து பத்திரிகையை ஆரம்பித்தார். அவரது ஓவியமும் எழுத்தாளர் உதய சங்கரின் கவிதையும், கட்டுரையும் வெளியாகிக்கொண்டிருந்தது. தொடர்ந்து செம்மலர், தாமரை, கண்ணதாசன், கணையாழி, தீபம் போன்ற இதழ்களை வாசித்ததன் விளைவாக நாமும் ஏன் சிறுகதை எழுதக்கூடாது என தோன்ற, அவரது முதல் சிறுகதையான "தொழில் தர்மம்" மொட்டுக்கள் இதழில் எழுதினார். அது ஒரு முடிதிருத்தும் கலைஞனைப் பற்றிய கதை. தொடர்ந்து எண்ணங்கள், த்வனி போன்ற இதழ்களை நடத்தியுள்ளார்.

            நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார் மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஸ்ருஷ்டி என்னும் நாடகக் குழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழகம் முழுவதும் சென்று நடத்தியுள்ளார்.

            பேனா பிடித்து பழகிய கைகள் இப்போது கணிப்பொறியை கையாள ஆரம்பித்தது. " நாறும்பூ" என்னும் வலைப்பூவை 2011 ல் தொடங்கினார். சிறுகதை இலக்கியத்தில் தொடங்கிய ஆர்வம் ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவர செய்திருக்கிறது. தொகுப்பில் வராத சில கதைகளை வலைப்பூவில் எழுத ஆரம்பித்தார்.

            நாறும்பூநாதனின் முதல் புத்தகம் "கனவில் உதிர்ந்த பூ" 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூல் பாளையங்கோட்டை சதகத்துல்லாஹ் அப்பா தன்னாட்சி கல்லூரியில் (2016) முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

            திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல வரலாற்றுத் தகவல்களைத் தேடித்தேடி எழுத ஆரம்பித்தார். ஒரு குழந்தைக்கு டெல்லி செங்கோட்டை பற்றி தெரிகிறது, தாஜ்மஹால் தெரிகிறது, பாபிலோனில் தொடங்கும் தோட்டம் தெரிகிறது, ஏன் சீன பெருஞ்சுவர் கூட தெரிகிறது ஆனால் உள்ளூரில் ஒரு கோட்டை இருப்பது தெரியவில்லை. அதன் வரலாறு தெரியவில்லை. நம் ஊர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற உணர்வே அவற்றை பற்றி எழுதத் தூண்டியதுஎன கூறுகிறார். தன்னை சுற்றியுள்ள வரலாற்று பண்பாட்டு வேர்களைக் கண்டுபிடித்து அறிந்தும், அறிந்ததை பரவலாக தன் முகநூல் எழுத்துகளில் எழுதவும் ஆரம்பித்தார்.

            அவரது முகநூல் கட்டுரைகள் பெருவாரி வாசகர்களைக் கவர்ந்ததன் காரணமாக, முகநூலில் எழுதிய அணைத்து கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு கண் முன்னே விரியும் கடல்மற்றும் யானை சொப்பணம்’ என்ற இரு நூல்களாக வெளிவந்தன. இவற்றிலுள்ள சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ள.

            அவரது குறு நாவலான "தட்டச்சு கால கனவுகள்", சிறுகதை தொகுப்பு "இலைகள் உதிர்வதில்லை போல" 26 சிறுகதைகளின் கதைக்களம் திருநெல்வேலியை சுற்றியும், நெல்லை வட்டாரவழக்கிலும்எழுதப்பட்டுள்ளது.

            சிறுகதைகள் கட்டுரைகள் மட்டுமல்லாது தினமணி நாளிதழில் இவர் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகள் வெளிவந்துள்ள. இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த சமூகம் சார்ந்த நடுப்பக்க கட்டுரைகளும் சிறப்பு வாய்ந்தவை.

            அன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாறும்பூநாதன் அவர்களின் முகநூல் பக்கம் பார்த்தால் போதும் என்பார்கள். உடனுக்குடன் செய்திகளை தக்க விளக்கத்துடன் எழுதிவிடுவார். இந்த பேரிடர் காலத்தில் ஊரடங்கு காலத்தில் தினம் ஒரு கதை சொல்லல் என ஐம்பதற்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளை வட்டாரவழக்கோடு, முகநூலில் கதை சொல்லி பதிவிட்டுள்ளார். தனது பால்ய காலத்தில் இருந்து கி.ராவின் வீட்டில் அவரது கதைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததலோ என்னவோ ஒரு சிறந்த கதை சொல்லியாகத் திகழ்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் "கழுகுமலையும் வெட்டுவான் கோவிலும்" என்ற தலைப்பிலும், நம்ப ஊர் தலைப்பில் திருநெல்வேலியை பற்றியும் பல வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

            வலி நிறைந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இருபது வருடங்கள் ஆகியும் பதிவு செய்யப்படவே இல்லை என்பதால், இச்சம்பவத்தின் அடிப்படையில் தரவுகளை சேகரித்து ஒரு நாவலாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எழுத்தாளர் நாறும்பூநாதன்.

வெளிவந்துள்ள நூல்கள்

சிறுகதை நூல்கள் :

1  
கனவில் உதிர்ந்த பூ

2    
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்

3  
இலை உதிர்வதைப்போல

கட்டுரை நூல்கள் :

4    
கடன் எத்தனை வகைப்படும்

5    
ஒரு தொழிற்சங்க போராளியின் டைரி குறிப்புகள்

6      வங்கி ஊழியர் டைரி

7     
கண் முன்னே விரியும் கடல் ( முகநூல் தொகுப்பு )

8      
யானை சொப்பனம் ( முகநூல் தொகுப்பு )

9     
ஒரு பாடல்..ஒரு கதை  ( திரைப்பாடல்கள் அனுபவங்கள் )

10.    
பரணிவாசம் ( நூல் விமர்சனங்கள் , கட்டுரைகள் )

குறுநாவல் :

11.    தட்டச்சு கால கனவுகள்
 

இணைய இணைப்புகள்