May 17, 2021

எழுத்தாளர் டி.செல்வராஜ்

                                                                                                                            தொகுப்பு: இரா. தினேஷ் பாபு

            "எனது எழுத்துகளில் பழைய இலக்கியங்களின் சாரம்சம் இருக்கும். நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கை இருக்கும். தொழிலாளி வர்க்கத்துக்கு விடுதலை கிடைக்கும் போதுதான் முழு சமூகத்திற்கும் விடுதலை கிடைக்கும்என்று கூறும் தோழர் டி.செல்வராஜ் அவர்கள் தன் இறுதிக்காலம் வரை உழைக்கும் மக்களுக்காகவே எழுத்தாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.


            எழுத்தாளர் டி.செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் அருகில் உள்ள மாவடி எனும் ஊரில் 14.01.1938 அன்று பிறந்தார். தாயார் ஞானம்மாள். தந்தையார் டேனியல். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தான பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1959 ஆம் வருடம் பி.ஏ. (பொருளாதாரம்) பயின்றார்.

            கேரளாவில் தேவிகுளம் பீர்மேடு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் செல்வராஜ் அவர்களின் அப்ப, தாத்தா, சித்தப்பா அனைவருமே கங்கானிகளாகப் பணிபுரிந்தார்கள். இப்போது கண்ணன் தேவன் எஸ்டேட்டாக இருக்கும் நிறுவனம், அப்போது ஜேம்ஸ் ஃபின்லே நிறுவனமாக இருந்தது. அங்கு அலுவலகப் பணிபுரிந்தவர்களின் குழந்தைகளுக்காக அந்நிறுவனமே ஆங்கிலப் பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறது. இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்தான் டி.செல்வராஜ்.

            தோழர்கள் தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை போன்ற இடதுசாரி இலக்கியவாதிகள் இணைந்து நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே இந்த அமைப்போடு தொடர்பில் இருந்தார் டி.செல்வராஜ். அங்குதான் ரஷ்ய இலக்கியங்களும், புதுமைப்பித்தன் போன்ற தமிழில் எழுதிக் கொண்டிருந்தவர்களின் படைப்புகளும் அறிமுகம் ஆயின. வெளிநாட்டு கதைகள் போல, தமிழிலும் சிறுகதைகள் எழுத ஆர்வம் கொண்டார் டி.செல்வராஜ்.

            ஜனசக்தி வாரமலரிலும்., சிதம்பர ரகுநாதன் அவர்களின் "சாந்தி" இலக்கிய இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. 1962 இல் சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற போது கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான "ஜனசக்தி" மற்றும் இலக்கிய இதழான "தாமரை"யிலும் பகுதிநேரமாக பணியாற்றியுள்ளார். அந்நாட்களில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களோடு நெருங்கி பழகியுள்ளார். அவருடைய நட்பின் மூலம் எண்ணற்ற நூல்களை படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.

            எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏழு நாவல்களையும், ஐம்பது நாடகங்களையும், இரு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். முற்போக்கு நாவல்களில் பெரிதும் மதிக்கப்படுகின்ற முன்னோடி நாவலாக "மலரும் சருகும்" என்ற இவரது நாவல் நெல்லை வட்டார தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும், அவர்களால் நடத்தப்பட்ட "கள்ள மரக்கால்" போராட்டத்தையும் மையமாகக் கொண்டது.

            இவரது தந்தையார் தேயிலை தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றியதால் இவர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை முழுவதும் அறிந்தவர். இத்தொழிலாளர்களின் உழைப்பை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல் "தேநீர்" ஆகும். இந்நாவல் "ஊமை ஜனங்கள்" எனும் பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

            திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை "தோல்" எனும் நாவலாக எழுதியுள்ளார். இந்நாவல் 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது.

            இலக்கிய உலகில் சிறுகதை, நாவல் மட்டுமல்லாது நாடகத் துறையிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. "யுக சங்கமம்", "பாட்டு முடியும் முன்னே" போன்ற புரட்சிகர நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். "பாட்டு முடியும் முன்னே" நாடகத்திற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தை நடிகர் டி.கே. பாலச்சந்திரன் அவர்கள் தன்னுடைய மக்கள் நாடக மன்றம் மூலம் தமிழகமெங்கும் எடுத்துச் சென்றுள்ளார்.

            தன் சிறுகதைகள் நாவல்கள் என அனைத்திலும் பெண்களை வீராங்கனைகளாகவே படைத்துள்ளதாக கூறும் இவர் அக்காலத்திலேயே சாதி, மத மறுப்புத் திருமணம் புரிந்தவர். இவரது இணையர் பாரத புத்திரி. இவர்களுக்கு சித்தார்த்தன் பிரபு, சார்வாகன் பிரபு என இரு மகன்களும், வேத ஞான லட்சுமி என ஒரு மகளும் உள்ளனர்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை 1975 ஆம் ஆண்டில் தொடங்கிய 32 எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இலக்கியத்தில் மட்டுமல்லாது அடித்தட்டு மக்களுக்காக வழக்கறிஞராகவும் பணியாற்றிய இவர் கலை இலக்கிய பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்ற இடதுசாரி அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தனது 81வது வயதில் "அடுக்கம்" எனும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் இன்னும் அச்சுக்கு வரவில்லை.

            தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவே இலக்கிய பணியிலும் வழக்கறிஞர் பணியிலும் செயல்பட்ட இவர் 20.12.2019 இல் தன் பணியை முடித்துக் கொண்டார்.

வெளிவந்துள்ள படைப்புகள்

நாவல்கள்

1) மலரும் சருகும்.

2) தேநீர்

3) அக்னிகுண்டம்.

4) மூலதனம்

5) தோல்

6) பொய்க்கால் குதிரை

 சிறுகதைகள்

1) நோன்பு

2) டி செல்வராஜ் கதைகள்

3) நிழல் யுத்தம்

4) தாழம்பூ

5) ஊர்குருவியும் பருந்தும்

6) கிணறு

7) தொண்டன்

வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்

1)தோழர் ஜீவா வாழ்க்கை வரலாற்று நூல்

2)சா. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று நூல்