May 18, 2021

எழுத்தாளர் ஜீவி

                                                                                                                              தொகுப்பு : கல்பனா செந்தில்

            "எல்லா ராத்திரிகளும் விடியத்தான் செய்கின்றன" பொதுவாக நான் எழுதுவது   நம்பிக்கை வளர்க்கும் கவிதைகளைத் தான். நேற்று முடிந்து விட்டது. நாளை நிச்சயமற்றது. இந்த க்ஷணத்தை சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்வாழ்க்கையை சடங்கு மாதிரி பிழைத்து கடத்தாமல் ரசித்து வாழ வேண்டும்என்று சொல்லும் எழுத்தாளர் ஜீவி அவர்களின் இயற்பெயர் ஜி.வெங்கட்ராமன்.

            கவிஞர் ஜீவி நாடறிந்த கவிஞர். பட்டிமன்ற பேச்சாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மாவட்ட நலக் கல்வியாளராகப் பணியாற்றி வருகிறார்.

            கவிஞர் ஜீவி சென்னையில் வசித்து  வருகிறார். சொந்த ஊர் அறந்தாங்கி. அவர்களின் தாய் மதுரம்,  தந்தை கனேசன் சாதி மதச் சார்பற்ற வாழ்வை ஆதரித்தவர்கள். கவிஞர் ஜீவி கலப்பு திருமணம் செய்தவர். அவருடைய எழுத்துக்கு உறுதுணையாக இருப்பது இணையர் ஸ்ரீவாணி. அவர்கள் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகன்கள் டாக்டர் அஜித் மற்றும் டாக்டர் சுஜித். மற்றும் விரிவான  குடும்ப உறுப்பினர்களாக அவர் கருதுவது தமுஎகச இயக்க நண்பர்கள் தோழர்கள்.

            கவிஞர் ஜீவியின் ஆரம்பகால வாசிப்பு அனுபவங்களுக்கு களம் அமைத்துத் தந்தது பழைய தஞ்சை மாவட்டத்தில் கறம்பக்குடிக்கு அருகிலுள்ள நெய்வேலி எனும் சிற்றூர். பள்ளிப்பருவத்திலே கம்பன் பாடல் ஒப்புவிக்கும் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி என்று பல போட்டிகளில் பரிசு பெற்றவர். பள்ளி பருவத்திலே அவருடைய பல படைப்புகள் சிற்றிதழ்களிலும், சிறுவர்களுக்கான பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ள. பள்ளி ஆசிரியர்களின் தூண்டுதலால் வாசிப்பிலும், எழுத்திலும் ஆழமான பயணத்தை சிறு வயதிலேயே துவங்கிவிட்டார் கவிஞர் ஜீவி.

            அவர் வீட்டின் ஒவ்வொரு அறையும் புத்தகம் நிரம்பி வழியும் நூலகமாக காட்சியளிக்கும். தகப்பனார் கிராமக் கர்ணம் என்பதால் ஓலைச்சுவடிகள் வீட்டில் இருக்கும். சிறுவயதிலேயே வாசிப்பினை ஓலைச்சுவடிகளில் துவங்கும் வாய்ப்பு கவிஞர் ஜீவிக்கு அமைந்தது. பள்ளிக்காலத்திலேஉயே நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அதிக முறை நூலகத்தைப் பயன்படுத்தியதால் பரிசு பெற்றவர் ஜீவி.

            எட்டாம் வகுப்பு படிக்கும்போது "முயல்" என்கிற சிறுவர் இதழிலும், தினத்தந்தியிலும் இரண்டு மூன்று நகைச்சுவைத் துணுக்குகள் பிரசுரமாகி இருக்கின்றன. 1978-ல் புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆண்டு மலரில் அவர்  கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. 1980ல் கோவையில் இருந்து வெளிவந்த "துளிகள்" இலக்கிய இதழில் அவர் கவிதைகள் பிரசுரம் ஆகி இருக்கிறது.

            தாய், தீக்கதிர், செம்மலர், தினமலர் போன்ற பத்திரிகைகளில் தொடந்து கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாயின. 1984 ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய வானொலியில் மகரந்த மண்டபம் நிகழ்ச்சியின் மூலம் அவரது பல கவிதைகள் ஒலிபரப்பாயின.

            சிறுவயதிலே பாரதி கவிதைகளை ருசித்து வளர்ந்தவர். புதுக்கோட்டை மேல்நிலைப்பள்ளி படிக்கும்போது பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து, மேத்தா போன்றவர்களின் வரிகளை மிகவும் விரும்பிப் படிப்பவர். ’எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற பாரதியின் வரிகள் அவருக்கு ஆதர்சம். எப்படிப் பேச வேண்டும் என்பதை கண்ணதாசனும், எதைப் பேச வேண்டும் என்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் சொல்லிக் கொடுத்ததாக கூறுகிறார்.

            கவிஞர் ஜீவி அவர்களின் வாசிப்புத் தளமாக அவர் அனுபவத்தில் கூறுவது ஆரம்பத்தில் மாத நாவல்களின் வழியாக சுஜாதா, சிவசங்கரி, லட்சுமி, அனுராதா ரமணன் ஆகியோரின் படைப்புகளை விரும்பி வாசித்தார். பின்பு கலைஞர், சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், மகரிஷி போன்ற எழுத்தாளர்கள் பக்கம் கவனம் திரும்பியது. "பலரின் வரிகளில் ஊறி எனது ஒளிரும் வழிகளை ஆரம்பித்ததாக" அவர் எழுத்துக்களின் துவக்கத்தைப் பற்றி கூறுகிறார்.

            ’தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு செல்லும் பேரன் மாதிரி’ தமிழ்நாடு உற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தோடு இணைந்து பயணித்ததாகக் குறிப்பிடுகிறார் கவிஞர் ஜீவி. புதுக்கோட்டையிலும், அறந்தாங்கியிலும் பொதுமக்களுக்கான பல நிகழ்வுகளை தோழர்களோடு இணைந்து நடத்தியிருக்கிறார் ஜீவி. தமுஎகச வில் மாவட்டச்செயலாளர், மாநில துணைப் பொதுச்செயலாளர் மாநிலக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார்.

            அறிவொளி இயக்கத்திற்க்காக அவர் எழுதிய "குறிஞ்சி மலை தேனே" என்ற கவிதை வரிகள் , "ஒரு ரயில் என்ஜினாய் எப்போதும் இயங்கு. கூடவே பலரை சேர்த்துக் கொண்டு உற்சாகமாய் கூவிக்கொண்டு". தேனி, மன்னார்குடியில் சாதிய மோதல்கள் நடந்தபோது "நெருப்பின் மரபு" என்ற அவரது கவிதை மீண்டும் மீண்டும் கூட்டங்களில்  வாசிக்கப்பட்டது அவருக்கு கிடைத்த அங்கிகாரம் . எளிமையான மக்களின் அன்பும் அங்கீகாரமும் அலுத்துச் சலிக்கும் தொடர் பயணத்தில் உற்சாகமாக ஓட உதவுவதாகக் குறிப்பிடுகிறார்.

            அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களையும், கிடைத்த அனுபவங்களையும் வைத்து ஒரு குறுநாவல் எழுத வேண்டும் என்ற விருப்பத்துடனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதை வாயிலாக சொல்ல வேண்டும் என்ற முயற்சிலும் கவிஞர் ஜீவி ஈடுபட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய ’தமிழ்ச் செம்மல்’ விருது கவிஞர் ஜீவி அவர்களுக்கு வழங்கப்பட்டது .

i     இதுவரை வெளி வந்த நூல்களின் பட்டியல்


வானம் தொலைந்து விடவில்லை - 1993

2.       இரு வேறு முகங்கள்

3.       அஞ்சறைப் பெட்டி

4.       நைலான் ஊஞ்சல்

5.       சின்னஞ் சிறகுகள்

6.       ஜீவி கவிதைகள்

7.       அசுர சாதகம்

8.       அடித்துப் பெய்த மழை

9.       நனையத்தான் மழை மற்றும்

10.    கவிதை குறித்த சொற்கள்

11.    கவிதையும் கவிதை சார்ந்தும்

12.    நா.பிச்சமுத்து முதல் எஸ்.ரா வரை 2016

பெற்ற பரிசுகள், விருதுகள்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை பரிசு

நொய்யல் விருது

.தி.மு..இலக்கிய அணி பரிசு

கருர் தமிழ்சங்கப் பரிசு

தாரகை அறக்கட்டளை பரிசு

இலக்கிய பேரவையின் விருது

கவிதை உறவு அறக்கட்டளை பரிசு

பாரதி முற்றம் கவிஞர் சிகரம்விருது

திசைகள் வழிகாட்டும் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது

கறம்பக்குடி ரோட்டரி கிளப்பின்  மண்ணின் மைந்தர் விருது

தமிழக அரசின் தமிழ் செம்மல்விருது  2020