May 19, 2021

எழுத்தாளர். சு.இலட்சுமணப்பெருமாள்

தொகுப்பு : ப.சாமுண்டீஸ்வரி 

            "வாழ்க்கை என்பது வசதிவாய்ப்பல்ல - உலகத்தோடொட்ட ஒழுகல்என்று கூறும் எழுத்தாளர் சு.இலட்சுமணப்பெருமாள் கரிசல் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். சிறுகதையாளர், பேச்சாளர், வில்லிசைக் கலைஞர் என்று பல முகங்கள் கொண்டவர்.

            சு.இலட்சுமணப்பெருமாள் அவர்கள் சுப்பையா செல்லத்தாய் என்கிற தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக 1955-ல் பிறந்தார். இவருடன் பிறந்த நால்வரும் சகோதரிகள். இவருடைய தந்தையார் சுப்பையா புஞ்சைக் காடுகளைக் காவல் காக்கும் காவல்காரராகவும், அம்மானை பாடுபவராகவும் இருந்தவர். பஞ்சபாண்டவர் வனவாசம், நல்லதங்காள் வரலாறு, சித்திர புத்திர நாயனார் சரித்திரம் என்று பல அம்மானைகளை இரவு முழுவதும் பாடி, தானியங்களப் பெற்றுவருவார். அம்மா செல்லத்தாய் வசதியான குடும்பத்துப் பெண். இவர்களுடைய திருமணத்திற்குப் பிறகு வறுமையான சூழலில் வாழப் பழகிக் கொண்டார்.

            சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் பள்ளி இறுதிவரை படித்தார். அவருடைய ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் நடந்துதான் பள்ளி செல்ல வேண்டும். அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தான் ஊரிலேயே பெரிய படிப்பு என்பதால் லட்சுமணப்பெருமாள் பள்ளி இறுதிவரை கல்வி கற்றார். படிப்பு முடிந்து வீட்டில் இருந்த போது, தினமும் இரண்டு ரூபாய் கூலிக்கு பால் ஊற்றும் வேலைக்குச் சென்றார். பல கிராமங்களுக்குப் பால் விற்கச் செல்லும் போது கிடைத்த அறிமுகத்தில் வில்லுப் பாட்டு கற்கத் துவங்கினார். பசிக்கத்தான் ஆகாரமேயொழிய ருசிக்க அல்ல என அனுபவத்தில் கண்டறிந்த இளமைக் காலத்தில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டது. அவர் வேலை செய்து கொண்டிருந்த பால் பண்ணை இழுத்து மூடப்பட்டது. அப்போதுதான் வில்லுப்பாட்டினை முழு நேரமாகச் செய்யத் தொடங்கினார். அப்பாவின் மூலம் பழக்கமாகியிருந்த அம்மானை, சொந்த அனுபவத்தில் கிடைத்த சமூக நடப்புகள் பற்றிய பகடிகளை வில்லுப்பாட்டில் இணைத்து, புராணக் கதைகளில் இருந்து சமூக நடப்புகளை வில்லுப்பாட்டில் புகுத்தினார். சுயமாக பாடல்கள் எழுதி, பாடி வந்தார்.

            1972-ல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அவரது தந்தை சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் இறந்து போனார். அவர் படுக்கையில் கிடக்கும்போது சிறையில் கம்யூனிஸ்டுகளின் பேச்சு, வீரம், தியாகம் பற்றித் தான் தெரிந்து கொண்டதை இலட்சுமணப்பெருமாளிடம் கூறியுள்ளார். அவை அவருக்குப் புதுமையாக இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், கவியரங்கம் போன்றவைகளுக்கு போக ஆரம்பித்திருக்கிறார். அப்போதுதான் கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார்.

            தாய், தந்தை மறைவிற்குப் பிறகு தனது 17 ஆவது வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பித்தவர். சகோதர, சகோதரிகளின் திருமணத்திற்குப் பின், குகன்பாறை என்னும் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரோடு திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் - திருமணம் முடிந்து குழந்தைகளோடு வாழ்கிறார்கள்.

            வில்லுப்பாட்டு மட்டுமே குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை. லாரியில் கிளினராகி, டிரைவராகி, தனியார் பேருந்தில் கண்டக்டராகி, கடைசியாக தீப்பெட்டி கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றினார் லட்சுமணப்பெருமாள். தீப்பெட்டித் தொழிலைக் கற்ற பிறகு, வங்கிக்கடன் மூலம் சிறிய தீப்பெட்டி ஆபீசைத் துவங்கி நடத்தி வருகிறார்.

            தான் ரசித்தவை, நேரில் கண்டவை, கேள்விப்பட்டவைகளையே தன் கதைகளாக எழுதியுள்ளதாகக் கூறுகிறார் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள்.

            சிறுவயதில் அவர் புத்தகங்கள் வாசித்ததில்லை. தினத்தந்தியில் வரும் கன்னித்தமிழ், சித்திரக்கதைகள், சினிமா விளம்பரங்கள், குமுதம், பேசும்படம் போன்று அவர் வாசித்தவை எல்லாம் டீக்கடையில் கிடைப்பவைதான். அவையே, அவரது வாசிப்பனுபவத்திற்குத் தீனியாக இருந்துள்ளது. அவருடைய சிறுவயதில் அவர் வாசித்து பரவசப்பட்ட எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி.

            பறிப்புஎன்ற ஒரு குத்தகை விவசாயியைப் பற்றிய சிறுகதையை முதன்முதலாக எழுதி தற்செயலாக சாத்தூர் வந்திருந்த வியர் மாரீஸிடம் வாசிக்க கொடுத்திருக்கிறார். அவர் அதைப் படித்துவிட்டு, அப்போது வெளிவந்து கொண்டிருந்த வாரஇதழ் ஒன்றிற்கு உடனடியாக அனுப்பி வைத்தார். அந்த இதழிலேயே இலட்சுமணப்பெருமாள் அவர்களின் கதை பிரசுரமானது. அதிலிருந்து அவரின் எழுத்து ஆர்வம் தீவிரமானது.

            நம் மனதில் படிந்துவிட்ட வியங்கள்தான் இலக்கியம் ஆகிறது. மானமோ, அவமானமோ, துக்கமோ, சந்தோசமோ, ஒரு எழுத்தாளரின் நினைவு படிமத்திலிருந்து வருபவையே படைப்புகளாகின்றன என்கிறார் இலட்சுமணப்பெருமாள். தனது கதைகளில், வாசகனை - வாழ்க்கையை பார்க்க வைக்கிறார். நாம் வாழ்வதுதான் வாழ்க்கை என்பதைத் தாண்டி, எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை உணர்த்துவதுதான் கதைகள் என்கிறார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பணிகளில் இணைந்து கொண்டார். தமுஎகச நடத்திய ‘அன்னைத் தமிழை அரியனை ஏற்றுவோம்என்ற மாநிலந்தழுவிய பிரச்சார நிகழ்வில், தனது வில்லிசை குழுவினரோடு கொங்குதேர் வாழ்க்கைஎன்னும் தலைப்பில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வில்லிசை நிகழ்த்தியது தனது மறக்க முடியாத அனுபவமாகக் கூறுகிறார். ஒருமுறை திண்டுக்கல்லில் அவரது வில்லிசையை கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் நடத்தியபோது, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அன்றைய மாநிலச் செயலாளர் மறைந்த தோழர். என்.வரதராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சியை மாநிலம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்று மேடையில் பாராட்டியிருக்கிறார்.

            ஒரு எழுத்தாளராய், பேச்சாளராய் சிங்கப்பூர், துபாய், டென்மார்க், நார்வே, ஜெர்மனி மற்றும் மஸ்கட் போன்ற நாடுகளுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டவர் இலட்சுமணப்பெருமாள் அவர்கள். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், எழுத்தாளர் உதயசங்கரோடு இணைந்து ”கரிசல் கருதுகள்” எனும் கரிசல்நாட்டு கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

(1) பால காண்டம்

(2) ஒட்டுவாரொட்டி

(3) இலட்சுமணப்பெருமாள் கதைகள்

(4) கரிசல் நாட்டு கருவூலங்கள்

(5) ஆதிப்பழி

பெற்ற விருதுகள்

(1) தமுஎகச விருது

(2) திருப்பூர் தமிழ்ச்சங்க விருது

(3) உலகத் தமிழ்ப்பண்பாட்டு மைய இலக்கியச் செம்மல் விருது

இணைய இணைப்புகள்