May 23, 2021

எழுத்தாளர் சு.வெங்கடேசன்

தொகுப்பு: மா.ஜெயசுஜா

எல்லா உயிரினமும் உடலியலாக மரபியலாக அனைத்து விசயங்களையும் தன்னுடைய அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. மனிதன் தன் வாழ்வில் அனுபவம் மூலமாக கற்ற அறிவை உடல்ரீதியாக கடத்தவில்லை இயற்கை. இதைக் கடத்த வேண்டிய தேவை மனிதனுக்கு வந்தது. அதற்கு அவன் கண்டுபிடித்த கருவி தான் புத்தகம் என்று கூறும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் இப்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். கவிதை, கட்டுரை, நாவல், உரை … என பன்முகத்தன்மை கொண்டவர்.

            மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியில் இரா.சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு 1970 மார்ச் 16 அன்று பிறந்தார் சு.வெங்கடேசன். பள்ளிக்கல்வியை மதுரை திருநகர் எம்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும், இளங்கலை வணிகவியல் கல்வியை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும் பயின்றார். இணையர் பி. ஆர்..கமலா, மகள்கள் யாழினி, தமிழினியுடன் தற்போது திருப்பரங்குன்றத்தில் வசிக்கிறார்.

            பள்ளி, கல்லூரி காலங்களிலேயே பேச்சு, கவிதைப் போட்டிகளில் பங்கேற்று முந்நூறுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்ற மாணவராக தனித்தன்மையுடன் அறியப்பட்டார்.

            முதன் முதலில் ஏழாம் வகுப்பு படித்தபோது பாரதி நூற்றாண்டுவிழா பேச்சுப்போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் இலக்கியப் பயணம் துவங்கியது. எழுத்துலகில் ஆர்வம் வரக்காரணமாக இருந்தவர்  சு.வெங்கடேசன் அவர்களின் பள்ளித் தமிழாசிரியர் மொழியறிஞர் புலவர் இளங்குமரனார். எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் தமிழ் பயின்றார் சு.வெ. ”மொழி அவரின் உயிரோடு இரண்டற கலந்த உணர்வு. அந்நெருப்பை அவரிடமிருந்து நானும் கொஞ்சம் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டேன்.. பாடப்புத்தகம் வழியாக மட்டும் தமிழை, இலக்கியத்தை அறிந்திருந்த எனக்கு பாடப்புத்தகத்திற்கு வெளியே தமிழ் எவ்வளவு சுவையூறியது என்பதை சுவைக்க வைத்தவர் அவர்” என்று குறிப்பிடுகிறார் சு.வெ.

            பனிரெண்டாம் வகுப்பு விடுப்பில் "கலைமகள்" பத்திரிக்கை நடத்திய நாவல் போட்டியில் 118 பக்கங்கள் கொண்ட நாவல் ஒன்றை முதன்முதலாக எழுதினார். கல்லூரி நாட்களில் தோழர் தமிழ்க்கூத்தனுடன் ஏற்பட்ட உறவு இலக்கியமாகவும், இயக்கமாகவும் வேரூன்ற்வதற்கு துணை நின்றதாகக் குறிப்பிடுகிறார் சு.வெ. கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோதே "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்" என்ற கவிதை நூலினை வெளியிட்டுள்ளார்.

            சு.வெ. அவர்களின் கவிதைகள் செம்மலர் இதழில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பல இலக்கிய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வந்தார். ’செம்மலர்’ இதழின் துணையாசியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். தொடந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார்.

            தமுஎகச அமைப்பில் கிளை, மாவட்டம், மாநிலம் என்று பல பொறுப்புகளை ஏற்று செயலாற்றியவர் சு.வெ. திருப்பரங்குன்றத்தில் தமுஎகச கலைஇரவு அப்பகுதி முழுவதும் மிகப் பிரபலமான கலை இலக்கியத் திருவிழாவாக மாறியது இவர் பணியாற்றிய காலத்தில்தான். சு.வெ. உடன் திருப்பரங்குன்றத்தில் நிறைய இளைஞர்கள் இணைந்து, இலக்கிய, சமூக, அரசியல் பணிகளை முன்னெடுத்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தில் இவர்களால் உருவாக்கப்பட்ட “வேடந்தாங்கல்” எனும் தமுஎகச அலுவலகம் முற்போக்கு இயக்கங்களில் தனித்துவமான இடங்களில் ஒன்று.

            மதுரை செளராஷ்ட்ரா கல்லூரி மாணவி கமலா அவர்களோடு ஏற்பட்ட காதல் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் திருமணத்தில் முடிந்தது. கவிதைகளில் இருந்து சு.வெ. அவர்களின் கவனம் கட்டுரைகள் மீது திரும்பியது. சமூகம், இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். கலாச்சாரத்தின் அரசியல், கறுப்பு கேட்கிறான் கிடா எங்கே?, சமயம் கடந்த தமிழ். . போன்ற கட்டுரை நூல்கள் இவரது படைப்புகளில் முக்கியமானவை.

            உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை பல போராட்டங்களை முன்னெடுத்து அரசின் கவனத்துக் கொண்டு சென்றதில் சு.வெ. அவர்களின் பங்கு மிக முக்கியமானது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து தொடர்ந்து களப்பணியாற்றிவந்தார்.

            சிறுவயதிலிருந்து பாட்டி கதைகளைக் கேட்டு வளர்ந்த சு.வெங்கடேசன் “காவல் கோட்டம்” எனும் மதுரை குறித்த தனது நாவலுக்காக பத்தாண்டுகள் தரவுகளைச் சேகரித்தார். ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமாகக் கொண்ட ”காவல் கோட்டம்” நாவல் வெளியாகி இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலக்கியத்தின் உயர் விருதான சாகித்ய அகாடமி விருதினையும், கனடா நாட்டின் இலக்கிய அமைப்பின் இயல் விருதினையும் இந்நாவலுக்காகப் பெற்றார் சு.வெ.  இந்நாவலின் ஒரு பகுதி “அரவான்” எனும் திரைப்படமாகவும், இன்னொரு சிறு பகுதி ”சந்திரகாசம்” எனும் கிராபிக் நாவலாகவும் வெளிவந்தது.

            தன்னுடைய வரலாற்று ஆர்வத்தால் அகழாய்வுகள் குறித்தும், கல்வெட்டுகள் குறித்தும் அறிந்து கொண்டு, மதுரை அருகில் நடைபெற்ற கீழடி அகழாய்வு குறித்து உலகறியச் செய்தார். இப்போது கீழடி உள்ளிட்ட பல அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு சு.வெங்கடேசன் அவர்களின் ஆய்வுகளும், கட்டுரைகளும், களப்பணிகளும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. கீழடி குறித்த தொடர் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் எழுதி, “வைகை நதிநாகரீகம்” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

            ”வீரயுகநாயகன் வேள்பாரி” எனும் வரலாற்றுத் தொடர்கதையை ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதினார் சு.வெங்கடேசன். நூறு வாரங்களுக்கும் மேலாக வெளிவந்த அத்தொடர் உலக அளவில் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்பு, அவை தொகுக்கப்பட்டு நாவலாக வெளிவந்தது. மலேசியா தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ  கே..ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் அனைத்துலக சிறந்த படைப்பாக வீரயுக நாயகன் வேள்பாரி நாவலைத் தேர்வு செய்து.

            ஒரு எழுத்தாளராக, சமூகப் போராளியாக, களப்பணியாளராக அறியப்பட்ட சு.வெங்கடேசன் மதுரை நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்ல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவருடைய நாடாளுமன்ற உரைகள் மொழி, இலக்கியம், வரலாறு, சமூகம் என முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக தனித்து நிற்கின்றன.

வெளிவந்த நூல்கள்

கவிதைகள்

1. ஓட்டை இல்லாத புல்லாங்குழல்

2. திசையெல்லாம் சூரியன்

3. பாசி வெள்ளத்தில்

4 ஆதிப் புதிர்.

கட்டுரைகள்

1.கலாசாரத்தின் அரசியல்

2. சமயம் கடந்த தமிழ்

3.அலங்காரப் பிரியர்கள்

4. மனிதர்கள், நாடுகள், உலகங்கள் -  ஜா. மாதவராஜுடன் இணைந்து

5. ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை.

6. கதைகளின் கதை

7.கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே?

8. வைகை நதி நாகரிகம்.

நாவல்கள்

1. காவல் கோட்டம்

2.வீரயுக நாயகன் வேள்பாரி

கிராபிக் நாவல்

1.சந்திரஹாசம்

பெற்ற விருதுகள்

சாகித்ய அகாடமி விருது

கனடா நாட்டின் இயல் விருது

மலேசியா டான் ஸ்ரீ  கே..ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் வழங்கிய அனைத்துலக சிறந்த படைப்பு விருது

இணைய இணைப்புகள்