May 24, 2021

எழுத்தாளர் உதயசங்கர்

தொகுப்பு : . புஷ்பராஜ்

கந்தக பூமி என்று அழைக்கப்பட்டாலும் கரிசல் பகுதி பல இலக்கிய வளங்களை ஈன்றெடுத்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் துவங்கி பெரிய எழுத்தாளர் படையை கரிசல் மண் தந்திருக்கிறது, அதே கரிசல் மண் கோவில்பட்டியில் உதயமானவர் எழுத்தாளர் கா. உதயசங்கர் அவர்கள். கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாய் இலக்கிய உலகில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.

1960-ஆம் ஆண்டு  தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள  கோவில்பட்டியில்  பிறந்தவர். 1970-களில் அவரது 10 ஆம் வயதிலேயே பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி பொதுநூலகத்திற்குச் சென்று குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்களை வசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் அவரின் நண்பர்களுடன் இணைந்து அவர்கள் வசிக்கும் தெருவுக்குள் வீடு வீடாக பணம் சூலித்து "தந்தையும் மகனும்" என்ற நாடகத்தை அவரே எழுதி நடத்தினார்.

அவருடைய கல்லூரி காலத்தில் கையெழுத்து இதழை நடத்தி வந்தார். 1979 -ல் தர்ஷனா என்ற நாடகக்குழு கவிஞர்.தேவதச்சன், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், திரைக்கலைஞர் சார்லி, உதயசங்கர், முருகன், மாரீஸ், திடவைபொன்னுச்சாமி, சாரதி, நாறும்பூநாதன், முத்துச்சாமி, ஆகியோருடன் ஏராளமான வீதி நாடக நிகழ்வுகள் நடந்தன. பின்னர் 1981- ல் தமு எசவின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழு தமிழ்ச்செல்வன் தலைமையில் தொடங்கப்பட்டது. அதில் கோணங்கி, திடவை பொன்னுச்சாமி, நாறும்பூநாதன், சாரதி, அப்பணசாமி, உதயசங்கர், கு.ராமசுப்பு, முத்துச்சாமி, போஸ்டல் சுப்பையா, மாரீஸ், ஆகியோருடன் சிருஷ்டி மிகச்சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

 கோவில்பட்டி இலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து, இலக்கியச் சந்திப்புகள், தீவிர இலக்கிய விவாதங்கள், கூட்டங்கள் என தொடர்ந்து இலக்கிய வேட்கையோடு செயல்பட்டார் உதயசங்கர். அன்றாடம் சந்திப்பது, பேசுவது என இலக்கியம் பேசாமல் எந்த ஒருநாளும் கழிந்ததில்லை.   

1980-களில் தனது 20 வயதில் கவிதை எழுதத் துவங்கி, பிறகு சிறுகதை எழுத்தாளராக முகிழ்த்தவர். 1990-களில் குழந்தை  இலக்கியத்தில் தடம்பதித்து குழந்தைகளுக்கான பாடல்களை எழுதத்துவங்கினார், அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என இன்றும் தொடர்ந்து எழுதிவருகிறார். எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதி இப்போதுவரை வெளிவந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல்.

கி.ரா. அப்போது இடைச்செவல் கிராமத்திலிருந்து வாரம் ஒருமுறை கோவில்பட்டிக்கு வந்து போகும் வழக்கம் இருந்திருக்கிறது. அவருடைய வருகையை ஓவியர் மாரீஸ் இலக்கிய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தகவல் சொல்ல, அது ஒரு இலக்கியச் சந்திப்பாக நடந்து வந்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால், நவீன தமிழிலக்கியத்தின் தலைநகர் என்று சொல்லுமளவுக்கு கோவில்பட்டியின் இலக்கியச் செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.

 மாற்றுச் சிந்தனைகளை விதைக்க வேண்டும். அறிவியல் பார்வையுடன்பகுத்தறிவுப்பூர்வமான படைப்புகள் எண்ணிக்கையில் பெருக வேண்டும். அப்போது தான் பழைய சமத்துவமற்ற  னாதன மதிப்பீடுகளுக்கு மாற்றாக புதிய சமத்துவ ஜனநாயக மதிப்பீடுகளை உருவாக்கமுடியும். அதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவேண்டும்ன்ற கருத்தினை மையமாகக் கொண்டு, தீவிரச் செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

            ஹோமியோபதி மருத்துவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதனைக் கற்றுணர்ந்து தன்னால் முடிந்த நோயர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியையும் செய்து கொண்டே "எது மருத்துவம்" என்கிற மருத்துவம் சார்ந்த புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். தனது இரு மகள்களையும் ஹோமியோபதி மருத்துவம் படிக்க வைத்தார். சாதிகளின் உடலரசியல் மற்றும் பல்வேறு நூல்களில் சாதீய முரண்பாடுகளைச் சாடும் எழுத்துகளைப் பதிவு செய்து இருந்தாலும், தனது சொந்த வாழ்க்கையில் அத்தகைய கருத்துக்களுக்கு உண்மையாக வாழ்ந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். தனது சொந்த குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ததில் ஆகட்டும், தனது வீட்டில் சடங்குகள் மற்றும் இதர பொது நம்பிக்கைகளிலிருந்து விலக்குதலாகட்டும் எல்லாவற்றிலும் தானே ஒரு முன்னுதாரணமாக இருந்து செயல்படுபவர்.

            கரிசல் எழுத்தாளர்கள் குறித்த 15 ஆவணப்படங்களை தயாரிக்கும் திட்டத்தோடு எழுத்தாளர் உதயசங்கர் நண்பர்களோடு களம் இறங்கினார். எழுத்தாளர் அப்பணசாமி குறித்த ஆவணப்படம் மட்டும் வெளியாகியிருக்கிறது. மற்றவை தயாரிப்பு நிலையிலேயே தொடர்கிறது.  

அவரது சிறாருக்கான கதைத் தொகுப்பு புத்தகம் "மாயக்கண்ணாடி" 2016 -ஆம் ஆண்டுக்கான இரண்டு விருதுகளைப் பெற்றது. கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கிய சிறுவர் நூல்களுக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது மற்றும்  ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விகடன் குழுமம் வழங்கியசிறந்த சிறார் இலக்கிய விருது. அந்த விகடன் விருதுக்கான குறிப்பில் இப்படி எழுதப்பட்டுள்ளதுசிறார்களின் மனதில் அவர்களும் அறியாதவாறு அதிகாரத்துக்கு எதிரான விமர்சனத்தை உருவாக்க முயலும் இந்த `மாயக்கண்ணாடி’, சமூகத்துக்குத் தேவையான தற்கால அவசியம்!”

ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்; அவரது பணி அணுபவங்களும் அவரது குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு”, "துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்" போன்ற சிறுகதைகளில் வெளிப்படுகிறது. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார்.


வெளிவந்துள்ள நூல்களில் சில

சிறுகதை நூல்கள்

·         யாவர் வீட்டிலும்

·         மறதியின் புதைசேறு

·         உதயசங்கர் கதைகள்

·         ஒரு விளக்கும் இரண்டு கண்களும்

·         பிறிதொரு மரணம்

·         கண்ணாடிச்சுவர்கள்

·         குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு

·         தூரம் அதிகமில்லை

·         பின்பு பெய்தது மழை

·         மீனாளின் நீலநிறப்பூ

·         துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்

 

குறுநாவல்

·         ஆனால் இது அவனைப்பற்றி

 

கவிதை நூல்கள்

·         ஒரு கணமேனும்

·         காற்றைவாசி

·         தீராது

·         எனவே

·         தீராத பாடல்

 

குழந்தை இலக்கியம்

·         தலையாட்டி பொம்மை (குழந்தைப்பாடல்கள்)

·         பச்சை நிழல் (சிறுவர் கதைகள்)

·         குழந்தைகளின் அற்புத உலகில் (கட்டுரைகள்)

·         மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)

·         பேசும் தாடி (சிறுவர் நாவல்)

·         விரால் மீனின் சாகசப்பயணம்

·         கேளு பாப்பா கேளு (குழந்தைப்பாடல்கள்)

·         பேய் பிசாசு இருக்கா? (கட்டுரைகள்)

·         ரகசியக் கோழி (சிறுவர் கதைகள்)

·         அண்டாமழை (சிறுவர் கதைகள்)

·         ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்)

·         மாயாவின் பொம்மை (சிறுவர் கதைகள்)

·         சூரியனின் கோபம் (சிறுவர் கதைகள்)

 

மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு

·         வாயும் மனிதர்களும்

·         தயா

·         புத்தகப்பூங்கொத்து குழந்தைகளுக்கான படக்கதைகள்

·         புத்தகப்பரிசுப்பெட்டி குழந்தைகளுக்கான படக்கதைகள்

·         லட்சத்தீவின் கிராமியக்கதைகள்

·         லட்சத்தீவின் இராக்கதைகள்

·         மீன் காய்க்கும் மரம்

·         மரணத்தை வென்ற மல்லன்

·         பறந்து பறந்து

·         அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

·         இயற்கையின் அற்புத உலகில்

·         பாருக்குட்டியும் அவளது நண்பர்களும்

·         சப்தங்கள் வைக்கம் முகமது பசீர்

·         கண்ணாடி பார்க்கும் வரையிலும் தொகுப்பு

·         மாதவிக்குட்டியின் கதைகள் மாதவிக்குட்டி

·         நட்சத்திரம் வீழும் நேரத்தில்

·         லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ் (கட்டுரைகள்)

·         தாத்தா மரமும் நட்சத்திரப்பூக்களும்

·         கதைகேளு கதைகேளு காக்காவின் கதைகேளு

 

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு

·         சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

·         பயங்களின் திருவிழா

·         சிரிக்க வைக்கச் சில கதைகள்

·         வேம்புத்தாத்தா

 

கட்டுரை நூல்கள்

·         முன்னொரு காலத்தில்

·         நினைவு என்னும் நீள்நதி

·         சாதிகளின் உடலரசியல்

·         எது மருத்துவம்

·         காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

·         வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா?

விருதுகள், பரிசுகள்

·         லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993

·         தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008

·         உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015

·         எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016

·         கலை இலக்கியப் பெருமன்றம் சிறுவர் இலக்கிய விருது – 2016

·         விகடன் விருது சிறுவர் இலக்கிய விருது - 2016

·         கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017

·         நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017

·         தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017

·         கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018

·         2022 ஆம் ஆண்டிற்கான  பால புரஸ்கார் விருது (சாகித்ய அகாடமி) 

இணைய இணைப்புகள்

விக்கிபீடியா பக்கம்

இந்து தமிழ் திசை - நேர்காணல்

குங்குமம் கட்டுரை

குழந்தை இலக்கியம் குறித்த நேர்காணல்

உதயசங்கர் காணொளி உரை