May 27, 2021

எழுத்தாளர் இதயநிலவன்

 தொகுப்பு: கு. ஹேமலதா

            கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகள் கொண்ட கவிஞர் இதயநிலவன் அவர்கள் 26.9.1972 அன்று தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியில் பிறந்தார். பெற்றோர் பொ.நடராசன் - சு.சுப்புலட்சுமி. அவரது இயற்பெயர் ந.செந்தில்குமார். 

            தனது பள்ளிப்படிப்பை தேனி காட்டுநாயக்கன்பட்டியில் முடித்து அஞ்சல் வழி கல்வி மூலம் B.lit., M.A. தமிழ் B.Ed முடித்து இன்று தேனி மாவட்டம் கோட்டூர் அரசு உதவி பெரும் ஆதி திராவிடர் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். மனைவி வா.சுசிலாதேவி. அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். மகள் செ.கார்த்தி யுகமித்ரா.

            ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன் சில காலம் சென்னையில் சுயதொழில் பார்த்து வந்தார். பின் கோவையில் தனது மாமாவின் நிர்வாகத்தில் இருக்கும் கம்பெனியில் பணிபுரிந்து, 1997-2004 வரை அபுதாபியில் வெல்டராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

            1987 ல் தனது பள்ளியில் நடந்த இலங்கை தமிழர்களுக்கான நிதி திரட்டும் நிகழ்வில் முத்தையா என்ற விடுதலைப்புலி வாசித்த கவிதையில் ஈர்க்கப்பட்டு தனது முதல் கவிதையாக இலங்கை தமிழர்களை பற்றி எழுதி தனது எழுத்துலக பயணத்தைத் துவங்கினார்.

            சிறு வயதிலிருந்தே  புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்ட இவர் எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் கதைகளை விரும்பி படித்தாலும் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் எழுத்துகள். அதே போல் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளும் ஈர்த்திருக்கின்றன.

            இவரது முதல் கவிதை தொகுப்பு 'ஜனனம் முதல் சபலம் வரை' 1997 இல் வெளிவந்தது. இவரது படைப்புகள் ராணி, தேவி, பயணம், வாரமுரசு, மகாகவி, அதிர்வுகள், தாமரை போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கிறது.

            1999ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்பு அவரது வாசிப்பு மற்றும் எழுத்துகளில் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட கருத்துகள் இடம்பெற ஆரம்பித்த. அதற்கு முழுமுதற்காரணமாக தேனி சீருடையான் அவர்களைக்  குறிப்பிடுகிறார். அவர் பரிந்துரைத்த நூல்களை வாசித்த பின்பு பொதுவான புத்தகங்களை விடுத்து இடதுசாரி சிந்தனை கொண்ட புத்தகங்களை வாசிக்கத் துவங்கினார்.

            மேலும் இவர் தேனி மாவட்டத்தின் முதல் குறும்பட இயக்குனர். தமுஎகச மற்றும் சில அமைப்புகள் இணைந்து தேனியில் நடத்திய மூன்று நாள் குறும்படத் திருவிழாவில் இயக்குனர் லெனின் அவர்கள் இயக்கிய 'knockout' என்ற குறும்படத்தால் ஈர்க்கப்பட்டு அவர் மனதில் இயக்குனர் ஆகும் உந்துதலில் ஒரே வருடத்தில் 'விசாரணை' என்ற குறும்படத்தை இயக்கி 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் 15 குறும்படங்களில்  நடித்துள்ளார். இரண்டு குறும்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார்.

            சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்களுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்குபெற்றிருக்கிறார். இவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். தற்போது பட்டிமன்ற நடுவராகவும் தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார். பல கவியரங்களில் தலைமையேற்று கவிதை வாசித்துள்ளார்.

            தனது நண்பர் ராஜசேகரின் 'வளர்மதி இன்னிசை குழு'வில் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கூத்து, தெருநாடகங்கள் அரங்கேற்றியுள்ளார்.

            தமுஎகசவின் மாவட்ட துணைத் தலைவராகவும், மாவட்ட துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இரண்டு முறை தேனி கிளை தலைவராகவும், செயலாளர் பொறுப்பிலும் இருந்துள்ளார். தற்போது தமுஎகச - தேனி கிளைச் செயலாளராகவும், தேனி மாவட்டத் தலைவர் பொறுப்பிலும், மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

            கவிதையில் துவங்கிய எழுத்துப் பயணம் சிறுகதை, நாவல் என்று தொடர்கிறது.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதை

1.ஜனனம் முதல் சபலம் வரை (1997)

2.அதுவரை நாத்திகன் (2002)

3.பூர்வகுடி மிருகங்கள் (2018)

4.அதாவது (2018)

சிறுகதை

1.அரிதாரம் (2003)

2.உடைத்தோடல் (2014)

நாவல்

மேநீர்  (2016)

இயக்கிய குறும்படங்கள்

1.விசாரணை (2004)

2.எனில் (2008)

3.Breath (2009)

4.வேள்வி (2011)

5.நிரூபணம் (2013)

6.தமிழன் என்றொரு இடமுண்டு (2016)

பெற்ற விருதுகள்

1.உமாநாராயணன் பதிப்பகம் - ஒளவை நாடகத்தமிழ் விருது.

2.தமிழர் கலை இலக்கிய மையம்,தமிழர் பட்டறை இலக்கிய பேரவை -

எம்.ஜி.ஆர் விருது

3.தமுகஇமேடை -

 1.வளரும் படைப்பாளர் விருது

 2.அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது

4.தமுஎகச, தேனி மாவட்டத்தின் படைப்பூக்க விருது

5. தேனி மைய நூலக வாசகர் வட்டம் - இலக்கியப் பணி சாதனையாளர் விருது

6.கலை இலக்கிய பெருமன்றம், தேனி - சிறந்த குறும்பட இயக்குனர் விருது 7.தேனி கலை இலக்கிய மையம் - சிறந்த நன்னெறி ஆசிரியர் விருது

8.பட்டர்ஃபிளை கல்வி அறக்கட்டளை – தேனி கலை இலக்கிய சாதனையாளர்  விருது

9.அமைதி அறக்கட்டளை – தேனி கல்வி ரத்னா விருது

10.தேனி கலை இலக்கிய மையம் - சிறந்த குறும்பட இயக்குனர்  விருது

11.குவைத் ராஜா மக்கள் சமூக அறக்கட்டளை - தேனி மாவட்டத்தின் சிறந்த படைப்பாளர் விருது

12.மதுரை தேசிய ஆவண, குறும்பட விழா - 2013: சிறந்த 10 படங்களில்  ஒன்றாக 'எனில்' படம் தேர்வு

13.கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 2016ஆம் வருடத்தின் சிறந்த நாவல் இரண்டாம் பரிசினை 'மேநீர்' நாவல் பெற்றது.

14.இதயநிலவன் அவர்களின் இலக்கிய பணிக்கு உறுதுணையாக இருந்ததற்காக - இணையர் சுசிலாதேவிக்கு - உமாநாராயணன் பதிப்பகம் - 'ஆண்டாள்' விருது