May 28, 2021

எழுத்தாளர் கு. அழகிரிசாமி

 தொகுப்பு : பா.கெஜலட்சுமி        

            20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த கு.அழகிரிசாமி பத்திரிக்கையாளர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முக பரிமாணம் கொண்டவர். புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், தொ.மு.சி. இரகுநாதன் ஆகியோர் இவரது சமகாலத்தவர்கள்.

     இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையிலுள்ள இடைச்செவல் என்னும் சிற்றூரில் குருசாமி, தாயம்மா ஆகியோருக்கு மூத்த மகனாக 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி அன்று பிறந்தார்.

        அவரது பள்ளிப்படிப்பு கோவில்பட்டியில் ஏ.வி.பள்ளியிலும், வ.உ.சி.உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். கல்வி, ஓவியம், இசை ஆகியவற்றில் விருப்பம் கொண்டிருந்த அழகிரிசாமி, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆரம்பப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

          அரசுத் தேர்வில் தேர்வாகி, சார்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் சிறிது காலம் பணியாற்றினார் கு.அழகிரிசாமி. இலக்கிய ஆர்வம் உந்தித்தள்ள, அரசுப் பணியைத் துறந்து,  ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், தமிழ்மணி, சக்தி ஆகிய பத்திரிகைகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் இலக்கியங்களையும் மேல்நாட்டு இலக்கியங்களையும் தீவிரமாக வாசித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

            "வர்க்கப் போராட்டத்தை அழகியல் குறையாமல் கலை உணர்ச்சி ததும்ப தமிழில் எழுதிய முதல் படைப்பாளி கு.அழகிரிசாமி தான்" என எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் இவரது கதைகள் குறித்துக் குறிப்பிடுகிறார். அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அனுபவங்கள் போன்றவற்றைக் கருவாகக் கொண்டு எளிய மொழிநடையில் அமைக்கப்பட்டவை கு.அழகிரிசாமியின் கதைகள். குழந்தை உலகத்தின் ஆசைகள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை நுட்பமாக எழுத்தில் வெளிக்கொணர்ந்தவர்.

            1943ஆம் ஆண்டு, தனது இருபதாவது வயதில் 'உறக்கம் கொள்ளுமா?' என்ற இவரது முதல் சிறுகதை ஆனந்தபோதினி இதழில் பிரசுரமானது. 1952-ல் கல்கியின் முன்னுரையுடன் இவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டு, இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

        'இராஜா வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த சிறுகதை. கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாட புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.

        கடிதங்கள் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கடிதங்களைக் கி. இராஜநாராயணன் தொகுத்து, 'அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. பழ. அதியமானைப் பதிப்பாசிரியராக கொண்டு இவரது அனைத்து சிறுகதைகளையும் 'காலச்சுவடு பதிப்பகம்' செம்பதிப்பாக 2011 இல் வெளியிட்டது.

        கு. அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச்சிந்து ஆகிய பதிப்புகள், அவருடைய ஆராய்ச்சித் திறனையும், மொழியாக்க ஆற்றலையும் இலக்கிய உலகுக்குப் பறைசாற்றின.

        1970ல் இவரது 'அன்பளிப்பு' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. முதன்முதலில், தமிழ் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற பெருமை கொண்டவர். இரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் ஈர்த்ததால், அவரின் நூல்களை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர்.

            1952 முதல் 1957 வரை ஐந்து ஆண்டுகள் மலேசியாவில் பணிபுரிந்த போது மலேசிய வானொலியில் முக்கூடற்பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவரான சீதாலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். 1955 இல் சென்னை திரும்பிய அவர் 1960 இல் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

            இறுதியாக, 'சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்த பணியில் தொடர் இயலாமல், தனது 47 ஆவது வயதில் காலமானார் கு. அழகிரி சாமி.

வெளிவந்துள்ள படைப்புகள்

புதினங்கள் 

·         டாக்டர் அனுராதா

·         தீராத விளையாட்டு

·         புது வீடு புது உலகம்

·         வாழ்க்கைப் பாதை

சிறுவர் இலக்கியம்

·         மூன்று பிள்ளைகள்

·         காளிவரம்

மொழிபெயர்ப்புகள்

·         மாக்சிம் கார்க்கியின் நூல்கள்

·         லெனினுடன் சில நாட்கள்

·         அமெரிக்காவிலே

·         யுத்தம் வேண்டும்

·         விரோதி

·         பணியவிட்டால்

நாடகங்கள்

·         வஞ்ச மகள்

·         கவிச்சக்கரவர்த்தி

சிறுகதைத் தொகுப்புகள்

·         அன்பளிப்பு

·         சிரிக்கவில்லை

·         தவப்பயன்

·         வரப்பிரசாதம்

·         கவியும் காதலும்

·         செவிசாய்க்க ஒருவன்

·         புதிய ரோஜா

·         துறவு

கட்டுரைத் தொகுப்பு

·         இலக்கியத்தேன்

·         தமிழ் தந்த கவியின்பம்

·         தமிழ் தந்த கவிச்செல்வம்

·         நான் கண்ட எழுத்தாளர்கள்

இணைய இணைப்புகள்