May 28, 2021

எழுத்தாளர் நா.முத்துநிலவன்

 தொகுப்பு: ஜெ.சக்திபானு

           மனிதகுல வரவாற்றை எழுத இலக்கியச் சான்று தரும் உலகின் ஒரே இலக்கியத் தொகுப்பு, நமது சங்க இலக்கியம் தான். கவிதையில் வடிவம் ஏன் மாறிமாறி வந்தது எனும் எனது ஆய்வுக்கும் அரிய கருவூலம் தமிழரின் பெருஞ்சொத்து. இன்று மட்டுமல்ல இனிவரும் தலைமுறைக்கும் வாழ வழிகாட்டும் பழந்தமிழா் காலப் பெட்டகம். இன்றைய பிள்ளைகள் விரும்பும் வகை இதன் சாரத்தை கொடுக்க வேண்டியது அவசியம்என்று கூறும் எழுத்தாளர். நா.முத்துநிலவன் கட்டுரை, கவிதை, சிறுகதை, பாடல், நாடகம், ஓவியம், இலக்கிய ஆய்வு, வரலாற்று ஆய்வு, இணையத் தமிழ் மேடைப் பேச்சு எனப் பல்வேறு தளங்களில் வலம் வரும் எழுத்தாளர்.

            முத்து பாஸ்கரன் எனும் இயற்பெயா் கொண்ட நா.முத்துநிலவன் வசிப்பது புதுக்கோட்டை நகரம். வே.மு.நாகரெத்தினம்-கோவிந்தம்மாள் இவர்களின் மகனாக மே மாதம் பதினொன்றாம் தேதி 1956 ஆம் வருடம் பட்டுகோட்டையில் பிறந்தார். இவரின் வாழ்க்கை இணையர் மல்லிகா. மகள் இருவர், மகன் ஒருவர். முதுகலைத் தமிழ் இலக்கியம் மற்றும் கல்வியியல் பட்டம் பெற்ற இவர், 35ஆண்டுகள் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணி நிறைவு செய்தவா். எழுதுவது, பேசுவது மட்டுமின்றி, களப்பணியாளராகவும் புதுக்கோட்டையில் செயல்படுபவர்.

            குழந்தைப் பருவத்தில் தந்தையின் காவல்துறைப் பணி மாறுதல் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ஊா் மாறிச் செல்ல இவரது பள்ளிப் படிப்பும் அப்படியே பலப்பல ஊா்களில தொடர, சிறு வயதிலேயே உலக அனுபவக் கல்வியும் இணையப் பெற்றவர். மூன்றாம் வகுப்பு ஆசிரியா்கள் சிபாரிசில் அதிராம்பட்டினம் நூலகத்தில் குழந்தைகள் இலக்கியங்களை தேடித் தேடிப் படிக்க தொடங்கினார். கவிஞரின் தந்தைக்கு, மகனை மருத்துவா் ஆக்குவது நோக்கம். அதனால் 11ஆம் வகுப்பில் வரலாற்றுப் பிரிவில் தமிழ்வழியில் படித்தவரை, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அறிவியல் பிரிவில் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டார். இயற்பியலில் இரண்டு மதிப்பெண்ணில் தோல்வி!   பிறகு 11ஆம் வகுப்புத் தமிழ் மதிப்பெண்னை வைத்து தான் விரும்பிய தமிழ்ப் புலவா் படிப்பில், மாதம் நாற்பதுருபாய் உதவித் தொகை தந்த திருவையாறு அரசர் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து விட்டார். கல்லூரிக் காலத்தில் அனைத்துக் கல்லூரி இலக்கியப் போட்டிகளில் ஏராளமான முதற்பரிசுகளைப் பெற்றார்.

            முத்துப் பேட்டை தா்மலிங்கம் நடத்திய தஞ்சை அமுதம் இதழில் இலக்கியக் கட்டுரைகள், புதுதில்லி சாலை இளந்திரையன் நடத்தி வந்த அறிவியக்கம் மாத இதழில் ஓராண்டு தொடராக வந்த ஒரு காதற் கடிதம்” , மறைமலை அடிகள் நூற்றாண்டை ஒட்டிய போட்டிக்காக எழுதிய மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழ்ஆகியவை கல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள். தமிழியக்க வழக்கத்தின் படியாக நா.முத்துநிலவன் எனும் புனை பெயரில் எழுதத் தொடங்கினார். 45 ஆண்டுத் தோழமையின் தொடர்ச்சியாக, இவருக்குப் பெயர் சூட்டிய  செந்தலை ந.கவுதமன் தலைமையில், இவர் மகள் திருமணம் நடந்தது.

            1975இல் மாநில அளவில் மதுரையில் தமுஎச தொடங்கிய ஆண்டில் இவர் திருவையாற்றில் கிளை தொடங்கி அதன் முதல் செயலரானார். படிப்புக்குப் பிறகு செம்மலா், கல்கி, தினமணிதீக்கதிர், ஜனசக்தி, இந்து தமிழ், கணையாழி மற்றும் இணையம் என படைப்பும் தொடர்கிறது.

            படைப்புகளில் கல்வி மற்றும் தமிழ் இலக்கிய-இலக்கண ஆய்வு அடிப்படையாக அமைந்துள்ளது. இவரது நூல்களில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளேதனித்த வரவேற்பினைப் பெற்று ஐந்தாண்டில். ஐந்து பதிப்புக் கண்டது. . இவரது வாழ்நாள் லட்சியமாக கவிதையின் கதைஎனும் பெருநூலை எழுதிவருகிறார். அடுத்த ஆண்டு வெளிவரும்.

            1978இல் புதுக்கோட்டை வந்தவுடன் தமுஎச கிளையைத் தொடங்கி, முதல் கிளைச் செயலர், மாவட்டச் செயலர், மற்றும் மாநிலப் பொறுப்பு வகித்த இவரது தமுஎச அமைப்புப் பணிகள் இன்றும் தொடர்கின்றன. அறிவொளி இயக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றியதை வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக நினைக்கிறார்.

    புதுக்கோட்டையில் 1991-92 இல் நடந்த அறிவொளி இயக்கத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத புதுமையாக பெண்களுக்கு சைக்கிள் கற்றுத் தரும்  திட்டம் சேர்க்கப்பட்டது. அதில் கவிஞர் முத்து நிலவன் அவர்கள் எழுதிய சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி எனும் பாடல் பிரபலமானது. இது பற்றிய கட்டுரை ஒன்றை டைம்ஸ் ஆப் இந்தியாவில் "If there is a wheel!?" என்று பிரபல ஊடக எழுத்தாளர் பி.சாய்நாத் எழுதினார். அந்தக் கட்டுரை இப்போது கர்நாடக மாநில அரசின் பாடநூல் திட்டத்தில் 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தலைமையில் கணினித் தமிழ்ச்சங்கம்தொடங்கி, அதன் வழி இணையத் தமிழ்ப் பயிற்சிவகுப்புகளை நடத்தி வருகிறார். 2015 இல் புதுக்கோட்டையில் நடந்த "வலைபதிவர் திருவிழாவை கணினித் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.

            புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிர்வாகிகளில் ஒருவராக 3ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். திண்டுக்கல் ஐ.லியோனியின் முக்கியப் பேச்சாளராக, தமிழகத்தின் பெரும்பாலான ஊா்கள், இந்தியாவின் பற்பல முக்கிய நகரங்கள், மும்பை, கொல்கத்தா மற்றும் இலங்கை, சிங்கப்பூா் மலேசியா அரபு நாடுகள், குவைத், மஸ்கட் ஜாம்பியா, சிசிலிஸ் போன்ற நாடுகளிலும் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பேசியிருக்கிறார்.

எழுதிய நூல்கள்

1.          புதிய மரபுகள் (கவிதைத்தொகுப்பு) 1993 மற்றும் 2014

2.          20ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகள், (திறனாய்வு), 1995

3.          நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் (கட்டுரைத்தொகுப்பு), 2003

4.          நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம், 2008

5.          முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே, 2014முதல் 5பதிப்புள்

6.          கம்பன் தமிழும் கணினித்தமிழும், 2014

7.          நீட் தேர்வு, புதிய கல்வி யாருக்காக -2018

8.          இலக்கணம் இனிது, 2021

9.          அறிவொளி மாவட்ட மலர் (தொகுப்பாசிரியர்)-1991

10.        உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு(தொ-ர்)-2015

11         “வீதிகலைஇலக்கியக் கழக 50ஆம் நிகழ்வு மலர்-2019

12         “கவிதையின் கதை” (தமிழ்க் கவிதை வரலாறு- அச்சில்)

பெற்ற விருதுகள் / சிறப்புகள்

•           பாரதிதாசன் விருது (கவிஞர் மு.மேத்தா அவர்களிடமிருந்து)

•    சிறந்த கவிதைத்தொகுப்பிற்கான விருது (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எட்டயபுரம் 1993.

•           கல்கி நினைவு சிறுகதைப்போட்டி விருதுகள் (இரு முறை)

•           கவிதை உறவு அமைப்பின் கல்வியியல்- இளைஞர் நல நூலுக்கான முதல் விருது     (முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே நூலுக்காக) [6]

•           கம்பன் தமிழும் கணினித்தமிழும் (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது- 2016)

            சிறந்த அறிவொளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விருது-1991

            இவரது புதிய மரபுகள்தொகுப்பு, 1995 முதல் 15ஆண்டுக்காலம் மதுரைப்     பல்கலை எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.

            அறிவொளி இயக்கத்திற்காக இவர் எழுதிய சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும்            தங்கச்சிபாடல் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டது.

            1985, ஆம் ஆண்டு ஆசிரியர்-அரசு ஊழியர் (ஜேக்டீ) இயக்கப் போரில் அதிகபட்சமாக (புதுக்கோட்டை) சிறையிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

            தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல் ஆக்கக் குழுவில் 2008, 2018ஆம்    ஆண்டுகளில் முறையே 6, 9ஆம்வகுப்பு ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார்.

இணைய இணைப்புகள்

விக்கி பீடியா பக்கம்

முத்துநிலவன் அவர்களின் வலைப்பூ

சங்க இலக்கியம் குறித்த காணொளியுரை