May 30, 2021

எழுத்தாளர் அ.குமரேசன்

தொகுப்பு : ரா. சண்முகலட்சுமி

    தான் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுக்குப் பகிர்ந்துகொள்வது, சகமனிதர்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வது என்ற கொடுக்கல் வாங்கலில்தான் மனித சமுதாயமே வளர்ந்துவந்திருக்கிறது, வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொடுக்கல் வாங்கலுக்கான கருத்துச் சுதந்திரம் அதை வெளிப்படுத்துவதற்கானது மட்டுமல்ல, பெறுபவருக்குமானது.” இதனை ஒரு கோட்பாடாகவே வரித்துக்கொண்டு எழுதுகிறவர் மூத்த பத்திரிகையாளர் . குமரேசன். கதை, கவிதை, கட்டுரை என எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் சாய்ந்துகொள்பவர்தான் என்றாலும், தனக்கான மையத்தளமாகக் கட்டுரையாக்கத்தில் காலூன்றி நிற்பவர்.

                அறிவியல் எனக்கு பேரண்டத்தைத் தெரிந்துகொள்ளச் செய்தது. இலக்கியம் மானுடத்தைப் புரிந்துகொள்ள வைத்தது,” எனக்கூறும் அ.குமரேசன் உலகமே நம்முடைய வீடு என்ற கருத்தை முன் வைத்து தனது உணர்வுகளையும்  அனுபவங்களையும் சிந்தனைகளையும் கட்டுரை இலக்கியமாக வாசிப்புக் களத்தில் முன்வைக்கிறார். சில நேரங்களில் உணர்வின் அழுத்தத்தைப் பொறுத்து அதனைக் கதை, கவிதை இலக்கியமாகவும் வெளிப்படுத்துகிறார்.  ஊடகக் களச்செயல்பாட்டாளராக, முன்னுக்கு வரும் நிகழ்வுகளுடன் தொடர்புள்ள தகவல்களைத்  திரட்டி எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிவருகிற, இயல்பாகவே அரசியல்/சமூக விமர்சகராகவும் அடையாளம் பெற்றிருக்கிற இவர் ஒரு மொழிபெயர்ப்பபாளருமாவார்.

                 சங்கர ஆறுமுக குமரேசன் எனும் இயற்பெயர் கொண்ட  குமரேசன்  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில்  அருணாசலம்-கோமதி தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். மின்வாரியத் தொழிலாளியான தந்தையின் பணி சார்ந்த இடமாற்றல்களால் பல்வேறு மாவட்டங்களில் வளர்கிற அனுபவம் கிடைக்கப்பெற்றவர்.  இணையரான  ரூபா என்கிற பர்வதலட்சுமி இவரது நினைவில் வாழ்கிறார். இவர்களின்  இரு மகன்களும் ஊடகத்துறையிலேயே இயங்கிவருகின்றனர். தற்போது சென்னை, வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.

            மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது கையெழுத்துப்  பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கி மாணவர்களுக்கு ரகசியமாக சுற்றுக்கு விட்டதையும், பள்ளி பற்றிய ஒரு விமர்சனத்தோடு இருந்த அந்தப் பத்திரிகை எப்படியோ தலைமை ஆசிரியர் எம். அருணாசலம் கையில் கிடைக்க, அவர் அழைத்துப் பாராட்டி ஊக்குவித்ததையும் நினைவுகூர்கிறார்.  அது தனது பத்திரிகைத்துறைக் கனவை வலுப்படுத்தியது என்கிறார். 1985 ல் மதுரையில்செம்மலர்மாத இதழின் பகுதிநேரத் துணையாசிரியராகதீக்கதிர்வளாகத்திற்குச் செல்லத் தொடங்கினார், 1986ல்தீக்கதிர் நாளேட்டின் முழுநேரத் துணையாசிரியராக இணைந்தார். 1993ல் அதன் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டபோது தமிழகத்தின் தலைநகருக்கு வந்தார். அதன் தலைமைச் செய்தியாளராக, பின்னர் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி 2018ல் பணி ஓய்வு பெற்றார். அலுவலகப் பணியிலிருந்து மட்டுமே ஓய்வு. இப்போதும் தொடர்ந்து தீக்கதிரில் எழுதி வருகிறார், செம்மலரின் ஆசிரியர் குழுவில் பங்களித்து வருகிறார்.

            தாய், தந்தை வீட்டுக்கு வரவழைத்த பத்திரிகைகளால் சிறுவயதிலிருந்தே கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படிக்கிற பழக்கம் இருந்தது என்றாலும், தந்தையின் ஒரு நண்பர் வாசிக்கக் கொடுத்த, அமெரிக்க எழுத்தாளர் ஆர்தர் எஸ். கிர்தர் எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  பிரபஞ்ச வரலாறு  புத்தகத்தை வாசித்த பிறகு வாழ்க்கையை அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிற தெளிவு  ஏற்பட்டது.  ஜெயகாந்தனின் படைப்புகள் வழியாக மனிதர்களின் குணநலன்களை புரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. மற்ற படைப்பாளிகளின் ஆக்கங்களைப் படிக்கப்படிக்க சமூக வாழ்வின் பல கோணங்கள், இருண்மைகள், வெளிச்சங்கள் பிடிபட்டன. அந்தத் தொடர் வாசிப்புகளும், மாறுபட்ட தொழில் அனுபவங்களும் இணைந்து ஒரு மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொள்வதில் கைகொடுத்தன என்று கூறுகிற இவருடைய எழுத்துகளில் இந்த உள்வாங்கலின் பிரதிபலிப்புகளைக் காண முடியும்.

             இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, தொடர்ந்து வாசிப்பதிலும், வாக்கியங்கள் என்ன சொல்கின்றன என்று புரிந்துகொள்வதிலும் சிரமம் ஏற்பட்டு, பின்னர் ஆங்கில மூலநூலை வாங்கிவந்து அதன் துணையோடுதான் வாசிக்க முடிந்திருக்கிறது. இந்நிகழ்விற்கு பின்னர் அ.குமரேசன் அவர்களுக்கு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு வளர்ந்தது.

            தீக்கதிரில் அரசியல் விமர்சனங்கள்,  அன்றாடச் செய்திகள், அறிவியல் சார்ந்த  கட்டுரைகள், திரைப்படத் திறனாய்வுகள், புத்தக அறிமுகங்கள், ஆங்கிலக் கட்டுரைகள் தமிழாக்கங்கள் இவற்றில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கிக்கொண்டவர். செம்மலரில் படைப்புகள் தேர்வு, சிறுகதையாக்கம், கட்டுரைகள், பேட்டிகள் என்று பங்களித்து வருகிறார். “தகவல் தொடர்புதான் ஆதியிலிருந்தே மனித சமுதாய வளர்ச்சியின் ஊற்று,” எனக் கருதும் .கு., அதற்கான ஒரு கண்ணாகிய ஊடகத்துறையில் ஒரு மானுடப் பங்கேற்புணர்வோடு தனது முழு நேரப்பணியாக  ஒப்படைத்துக் கொண்டவர்.

            தன் பெயரின் ஆங்கில முன்னெழுத்துகளை  இணைத்து அசாக்  எனும் புனைப்பெயரை ஏற்படுத்திக்கொண்டார். குழந்தைகளுக்கான கதைகளை எழுத முற்பட்டபோதுயே மாமாஎன்ற பெயரை அணிந்துகொண்டார். “பள்ளிகளில் கடைசி மணி அடிக்கிறபோது எந்த சக்தியாலும் தடுக்க முடியாதபடி குழந்தைகள்யேஎன்று கூச்சல் எழுப்புவார்கள். ஒரு விடுதலை முழக்கம் போன்ற அந்த ஒலியையே சிறார் கதைகளுக்கான புனைப்பெயராக்கிக்கொண்டேன்,” என்கிறார்.

            தீக்கதிரின்  ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் பக்கங்களைத் தயாரிக்கும் பொறுப்பை திறம்பட செயல்படுத்தி பல எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தவர். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்புப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். 30 ஆண்டுகளுக்கு மேல் இதழியல் துறையில்  அனுபவம் வாய்ந்தவர்.

            பத்திரிகை சார்ந்து  இயங்குவதால் அன்றைய சமூக பிரச்சினைகளை விமர்சித்தோ விளக்கியோ எழுத, நாள்தோறும் வருகிற செய்திகளையும், அவற்றைப் பற்றிய கருத்துப் பகிர்வுகளையும் வாசிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். தனது சொந்த ரசனைக்கான இலக்கிய வாசிப்பு அதற்கடுத்தபடியாகத்தான் என்கிறார். அன்றன்றைய நிகழ்வுகளைக்கொண்டு எழுதுவதால் கட்டுரைகளே அதிகமாக எழுதியுள்ளார். இலக்கிய உலகத் தொடர்பு விட்டுப்போகாமல் அவ்வப்போது சிறுகதை, கவிதை,  குழந்தைகளுக்கான கதை என்று தனது கணினியில் தட்டச்சுகிறார்.

            சமத்துவ சமுதாய லட்சியத்தின் பிரிக்கமுடியாத பகுதிதான் பாலின சமத்துவம். அதைத் தன்னிலிருந்து தொடங்கிட தன் கட்டுரைகளிலும்,பேச்சிலும் பொதுப்பாலை பயன்படுத்துவதை வழக்கமாக்கி வருகிறார் .உதாரணமாக ஆசிரியன் என்று எழுத வாய்ப்பிருக்குமென்றால் மட்டுமே ஆசிரியை என்றும் எழுதுவார். இல்லையெனில் ஆசிரியர் என்று பாலினப் பாகுபாடின்றி குறிப்பிடுவார் அல்லது ஆசிரியர்கள் என்று பன்மையில் பதிவு செய்கிறார்.அதே போல, மனிதன் எழுந்தான், மனிதன் சாதித்தான் என்றெல்லாம் எழுதுவதில்லை. மனிதர்கள் எழுந்தார்கள், மனிதர்கள் சாதித்தார்கள் என்றே எழுதுகிறார். இது பொதுப்பழக்கத்திற்கு வர வேண்டுமென்று சக எழுத்துத் தோழர்களிடமும் வலியுறுத்துகிறார்.

                1979ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் (தற்போது அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) இணைந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார்.  அமைப்பு சார்ந்த செயல்பாடுகள், இயக்கங்கள்,  போராட்டங்கள் என தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

                கருத்துகளை கூற தகுதியுள்ளவனாக இருக்கிறேனா என என்னை நானே உரசிப் பார்க்கும் உரைகல்லாகவும் எனது எழுத்தைக் காண்கிறேன். தொடர்ந்து எழுதுவது, ஓரளவுக்காவது அதற்கேற்றவனாக என்னைத் தகவமைத்துக்கொள்ளத் தூண்டுகிறது,” என்கிறார். சுயநலத்திலிருந்து பொது நலத்தை நோக்கி நகர வாசிப்பும் எழுத்துமே துணையாக இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.

            தீக்கதிர் அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து அதில் எழுதி வருகிறார். வேறு சில ஏடுகளிலும் இணையத்தளங்களிலும் தொடர்ச்சியாக இவரது கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. “கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், இணையத்தள காணொளி நேரலை வழியாகப் பல்வேறு உரையரங்குகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்கிறார். குறிப்பாக சிறார் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு அவர்களைப் பாராட்டி மகிழ்ந்து ஊக்குவிக்கிறார். ”உண்மையில், குமரேசன் தாத்தா என்று என்னை அழைக்கிற அந்தக் குழந்தைகள்தான் என்னை ஊக்குவிக்கிறார்கள்,” என்று மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் குறிப்பிடுகிறார் .கு.

வெளிவந்த நூல்கள்

  நேரடியாக எழுதியவை

1. சிந்து சமவெளி நாகரிகம்

2. மனிதகுல வரலாறு

3.  ஃபிரடெரிக் எங்கெல்ஸ்

4. ஜோதிபாசு

5. சிபிஎம்

6 ‘பெண்ணே நீ கட்டுரைகள்

7.எதிர்ப்பதம்  (குழந்தைகளுக்கான கதைகள்)

8. சாதிப் பெயரைச் சொல்லக்கூடாதா? (கட்டுரைகள்)

9.சோதிடமும் கடைசிப்பக்கம் கிழிக்கப்பட்ட நாவலும் (கட்டுரைகள்)

10. நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும்

11.சுனாமி

மொழிபெயர்ப்புகள்

1. சோசலிசத்துக்கான இந்தியப் பாதை (மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் பொதுசசெயலாளர் .எம்.எஸ்).

2. மகாத்மா மதநல்லிணக்கம் மதவெறி (பேராசிரியர் பிபின் சந்திரா

3. மதம் -  மக்கள் -  புரட்சி(கியூபா புரட்சி நாயகர் ஃபிடல் காஸ்ட்ரோ (பேட்டி)

4. நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்(பேராசிரியர் மெஹபூப் மதானி)

5.பண்பாடு தத்துவம் அரசியல்(ஆய்வாளர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா)

6. நந்தனின் பிள்ளைகள்(பேராசிரியர் ராஜ்சேகர் பாசு)

7. வஞ்சக உளவாளி(மனித உரிமை வழக்குரைஞர் நந்திதா ஹக்ஸர்)

8.மார்க்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்(பேராசிரியர் பிரபாத் பட்நாயக்)

9.மூலதனம் எழுதப்பட்ட கதை(ஆய்வாளர் மார்ஷலோ முஸ்டோ)

10. மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்( மார்க்சிய ஆய்வாளர் டெரி ஈகிள்டன்)

11.மூலதனம் ஏன் படிக்க வேண்டும்?(பொருளளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா)

12. உலகமயமாக்கல் காலத்தில் ஆங்கிலமும் இதர மொழிகளும் (பேராசிரியர் யு/ஆர். அனந்தமூர்த்தி)

13.மெடிகிளைம் - தெரிந்ததும் தெரியாததும் (எல்ஐசி முன்னாள் தலைவர் ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி)

14.அணு ஒப்பந்தம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?(மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்)

15.வன்கொடுமை தடுப்புச் சட்டம் – 20 ஆண்டுகள

16. பண்பாட்டுத் தளத்தில் இன்றைய போராட்டம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி)

17. இந்தியா - இந்தி - இந்து ராஜ்யம் (சீத்தாராம் யெச்சூரி)

18.வர்க்கப் போராட்டமும் சாதியமும் (ஆய்வாளர், தலித் இயக்கச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே)

சிறாருக்காக சுருக்கி எழுதியவை

1.எண்பது நாட்களில் உலகப் பயணம் (ஜூல்ஸ் வெர்ன் நாவல்)

2.பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்(ஜூல்ஸ் வெர்ன் நாவல்)

3.மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்(வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகம்)

4.மேக்பெத்(வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகம்)

சிறாருக்கான மொழிபெயர்ப்பு

1. சாரி பெஸ்ட் ஃபிரண்ட் (கதைகள் தொகுப்பு)

2.ஒரே உலகம் (கதைகள் தொகுப்பு)

சிறாருக்காக எழுதியது

எதிர்ப்பதம் (வண்ணக்கதிர் கதைகள்)

விருதுகள்

1. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணயர் விருது (மனித உரிமைகளுக்கான ஊடக பணிக்காக(சோக்கோ அறக்கட்டளை)

 2. சிறந்த ஊடகவியலாளர் விருது (எஸ்.டி.பி.இயக்கம்)

 3. சிறந்த இலக்கிய விமர்சன நூல் விருது மேலும் வெளியீட்டகம்

இணைய இணைப்புகள்