May 31, 2021

எழுத்தாளர். அ.வெண்ணிலா

தொகுப்பு: மா ஜெயசுஜா

            நவீன இலக்கிய உலகில் அறியப்படும் முன்வரிசைக் கவிஞர்களில் ஒருவர் அ. வெண்ணிலா. கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறுபத்திரிக்கை ஆசிரியர், பள்ளி ஆசிரியர், ஆய்வாளர், பதிப்பாளர் என பன்முக அடையாளங்களுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார் அ.வெண்ணிலா. பெண்ணிய அடிப்படையிலான கருத்துக்களை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவதும், அன்றாட வாழ்வின் இன்னல்களை படைப்பாக்குவதும் இவரது தனித்துவமாகும்.

            இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டுகாலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

            1971ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சி. அம்பலவாணன் - வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வி பெற்றார். கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றபின் உளவியலில் முதுநிலை, வணிகவியலில் முதுநிலை தொடர்ந்து கல்வியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

            சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினார் . தந்தை திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதால் 12 வயதிலேயே பெரியாரின் புத்தகங்கள் அறிமுகமாயின. வாசிப்பு புதிய வாசல்களைத் திறந்துவிட்டது. இலக்கிய நண்பர்களுடன் இணைந்து நடத்திய "பூங்குயில்" என்ற இலக்கியச் சிற்றிதழில் துணியாசிரியராகப் பணியாற்றினார். பூங்குயில் இதழுக்கான கவிஞர்கள் சந்திப்பு ஒன்றில் கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஏழாண்டுகால நட்பு பின்பு காதலாகி திருமணம் செய்துகொண்டனர்.

            பிள்ளைகள் கவின் மொழி, நிலாபாரதி, அன்பு பாரதி. பிள்ளைகளின் பெயரின் முதலெழுத்தைக் கொண்டு இருவரும் இணைந்து உருவாக்கியது "அகநி" பதிப்பகம் ஆகும். இதன்மூலம் கருத்தாழமிக்க நூல்கள் வெளிவருகின்றன. வந்தவாசியில் குடும்பத்துடன் வசித்து வரும் அ.வெண்ணிலா தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

                  பெண்களின் அக உலகைப் பாசாங்குகளின்றி தனது படைப்புகளில் முன்வைக்கிறார். சமூகத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும், புறச்சூழல்களில் பெண்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் படைப்புகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

            ”25 வயதிற்குப் பிறகு திருமணம், அடுத்தகட்ட வாழ்வியலை நினைக்கும்போதுதான் முதல்முறை பயம் வந்தது. பெண் என்ற இடம் இந்த சமூகத்தில் கொடுக்கக் கூடிய பயம் உருவான நேரம்தான் முதன் முறை கவிதை வந்த நேரமாக பார்க்கிறேன் என்கிறார் அ.வெண்ணிலா.

            வெண்ணிலா அவர்களுக்கு பிடித்த பெண் பாற்புலவர் ஒளவையார். படைப்பினுடைய வேலை வாளேந்திப்போவதல்ல. வாளேந்திப் போவோரை கூர்தீட்டல் செய்யும் வேலையை படைப்பு செய்ய முடியும் என்கிறார். நம்மை நாமே உள்நோக்கி ஆராய்வதற்கு எழுத்து ஊடகமாக இருக்கிறது. வாசிப்பில் மேலோங்கி வந்தால் நம்மைச் சுற்றியுள்ள இந்த முரண்பாடான சமூகத்தை அறியமுடியும் என்கிறார் அ.வெண்ணிலா.

            முதல் கவிதைத் தொகுப்பு "என் மனசை உன் தூரிகை தொட்டு" 1998-இல் வெண்ணிலா - முருகேஷ் திருமணத்தையொட்டி வெளியானது. முதல் சிறுகதை "பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்" கணையாழி இதழில் வெளியானது. இணையர் முருகேஷுக்கு வெண்ணிலா எழுதிய காதல் கடிதங்கள் தொகுக்கப்பட்டு "கனவிருந்த கூடு" என்ற தலைப்பில் வெளியானது. அகநியின் 100-ஆவது வெளியீடாக "ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு" நூல் வரிசையை டாக்டர்.மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுடன் இணைந்து தொகுத்து, வெளியிட்டார். ஒரு பேரரசனின் தனிமைக்குள் பயணிக்கும் சுவாராஸ்யமான புனைவாக "கங்காபுரம்" நாவஇனை எழுதினார்.

            கி.ராவின் கதைசொல்லி மற்றும் புத்தகம் பேசுது இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பன்னாட்டு பெண் எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 2011 ஜனவரியில் புதுதில்லியில் நடைபெற்ற எழுத்தாளர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.

            "சகுந்தலாவின் காதலன்" என்ற திரைபடத்தில் வசனகர்த்தாவாகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைகள்

1.என் மனசை உன் தூரிகை தொட்டு. 1998

2. நீரில் அலையும் முகம். 2000

3. ஆதியில் சொற்கள் இருந்தன.2002

4. இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம்.2005

5.கனவைப்போலொரு மரணம்.2007

6. இரவு வரைந்த ஓவியம்.2010

7. துரோகத்தின் நிழல்.2012

8. எரியத்துவங்கும் கடல்.2014

கடிதம்

கனவிருந்த கூடு.2000

கட்டுரைகள்

1. பெண் எழுதும் காலம்.2007

2. ததும்பி வழியும் மௌணம்.2014

3. கம்பலை முதல்.2015 (டாக்டர். மு.ராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து)

4. தேர்தலின் அரசியல்.2016

5.அறுபடும் யாழின் நரம்புகள்.2017

6. எங்கிருந்து தொடங்குவது.2017

7. மரணம் ஒரு கலை.2018

சிறுகதைகள்

1. பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்.2005

2. பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்.2013

3. இந்திரநீலம்.2020

ஆய்வு

தேவரடியார் :கலையே வாழ்வாக,2018

நாவல்கள்

1. கங்காபுரம்.2018

2. சாலாம்புரி,2020

தொகுத்த நூல்கள்

1.வந்தவாசிப்போர் - 250- 2010 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இனணந்து,)

2. நிகழ்முகம்.2010

3. மீதமிருக்கும் சொற்கள்.2015

4.காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது.2015

5. கனவும் விடியும்.2018

செம்பதிப்பு

1.இந்திய சரித்திரக்களஞ்சியம். 8 தொகுதிகள்.2011

2.ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு, 12 தொகுதிகள்-2019 (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து)

விருதுகள், பரிசுகள்

1. சிற்பி அறக்கட்டளை விருது.

2. கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது.

3. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது.

4. ஏலாதி அறக்கட்டளை விருது.

5. கவிஞர் வைரமுத்து வழங்கும் கவிஞர் தின விருது.

6. திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி-2005 விருது.

7. சென்னை புத்தகக் கண்காட்சி-2005 ஆம் ஆண்டில் இயக்குனர் பார்த்திபன் வழங்கிய சிறந்த படைப்பாளி விருது.

8. நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2005இல் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது.

9. தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான விருது-2008

10. செயந்தன் நினைவு கவிதை விருது-2010

11.பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத்தொகுப்பிற்காக தமுஎகச புதுமைப்பித்தன் விருது-2013

12. கங்காபுரம் நாவலுக்காக கோவை கத்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் நினைவு விருது

13. சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியின் படைப்பூக்கத் தமிழ் விருது.

14. அவள் விகடனின் இலக்கிய விருது.

15. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது.

இணைய இணைப்புகள்