May 31, 2021

எழுத்தாளர். கி.ராஜநாராயணன்

தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்

            என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்து விடவேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்என்று கூறிய கி.ரா. அவர்கள் தன் எளிமையாக எழுத்தின் மூலம் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டவர்.

            கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் கிராமத்தில் 16-9-1922 அன்று திரு. ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம் - திருமதி. லட்சுமி அம்மாள் தம்பதியரின் 5வது மகனாகப் பிறந்தவர் கி.ரா. என்று இலக்கிய உலகில் அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணன் அவர்கள்.  அவரின் துணைவியார் கணவதி அம்மாள். இரண்டு மகன்கள்.


            கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் புகழப்படும் கி.ரா. அவர்களின் முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜர் என்பதாகும்.

            மழைக்காகத்தான் நான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன். அப்போதும்கூட நான் மழையைத்தான் பார்த்துக்கொண்டு நின்றேன்என்று சொல்லும் கி.ரா. அவர்கள் ஏழாம் வகுப்பு வரையே படித்தவர். இருப்பினும் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புற இலக்கிய மதிப்பீட்டுத் துறையின் இயக்குநராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார் என்பது அவரின் இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

            கி.ரா. அவர்கள் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சிறந்த கதைசொல்லி. நல்ல இசைஞானம் வாய்க்கப் பெற்றவர். வட்டார வழக்கு மொழியில் தம் படைப்புகளைப் படைத்து, தமிழ் இலக்கியத்தில் அதற்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர். நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர்.

            அவரின் சொந்தம்என்ற சிறுகதை கு. அழகிரிசாமி அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய சக்தி இதழில் சொந்தச்சீப்புஎன்ற பெயரில் முதன்முதலாக வெளிவந்தது. ‘கதவு’ ‘மாயமான்போன்ற சிறுகதைகள் பரவலான வரவேற்பைப் பெற்றவை.

            இவரது கதவு என்ற முதல் சிறுகதை தொகுப்பிற்கு, தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின் முதல் பரிசு கிடைத்தது. 1986இல் வானொலி நாடக விழாவில் ஒலிபரப்பப்பட்ட இவரது முரண்பாடுகள்கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

            இடைசெவலில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கிய கி.ரா. அவர்கள் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.  

            இறுதிக் காலம் வரை எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த கி.ரா. அவர்கள் தனது 97வது வயதில் அண்டரெண்ட பட்சிஎன்ற குறுநாவலை தனது அழகான கையெழுத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு ªய்யப்பட்டுள்ளன.

            புகைப்படக் கலைஞர் இளவேனில் அவர்கள் தான் எடுத்த கி.ரா.வின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து, 2003இல் பாண்டிச்சேரியில் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார்.

            தன் இறுதிக் காலத்தில் பாண்டிச்சேரியில் வசித்து வந்த நிலையில் 17-5-2021 அன்று தனது 99ஆவது வயதில் இயற்கை எய்தினார். பாண்டிச்சேரி அரசால் தக்க மரியாதையுடன் தொடங்கி வைக்கப்பட்ட அவரின் இறுதி ஊர்வலம் இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் முடிவுற்று, நல்லடக்கம் நடைபெற்றது.

            மனுஷனோட வாழ்க்கையை யார் மதிப்பீடு பண்ணமுடியும். அப்படி மதிப்பீடு பண்ணிட்டா சொல்லவே விஷயமிருக்காதே. மனுஷ வாழ்க்கை மட்டுமில்ல. எதையும் மதிப்பீடு  பண்ண முடியாது. ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம். எவனாவது ஒருத்தன் வந்து அத தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான். எது நிஜம், எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்...’

வாழ்க்கையைப் பற்றிய அவர் மதிப்பீடு இதுதான்.

பொறுப்புகள்

கதை சொல்லி என்ற காலாண்டு இலக்கிய இதழின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1998 முதல் 2002 வரையில் சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

படைப்புகள்

அகராதி

கரிசல் வட்டார வழக்கு அகராதி

சிறுகதை தொகுப்புகள்

கன்னிமை

மின்னல்

கோமதி

நிலைநிறுத்தல்

கதவு

பேதை

ஜீவன்

நெருப்பு

விளைவு

பாரதமாதா

கண்ணீர்

வேட்டி

கரிசல் கதைகள்

கி.ரா. பக்கங்கள்

கிராமிய விளையாட்டுகள்

கிராமியக் கதைகள்

குழந்தை பருவக் கதைகள்

கொத்தைப் பருத்தி

புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்

பெண் கதைகள்

பெண் மனம்

வயது வந்தவர்களுக்கு மட்டும்

கதை சொல்லி

மாயமான்

அப்பாபிள்ளை அம்மாபிள்ளை

பெருவிரல் குள்ளன் - சொல்கதை (குழந்தைகளுக்கானது)

குறுநாவல்கள்

கிடை

பிஞ்சுகள்

நாவல்

கோபல்ல கிராமம்

கோபல்லபுரத்து மக்கள்

அந்தமான் நாயக்கர்

கட்டுரை

ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?

புதுமைபித்தன்

மாமலை ஜீவா

இசை மகா சமுத்திரம்

அழிந்துபோன நந்தவனங்கள்

கரிசல் காட்டுக் கடுதாசி

கி.ரா. கடிதங்கள்

கி.ரா. கட்டுரைகள்

தொகுதி

நாட்டுப்புறக் கதை களஞ்சியம்

தமிழ்நாட்டு நாடோடி கதைகள்

தமிழ் கிராமியக் கதைகள்

தாத்தா சொன்ன கதைகள்

திரைப்படம்

கிடை என்ற சிறுகதை ஒருத்திஎன்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

கரண்ட் என்ற சிறுகதை இந்தி மொழியில் கரண்ட் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

தமிழக அரசின் விருது - 1965

தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது - 1971

இலக்கியச் சிந்தனை விருது - 1979

சாகித்ய அகாடமி விருது - 1991

மா.சிதம்பரம் விருது - 2008

தமிழ் இலக்கியத் தோட்டம் - 2016

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய சாதனை விருது

மனோன்மணியம் சுந்தரனார் விருது - 2016 - 2017

இணைய இணைப்புகள்

கி.ரா. நூல்கள்

விக்கி பீடியா பக்கம்

விகடன் நேர்காணல்

கி.ரா.குறித்த பிபிசி கட்டுரை