Jun 1, 2021

எழுத்தாளர் பாவெல் பாரதி

தொகுப்பு : கு. ஹேமலதா     

            தொல்லியல், மானிடவியல், நாட்டாரியல் என பன்முகத்தன்மை கொண்ட ஆய்வாளர் பாவெல் பாரதி அவர்களின் இயற்பெயர் ப.மோகன் குமாரமங்கலம். இவர் 15.04.1976 இல் தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்தார். இவரும், இவருடைய சகோதரர்  பலதண்டாயுதமும்  இரட்டையர்களாகப் பிறந்தார்கள். பெற்றோர் மு.பரந்தாமன் - பேச்சியம்மாள்.

            தமிழில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து, கல்லூரி பேராசிரியருக்கான NET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர் தற்போது தேனி மாவட்டம் முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) செய்து  வருகிறார்.

            மனைவி மோ.சரளா தேனி மாவட்டக் கருவூலத்தில் உதவிக் கருவூல அலுவலராக பணிபுரிகிறார். குழந்தைகள் கிராம்சி பாரதி, சாவேஸ் பாரதி.

            கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருந்த இவரது தந்தையின் வழிகாட்டலும், இடதுசாரி பின்புலமுள்ள குடும்பச் சூழலும் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை  ஏற்படுத்தியது. ஜனசக்தி, தீக்கதிர், தாமரை, செம்மலர், புதுப்புனல், சோவியத் நாடு, மாஸ்கோ பதிப்பக வெளியீடுகள் போன்ற பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் மூலம் வாசிப்பு வசப்பட்டது. தனது தந்தையின் ஊக்குவிப்பில் ஒன்பதாவது படிக்கும் பொழுது 'தாய்' நாவல், தலைவர்களின் வரலாறுகள், ரஷிய நாவல்கள் படிக்க என இவரது வாசிப்புத் தளம் விரிவடைந்தது.

            ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி மாணவர்களுக்கான அனைத்திந்திய பாலர் பெருமன்றத்தில் YPI ( Young Pioneers of India ) கூடலூர் நகரச் செயலாளராகவும், சகோதரர்  பாலதண்டாயுதம் (வழக்கறிஞர்) உத்தமபாளையம் தாலுகா செயலாளராகவும் பொறுப்பேற்று பள்ளி மாணவர்களை அமைப்பாய் திரட்டி ,வாசிப்பு, கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் கலை இலக்கியப் பண்பாட்டுப் பணிகளில் அறிமுகமும் ஆர்வமும் ஏற்பட்டது.

            1999 ஆம் ஆண்டு மும்பை இந்திராகாந்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (IGDR) அன்றைய பேராசிரியராக இருந்தவரும், தற்போது கேரள அரசின் திட்டக்குழு துணைத்தலைவருமாக இருப்பவருமான V.K.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் தேனி மாவட்டம் கோகிலாபுரத்தில் ஒரு மாத காலம் நடைபெற்ற 'கிராமப்புற விவசாய நிலை' குறித்த கள ஆய்வில் கலந்து கொண்ட அனுபவமும்,அக்கள ஆய்வில் பங்கெடுத்த ஆய்வாளர்களின் நட்பும், கள ஆய்வு நெறிமுறைகளையும் சமூகம் சார்ந்த புரிதல்களையும் இவருக்கு வழங்கியது.

            1999 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியேற்று ஆசிரிய இயக்கத்தில் தேனி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியதோடு தோழர் இதயகீதன் அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்தார்.

            இவர் பொறுப்பில் 2007 ஆம் ஆண்டு கூடலூரில் நடத்திய பிரம்மாண்டமான ஜீவா நூற்றாண்டு நினைவுக் கலை இரவும், 2010 ஆம் ஆண்டு த.மு.எ.க.ச ஆசிரியர் கிளைச் செயலாளராக இருந்து, மறைந்த தோழர் இதயகீதன் வழிகாட்டலில் சாகித்ய அகாடமியோடு இணைந்து நடத்திய 'படைப்பாளிகளுடன் ஒரு பொன் மாலைப் பொழுது' நிகழ்வும் குறிப்பிடத்தக்கவை.

            2008 ஆம் ஆண்டு த.மு.எ.சவும் செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் நடத்திய சங்க இலக்கியம் குறித்த பத்து நாள்கள் பயிலரங்கம் மற்றும் த.மு.எ.க.ச நடத்திய பயிலரங்கங்களும், மதுரை பரமன் அவர்களின் கருத்துப்பட்டறை பதிப்பகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வுகளும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் இவருக்கு பல புரிதல்களை வழங்கியதாக குறிப்பிடுகிறார்.

            2004 - 2007 ஆம் ஆண்டுகளில் தோழர் ஜெ.முருகனுடன் இணைந்து "புதிய ஆசிரியன் எழுச்சிப்பாசறை" என்ற அமைப்பை உருவாக்கி, கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள ஆசிரியர்களிடம் நூல்களைக் கொடுத்து வாசிக்க வைத்தும் பின் கூட்டம் நடத்தி வாசித்தவற்றை விவாதிக்கச் செய்தும் வாசகர் வட்டம் நடத்தினார் மோகன். அதில் தேர்ந்த வாசிப்பாளர்களாகவும், செயல்பாட்டாளர்களாகவும் உருவான பலர் தற்போது பல்வேறு அமைப்புகளில் மாவட்ட மாநில அளவில் முக்கிய நிர்வாகிகளாகப் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

            தமிழ்நாட்டில் ஏறுதழுவுதலுக்கு சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்ட பொழுது, அறிவுத்தளத்தில் ஜல்லிக்கட்டு குறித்த புரிதல் இல்லாத நிலையில் அது குறித்து பேராசிரியர்கள் பெரியசாமிராஜா, இரத்தினக்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு தொகுப்பு நூல் வெளியிட முடிவு செய்து 'ஏறுதழுவுதல் - சல்லிக்கட்டு - தொன்மை, பண்பாடு, அரசியல் என்ற நூலை தொகுத்து 2016 இல்  வெளியிட்டார். அவரது சகோதரர் பாலதண்டாயுதம் அவர்கள் எழுதிய 'சல்லிக்கட்டுக்குத் தடை - தீர்ப்பும் தீர்வும் - ஒரு மீளாய்வு என்ற நூலையும் வெளியிட்டார்.

            சல்லிக்கட்டு பற்றிய தொன்மை வரலாறு மட்டுமின்றி அதைத் தடை செய்வதன் அரசியல் பின்னணி, ஏறுதழுவுதல் துவங்கி சல்லிக்கட்டு வரை ஏற்பட்ட உருமாற்றங்கள், சாதி, மத, வட்டாரங்கள் சார்ந்து சல்லிக்கட்டினை எவ்வாறு அணுகினர் என ஒரு விரிவான கட்டுரையாக  அமைந்திருக்கும் இந்நூலில் பெருமாள்முருகன், சு.வெங்கடேசன் போன்றவர்களின் கருத்துக் குறிப்புகளையும் பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் ஒன்பதாம் வகுப்பில் இடம்பெற்ற 'ஏறுதழுவுதல்' பாடத்தின் தரவு நூலாகவும் இந்நூல் குறிப்பிடப்பட்டுள்ளது.

            2017 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 'சிந்துவெளி முதல் கீழடி வரை ' என்ற தேசியக் கருத்தரங்கில் பாவெல் பாரதி  வாசித்த 'கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும்' என்ற ஆய்வுக் கட்டுரை அரங்கத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. பின் அக்கட்டுரை 2018 ஆம் ஆண்டு தனி நூலாக வெளிவந்தது. 'இராஜபாளையம் பீமாராஜா ஆனந்தியம்மாள் அறக்கட்டளை'யின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூல் பரிசு பெற்றது. இந்நூல் மதுரைக்  கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் பாடப்பிரிவின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தின் வழியாக நாம் அறிமுகம் பெற்ற கண்ணகி பயணித்த நெடுவழிப் பாதையை பல ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் ஆராய்கிறது இந்நூல்.

            பல இணைய இதழ்களில் நூல் திறனாய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன.

            த.மு.எ.க.ச. வின் கலை இலக்கியப் பணியோடு 'வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம்' என்ற அமைப்பை நிறுவி தொல்லியல் கள ஆய்வுகள் செய்து தொல்லியல் தரவுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறார். வைகை வெளியில் கள ஆய்வுகள் மூலம் புதிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு முதன் முதலாக வழங்கப்பட்ட தொல்பொருட்கள் இவரது கள ஆய்வில் கிடைத்தவைதான் என்பதைப் பெருமை கொள்ளும் விஷயமாக குறிப்பிடலாம்.  

            தொல்லியல், மானிடவியல், நாட்டாரியல் ஆகிய ஆய்வுப் புலங்கள் சார்ந்து தமிழ்ச் சமூகப் பண்பாடு குறித்த புரிதல்கள்,  பண்பாட்டு அசைவுகள், பண்பாட்டு மீள் வாசிப்பு மற்றும் காலனியம் கட்டமைத்த சமூக உருவாக்கம் குறித்த பின்காலனிய மறுவாசிப்பு ஆகியவற்றை   முதன்மையான ஆய்வுத்தளமாக கொண்டு செயல்படுகிறார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் ஆசிரியர் கிளைச் செயலாளர், தேனி மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர், மாவட்டத்தலைவர்  போன்ற பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 

            தற்போது தமுஎகச மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட சட்டச் செயலாளராகவும், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகத்தின் நிறுவனராகவும் இருக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

* ஏறுதழுவுதல் - சல்லிக்கட்டு - தொன்மை,பண்பாடு,  அரசியல் ( தொகுப்பாசிரியர்) (2016)

*கண்ணகி கோவிலும் வைகைப் பெருவெளியும் (2018)

சர்வதேச ஆய்விதழ்களில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள்

* பண்பாட்டு நோக்கில் ஏறுதழுவல்

* தமிழர் சமயமரபில் கிண்ணிமங்கலம் - துலங்கும் தொல் அறிவர் மரபு.

* வைகை வெளியின் பெருங்கற்சின்னங்கள்

நூலாக்கம்பெற்ற ஆய்வுக் கட்டுரைகள்

* தமிழ்ச்சமூக வேர்களைத்தேடி...

* குற்றப்பழங்குடிச் சட்டம் ஒரு தப்பெண்ண வரலாறு.

*  கீழைத்தேயப் பார்வையில் சங்க இலக்கிய ஆறலை கள்வர் குறித்த சொல்லாடல்கள்.

*  மாடல்ல மற்றையவை - ஏறுதழுவல் தோற்றமும் இருப்பும்.

*  இந்தியத் தொல்லியல் மரபு- கீழடியை முன்வைத்து.

* காலனிய உற்பத்தியின் மறு உற்பத்தி

* காலனிய வளமையின் அரசியல் - குற்றச்சமூகங்களை முன்வைத்து.

தேசிய கருத்தரங்கம் மற்றும் ஆய்வரங்கங்களில் உரையாற்றியுள்ள தலைப்புகள்

பெருங்கற்சின்ன வழிபாடு - பெருங்கல் முதல் சிறுகல் வரை.

* மதுரை எட்டு நாட்டில் ஆசிவகம்,

* மதுரை நகரும் சமூக உருவாக்கமும்,

* பின்காலனியப் பார்வையில் சி.சு.செல்லப்பா கதைகள்.

* பண்மைப் பொருண்மை நோக்கில் கண்ணகி வழிபாடு

* தொல்லியலும் வரலாறும்

* தமிழியின் நெடும்பயணம்

* சங்க இலக்கியமும் பெருங்கற்காலப் பண்பாடும்

ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

1. வராக நதிக்கரையில் அரிதான குழிக்குறி கல்திட்டை.

2. கம்பம் பள்ளத்தாக்கில் புதிய கற்காலக் கருவிகள்.

3. வைகை வெளியில் பெருங்கற்சின்னங்கள்.

பெற்ற விருதுகள்

1.கலை இலக்கிய மேடை அமைப்பின்  'படைப்பாக்க மேன்மை விருது' 2018

2.தமிழகத்தின் சிறந்த கட்டுரை நூலுக்கான  'ஆனந்தாஸ் பீமாராஜ இலக்கிய விருது' 2018.

3. பாரதி புத்தகாலயம் வழங்கிய ' சிறந்த புத்தக அலமாரி' விருது 2020 .

4. திண்ணை அமைப்பின் ' அக்கினிச் சிறகு'   விருது.' 2015.

இணைய இணைப்புகள்