Jun 12, 2021

எழுத்தாளர் சாரதி

தொகுப்பு : நாறும்பூ நாதன்

      இருப்பிற்கும், இருப்பின்மைக்கும் இடையே நிழலாடுகிறது வாழ்க்கை. கூடடையும் பறவைகளின் வாழ்விற்கும், குகை தேடியலையும் விலங்குகளின் கூட்டத்திற்கும் கூட இப்படியான துக்க நிழலே  படிந்து விரிகிறது.. எவரின் நடமாடும் நிழல் நாம்? அல்லது எதன் பிம்பம் நாம் எனக் கேட்ட கதைமரபின் தொடர்ச்சியில் தமிழ்க் கதைக்காரர்கள் அந்த நுன்மைப் புள்ளிகளை எழுதவே விடாது முயற்சி செய்கிறார்கள். அதுதான் எழுத்தின் சூட்சமம். வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் கதையின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. அதனை தன் சொல்லால் கதையாக்குகிறான் படைப்பாளி.

சாரதி. இவரது பெயர் லி.பார்த்தசாரதி, கோவில்பட்டி ஊரில் ஒரு தண்ணீர் பஞ்ச காலத்தில், முத்தானந்தபுரம் தெருவில், கம்மாவர் பேங்க் இரட்டைக்குழாய் தண்ணீர் டேங்க்குக்கு எதிரிலுள்ள வீட்டில், அரசு உத்தியோஸ்தராக கடைசிக்கு சற்று முந்தைய பதவியான சாலை ஆய்வாளரான திரு. மு.லிங்கராஜ், ஜெகநாதம் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1960 இல் பிறந்தார். இவரது மனைவி உஷா. வீட்டிற்கு வரும் எவருக்கும் புன்முறுவலோடு உணவளித்து சந்தோசப்படுபவார். இவரது ஒரே மகள் அபிலதா பிசியோதெரபி டாக்டர் பட்டம்  பெற உள்ளார்

சாரதி இயல்பிலேயே சிறுவயது முதலே, தான் செய்த தப்புக்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிக்க, பொய்யான கதை என்று யாருக்கும் தெரியாமலேயே அதீதமாக பேசி எளிதில் நம்ப வைத்துவிடுவார். சில சமயம் மாட்டியும் கொள்வார்.  இப்படித்தான் நிறைய கதைகள் கெட்டுவார். சிறுவயதிலேயே  (மூன்றாம் வகுப்பு) மாரீஸோடு அவன் வரையும் அழகிய ஓவியத்திற்காகவும், அணில், முயல், வாண்டுமாமா, இரும்புக்கை மாயாவி, அம்புலி மாமா இப்படியான புத்தகங்களுக்காகவும் நிழல்போல், அவனை பின் தொடர்ந்தார். கோவில்பட்டியில் ன்பதுகளில் எழுந்த கலை இலக்கிய பேரெழுச்சியில் சங்கர், மாரீஸ், நாறும்பூ, தமிழ்ச்செல்வன், அப்பணசாமி, கோணங்கி, அப்பாஸ், ராஜி, சிவசு...இப்படி நண்பர்களோடு, அன்றைக்கான உலக இலக்கியங்களையும், ருஷ்ய இலக்கியங்களையும் கோவில்பட்டி இலக்கிய ஆளுமைகள்  ஜோதிவிநாயகம், கி.ரா, பூமணி, தேவதச்சன், பால்வண்ணம், சமயவேல், கெளரிஷங்கர்.. இவர்களோடு கோவில்பட்டி நகர வீதிகளில் ஏதோ ஒரு டீ கடை முன்போ, சாமியார் மடத்திலோ, காந்தி மைதானத்திலோ, கதிரேச மலையிலோ, ஒரு தோழர் வீட்டிலோ, தெருமுனையில் உள்ள குப்பைத் தொட்டி அருகிலோ, இரவோ,பகலோ, நடுச்சாமமோ, எந்த நேரத்திலோ….ஒரு கடுமையான விவாத வார்த்தைகள், கதைகளிலுள்ள உணர்ச்சி ததும்பும், அறிவார்த்தமான நுட்பங்களையும், அதிசயங்களையும், யாரும் அதுவரை சொல்லாத ஆச்சரியமான வார்த்தைகளாய்காற்றின் திசையெங்கும் பரப்பி விடுவார்கள். யார் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட அபூவர்வமான கதையை எழுதி அந்த இலக்கியக் கூட்டத்தில் ஆச்சரியப்படுத்துவார் என்று யாருக்கும் தெரியாது. அப்படியொரு சூழலில்தான் நண்பர்களோடு எழுத ஆரம்பித்தார் சாரதி.

கோவில்பட்டி நண்பர்கள் கெளரிஷங்கர், நடிகர் சார்லி, நக்கீரன் துரை, திடவை.பொன்னுச்சாமி, முருகன், மாரீஸ், சங்கர், நாறும்பூ இவர்களோடு இணைந்து தர்சனா நிஜ நாடக இயக்கத்திலும், பின்னர் தமிழ்செல்வன் தலைமையில் கோணங்கி, உதயசங்கர், அப்பணசாமி, நாறும்பூநாதன், திடவை. பொன்னுச்சாமி, கு.ராமசுப்பு, இப்படி எழுத்தாளர் நண்பர்களுடன் இணைந்து சிருஷ்டி நாடகக்குழு, தமிழகம் முழுக்க நூறு இடங்களுக்கு மேல் தொடர்ந்த இயக்கத்தில் உற்சாகமாக பங்கேற்றுள்ளார். கோவில்பட்டியில் பிக்காஸோ நூற்றாண்டு ஓவியக் கண்காட்சியும், கார்டூன்ஸ் கண்காட்சியும், முதல்முதல் கவிதைக்காட்சியும், யுத்த எதிர்ப்பு இயக்க கண்காட்சி….. என நண்பர்களோடு இணைந்து பயணித்துள்ளார். பிற்காலத்தில் நாடக இயக்கத்தை பட்டறையாக தோழர்.பாலச்சந்தருடன் இணைந்து பத்தாண்டு காலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல நகரங்களில் வழி நடத்தி நாடக அமைப்புகளை உருவாக்கினார்.

 இவர் அரசுப்பணியில் ஊரக வளர்ச்சித்துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தில் நீண்ட காலமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் கோவில்பட்டி வட்டத் தலைவராகவும் தொடர்ந்து பயணப்பட்டு பல முக்கிய போராட்டங்களில் தலைமை தாங்கி ஊழியர்கள் மத்தியில் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, பின் ஓய்வு பெற்றார்.  இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டசெயற்குழு உறுப்பினராகவும், கோவில்பட்டி கிளையை தற்போது வழிநடத்திச் செல்பவருமாவார்.


சாரதி எண்பதுகளில் இருந்து தமிழின் தேர்ந்த படைப்பாளிகளின் கூடவே பயணித்தவர்.. இத்தனை நாள் அவர் எழுதாமல் இருந்ததே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. "கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி புல்வெளி" அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு... கதைகளை வாசிக்கிற வாசகனுக்கு இது முதல் தொகுப்பின் கதைகளைப் போல தென்படாமல் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் கதைகளைப்போலத் தோற்றம் பெறுவதற்கு மிக முக்கியமான காரணம் கதையாடாலின் புழங்கு மொழிதான். புதிய சொற்களால் கட்டி எழுப்பப்பட்ட கதைத் தொகுப்பு இது. ஒரு தொகுப்பில் பதினைந்து கதைகளும் அதனளவில் முழுமை பெற்றதாகவும் வேறு வேறு மொழிதலோடும் நிகழ்த்தப்படுவது எப்போதாவதுதான் நிகழ்கிறதுஇந்த தொகுப்பின் கதைகள் அதனளவில் தனித்தே வெளிப்படுகின்றன.

 இவர் தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என தனது இலக்கியப் படைப்பில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார்.

வெளிவந்திருக்கும் நூல்

கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி

இணைய இணைப்புகள்