Jun 12, 2021

எழுத்தாளர் நா.வே. அருள்

தொகுப்பு : ஜெயஸ்ரீ பாலாஜி

            "சமூகத்தின் நலனுக்காக எழுத்தாலான தேர் இழுக்கப்படுகிறது. அந்த தேரை வேடிக்கை பார்ப்பவனாக இல்லாமல். தேரை இழுத்துச் செல்பவர்கள் மத்தியில் என்னுடைய கரங்களும் அதில் உள்ளது" எனக்கூறும் எழுத்தாளர் நாரேரிக்குப்பம் வேணுகோபால் அருள், விழுப்புரம் மாவட்டம் நாரேரிக்குப்பத்தில் மார்ச் 7, 1960 இல் பிறந்தார். நாரேரிக்குப்பம் ஆரம்ப நிதியுதவி பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரையிலும், இரட்டணை மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரையிலும், செய்யாறு அரசினர் கலைக்கல்லூரியில் எம். காம் வரையிலும் படித்துள்ளார்.

            நா. வே. அருள் அவர்களின் மனைவி ஹேமாவதி எம்., எம்.ஃபில், - சென்னை அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், மகன் அருள்பாரதி பி., எம்.எஸ்.சி (பிக் டேட்டா) கனடாவிலும், மருமகள் விஜய்தா வாசன், பி., பி.எஸ்.சி கனடாவிலும் பணிபுரிகின்றனர்.                                        பள்ளிக்காலத்திலேயே எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதுதனது ஒன்பதாம் வகுப்பில் விழுப்புரம் மாவட்ட அளவில் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்1983 இல் நியூ டெல்லி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் பணி புரிந்துள்ளார். அங்கே இருந்த போது "அருவி" என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியுள்ளார். 1985 இல் ஆக்ரா பாரத ஸ்டேட் வங்கியில் பணி, 1989 சென்னை பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்திற்கு பணிமாற்றம் என 2019 ஆண்டு சிறப்பு நிலை அசோசியேட்டாக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

            இவரது முதல் படைப்பான தினமலரில் "பாமரவாசி" என்று சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து செம்மலர், ராணி வார இதழ், சாவி வார இதழ், வாசுகி இதழ், கல்கி வார இதழ், இனிய உதயம், வண்ணக்கதிர் (தீக்கதிர்),  ஆனந்த விகடன், பெண்ணே நீ, மகளிர் சிந்தனை, இளைஞர் முழக்கம், வெண்மணித் தீ, தினமணி, மக்கள் வீதி, மணல் வீடு, புத்தகம் பேசுது, பேசும் புதிய சக்தி போன்ற பல பத்திரிக்கைகளில் சிறுகதை மற்றும் கவிதைகளுக்கு பரிசுகள் வென்று தனது பேனாவிற்கு வலிமை கொடுத்துள்ளார். மேலும் அனைத்திந்திய வானொலி நிலையம் சென்னை மற்றும் புதுச்சேரியில் கவிதைகள் வாசித்துள்ளார். பொதிகை, ஜெயா, வின் ஆகிய தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.

            சாகித்ய அகாடமியின் உலக கவிதை தினத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் தமிழ் பிரதிநிதியாக மூன்று தமிழ் கவிதைகளை வாசித்து, தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

            1989 ஆம் ஆண்டு முதல் தமுஎகச தென்சென்னை மாவட்டப் பொருளாளராகவும், வட சென்னை மாவட்டச் செயலாளராகவும், மாநிலக் குழு உறுப்பினராகவும் பல நிலைகளில் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

            திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை கலை இரவுகளைத் தொடர்ந்து சென்னையில் சைதை தேரடியில், திருவொற்றியூரில் கலை இரவு நடத்துவதில் தொடர்ந்து பங்கு கொண்டு பணியாற்றியுள்ளார். சென்னை தாம்பரம் கலை இரவுகளில் எழுத்தாளர் பாலு சத்யா, ராதா கிருஷ்ணன், ரவி நாராயணன், ஆகியோருடன் இணைந்து உதவி செய்திருக்கிறார்.

            கலை இரவுகளில் கவிஞர்களை ஒருங்கிணைத்து கவிதை வாசித்தல், ஓவியர்களை ஒருங்கிணைத்து ஓவிய முகாம்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

            தற்போது தமுஎகச மத்திய சென்னை மாவட்டத்தின் நிர்வாகியாகவும் பாரதி புத்தகலயத்தின் புக் டே இணையதளத்தின் கவிதை ஆசிரியராகவும் உள்ளார்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதை தொகுப்புகள்

ஆயுதம்

வெயிலுக்கு இன்னொரு பெயர் மழை

முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள் (புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 42 கவிஞர்களின் கவிதை தொகுப்பு)

கலப்பைப் புரட்சி (டெல்லியில் விவசாய போராட்டத்திற்காக 60 கவிஞர்களின் கவிதை தொகுப்பு)

கடிதத் தொகுப்பு

மற்றவை நேரில் (2003 ல் இருந்து 2007 வரை 'பெண்ணே நீ' இதழில் எழுதி வந்த புனைவு கடிதங்களின் தொகுப்பு)

பரிசுகள், விருதுகள்

நியூ செஞ்சுரி புத்தகநிலையமும் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து வழங்கிய விருது.

திருப்பூர் தமிழ்ச்சங்க விருது,

புதுவை ஞானராஜா மகிமைச் செல்வி விருது,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது.

புதுவை ஞான ராஜா மகிமை செல்வி விருது

இணைய இணைப்புகள்