Jun 13, 2021

எழுத்தாளர் நிறைமதி

தொகுப்பு: கிருத்திகா பிரபா

            எழுத்தாளர் நிறைமதி - கவிஞர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  சண்முகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நிறைமதிமதுரையில் டிசம்பர் 12, 1960 இல் பிறந்தார். இவரது தந்தையார் எஸ்.எஸ்.ஆழ்வாரப்பன், தாயார் எஸ்.ஏ.சுப்புலட்சுமி. மதுரையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வசித்திருந்த போது, என்ஜீஓ சங்கத்தின் மாநில தலைவராக இருந்த இவரது தந்தையின் முயற்சியால் அங்கு உருவாக்கப்பட்ட குடியிருப்பு, ஆழ்வார் நகர் காலனி என்று அவரது பெயராலே அழைக்கப்படுகிறது. கவிஞர் நிறைமதிக்கு நான்கு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். 

            இவர் மதுரையின் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியமும் பயின்றார். 1983 இல் கனரா வங்கியில் எழுத்தராக சென்னையில் பணியில் சேர்ந்தவர், முதுகலை படிக்கையில் தன்னுடன் படித்த நிறைமதி என்பவரை காதல் மணம் புரிந்த பிறகு, 1987ல் சேலத்திற்கு பணி மாற்றலாகி வந்தார்.

            இவரது இணையர் முனைவர் நிறைமதி, சேலம் சாரதா மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்து, சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.  இக்காதல் தம்பதியின் ஓரே மகளான மித்ரா, பணிநிமித்தம் ஆஸ்திரேலியாவில் உள்ளார். 

            சேலம் தமுஎகசவில் கவிஞர் நிறைமதி இணைந்தது 2003-2004 இல். சேலம் மாவட்ட பொறுப்பாளராக இருந்த தோழர் அசோகன் முத்துசாமி தந்த உற்சாகம் மற்றும் ஊக்கத்தினால்,   வாசகர் வட்ட கூட்டங்களில், புத்தக விமர்சனம், கவிதை வாசித்தல் என அவரது எழுத்துப் பயணம் தொடங்கியது. மார்க்சியத்தின்பால் இவர் ஈர்க்கப்பட காரணமாக இருந்தவரும் தோழர் அசோகன் தான்! 

            தீக்கதிர் வண்ணக்கதிருக்கும், ஞானியின் 'தீம்தரிகிட' இதழுக்கும் இவர் தனது இணையர் பெயரில் எழுதி அனுப்பிய கவிதைகள், இரண்டிலும் தேர்வாகி அவரது முதல் பிரசுரங்கள் ஆயின. 'நிறைமதி' என்ற புனைப்பெயரை அவர் தொடர காரணமாகவும் அமைந்தன. பல கவிஞர்களின் கூட்டுக் கவிதை தொகுப்பாக, சேலம் மாவட்ட தமுஎகச வெளியிட்ட 'பிரவாகம்' என்ற கவிதை தொகுப்பில் கவிஞர் நிறைமதியின் கவிதையும் இடம் பெற்றது. சேலம் மாவட்ட தமுஎகச-வின் சிற்றிதழான 'சாளர'த்திலும், 'பயணம்' என்னும் சிற்றிதழிலும், இவரது கவிதைகள் வந்துள்ளன.  

            தோழர் அசோகன் மாவட்டச்செயலாளராகவும், இவர் இணைச் செயலாளராகவும் இருந்த சமயத்தில், ஆண்களுக்கான சமையல் பயிற்சி வகுப்பு தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சேலத்தில் நடந்தது. அப்பயிற்சியின் பலனாக இன்றும் இவர் தனது கை பக்குவத்தை சமையலில் காட்டி வருகிறார்!

            தமுஎகச 2006 மற்றும் 2008 இல் நடத்திய திரைப்பட பயிற்சி முகாம்களில் இவர் பங்கேற்ற போது, அங்கு திருப்பூர் ரவிக்குமார் மற்றும் தாண்டவக்கோன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்த போது, 1979-82 களில் மு.ராமசாமியின் 'நிஜ நாடக இயக்க'த்தில் பயின்று வீதி நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்றிருந்த கவிஞர் நிறைமதியை, நடிப்பின் மீதிருந்த காதலும், ரவிக்குமாரின் நட்பும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தின. சேலம் மாவட்ட துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை பற்றி பேசுகின்ற 'விடியும் வரை' என்ற ஆவணப்படத்தை 2006 இல் இயக்கியுள்ளார். கலை மற்றும் இலக்கியத்தின் மீதுள்ள காதலால், வங்கிப்பணியிலிருந்து 2009 இல் விருப்ப ஓய்வு பெற்றவர், கோகுலம் நர்ஸிங் காலேஜில் ஆங்கிலம் மற்றும் சைக்காலஜி வகுப்புகள் எடுத்து வருகிறார். பகுதி நேரமாக, பாலிமர், சிடிஎன் தொலைக்காட்சிகளில் நேர்காணல்கள், திரைப்படம்/புத்தக விமர்சனம், மாடலிங், நடிப்பு என இயங்கி வருகிறார்.

            நண்பர்கள் ரவிக்குமார் மற்றும் ராம்குமார் ஆகியோர், 2011-12 இல் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சிக்காக இயக்கிய குறும்படங்களில், இவர் நான்கில் நடித்துள்ளதோடு, சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றுள்ளார். 

            இலக்கிய காதலர்கள் ஓய்வறிய மாட்டார்கள் என்பதற்கேற்ப, பத்திரிக்கையாளர் பெ.சிவசுப்ரமணியம் எழுதிய 'வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்என்ற புத்தகத்தை, தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை கவிஞர் நிறைமதியும் அவரது இணையரும் செய்து வருகிறார்கள்.

        தமுஎகசவின் சேலம் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் கவிஞர் நிறைமதி தற்போது பணியாற்றி வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1.'வலி அறியாது'(2006)

2.'பேச நிறைய இருக்கிறது'(2009) 

3.'வரம் மட்டுமல்ல'(2020) 

4. கு. கணேசன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

பரிசுகள், விருதுகள்

படைப்பாளர் பேரவை விருது  2016

ஆதரவற்றோர் இல்லமான அன்பாலயத்தின் 'கவிஞர் வைரமுத்து விருது' 2013 

இணைய இணைப்பு