Jun 13, 2021

எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன்

தொகுப்பு : சி.பேரின்பராஜன்

                "காலங்கடந்த படைப்புகளை உருவாக்கக்கூடிய கலைஞன், ஒருகட்டத்தில் தன்னை ரசிப்பவர்களையும் கலைஞனாக்கி விடுகிறான். அவனுக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை. அவன் கண்டதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறான். பகிர்ந்து கொள்வதன் மூலம் மேலும் சில படைப்புகள் உருவாகும் என நம்புகிறான்." சத்யஜித்ரே பற்றி கவிஞர் யுகபாரதியின் இந்த வரிகள் அட்சரம் பிசகாமல் தோழர் கோமல் சுவாமிநாதன் அவர்களுக்கு பொருந்துகிறது.

            நாடகம் மட்டுமல்லாமல் சினிமா, பத்திரிகை, என பன்முக ஜனரஞ்சகத் தளங்களில் சமூக பொறுப்புமிக்க கலைஞராக இயங்கியவர் கோமல் சுவாமிநாதன் அவர்கள்.

            1935 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, காரைக்குடியில் ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். இவரது பெற்றோரின் பூர்விகமாக இவரது சொந்த ஊர் பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகிலுள்ள கோமல் என்ற சிற்றூர். பின்னாளில் அவரது பெயருக்கு முன்னே இடம்பிடித்து அவரை அடையாளப்படுத்தியது.

            தந்தையின் தபால்துறை பணியால் அடிக்கடி பணிமாற்றம் நிகழ்ந்து, பள்ளிப்பருவம் குளித்தலை, திருப்பத்தூர், காரைக்குடி, பெரியகுளம் என்று பல்வேறு இடங்களில் கழிந்தன. அந்தப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களே பிற்காலத்தில் அவரை எழுத்தாளராக்கியது. பள்ளிப் படிப்பை முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் நிறைவு செய்தார். தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. வணிகவியல் பள்ளியில் டிப்ளமோ பயின்றார். பின்னர் நாடகவியலில் கொண்ட ஆர்வம் காரணமாக, நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். நாடகத்திற்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களை சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடமிருந்து கற்றுத் தேர்ந்தார்.

            பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். நாடகங்களிலும் நடித்தார். நூலகங்களுக்குச் சென்று வாசிப்பதும் தொடர்ந்தது. சிறுவயதில் வாசித்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கை வரலாறு இவருள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

            பள்ளி பருவத்தில் காரைக்குடி எஸ்.எம்.எஸ். கலாசாலையில் படித்தபோது, அங்கு சா. கணேசன் தலைமையில் நிகழ்ந்த கம்பராமாயணக் கூட்டங்கள் இவருக்குள் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்தன. அங்குள்ள கலாநிலையம் நூலகத்தில் வாசித்த புத்தகங்கள் புதிய உலகம் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தன. கே.எம். முன்ஷி, புதுமைப்பித்தன் எனப் பலரது எழுத்துக்கள் இவருக்கு அங்கு பரிச்சயமாயின. நண்பர்களுடன் இணைந்து 'பாலர் சோலை' என்ற கையெழுத்து இதழ் ஒன்றையும் சிலகாலம் நடத்தினார்.  கல்லூரி காலங்களில் தமிழின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே "தமிழ் எழுச்சி மன்றம்" என்ற அமைப்பை நிறுவி நடத்தினார். நாடக ஆர்வத்தால் நண்பர்களுடன் இணைந்து 1953 இல் 'இதயத் துடிப்பு' என்னும் தலைப்பில் ஒரு அரசியல் நையாண்டி நாடகத்தை மேடையேற்றினார். சென்னையில் டிப்ளமோ பயிலும் போது  ஓய்வு நேரத்தில் அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி, தியாசஃபிகல் சொசைட்டி, மாக்ஸ்முல்லர் பவன் போன்ற நூலகங்களில் உறுப்பினராகிப் பரவலாக வாசித்தார்.

            சென்னையில் அப்போது நிறைய நாடகங்கள் நடத்தப்பட்டன. பல நாடகங்களுக்கும் சென்று நாடக நுணுக்கங்களைப் பயின்றார். கேரள பீப்பிள் ஆர்ட் சென்டர் நடத்திய நாடகங்கள் இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டன. யதார்த்த நாடகங்களை எப்படி எழுதுவது என்பதை இவ்வகை நாடகங்கள் மூலம் அறிந்தார். மிகையேதுமில்லாமல் யதார்த்தமாகவே தனது நாடகங்களை எழுத வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்.

            ஆரம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் பற்றுக்கொண்டு 1952 களிலிருந்து காங்கிரஸ் மேடைகளில் முழங்கினார். கர்மவீரர் காமராஜருடன் நல்ல அறிமுகமும் நெருக்கமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் காமராஜரின் நெருங்கிய வட்டத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் பலர் இருந்ததால், சொந்த ஊரின் பெயரை இணைத்து "கோமல் சுவாமிநாதன்" என அடையாளப்படுத்தப்பட்டார். இந்த காலகட்டத்தில் காமராஜர் கேட்டு கொண்டதற்கு இணங்க கதராடைக்கு மாறினார். இவருடைய ஆவேசமான மேடைப் பேச்சு "கோடையிடி கோமல்" என்ற பட்டபெயரை பெற்றுத்தந்தது.

            1956 வாக்கில் தோழர் ஜீவா அவர்களுடன் ஏற்பட்ட பரிச்சயமும், கலந்துரையாடல்களும், பின்னாளில் அவர் தீவிர இடதுசாரியாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பு வகிக்குமளவிற்கு வளர்த்தெடுத்திருக்கிறது.

            சகஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜில் பயிற்சி முடித்து அங்கேயே பணியாற்றினார். அவர் எழுதிய முதல் நாடகமான 'புதிய பாதை' 1961 இல் சேவா ஸ்டேஜில் அரங்கேறியது. இதற்கு சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி., கல்கி ராஜேந்திரன் உள்ளிட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. பின்னர் அடுத்தடுத்து அவரது 'தில்லைநாயகம்', "மின்னல் காலம்" ஆகிய நாடகங்கள் பரவலாகப் பேசப்பட்டது.

            1971 இல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார். அதன் மூலம் 'சன்னதித் தெரு' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இவரது 'நவாப் நாற்காலி' பரவலாகப் பாராட்டப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. இவரது நாடகங்களில் குறிப்பிடத் தகுந்தது 'தண்ணீர் தண்ணீர்'. அந்நாடகம் அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்து அகில இந்திய அளவில் கோமல் சுவாமிநாதனை அடையாளம் காட்டியதோடு, 250 முறைக்குமேல் மேடையேறியது. பேராசிரியர் எஸ். சங்கர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பி.சி. ராமகிருஷ்ணாவின் மெட்ராஸ் பிளேயர்ஸால்,  நாடகமாகவும் நடத்தப்பட்டது. 1981ல் இந்நாடகத்தை கே. பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார்.

            தன் குழுவிற்கு மட்டுமல்லாமல் புகழ்பெற்ற வேறு சில குழுக்களுக்கும்,.. உதாரணமாக, மனோரமா, எம்.என். நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன் போன்றோரது நாடகக் குழுக்களுக்கும் இவர் நாடகங்களை எழுதியிருக்கிறார். தன் வாழ்நாளில் 33 நாடகங்களை இயற்றியிருக்கிறார். அந்நாள்களில் அபத்த நகைச்சுவைக் குவியல்களான மேடை நாடகங்களுக்கு எதிரான மேதைத்துவம் மிக்க பகடிகளாக இவருடைய நாடகங்கள் செயல்பட்டு தனி கவனம் பெற்றன. கேரளத்திலும் வங்கத்திலும் நிகழ்த்தப்படுவதைப் போல தமிழகத்திலும் மக்களின் குரலையும் மக்களுக்கான குரலையும் நாடகங்கள் கொடுக்க வேண்டும் என விரும்பியவர். பெண்ணிய கருத்துகளையும், தலித் விடுதலையையும், அரசியல் சமூகப் பிரச்னைகளையும் அவர் நாடகங்கள் பிரதானப்படுத்தின. "நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்", என்று மணிக்கொடி கால முதுபெரும் எழுத்தாளரும் சிறந்த திரைப்பட விமர்சகருமான.. 'சிட்டி' பெ.கோ. சுந்தர்ராஜன், அவர்கள் பாராட்டியது மிகையில்லை.

            ஒரு புறம் நாடகங்களில் முத்திரை பதித்து கொண்டே மறுபுறம் சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'கற்பகம்', 'கைகொடுத்த தெய்வம்', 'பேசும் தெய்வம்'  மற்றும் அவருடைய பல வெற்றிப்படங்களிலும் வசன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும், இந்தியில் தயாரிக்கப்பட்ட "சாரதா' படத்திலும் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் தேவர் பிலிம்ஸின் இந்தித் திரைப்பட கதை விவாதங்களில் கலந்துகொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். பாலூட்டி வளர்த்த கிளி’, ‘குமார விஜயம்’,"சாதிக்கொரு நீதி" என்று பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

             "யுத்தகாண்டம்", "அனல் காற்று", "ஒரு இந்திய கனவு", "நவாப் நாற்காலிஎன  நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். வணிக சினிமாவில் பணியாற்றிக் கொண்டே மாற்று சினிமாவைப் பற்றிய கனவிலிருந்தவர். சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் போல தமிழிலும் சினிமாக்கள் வரவேண்டும் என விரும்பியவர்.

            தமிழக அரசு  1977 இல் இவருக்கு கலைமாமணி விருது தந்து சிறப்பித்தது. இவர் இயக்கிய "ஒரு இந்தியக் கனவு" திரைப்படம் 1983 ஆம் வருடம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றெடுத்தது.

            1960 களிலேயே இதழியலில் ஆர்வம் கொண்டு சி.சு.செல்லப்பா அவர்களின் "எழுத்து" இலக்கிய இதழ் பணிகளில்  ஈடுபடுத்திக் கொண்டவர். பின்னாளில் ஸ்ரீராம் குழுமத்தின் "சுபமங்களா" என்ற ஜனரஞ்சக பெண்கள் இதழுக்கான ஆசிரியர் பொறுப்பு கிடைத்த போது அதை  மூத்த எழுத்தாளர்களுக்கும், சிற்றிதழ்களில் இயங்கிவந்த இளைய எழுத்தாளர்களுக்கும், ஈழ எழுத்தாளர்களுக்குமான பொதுவான தளமாகவும், கவிதைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், பயணக் கட்டுரைகள், அறிவியல் விளக்கங்கள் என 90களின் இளைஞர்களுக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் விதமாக வெற்றிகரமான இலக்கிய இதழாக வளர்த்தெடுத்தார். அதில் வெளியான தேரந்தெடுத்த நேர்காணல்களை, "கலைஞர் முதல் கலாப்ரியா வரை" என்ற  தலைப்பிலும், தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களாக எழுதிய "பறந்து போன பக்கங்கள்" தொடர் கட்டுரைகளும் நூல்களாக வெளிவந்தன. "சுபமங்களா வாசகர் வட்டம்" என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகளையும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி இளையதலைமுறைக்கு இலக்கிய ஆர்வத்தை தூண்டினர்.

            கடைசி சில வருடங்கள் முதுகு தண்டு புற்று நோயால் அவதிபட்ட போதிலும் அவருடைய இலக்கிய பணியில் தொய்வு ஏற்படாமல் பணியாற்றினார். ஆண்டின் சிறந்த திரைப்படங்களை, கலைஞர்களை தேசியவிருதுக்காக தேர்ந்தெடுக்கும் குழுவில் பலமுறை அங்கம் வகித்திருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

            இவருடைய மனைவி பெயர் விஜயலெட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 1957 முதல் அக்டோபர் 28 1995 இல் காலமாகும் வரை சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். இவருடைய மகள் தாரிணி, தந்தையின் நாடகங்களை மீண்டும் மேடையேற்றியும், "சுபமங்களா" இதழ்களை இணையத்தில் பதிவேற்றியும் அவரது நினைவுகளை இலக்கிய உலகில் இன்றும் உலாவரச்செய்து கொண்டிருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்

கிராமராஜ்யம் - நாடகம் -வானதி பதிப்பகம்

தண்ணீர் தண்ணீர் - நாடகம் - வானதி பதிப்பகம்

பறந்து போன பக்கங்கள் - அனுபவ கட்டுரைகள் - குவிகம் பதிப்பகம்

கலைஞர் முதல் கலாப்ரியா வரை. (இளைய பாரதி முன் இணைந்து). -நேர்காணல் தொகுப்பு - வ உ சி நூலகம்

நாடக படைப்புகள்

சன்னதித் தெரு, 1971,

நவாப் நாற்காலி, 1971 

மந்திரி குமாரி, 1972,

பட்டணம் பறிபோகிறது, 1972,

வாழ்வின் வாசல், 1973,

பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),

ஜீஸஸ் வருவார், 1974,

யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),

அஞ்சு புலி ஒரு பெண், 1976,

கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது),

ஆட்சி மாற்றம், 1977,

சுல்தான் ஏகாதசி, 1978,

சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் விஜயகாந்த் நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி படமாகியது),

தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),

ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகி தேசிய விருது பெற்றது),

அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

நள்ளிரவில் பெற்றோம், 1984,

இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கறுப்பு வியாழக்கிழமை, 1988,

நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கிராம ராஜ்யம், 1989,

மனிதன் என்னும் தீவு, 1989,

அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,

மற்றவர்களுக்காக பணியாற்றிய  நாடக படைப்புகள்,

புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

டாக்டருக்கு மருந்து,

கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )

டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),

அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)

என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

இணைய இணைப்புகள்

கோமல் சுவாமிநாதன் நூல்கள்

விக்கி பீடியா பக்கம்

இந்து தமிழ்த் திசை கட்டுரை

தினமணி கட்டுரை