Jun 19, 2021

எழுத்தாளர் கம்பம் மாயவன்

 தொகுப்பு :ரா.கிருஷ்ணவேணி

            கவிதையின் ஆற்றல் மிகு குழந்தை என்று அழைக்கப்படும் ஹைக்கூவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள கவிஞர்களுள் ஒருவர் கம்பம் மாயவன். இவருடைய இயற்பெயர் ஆ. மாயாண்டி.

            15..3.1971 இல் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆண்டிபாப்பாத்தி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை கம்பத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சிபியூ மேல்நிலைப் பள்ளியிலும் படித்திருக்கிறார். தொழிற்பயிற்சி மையத்தில் மெக்கானிக் பயிற்சி பெற்றுள்ளார்.

            சென்னையில் கவிஞர் வைரமுத்து அவர்களுடன் ஓர் ஆண்டு உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பின்பு, கம்பம் திரும்பியபின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்பப் பணியாளராக பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் நேரங்களில் புத்தக வாசிப்பையையும், ஹைக்கூ கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார். தற்போது கம்பத்தில் வசிக்கும் மாயவன் அவர்களுடைய மனைவி பெயர் பிரதீபா. மகள் - ரெய்னாஸ்ரீ.

            கம்பம் மாயவன் அவர்களுக்கு சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்திருக்கிறது. அவ்வப்போது வாசிக்கும் பழக்கம் இருந்தாலும், 1990 களில் கவிஞர் இதயகீதன் அவர்களின் தொடர்பிற்குப் பிறகுதான் தீவிர வாசிப்பாளராக மாறியிருக்கிறார். வாசிப்பு ஆர்வமும் , எழுத்து ஆர்வமும் மேலிட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்துள்ளார்.

            1994 ஆம் ஆண்டில் கவிஞர் இதயகீதன் அவர்கள் மூலமாக கிடைக்கப் பெற்ற பேராசிரியர் முனைவர் நிர்மலா சுரேஷ் அவர்களின் ஹைக்கூ ஆய்வு நூல்தான் ஹைக்கூ கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதாக குறிப்பிடுகின்றார். 1994 இல் இருந்து தமுஎசவின் களப் போராட்டங்களிலும், பயிற்சி முகாம்களிலும் பங்கேற்று வந்துள்ளார். கவிஞர் இதயகீதன் நடத்திய அக்கினிக்குஞ்சுஇலக்கிய இதழின் துணையாசிரியராக மாயவன் பணியாற்றி வந்தார்.

            மாயவன் அவர்களின் ஹைக்கூக் கவிதைகள் பல இலக்கிய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. இதயகீதன் அவர்களின் செவீ பதிப்பகம் மூலம் முதல் ஹைக்கூ தொகுப்பான சிறகின் இசை” 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. 2005 ஆம் ஆண்டு மின்மினி வெளிச்சத்தில்வெளிவந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழலை உதிர்த்த சொல்தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.

            கம்பம் மாயவனின் படைப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக பேராசியர் செந்தில் குமார் (கம்பம் புதியவன்) ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வேட்டினை கட்டுரை நூலாக்கி, “போதிமரம்என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

            உரத்த சிந்தனைகள் கொண்ட கவிஞர் மாயவனின் கவிதைகள் பரவலாகப் பேசப்படாதது கவலைக்குரியதாகும். பிரபலங்கள் எழுதுகின்ற சிறு துணுக்குகளும் மிகைப்படுத்தப்படும் போக்கு தமிழ் இலக்கிய உலகில் நிலவிவரும் சூழலில், மாயவனின் அற்புதமான கவிதைகள் விரிந்த வாசிப்பு உலகை எட்டாதது பெரும் குறையேஎன்று ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் செந்தில் குமார்.

            சாகித்ய அகாடமி இவருடைய  இருபது ஹைக்கூ கவிதைகளை தேர்ந்தெடுத்து பதினெட்டு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்துள்ளது.

            பேராசிரியர் அருணன் அவர்களுடைய "பொங்குமாங்கடல் கலை இலக்கியத்தின் கால்நூற்றாண்டு கால வரலாறு"  நூலில்  "மின்மினியின் வெளிச்சம்" "சிறகின் இசை "என்ற ஹைக்கூ நூலிலிருந்து மாயவன் அவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

            பேராசிரியர் மோகன் அவர்களின் "கவிதை அலைவரிசை" என்ற ஆய்வு நூலில் "மின்மினி வெளிச்சம்" "சிறகின் இசை" என்ற ஹைக்கூ நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

            உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ்பாட நூலிலும், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கு தமிழ் பாட நூலிலும் மாயவன் அவர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

            திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஜெயிண்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு மாயவன் அவர்களின் ஹைக்கூ கவிதை பாடநூலில் இடம் பெற்று  உள்ளது.

            பல ஆய்வாளர்களின் ஹைக்கூ குறித்த ஆய்வுகளில் கம்பம் மாயவனின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

வெளிவந்துள்ள படைப்புகள்

1.       1. சிறகின் இசை (ஹைக்கூ தொகுப்பு) - 2000

2.       2. மின்மினியின் வெளிச்சத்தில் – 2005

3.       3. மழலை உதிர்த்த சொல் (ஹைக்கூ தொகுப்பு) - 2014

பெற்ற விருது

   2019  ஆம் ஆண்டில் மாநில அளவிலான சிறந்த ஹைக்கூக்கான  நூற்றாண்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் "மழலை உதிர்த்த சொல்" என்ற ஹைக்கூ நூலுக்கு முதல் பரிசு கிடைக்கபெற்றது.

இணைய இணைப்புகள்

தேனி எழுத்தாளர்கள் இணையதளத்தில் கம்பம் மாயவன்

தமிழ் ஹைக்கூ ஆயிரம் - நூலில் மாயவன் கவிதை

முனைவர்.இரா.மோகன் ஆய்வுக் கட்டுரையில் மாயவன் ஹைக்கூ