Jun 25, 2021

எழுத்தாளர் உஷாதீபன்

 தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்

            ‘இலக்கியம் என்பது வாழ்க்கையை, மனிதர்களை, அவர்களின் அபிலாஷைகளை, அவர்களின் நெஞ்சின் ஈரத்தை, ஆழப் படிந்திருக்கும் நன்னெறிகளை நேசிப்பதாக இருக்கவேண்டும்என்று இலக்கணம் வகுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் குடும்பப் பிரச்சினைகளை மையமாக வைத்து விவாத நோக்கில் மனித உணர்வுகளை கதைகளாக்கி சுவைபட வழங்கி வருகிறார் கி.வெங்கட்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் உஷாதீபன் அவர்கள். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு.

            .பி.கிருஷ்ணய்யர் - கே.பிச்சம்மாள் இவர்களின் மகனாக 10-12-1951 இல் பிறந்த உஷாதீபன் அவர்கள் அந்தக் கால பி.யூ.சி. படிப்புடன் வணிகவியல் பாடத்தையும் படித்து, வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, இறுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கணக்கு அலுவலராகப் பணியாற்றி 2009 டிசம்பரில் பணி ஓய்வு பெற்றார். மனைவி உஷா பத்மினி. ஒரு மகன். தற்போது குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார்.

            இவரது முதல் படைப்பு 1982 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ஒரு பக்க கதையாகவறட்டுக் கௌரவம்என்ற பெயரில் வெளிவந்தது. அதுமுதல் தொடர்ந்து சுட்டி, சுதந்திரம், வாரமலர், புதிய பார்வை, தாய், இதயம் பேசுகிறது, குமுதம், குங்குமம், கல்கி, சாவி, செம்மலர், கணையாழி, தீபம், ராணி, தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

            சிறுவயதிலிருந்து அவருடைய தொடர்வாசிப்பு பழக்கமே அவரை எழுதத் தூண்டியது. ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, ஜானகிராமன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா, கு.பா.ரா., .பா., .நா.சுப்பிரமணியன் முதலான மணிக்கொடி கால எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்ததன் வெளிப்பாடே இவரது படைப்புகள் எனலாம்

            தன்னுடைய படிப்பனுபவத்திலிருந்தே படைப்பனுபவம் பெற்றார் உஷா தீபன். தான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த மனிதர்கள், அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்கள் இவைதான் அவரின் கதைக்கருக்கள்.

            1987 இல்வெள்ளை நிறத்தொரு பூனைஎன்ற சிறுகதைக்கு சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு கிடைத்ததுதற்போது 2015இலும் இதே அமைப்பின் பரிசுகைமாத்துஎன்ற சிறுகதைக்குக் கிடைத்துள்ளது.

            சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இவர்சபாஷ் பூக்குட்டிஎன்று சிறுவர்களுக்கான ஒரு நூலையும் எழுதியுள்ளார். ‘அம்மாஎன்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பும் கிண்டிலில் வெளி வந்துள்ளது.

முரண் நகைஎன்ற கதைத் தொகுப்பு கிண்டிலில் மின்னூலாக தற்போது வெளிவந்துள்ளது. இது தவிர்த்து, கிண்டிலில் பதினேழு மின்னூல்களும், pustaka.co.in என்ற இணைப்பில் நாவல் மற்றும் சிறுகதை புத்தகங்கள் பதினெட்டும் வெளிவந்துள்ளன.

            உஷா தீபன் அவர்கள் 1990 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுரை நரிமேடு கிளையின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டு மாவட்ட அளவில் பல்வேறு பங்களிப்புகளை அளித்திருக்கிறார்.

            திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய 2007ஆம் ஆண்டுக்கான அமரர் ஜீவா - பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் இவரதுவாழ்க்கை ஒரு ஜீவநதிஎன்ற சிறுகதை தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் மெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது.

            இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன.   தினமணி கதிரில் வந்துகொண்டே இருக்கும் இவரது கதைகள் தொடர்ந்து மாணவர்களால்கதிர் கதைகள்என்ற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

            ‘இவரது படைப்புகளில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. இவரது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச்செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு, மின்னி மறைதல் என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல், மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம் போன்றவை ஆசிரியரின் சிறப்புகளாகும்என மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இவரது படைப்புக்கு அணிந்துரை அளித்துள்ளார்.

            ‘உஷாதீபனின் கதைகளில் காணப்படும் மனிதாபிமானம் ஆசிரியரின் மனநிலையைக் காட்டுகிறது. சிறுகதைகளில் ஆளப்படும் சில சிறந்த யுத்திகளை அவர் கையாண்டிருப்பது மெச்சத் தக்கதாக உள்ளது. எட்கர் ஆலன் போ சொன்ன கருத்தானசிறுகதை என்பது அரை மணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி நேர அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அது தன்னளவில் முழுமை பெற்றிருக்கவேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்கவேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள்  புறத்தேயிருந்து எவ்வித குறுக்கீடுகளும் பாதிக்காமல் வாசகர்களின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாயிருக்க வேண்டும்என்ற இலக்கணத்தை இவர் கதைகளில் காண முடிகிறது. சிறுகதைகளின் கற்பனைச் செறிவு நடைமுறையில் இருப்பவற்றை உணர்ச்சி பூர்வமாக அறிய வைப்பதுதான் என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார் உஷாதீபன்’  என்று எழுத்தாளர் நரசய்யா அவர்களும் தன்னுடைய அணிந்துரையில் இவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.


வெளிவந்துள்ள நூல்கள்

சிறுகதை தொகுப்புகள்

உள்ளே வெளியே

பார்வைகள்

நேசம்

சில நெருடல்கள்

வெள்ளை நிறத்தொரு பூனை

வாழ்க்கை ஒரு ஜீவநதி

நினைவுத் தடங்கள்

தனித்திருப்பவனின் அறை

திரை விலகல்

செய்வினை செயபாட்டு வினை

நான் அதுவல்ல

நிலைத்தல்

தவிக்கும் இடைவெளிகள்

பின்னோக்கி எழும் அதிர்வுகள்

முழு மனிதன்

குறுநாவல்கள்

மழைக்கால மேகங்கள்

புயலுக்குப் பின்னே அமைதி

உஷாதீபன் குறுநாவல்கள்

கால் விலங்கு

நாவல்

லட்சியப் பறவைகள்

கட்டுரைத் தொகுப்பு

நின்று ஒளிரும் சுடர்கள்

படித்தேன் எழுதுகிறேன்

உறங்காக் கடல்

சிறுவர் நூல்

சபாஷ் பூக்குட்டி

பெற்ற பரிசுகளும் விருதுகளும்

1. சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதை பரிசு (1987 மற்றும் 2015)

2. கல்கி நினைவு சிறுகதைப் போட்டி

3. அமுதசுரபி பொன்விழா சிறுகதைப் போட்டி

4.  குங்குமம் நட்சித்திர சிறுகதைப் போட்டி

5.  இளைய தலைமுறை சிறுகதைப் போட்டி

6.  தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா குழு சிறுகதைப் போட்டி

7.  அமரர் ஜீவா - பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா சிறுகதை போட்டி (வாழ்க்கை ஒரு ஜீவநதி)

8. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி - 2011 (நினைவுத் தடங்கள்)

9. கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது - 2014 (தவிக்கும் இடைவெளிகள்)

10. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சி குழு சிறுகதைப் போட்டி