Jun 27, 2021

எழுத்தாளர் புலியூர் முருகேசன்

 தொகுப்பு : சு. இளவரசி

            "எனக்கு இலக்கியம் என்பது ரசித்து இன்புறுவதற்கான பண்டம் இல்லை, சமத்துவத்தை நோக்கிப் பேசத்தான்" என்ற கருத்தியலோடு இலக்கியம் படைத்துவரும் எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்களின் இயற்பெயர் ப. முருகேசன். தான் மிகவும் நேசிக்கும் தனது ஊரின் பெயரான புலியூரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார்.

  எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டி.செட்டியூரிலுள்ள ஆனைப்பட்டி எனும் ஊரில் 5.5.1970 அன்று பழனியப்பன் - காமாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் செல்வராணி. இவர்களுக்கு பாரதி மார்க்ஸ் மற்றும் பகத்சிங் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவருக்கு நான்கு வயது இருக்கும்போது, இவரது குடும்பம் பிழைப்புத் தேடி ஆனைப்பட்டியிலிருந்து கரூர் மாவட்டத்திலுள்ள புலியூருக்கு புலம் பெயர்ந்ததுபால்ய காலத்திலிருந்து பல்வேறு பரிணாமங்களைத் தன்னுள் ஏற்படுத்தித் தன்னோடு கலந்துவிட்ட புலியூரைவிட்டு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக தஞ்சாவூரில் வாழ்ந்து வருகிறார் புலியூர் முருகேசன்.

            புலியூரிலுள்ள கவுண்டன்பாளையம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், கரூரிலுள்ள பசுபதீஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்து வகுப்புகளையும், கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 11,12 ஆம் வகுப்புகளையும் பயின்றார். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையிலுள்ள அரசு கல்லூரியில்  பி. எஸ். சி (வேதியியல்) பட்டப்படிப்பை படிக்கத் தொடங்கி சூழல் காரணமாக அதை நிறைவு செய்ய இயலாமற்போனது.

            கொசுவலை ஏற்றுமதி வியாபாரம், எல். . சி முகவர் என இயங்கியவர் தற்போது தஞ்சாவூரில் "தோழர் மெஸ்" என்ற அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார். சமைப்பதில் மிகுந்த ஆர்வமும், ஆண்களும் சமைக்க வேண்டும் என்ற கருத்தும் கொண்டவர்.

            தனது 18ஆம் வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவரது நண்பர் விஜயகுமாரின் மூலம் புத்தக வாசிப்பு அறிமுகமாகியுள்ளதுநண்பர் விஜயகுமார் தனது ஊரிலிருந்து தினம் இரண்டு புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க, இவரும் படிக்க என ஓராண்டு முழுவதும் தீவிர வாசிப்பு தொடர்ந்துள்ளது. அன்று அவர் வாசித்த சோவியத் குழந்தை இலக்கியங்கள், இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

            தொடர் வாசிப்பினால் 1991ஆம் ஆண்டு எழுதத் துவங்கியுள்ளார். முதலில் தனது எழுத்துப் பயணத்தைக் கவிதைகளில் துவங்கியவர் "ஒரு தோழியின் வாசலில்" என்கிற கவிதைத் தொகுப்பை 1991ஆம் ஆண்டு வெளியிட்டார்.

            2012 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் "சொல்லவே முடியாத கதைகளின் கதை" புத்தகத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். பிறகு அவரின் அத்தனைச் சிறுகதைகளையும் தேடி வாசித்தவருக்கு, சிறுகதைகள் எழுதும் புதுவடிவம் பிடிபட்டிருக்கிறது. அதன் பின் தீவிரமாக சிறுகதைகளை எழுதத் துவங்கியுள்ளார்.

            இவரது "சிங்கம் ப்ராஜெக்ட்" என்ற சிறுகதை முதன்முதலாக 2013ஆம் ஆண்டு 'குறி' எனும் சிற்றிதழில் பிரசுரமாகியிருக்கிறது. அதை தொடர்ந்து இவரது ஏனைய சிறுகதைகள் உயிர்எழுத்து, உயிர்மை, நிலவெளி, காமதேனு, குங்குமம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியிருக்கிறது.

            2014 ஆம் ஆண்டு "பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு" என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். அதிலிருந்த "நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்" என்ற சிறுகதை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மத்தியில் கருத்தியல் வேறுபாட்டை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, புலியூரில் வாழும் சூழலை இழந்து  இடம்பெயர்ந்து தற்சமயம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.

            "நாற்பது ஆண்டுகள் வேரூன்றி கிளை பரப்பி  நின்ற புலியூரிலிருந்து ஒரே நாளில் ஒட்டுமொத்தமாகப் பிடுங்கி வீசப்பட்டு தஞ்சாவூரில் வந்து விழுந்திருக்கிறேன்" என்று தன் அகதி நிலை குறித்த வலி அவருக்கு உண்டு. புலியூருக்கு மீண்டும் திரும்பும் தீரா ஆவலோடும், வாழும் ஊரில் வேர்பிடிக்கும் முயற்சியாக முக்கியமாக எழுத்துலகில் வேர்பிடிக்க இன்னும் தீவிரமாக எழுதத் துவங்கினார். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நிறைய வழிகாட்டுதல்களை அளித்து, மீண்டும் இவரை எழுதத் தூண்டி, தனது உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இவரது பல படைப்புகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த புலியூர் முருகேசனை நாவல் எழுதத் தூண்டியவரும் அவரே.

            "பயணம் புதிது" எனும் சிற்றிதழின் பொறுப்பாசிரியராய் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைக் கட்சி" மற்றும் "மக்கள் விடுதலைக் கட்சி"யிலும் உறுப்பினராக ஒன்பது ஆண்டுகாலம் இருந்திருக்கிறார். இவரது படைப்புகளில் மார்க்சியச் சிந்தனைகள் நிறைந்திருக்கும்.

            ஒரு எழுத்தாளன் அமைப்போடு இணைந்திருப்பது அவசியம் என உணர்ந்தார். எனவே, 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். தற்போது தமுஎகசவின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராகத் தொடர்கிறார். சங்கத்தின் மூலம் படைப்பரங்கங்கள், நூல் விமர்சனக் கூட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

            முகநூலில் தீவிரமாக இயங்கிக் கொண்டு தனது கருத்துகளை எந்தவித சமரசமுமின்றி பதிவிடுபவர். இவரது சில சமூக சிக்கல்களைப் பேசும் முகநூல் பதிவுகள் செம்மலர் இதழில் வெளியாகி இருக்கின்என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் வாசகர்களின் மனதிற்குள்ளும், எதிர்கருத்து கொண்டோருக்கு இடையிலும் கலகத்தை ஏற்படுத்துவதால் இவரை தோழர்கள் 'கலகக்காரத் தோழர்' என்றும் அழைப்பதுண்டு.

            சமகால அரசியல், சாமானியர்களின் சங்கடங்கள், சமூகச் சிக்கல்கள், சாதிய ஒடுக்குமுறைகள், மானுட உளவியல், வரலாற்றுப் பிழைகள் என பல்வேறு கூறுகளையும் எந்தவிதப் பூசலுமின்றி அப்படியே வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை புலியூர் முருகேசனின் படைப்புகள். எழுத்துக்காக, அதனால் புடமிடப்படும் மனங்களுக்காக தனது மண்ணையும், மக்களையும் பிரிந்து வாழ்கிறார். அந்நிலையிலும் எழுதுவதே உயிர்ப்பு என எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் புலியூர் முருகேசனின் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதவை ஆகும் .

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைத் தொகுப்பு

ஒரு தோழியின் வாசலில்' (சூரியன் பதிப்பகம் - 1991)

 சிறுகதைத் தொகுப்புகள்

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’-   (ஆம்பிரம்  பதிப்பகம் - 2014)

மக்காச் சோளக் கணவாய்’-  (உயிர்மை பதிப்பகம் - 2017)

'இழவு வீட்டுக் கதைகள்’- (குறி வெளியீடு - 2019)

நாவல்கள்

உடல் ஆயுதம்’- (உயிர்மை பதிப்பகம் - 2015)

மூக்குத்தி காசி’- (உயிர்மை பதிப்பகம் - 2017)

படுகைத் தழல்’-  (உயிர்மை பதிப்பகம் - 2018)

பாக்களத்தம்மா' - (நந்தி பதிப்பகம் - 2020)

பரிசுகளும், விருதுகளும்

"நெருஞ்சி இலக்கிய விருது" மற்றும் பரிசு, 2018 - (நாவல் - மூக்குத்தி காசி )

"சௌமா விருது" மற்றும் பரிசு, 2019 -(நாவல் - படுகைத் தழல்)

"கந்தர்வன் சிறுகதை விருதுமற்றும் பரிசு (புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி)2019 -  (சிறுகதை - நாகையா திருடித் தின்ற நடுத்தோட்டம்

இணைய இணைப்புகள்

புலியூர் முருகேசன் நூல்கள்

இந்து தமிழ்த் திசை - நேர்காணல்

”படுகைத்தழல்” குறித்து விகடன் கட்டுரை

காணொளி உரை