Jun 28, 2021

எழுத்தாளர் ஈரோடு தி.தங்கவேல்

 தொகுப்பு : பி.பாக்யலஷ்மி

        எந்த நாகரீகத்தைச் சேர்ந்த சமுதாயமானாலும், அதன் உள்ளடக்கமாக, உண்மையாக இருப்பது மனிதர்கள்தான். அந்த மனிதர்களே நமது வழக்காறுகளின் நாயகர்கள். அவர்களது வாழ்க்கையும், அவர்களது பிரச்சனைகளும் போராட்டங்களும், அவர்களது நிலைத்திருத்தலும்தான் உண்மையாக உள்ளது” என்று கூறும் எழுத்தாளர் ஈரோடு தி.தங்கவேல் களப்பணிகளிலும், வாசிப்பிலும் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும் இடதுசாரி சிந்தனையாளர்.


    ஈரோடு தி.தங்கவேல் அவர்கள் பழைய மதுரை மாவட்டம் பழனி ஆயக்குடி கிராமத்தில் திருமலைசாமி- அங்கம்மாள் தம்பதியருக்கு 5.11.1947 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். ஆயக்குடி கிராமத்தில் தொடக்கக்கல்வியை முடித்த இவர், திண்டுக்கல் புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அங்கு படிக்கும் பொழுதே பள்ளியின் பாதிரியார் லூர்துசாமி அவர்களின் தூண்டுதலால் பாட புத்தகங்களுடன் பொதுவான புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்துள்ளார். தனது வாசிப்பனுபவத்தை ஏழாம் எட்டாம் வகுப்பில் தொடங்கிய இவர், PUC படிப்பை பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் முடித்துள்ளார். தொடர்ந்து விலங்கியலில் இளங்கலை பட்டத்தை பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் முடித்துள்ளார். இந்த கல்லூரியில் படிக்கும்  போது மாணவர் அமைப்புகளில் பங்கெடுத்துள்ளார். தொடக்கத்தில் திமுகவில் கொள்கை பிடிப்பு கொண்டவர் ஆயினும் 1969 அறிஞர் அண்ணா  அவர்களின் இறப்புக்கு பிறகு கம்யூனிச கொள்கைகளில் விருப்பம் ஏற்பட்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகளில் பொறுப்பு வகித்து, களச்செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளார். எழுத்து முயற்சிகள் கல்லூரி மலரில் கட்டுரை எழுதுவதன் மூலம் தொடங்கியுள்ளது.

         குடும்பத் தொழிலான விவசாயத்தை தன் சொந்த ஊரில் செய்து வந்த ஈரோடு தங்கவேல் அவர்களின் இணையர் - திருமதி. செண்பகவள்ளி. சென்னிமலை குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன் கோவை ESI மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். மருமகளும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றுகிறார். இவரது மகள் உயிரித் தொழில்நுட்பவியலில் முதுகலைபட்டம் பெற்று சென்னையில் வசித்து வருகிறார். மகன் வழியாக ஒரு பேரனும், மகள் வழியாக ஒரு பேரனும் உள்ளனர்.

            தொடக்கத்தில் விவசாயப் பணிகளைச் செய்து வந்தவர் 1985 இல் ஈரோட்டில் ஜவுளி வியாபாரத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 1992 முதல் இடதுசாரி இயக்கத்தின் முழு நேர ஊழியராக பணியாற்றத் தொடங்கிவிட்டார். தொழிற்சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். தொழிலாளர் நலன்களுக்காக பல களப்பணிகளை சிறப்பாக செய்து வந்துள்ளார். சுமார் பத்து வருடங்களாக தொடர்ந்து கட்சி பொறுப்புகளை ஏற்று பணி செய்து வந்துள்ளார். 1998 இல் தமுஎகச ஈரோடு மாவட்டத் தலைவராக பணியாற்றிய இவர், தொடர்ந்து மூன்று முறை தமுஎகச மாநில துணைச்செயலாளராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஈரோட்டில் தந்தை  பெரியாரின் 125 வது பிறந்த நாள் விழாவும், தீரன் சின்னமலை நூற்றாண்டு விழாவும் மாநிலக்குழு சார்பில் சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

            தொடர்ந்த பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே தம்முடைய வாசிப்பையும் ஆய்வுகளையும் செய்து வந்துள்ளார். தோழர்.எஸ்..பெருமாள் அவர்களுடைய ஊக்கத்தின் காரணமாக புத்தகத் தேர்வினை நெறிப்படுத்தி வாசிப்பை மேம்படுத்தியுள்ளார். இவரது ஆரம்ப கால வாசிப்பு கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் படைப்புகள் வரலாற்றின் மீதும் சங்க இலக்கியத்தின் மீதும் தீராத ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதன் விளைவாக பல நூல்களை ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். மு.. அவர்களின் கதைகளும் கட்டுரைகளும் மேலும் இவரது வாசிப்பின் வேகத்தையும் ஆய்வின் எல்லையும் விரிவுபடுத்த உதவியுள்ளன..மு..அவர்களது படைப்புகள் இவரது சமூக, இலக்கிய, வரலாறு மற்றும் சமகால இலக்கியங்களையும் வாசிக்கும் ஆர்வத்தையும் தொடர் தேடலையும் ஊக்குவித்துள்ளது.

            தேடல்களும், சமூக பொறுப்புகளும் மனுநீதி ஆதிக்கம், வர்ணாசிரம கொள்கைகள் பற்றிய சிந்தனைகளைத் தோற்றுவித்து வாசிப்பின் வழியே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அதன் விளைவாக தமிழ்நாட்டின் சித்தர் மரபுகளை ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை (திருமூலர், தாயுமானவர், இராமலிங்க அடிகள் முதல் பாரதியார், பெரியார் வரை) உள்ள இலக்கியங்களைக் கொண்டு 2008 இல்சித்தர்களின் தத்துவ மரபு" என்கிற தனது முதல் நூலை வெளியிட்டுள்ளார். இதில் சித்தர்கள் காலத்தில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை பயணித்த சித்தர்களின் தத்துவ மரபுகளையும், அதிலுள்ள முரண்பாடுகளையும் ஆய்வு செய்து கட்டுரையாக எழுதியுள்ளார்.


            ஆரம்பத்தில் உரைகள் வழியாகப் பகிர்ந்து வந்த கருத்துகளை எழுத்தாக்கம் செய்யுமாறு தமுஎகச பொதுச்செயலாளர் தோழர். ஆதவன் தீட்சண்யா அவர்களும், தமுஎகச மதிப்புறு தலைவர் தோழர். தமிழ்ச்செல்வன் அவர்களும் ஊக்குவித்ததால் அவருடைய கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதத் தொடங்கியுள்ளார்.

            புதுவிசையிலும், செம்மலரிலும் கட்டுரை எழுதி வந்த இவரது பெண் உடலும் ஆளுமையும்" என்கிற சங்க இலக்கியப் பெண்கள் குறித்த கட்டுரையை பாண்டிச்சேரி பண்பாட்டு கல்லூரி பேரா. முனைவர்.புலவேந்திரன் அவர்களுடைய முயற்சியில் அக்கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இவரது நந்தன் எத்தனை நந்தனடிஎன்கிற கட்டுரை ஆறாம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை உள்ள நந்தர்களின் வாழ்க்கை குறித்த  கட்டுரையாக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக்கொண்டதிற்கிணங்க பழனி- ஆயக்குடி இரண்டு காளியம்மன் கோவிலிலும், நாமக்கல்- கொக்கராயன்பேட்டை-சிவன் கோவிலிலும்" தீண்டாமை குறித்த ஆய்வுக் கட்டுரையை களத்தில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். 2009 ஜனவரியில் பந்தப்புளி போராட்டத்தைக் குறித்தும் கள ஆய்வின் மூலம் கட்டுரையாக செம்மலர் இதழில் எழுதியுள்ளார். இவருடைய பல்வேறு கட்டுரைகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்பு நூல்களாகவும்,  இவரது ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் மூன்று நூல்களாகவும் வெளிவர உள்ளன.

வெளிவந்துள்ள நூல்

சித்தர்களின் தத்துவ மரபு

இணைய இணைப்புகள்