Jun 29, 2021

எழுத்தாளர் யாழ் தண்விகா

 தொகுப்பு : து.பா.பரமேஸ்வரி

            யாழ் தண்விகா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிவரும் பெ.விஜயராஜ் காந்தி 1979ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி திரு பெரிய கருப்பன் திருமதி கி. முனியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய சொந்த ஊர் பெரியகுளம். காந்தியடிகளின் நினைவு நாளன்று பிறந்ததால் பெற்றோர் இவருக்கு விஜயராஜ் காந்தி என்று பெயர் சூட்டியுள்ளனர். இவரின் பெற்றோர் இருவருமே ஆசிரியராகப் பணி புரிந்தவர்கள். இவரின் தந்தை ஆசிரியராகப் பணியில் இருக்கும்பொழுது காலமாகிவிட்டார். தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

         இவர் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை, மதுரை மாவட்டம் சங்கரலிங்கபுரம் மற்றும் தேனி மாவட்டம் தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி போன்றப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியையும், சங்கரநாராயணன் நினைவு நடுநிலைப்பள்ளியில் நடுநிலைக் கல்வியையும், வடுகபட்டி கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நாடார் சுந்தர விசாலாட்சி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை கல்வியையும் நிறைவு செய்தார். யாழ் தண்விகா தமது கல்லூரிப் படிப்பை மதுரை தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரியில் B.sc (Industrial microbiology) முடித்தார். பின்னர் மதுரை மாவட்டம் தே கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொலைதூரக்கல்வியின் மூலம் மேலும் பல பட்டங்களைப் பெற்றார் B.Litt, B.A, M.Sc, M.A, B.Ed, M.Phil, மற்றும் கணினித் தொழில் நுட்பப் பயிற்சிகளான DCA மற்றும் CGT பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். TPT தேர்ச்சிப் பெற்றுத் தமிழில் புலவர்  பட்டமும் பெற்றுள்ளார்.

      2004 ஆம் ஆண்டு பொம்மி நாயக்கன் பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்ற விஜயராஜ் காந்தி அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆசிரியப் பணியை மேற்கொண்டு வருகிறார். இவரின் துணைவியார் வி. மஹாலக்ஷ்மி முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  விஜயராஜ்காந்தி - மகாலட்சுமி தம்பதியருக்கு கவின் பீரீத் என்கிற மகனும் தனு சமீரா என்கிற மகளும் உள்ளனர்.

                 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவும் அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தமது மண்ணின் மைந்தர்,  ஆதர்ச எழுத்தாளர் வைரமுத்து அவர்களின் கவித்துவம் மிக்கப் பேச்சும் விஜயராஜ் காந்தி அவர்களைக் கவிதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறுகிறார்.

           அதன் விளைவாக 1997ஆம் ஆண்டு தினமலரில் இவரது முதல் கவிதை வெளிவந்தது. அதைத்தொடர்ந்து இவரது படைப்புகள் வாரமலர், தினமலர், தினத்தந்தி குடும்ப மலர், தினகரன், படைப்பு மின்னிதழ், மகாகவி சிற்றிதழ் போன்ற பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

        2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது முதல் கவிதைத் தொகுப்பான அழகியலேநூலாக வெளிவந்தது. அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சாம்பல் எரிகிறது" என்கிற கவிதைத் தொகுப்பும், 2019 ஆம் ஆண்டு மௌனமாக கடக்கும் மேகம்என்கிற தொகுப்பும், தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று நான் உன்னைக் காதலிக்கிறேன்”; “ப்பா...ப்பா..ப்பா..”; “மழை முத்தம்ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியிடப்பட்டன.

   இவரது தளம் கவிதையுடன் நின்றுவிடாமல் சிறுகதையையும் தொட்டுள்ளது. இவர் எழுதிய 'உயிர் நிலம்' என்கிற சிறுகதைக்கு 2018  இல் .சீ. சிவக்குமார் நினைவு சிறுகதைக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

           தன் தாயின் உந்துதலும் வழிகாட்டலுமே இவரை வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியதாகப் பெருமிதம் கொள்ளும் விஜயராஜ் காந்தி அவர்கள் , பள்ளிப்பருவத்தின் துணைப்பாட நூல் வாசிப்பே இவரது ஆரம்பகால வாசிப்பின் முதல் படிநிலை என்றும் அதுவே வாசிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது என்றும் கூறுகிறார். அதன் பின்னர் கதைகள்,  கவிதைகள் எனக் இவரின் வாசிப்புப் பயணம் நீண்டுக்கொண்டே போனாலும் கவிதை வாசிப்பதே இவரது ஆழ்ந்த விருப்பமாக இருந்து வருகிறது..

         எழுத்தாளர் வதிலை பிரபா அவர்கள் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவர பெரிதும் உதவியதாகக் கூறும் கவிஞர் விஜயராஜ் காந்தி அவர்கள், இவரின் படைப்புருவாக்கத்திற்குப் பின்னால் பல எழுத்தாளுமைகளின் கரங்கள்  இவரை உயர்த்தி இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

            பொள்ளாச்சி இலக்கியவட்டம் திரு இரா பூபாலன்,  திரு அம்சப்ரியா,.  திண்டுக்கல்  திரு தமிழ்பித்தன், திரு தமிழ்தாசன், திரு தமிழ்மணி, திரு உமர் பாரூக், திரு சிவாஜி, திரு இதய நிலவன், திரு திருத்தணி விசாகன்,  திரு இர. அறிவழகன், திரு அர. அகமத் இப்ராஹிம், மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேலும் சில தோழர்கள் எழுத்துலகில் புதிய படைப்புகளைப் படைக்க தூண்டுகோலாக இருந்ததாக குறிப்பிடுகிறார் திரு விஜயராஜ் காந்தி அவர்கள் .

      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தேனி மாவட்டத்தின் துணைச் செயலாளராகவும், பெரியகுளம் கிளைச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

1. அழகியலே - 2009

2. சாம்பல் எரிகிறது - 2016

3. மௌனமாகக் கடக்கும் மேம் – 2019

4. நான் உன்னைக் காதலிக்கிறேன் - 2021

5.ப்பா...ப்பா...ப்பா..- 2021

6. மழை முத்தம் - 2021

பெற்ற விருதுகளும்/பரிசுகளும்

1. எழுத்தாளர் அசோகமித்ரன் நினைவு படைப்பாளர் விருது 2017

2. .சீ. சிவக்குமார் நினைவு சிறுகதைக்கான விருது 2018

3. படைப்புக் குழுமம் மாதாந்திர சிறந்தப் படைப்பாளிக்கான விருது 2019

இணையதள இணைப்புகள்