Jun 29, 2021

எழுத்தாளர் பொன்விஜயன்

 தொகுப்பு : ம.காமுத்துரை

            முருகேசன் எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் பொன்விஜயன், தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் மிக மிகச் சாதரண வறுமைமிக்க குடும்பத்தில் 13.10.1954 இல்    வீருச்சாமிபொன்னுத்தாய் இவர்களது மூத்த புதல்வனாய் பிறந்தார். தனது இடையறாத வாசிப்பின் வழியிலும் இலக்கியத்தின்பால் கொண்ட பற்றுதலாலும் தாயின் பெயரையும் தங்கை விஜயலட்சுமியின் பெயரயும் இணைத்து  பொன்விஜயன் என தனது பெயரை தானே எழுதிக்கொண்டார். தனது தகப்பனாரை இளவயதிலேயே பறிகொடுத்தவர்.

            பொன்விஜயன் அவர்களின் இணையர் பாண்டியம்மாள். மகள்கள் ஜென்னி, பிரிய தர்சினி. மகன் ராம் குமார் இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். இவர்களின் குடும்பம் தேனியில் வசிக்கின்றனர்.

            தேனி - அல்லிநகரத்தில் பள்ளியிறுதி வகுப்பினை முடித்த இவர், தனது இரண்டு தம்பிகளையும் தானே வளர்த்தெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாலைத் தொழிலாளியாக, சாலையோரம் மிட்டாய் பிஸ்கட் பாக்கெட்களை வாங்கிவைத்து பெட்டிக்கடை வியாபாரியாக, பிழைப்பு ஓட்டியவர் அச்சகத்தில் சேர்ந்து அச்சுக்கோர்க்கும் வேலையை ஆர்வமாகக் கற்றுக்கொண்டார். அந்தப் பணியே அவரது இலக்கியப்பாடுகளுக்கு கிரியா ஊக்கியாகவும் அமைந்தது. தனக்கு மிகவும் பிரியமான கவிஞர் மு.மேத்தாவின் பாதிப்பால் இலக்கியம் கற்கத் துவங்கினார். வாசிப்பினை மூலதனமாக்கி இலக்கிய நண்பர்களுடனான தொடர்பினை இணைத்து நம்பிக்கைஎனும் பெயரில் ஒரு சிற்றிதழைத் துவங்கினார். காலங்காலமாக சிற்றிதழ்களுக்கு எப்போதும் நேரும் விபத்து நம்பிக்கைக்கும் நேர்ந்தது. ஆம்குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நின்று போனது.

            பின்னாளில் நண்பர்களது உதவியால் சிறிய அளவில் அச்சுக்கோர்ப்பு கருவிகள் மட்டும் வாங்கிக்கொண்டு வரும் வேலைகளை வீட்டில் வைத்து அச்சுக்கோர்த்து, அதனை அச்சகங்களில் கொடுத்து அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தனது சிற்றிதழுக்கு மீண்டும் உயிரூட்டினார். இப்போதுதான் அதற்கு புதிய நம்பிக்கை என நாமகரணம் சூட்டி, சிற்றிதழ் உலகில் அதற்கென ஒரு தனிப்பெரும் இடத்தினை உருவாக்கினார். ”இரக்கத்தை யாசிக்காதே, மனிதனாக இரு, நம்பிக்கையை இழக்காதே!” எனும் ஹென்றி ஷாரியரின் வாசகத்தினை ஒவ்வொரு இதழிலும் சுமந்து கொண்டு பயணித்த புதிய நம்பிக்கை. அவர் இருக்கும்வரை சுமார் எண்பது இதழ்கள் வரை வெளிவந்தது.

            அவர் தனது தொடர்வாசிப்பின் வழியே சம்பாதித்த நண்பர்களை இணைத்து, 30 -11-1978 இல் தேனி அல்லிநகரத்தில் .சேதுராமன், அல்லிஉதயன், பா.ராமமூர்த்தி இன்னும் சிலரோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இப்பகுதிக்கான முதல் கிளையை துவக்குகிறார்கள். அன்றைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தின் மாவட்ட தலைவர் கவிஞர் புத்தூரான் - செயலாளராக இருந்த .ரத்தினம் ஆகியோரது வழிகாட்டுதலில் பொன்விஜயன், கிளைசெயலாளராகவும், மாவட்டச் செயற்குழுவிலும் அங்கம் வகிக்கிறார். செயல்பட ஒரு தளம் கிடைத்ததும் அவரது செயல்பாடு மேலும் விரிகிறது. மாதந்தர கூட்டங்கள் பதினைந்துநாள் கூட்டம் என அதிரடியாய் விரிகிறது. அருகிலுள்ள ஊர்களில் கிளைகள் அமைக்கவும் முயல்கிறார்கள்.

            ஒவ்வொரு மாதாந்தரக்கூட்டங்களிலும் படைப்பரங்கம் நித்திய பேசுபொருளாக இடம் பெறும். கிளை உறுப்பினர்களை வாசிப்புப்பணியில் ஈடுபடுத்தி அவர்களைப் பாதித்த அந்தந்த மாதத்திய வாசிப்புகளைப் பேச வைக்கவும், புதிய புதிய படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் கவிதை, சிறுகதை என எழுதிவரச்செய்து அவைகளை  விமர்சித்து மெருகேற்றுவதும் தலையாயப் பணியாக நடந்து வந்தது. அந்தநேரத்தில் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லோரும் தங்களது படைப்புகளை  தாளிலோ நோட்டுப்புத்தகத்திலோ எழுதிக்கொண்டு வந்து வாசிக்கும்போது, பொன்விஜயன், தனது ஒவ்வொரு படைப்பினையும் நினைவுகளில் இருந்தே ஒப்பிப்பார். ஆச்சர்யமாக இருக்கும் கவிதைகளைக்கூட மனப்பாடம் செய்து ஒப்பிக்கலாம். ஆனால் நானறிந்த வகையில் ஒரு கூட்டத்தில் அவர்பகலில் ஒரு இருட்டுஎனும் சிறுகதையினை வாசிக்கிறார்.(சொல்கிறார்). அப்போது மின்சாரம் தடைப்படுகிறது. ஆனால் அவரது வாசிப்பு தடைபெறவில்லை.  அத்தைகைய ஆற்றல்மிகு தோழர். நிச்சயம் இன்றுவரை அவர் உயிரோடிருந்தால் மிகப்பெரும் ஜாம்பவான்களுக்கு ஈடுகொடுப்பவராக இருப்பார்.

            அப்போது நிதர்சனா நாடக மன்றம் ஒன்றைத்துவங்கி நினைவுகளே சின்னங்கள், சொன்னா கேக்க மாட்டீங்க, யார்குற்றவாளி?  போன்ற சமூக மேடை நாடகங்களை எழுதி இயக்கி உள்ளார். அதன் வழியே எஸ்.எல்.சுப்புராஜ் போன்ற நடிகர்கள் அமைகிறார்கள். ஆனாலும் அவருக்கான அடையாளம் புதிய நம்பிக்கைதான்.

            இப்பத்திரிகையில் இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஜெயமோகன் துவங்கி, செ.யோகநாதன், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், பிரளயன், ஹெச்.ஜி.ரசூல், தேனி சீருடையான், .காமுத்துரை, அல்லிஉதயன் எனும் படைப்பாளிகளது படைவரிசை அணிவகுத்து  தங்கள் படைப்புகளை எழுதியுள்ளனர். அஸ்வகோசின் நாடகம் குறித்த தொடர் கட்டுரை ஒன்று வெளியானது. தவிர, கோணங்கியுடன் இணைந்து மார்க்வெசின் நூற்றாண்டின் தனிமை நூலுக்கான சிறப்பிதழையும், தகழி சிவசங்கரன் பிள்ளையின் சிறுகதைகள் குறித்த ஒரு சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறார்.

            காசுகிடைக்குமெனில் விபச்சாரத்திற்கு தனது எழுத்துக்களை இரையாக்காத யோக்கியமான முற்போக்காளர்களுக்கு என்னால் இயன்ற எளிய ஒத்துழைப்பு என்ற பிரகடனத்துடன் பாவெல் மற்றும் சக்தி பதிப்பகங்களை உருவாக்கி, பல புத்தகங்களையும் பதிப்பித்துள்ளார். அவருடைய நண்பர் ந.சேதுராமன் புதிய நம்பிக்கையின் துணையாசிரியராகவும், பாவெல் பதிப்பகத்தின் இணை பதிப்பாளராகவும் பணியாற்றினார்.

            குறிப்பாக கரிச்சான்குஞ்சுவின் காலத்தின் குரல் நாடகம், பொதியவெற்பன், மா.வளவன் தொகுத்த கே.டானியலின் இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக்குரல் கட்டுரைத் தொகுதி,  ஞாநியின் பழையபேப்பர் கட்டுரைகள், சாந்தா தத்தின் சிறுகதை தொகுப்பு, பிருந்தாசாரதியின் கவிதைத் தொகுப்பு, பிரகாஷின் தொகுப்பில் வந்த தேனுகாவின் வண்ணங்கள் வடிவங்கள் எனும் தமிழின் முதல் ஓவிய விமர்சன நூல் , விக்கிரமாதித்யனின் கவிதைத்தொகுப்பு என நூல்களை பொன் விஜயன் பதிப்பித்துள்ளார். இவைகள் கைக்குக் கிடைத்தவை மட்டும்தான். இவை போக இன்னும் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

            தமிழ் இலக்கிய உலகில் அன்றைய நவீன இலக்கியவாதிகளுடனான தொடர்பு இவருக்கு பெரிய மரியாதையினை தந்தது. .மார்க்ஸ், பொதியவெற்பன், பெ,மணியரசன், தணிகைச்செல்வன், இவர்களோடு மட்டுமல்லாது திரைக்கலைஞர்கள் நாசரோடும், வாகை சந்திர சேகரோடும் தொடர்பில் இருந்ததாக நண்பர்கள் கூறுகிறார்கள்.

            ஒரு கட்டத்தில் குடும்பத்தையே சென்னைக்கு இடம்பெயர்க்கும் சூழல் உருவாகிறது. சென்னையில் கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் சந்தில் ஒரு சின்னஞ்சிறு வீட்டில்ஜென்னிராம்அச்சகம் ஒன்றை துவ்ங்கினார். சொந்த ஊரில் நடத்தியது போல வெறும் அச்சுக்கோர்ப்பது மட்டும் செய்யும் பணியினை நம்பியும், சினிமா மீதான ஒரு கண்ணோடும் வாழ்ந்துவரும் வேளையில், எந்தவொரு சமரசத்திற்கும் நிற்காத இலக்கியவாதியான இவரால் பொருளாதாரத்தில் வெற்றிகாண முடியவில்லை. ஆனாலும், “புதிய நம்பிக்கை” தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

            எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துவதென்பது தனக்குத்தானே சவக்குழியைத் தோண்டிக்கொள்கிற பிரியவதம் நிறைந்த வாழ்க்கைமுறை . . . . அப்படியாக நான் சந்தித்த மனிதர்களில் ஒருவர் பிரமிள், மற்றொருவர் விக்கிரமாதித்யன்,  இன்னொருவர் கோபிகிருஷ்ணன் பிறகு பொன்விஜயன்.” எனக்கூறும் அவரது நண்பர் கணேஷன் குருநாதன் தொடர்ந்த தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

புதியநம்பிக்கையின் மூலம் அவருக்கு வருமானம் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு இதழும், நூறு பிரதிகள் விற்றிருந்தாலே பெரியவிசயம். தன்னிடம் அச்சுக்கோர்ப்பு வேலைபார்த்த பெண்களுக்கு ஏதேனும் வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து இதழை அச்சடித்து வந்தாரோ என்று இப்போதும் தோன்றுகிறது. (கணேஷன் குருநாதன் 13-05-2020. தமிழ்விங் இணைய இதழ்.)

            எனது முதல் புத்தகத்தை பொன்விஜயன்தான் வேர்கள் பதிப்பகத்துடன் இணைந்து பதிப்பித்தார். அவர் இலக்கியம் மட்டுமின்றி சமூக அரசியல் பார்வையுடன் வெளியிட்ட புதியநம்பிக்கை இதழையும், பல புத்தகங்களையும் அவரே அச்சுக் கோர்த்தார். தமிழில் சிறுபத்திரிகை நடத்தி இலக்கிய மேம்பாட்டுக்காக தன் சொந்த வாழ்க்கையைக் காவு கொடுத்தவர்கள் பட்டியலில் பொன்விஜயனுக்கு நிச்சயமாக முக்கியமான இடமுண்டு.“ என்று ஞாநி தன்னுடைய சைக்கிள் கலாச்சாரம் பற்றிய பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.

            நான் எழுதிய கதைகளில் அதிகமாக பிரபலமானது மாடன்மோட்சம்.  அது இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட புதியநம்பிக்கை வெளியிட்ட பத்திரிக்கைஎன ஜெயமோகன் தன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். என்பது போன்ற பதிவுகள் பொன்விஜயனின் பணிக்கான சான்றாகும்.

            கவிஞர் விக்கிரமாதித்யன் நவீன கவிதை எனும் கவிதைகளுக்கான இதழ் நடத்தி வந்தார். அதனை அச்சடித்துத்தரும் பணியினை பொன்விஜயன் மேற்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் விக்கிரமாதியன் அப்பத்திரிகையினை தன்னால் தொடரமுடியாது என விட்டுவிட, தனது தனித்த பத்திரிக்கையான புதியநம்பிக்கையுடன்  சேர்த்து அதனையும் கொஞ்சநாள் பொன்விஜயன் நடத்திவந்தார் என கணேஷன் குருநாதன் குறிப்பிடுகிறார். சபைக்கு வந்தவை இவை இவர் தனது அச்சுக்கோர்க்கும் பலகையை மட்டும் வைத்துக்கொண்டு இன்னும் எத்தனையோ வேலைகள் செய்திருக்கலாம். அவைகள் அவரது இன்னும்பல இலக்கிய நண்பர்கள் வழியாக தெரியவரும்.

            அவரது வயிற்றுப்பாட்டிற்கு மட்டும் இடையூறு இல்லாமல் ஏதேனும் ஒரு அரசு வேலையோ, நிரந்தரமான வருமானமோ கிடைத்திருப்பின் அவர் இன்றுவரை உயிர் வாழ்ந்திருப்பார் இலக்கியச் சாதனைகள் பலவும் நிகழ்ந்திருக்கும். அழகான, கம்பீரமான தோற்றமும் தெறிப்பான பேச்சும் வாய்க்கப்பெற்ற பொன்விஜயன் பல இலக்கிய கர்த்தாக்களைப் போலவே தனது நாற்பத்து நான்காம் வயதிலேயே  1998 இல் வயிற்று உபாதையினால் அவதிப்பட்டு சென்னை ஸ்டான்லி பொது மருத்துவமனையில் காலமானார்.

            பொன்விஜயனின் கவிதைகளும் கதைகளும் எவருடைய நினைவிலும் தற்போது இருக்கலாம் இல்லாமலும் போகலாம் ஆனால், அவரது புதிய நம்பிக்கை இதழ் பல எழுத்தாளர்களுக்கு களமாக விளங்கியது. அவரது இலக்கியப் பங்களிப்பு அதுவும் ஒரு சிறு பத்திரிகையாளனாக அவர் தனித்து நின்றது மிகவும் குறிப்பிடத்தக்கது.,

பொன்விஜயனின் தனித்த படைப்புகள்

பூமிக்காக்கைகள் (கவிதைத்தொகுதி)

தவம் ( சிறுகதைத் தொகுதி)

ஆறறிவுச் சந்தை (நாவல்)

நினைவுகளே சின்னங்கள் (நாடகம்)

ஒரு மேதையின் ஆளுமை (கட்டுரை)

அச்சில் இருந்த படைப்புகள்

நித்தம் பல போதி மரங்கள் (கவிதைகள்)

ஆனந்தவேர்வை (சிறுகதைகள்)

வாழ்க்கை என்றொரு . . .(நாவல்)

பொன்விஜயன் தொகுத்த நூல்கள்

மண்ணைப்பாடும் மானுடப் பறவைகள் (பலரது கவிதைத் தொகுப்பு)

நம்பிக்கைக் கதைகள் (அறுவரது சிறுகதைத் தொகுப்பு)