Jun 10, 2021

எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன்

 தொகுப்பு: ரா. கிருஷ்ணவேணி 

            எழுத்தாளர் சக.முத்துகண்ணன் 1985ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர். மாற்றுக் கல்விச் செயல்பாடுகளில் ஆர்வம் உள்ள அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். ஆசிரியர், மாணவர் உறவில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களை சுவாரசியமாகவும், நுட்பமாகவும் எழுதி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர். 2014 இலிருந்து அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார்.

            இவரது தந்தை பெயர் கருப்பசாமி தாயார் பெயர் சகுந்தலா. கண்மணி, விஜயா முத்துலட்சுமி, ஜோதி என்று 4 சகோதரிகளுடன்ஐந்தாவதாக பிறந்தவர்தான் சக. முத்து கண்ணன். மனைவி பெயர் அங்காளீஸ்வரி என்ற கௌசல்யா அவர்களுக்கு அமு.வெண்பா என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

            பள்ளிச் சூழல் இன்றுவரை எனது இன்ப கூடம் என்று கூறிவரும், இவர் என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மன் துவக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்த போது அவர் முதல் வெளியுலக காற்றை சுவாசிக்க ஆரம்பித்து ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என்.எஸ். கே பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். அங்கு கதிரேசன், செல்வன், ராஜாமணி ஆகிய ஆசிரியர்கள் மூவரும்தான் அவரை ஊக்குவித்தும், முன்னோடியாக இருந்தும்  இன்று அவர்  எட்டியுள்ள ஆசிரிய ஆளுமையை தீர்மானித்திருக்கிறார்கள்.

            அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் சின்னசாமி ஆசிரியரின் வழியே முதன்முதலாக நூலக அட்டை வழங்கப் பெற்று, தன் புத்தக வாசிப்பை துவங்கி வைரமுத்து அவர்களின் புத்தகத்தின் தீவிர ரசிகராக வாசிப்பு பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். இவர் முதன்முதலாக வாசித்த நூல் வைரமுத்துவின் "எல்லா நதியிலும் என் ஓடம்" அதைத்தொடர்ந்து தினமலர் பத்திரிக்கை நடத்திய வாசிப்பு அனுபவம் கட்டுரை போட்டியில் பரிசாளாராக தேர்வு பெற்று அதன் அடிப்படையில் மேலும் அவருடைய வாசிப்பு பயணம் புத்தகத்தை தேடித்தேடி வாங்கி படிக்கும் அளவுக்கு தொடர்கிறது.

            பள்ளி வாழ்க்கையை அடுத்து உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பிரிவில் சேர்ந்து கல்லூரி வாழ்வை தொடர்ந்திருக்கிறார். அக்கல்லூரியின் தமிழ்த் துறை ஜாம்பவான்களும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களுமான பேராசிரியர்கள் முருகன், அப்துல் சமது இவர்களது வகுப்பு மேலும் தமிழ் இலக்கியத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த, வாசிப்பை நவீன இலக்கியத்தின் பால் வளர்த்துக்கொண்டார். தனது கூச்ச சுபாவம் காரணமாக பலமுறை கதைகளை தானே எழுதி யாரிடமும் காட்டுவதற்கு கூசி தானே கிழித்துப் போட்டு விடுவாராம்.

            அடுத்து கோவை கற்பகம் கல்லூரியில் படித்திருக்கிறார் பள்ளிப் பருவத்திலேயே புதுமைப்பித்தன், பிரபஞ்சன், வண்ணதாசன் போன்றோரை வாசிக்கத் தொடங்கி இருந்ததால் விகடன் வழி அறிந்த சுஜாதா நாவல்கள் என கல்லூரி வாழ்க்கையில் வாசிப்பு மேலும் விரிவடைந்தது. செமினார் மேடைப் பேச்சு, கவிதை, கட்டுரை, மேடை நாடகம்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, காலேஜ் மேக்ஸின் என்று அவருடைய கூச்சம் உடைபட்டு வாசிப்பின் தேவை மலர்ந்திருக்கிறது.

            படித்து முடித்து கூடலூர் ராஜாங்கம் மேல்நிலைப்பள்ளியில்  விலங்கியல் தற்காலிக பணி ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். இக்காலகட்டத்தில் நிறையஓய்வு நேரம் கிடைத்ததால் வண்ணநிலவன்,சு.வேணுகோபால், அழகிய பெரியவன் என வாசித்து, நூலகர் சிவராமன் அவர்களோடு மணிக்கணக்காக வாசிப்பைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாராம். அவருக்கு அவர் நண்பன் ஜெகநாதன் வழங்கிய "அரசியல் எனக்குப் பிடிக்கும் "என்ற படைப்பும், பேரா.மாடசாமி அவர்களின் "எனக்குரிய இடம் எங்கே" என்ற இரண்டு நூலும் அவருடைய ஒட்டுமொத்த திசையையும் மாற்றியிருக்கிறது.

            அதைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் படைப்பையும் வாசிக்க வாசிக்க மனது இடது பக்கமாக திரும்ப ஆரம்பித்திருக்கிறது. தொடர்வாசிப்பும், தேனி சுந்தர் அவர்களின் சந்திப்பும் தான் இன்று சிலேட்டுகுச்சி என்ற கட்டுரையை எழுத கூடிய ஊக்கத்தை அளித்ததாகக் குறிப்பிடுகிறார்.

            தமுஎகச செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டபின் நிறைய எழுத்து ஆளுமைகளின் தொடர்பு கிடைத்திருக்கிறது. தோழர் அய். தமிழ்மணியோடு இணைந்து நிறைய நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார்கள்.

            அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று கல்வி உரிமைச் சட்ட கலைப் பயணத்தை மாநிலம் முழுவதும் நடத்தியுள்ளார். அதையொட்டி தேனி மாவட்டத்தில் நாடகக்குழு வோடு இரண்டு மாதம் தொடர்ந்து 110 இடங்களில் நாடகம் நடத்தியுள்ளார்கள். பல கூட்டங்களிலும் நூற்றுக்கணக்கான மக்களிடம் கல்வி உரிமை குறித்து உரை நிகழ்த்தியுள்ளார்.

            விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தினை தொடங்கி, 5 மாணவர்களை குழுவாகக் கொண்ட அவருடைய துளிர் இல்ல ஆய்வுக்குழு ஜெய்ப்பூரில் நடந்த தேசிய குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்று "இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய விருது" பெற்றிருப்பது அவரது களப்பணியில் குறிப்பிடத்தக்கது.

            புதிய ஆசிரியன் இதழில் வெளியான (குமார் எம்.எஸ்.ஸி .பி.எட்) என்ற    சிறுகதைதான் இவருடைய முதல் பிரசுரம். "நீங்களும் உங்க பள்ளிக்கூடமும்" என்ற கதையும் அதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.

            வாசிப்பை பரவலாக்க வேண்டுமென்கிற எண்ணத்தால் அவரின் திருமண அழைப்பிதழை 64 பக்க நூலாக வடிவமைத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுத்து சிறப்பித்திருக்கிறார். வேலை நிமித்தமாய் அரியலூருக்கு சென்றபோது வகுப்பறை அனுபவங்களை முகநூலில் நீண்ட கட்டுரைகளாக எழுத ஆரம்பித்து, அதன் விளைவாக அவரது நண்பர் ஆதவன் அவர்கள் பணிபுரிந்த புதிய வாழ்வியல் இதழிலிருந்து பள்ளிக்கல்வி கட்டுரைகளாக எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

            பேராசிரியர் ரபீக் உடனான நட்பின் ஊக்குவித்தலால் படைப்பு மனம் குறித்து நிறைய கலந்துரையாடி 2018 தமுஎகச நிகழ்த்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் "அவனே சொல்லட்டும்" என்ற அவர் எழுதிய முதல் சிறுகதை பரிசு பெற்றிருக்கிறது. அந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த தமிழ்ச்செல்வன் தோழரிடம் பரிசு பெற்றது மிக நெகிழ்வான தருணமாக கூறுகிறார். அய். தமிழ்மணி தோழரின் முயற்சியில்தான் "சிலேட்டுகுச்சி" கட்டுரை நூல் ஆவதற்கான வாசலைத் திறந்துவைத்ததாக குறிப்பிடுகிறார்.

            சிலேட்டுகுச்சிகட்டுரை வாசிப்பு பரவலாக்கப்பட்டு தமுஎகச, அறம்கிளை "அகவிழி" அந்நூலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, அனைவருடைய விமர்சன கருத்துக்களும் மெய்சிலிர்க்க வைத்ததாக குறிப்பிடுகிறார். தமுஎகசவில் 2011 - 2014 காலங்களில் "குயில் தோப்பு" நிகழ்ச்சிதான் கவிதை வாசிக்க வைத்தும், எழுத வைத்தும்  அறிமுகப்படுத்தியது எனக் குறிப்பிடுகிறார்.

            தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர், அறிவியல் இயக்க கம்பம் வட்டார கிளைச்செயலாளர், கல்வி உரிமை சட்ட கலைப்பயண தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், விக்ரம் சாராபாய் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர், விழுது இதழின் ஆசிரியர் குழு என பல பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்தோடு எழுத்துகளைத் தொடர்கிறார் ச.. முத்துக்கண்ணன்.

வெளிவந்த நூல்

சிலேட்டுக்குச்சி கட்டுரைகள்

பரிசு மற்றும் விருதுகள்

1.       போடி மாலன் சிறுகதைப் போட்டியில் சிறந்த சிறுகதைக்கான பரிசு

2.       ஆசிரியப் பணியைப் பாராட்டி சர்.சிவி ராமன் விருது, அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. 

3.       அரசு பள்ளிகளை சீரமைக்கும் பட்டாம்பூச்சிகள் அமைப்புடன் இணைந்து விகடன் விருது.

இணைய இணைப்புகள்