Jul 2, 2021

எழுத்தாளர் கூ. தங்கேஸ்வரன்

 தொகுப்பு  பி. சரஸ்வதி

            கவிஞர், சிறுகதையாளர், மொழிபெயர்ப்பாளர், மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர், சக படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வாசகர் ன்ற பன்முகத் தன்மைகளோடு தேனி மாவட்டத்தில் பச்சை கூமாச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் எழுத்தாளர் கூ.தங்கேஸ்வரன் அவர்கள். இவர் மனைவி அமுதா தேனியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு  இரண்டு மகன்கள்.

            23-4-1970 இல் கூடலிங்கம் மற்றும் குருவம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரி. பிறந்த ஊர் பழைய மதுரை மாவட்டம் (தற்போது விருதுநகர்) கலிங்கப்பட்டி. தற்போது தேனி மாவட்டம் சின்னமனூரில் வசிக்கிறார். தந்தை ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர்  மற்றும் முன்னாள் இராணுவ வீரர். 

            தங்கேஸ்வரன் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சீல்நாய்க்கன்பட்டி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்,  கூமாப்பட்டி ஆகிய சிற்றூர்களில் பயின்றார். பி.. (ஆங்கிலம்), எம்.. ஆங்கிலம், பி.எட்.. எம்.எட்., எம்.ஃபில்., எம்.. (கல்வியியல்) முதலான பட்டப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளார்.

            தன்னுடைய அம்மாவின் தந்தையாரான கூடான்டி தாத்தா அவர்களின் மூலமே வாசிப்பு பழக்கம் அவருக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே இலக்கியத்தின் மீதான ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

            உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது தமிழ்வாணன் அவர்களின் கதையின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, அதன்பின்பு  நவீன ஆங்கிலக் கவிதைகள், கதைகள் என அவருடைய வாசிப்பு நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. தன்னுடைய பதினைந்தாவது வயதில் நண்பன் ஜெயக்குமாருடன் இணைந்து கவிதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

            ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கவிதைகள், மகாகவி ஜான்மில்டனின் காப்பியங்கள், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் கீட்ஸ் டி.எஸ். எலியட், டபிள்யூ வீட்ஸ், டபிள்யூ.ஹெச். ஆடன், டி.ஹெச். லாரன்ஸ், ஜேன் ஆஸ்டின் போன்ற அத்துனை படைப்பாளர்களும் இவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் என்றும் இதனால் அதுவரை பார்த்திராத அற்புதமான ஒரு உலகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பதிவு செய்கிறார்.

            கல்லூரியில் படிக்கும் காலங்களில் தமிழ்ப் பேராசிரியர் .இராமச்சந்திரன் அவர்களின் தூண்டுதலால் தமிழில் முறையாக கவிதை புனைய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டதுடன், கவிக்கோ புத்தகங்கள்,  நா.காமராசன்,   வைரமுத்து,  மு.மேத்தா ஆகியோரின் கவிதைகளை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. கல்லூரி ஆண்டு மலருக்காக கவிவேந்தர் மு.மேத்தா அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது.

            நகுலன், பிரமிள், மனுஷ்ய புத்திரன், பிரான்ஸில், கிருபா, தேவதேவன், தேவ தச்சன் என கவிஞர்களும் புதுமைபித்தன், ஜெயகாந்தன், குபரா, கு.அழகிரிசாமி தொடங்கி இன்று ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என புனைவு எழுத்தாளர்களும் அவர் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.

            தற்போது தேனி மாவட்ட தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினராகவும் சின்னமனூர் கிளைச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். சின்னமனூரில் செந்தமிழ் இலக்கிய மன்றம், நூலக வாசகர் மன்றம் மற்றும் குறள் வாசிப்பு குழு என பல இலக்கிய அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றுகிறார். தேனியில் புலவர் இளங்குமரன் அவர்கள் நடத்தும் வாசிக்கலாம் வாங்க, வையை தமிழ்ச்சங்கம் போன்ற இலக்கிய அமைப்புகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

            ஒவ்வொரு கவிதையும் உயிர்ப்புடன் இருக்கவேண்டும். எதிர்பாராத கணத்தில் ஆரம்பித்து எதிர்பாரா இடத்தில் முடியவேண்டும். ஆனால் வாசிப்பவரின் மனதில் முடிவற்று தொடரவேண்டும்என்று கவிதைக்கு இலக்கணம் வகுக்கிறார்.

            கலீல் ஜிப்ரானின் கண்ணீரும் காதலும் கலக்கமும் குமுறலும் நிறைந்த 'முறிந்த சிறகுகள்" உலகெங்கும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கோடிக்கணக்கான வாசகர்களால் படித்துப் போற்றப்பட்ட கவிதைப் படைப்பாகும். இருபதாம் நூற்றாண்டில் புதுக்கவிதை தோற்றமுறுவதற்கு அடித்தளமாக விளங்கிய படைப்புகளுள் இந்நூலும் ஒன்றாகும். இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்திருப்பது, அவரை ஒரு தலைசிறந்த கவிஞராக அடையாளப்படுத்துகிறது.

            தமிழுக்கு மேலும் ஒரு சிறந்த மொழியாக்கம் கிடைத்துள்ள தென்றும் வழக்கு மொழியில் மொழியாக்கம் செய்யும் வல்லமை பெற்றவர் தங்கேஸ்எனவும் மறைமலை இலக்குவனார் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

            மனிதர்கள் தங்கள் குறுகிய சிந்தனைகளை விட்டு பண்பட்டு சிந்திக்க வேண்டும். மனிதனின் ஆகப்பெரிய பொக்கிஷமே அவனது சிந்தனைதான். அது அறிவியல் சிந்தனை, பகுத்தறிவு சிந்தனை, ஆன்மீகச் சிந்தனை என எவ்வகைப்பட்டதாக இருந்தாலும் அதில் அன்பும் நெகிழ்வும் விழிப்புணர்வும் கலந்திருக்கவேண்டும்என்பதே அவரின் இலக்கியப் பார்வை.

வெளிவந்துள்ள படைப்புகள்

தங்கேஸ் கவிதைகள் 2018

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் 2019 (மொழி பெயர்ப்பு)

பெற்றுள்ள விருதுகள், பரிசுகள்

# படைப்புக் குழுமத்தின் கவிச்சுடர் விருது

# சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

# கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த தின கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு

# ஹைவி பீவி அம்மையார் நினைவு சிறுகதை போட்டி - உயிர்த்திசை கவிதைக்கான மூன்றாம் பரிசு

# ஊலழள இணையவழி குழுமம் - இணையவழி பாடல் போட்டியில் சிறந்த பாடலாசிரியர் விருது - பத்து முறை

# ஊலழள இணையவழி குழுமம்  வழங்கிய இசைகவி விருது

# நிலா முற்றம், செந்தமிழ் சாரல் மற்றும் தமிழ் பட்டறை இணைய வழி குழுக்கள் நடத்திய கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு

# தமுஎசக நடத்திய போடி மாலன் சிறுகதை போட்டியில் சிறந்த சிறுகதைக்கான பரிசு

இணைய இணைப்புகள்