Jul 3, 2021

எழுத்தாளர் சோழ.நாகராஜன்

 தொகுப்பு : பா . தீபா லட்சுமி

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பாடகர், கலைவாணர் புகழ் பரப்புநர், வீதி நாடகக் கலைஞர், புகைப்படக் கலைஞர், சினிமா ஆர்வலர் என பன்முகத்தன்மைகள் கொண்டவர் - எழுத்தாளர் சோழ நாகராஜன்.

கவிதைகள், கட்டுரைகள், கள ஆய்வுக் கட்டுரைகள், கலை - இலக்கியம், அரசியல் உள்ளிட்ட துறைகளின் ஆளுமைகள் பலரையும் நேர்காணல்கள் செய்துள்ள அனுபவம் கொண்ட ஊடகவியலாளர் சோழ.  நாகராஜன் அவர்கள்    மதுரை மாவட்டத்தில்     சோழவந்தான் அருகிலுள்ள தென்கரை எனும் சிற்றூரில் பிறந்தார்.

இவரின் தந்தை மறைந்த க.சு. இராமசுவாமி வங்கி அதிகாரி. தாய் விசாலாட்சியம்மாள் சிறந்த வாசகர், தமிழ்ப் பற்றாளர். பிறந்த ஊர் சோழவந்தான் என்பதைத் தன் பெயருடன் இணைத்து சோழ. நாகராஜன் ஆனார். அதே ஊரைச்சேர்ந்த பழம்பெரும் நடிகர் பாடகர் டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் உறவுக்காரரான சோழ. நாகராஜன் மூன்று திரைப்படங்களில் முகம் காட்டியுள்ளார்.

தன் சிறுவயது முதலே கலைவாணர் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர். கலைவாணர் மேல் கொண்ட பற்றுதலால் அவரைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதில் மிக முயற்சி எடுத்து கலைவாணரின் உறவினர்கள்,  நண்பர்கள், அவருடன் நடித்த கலைஞர்கள் என்று பலரையும் சந்தித்து அவரது வாழ்க்கைச் செய்திகளைச்  சேகரித்தார். அவை இக்கால இளைஞர்களைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக "இசைப் பேருரை"  எனும் நிகழ்வை கலைவாணரின் நூற்றாண்டாம் 2008 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். அந்நிகழ்ச்சியில் கலைவாணரின்  பாடல்களைப் பாடி, கலைவாணரின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கதைபோல் விவரிக்கின்றார். இவரின் நிகழ்ச்சியின் இசைக் கலைஞர்கள் அனைவரும் பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்.

இந்திய அரசின் தொலைக்காட்சியான பொதிகை தயாரித்து ஒளிபரப்பிய கலைவாணர் ஆவணப்படத் தொடரை எழுதிய பெருமை இவரைச் சேர்ந்தது. தமிழின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது.


இதுவரையில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஊர்களிலும், டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், ஓமன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிளும் கலைவாணரின் புகழைப் பரப்புகிற பணியினைச் செய்துள்ளார்.

மகாகவி  பாரதியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தந்தை பெரியார் மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டுள்ளார். இவ்விருவரையுமே தனது "ஞானத் தந்தையர்" - என்று கூறுகிறார். பெரியாரின் அந்திமக் காலத்தில் திருச்சியில் அவரது பிரசங்கங்களை நேரில் கேட்டு, ஓடிப்போய் அவரது கரங்களைப் பற்றிக்கொண்ட சின்ன வயதுச் சம்பவங்களின் கதகதப்பை இன்னமும் உணர்ந்து நினைவுகூர்கிறார்.

சிறுவயதிலேயே தந்தை பெரியாரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றவர் சோழ. நாகராஜன். அவர்  பள்ளியில் படிக்கிற காலத்தில் நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. அது எம்.ஜி.ஆர். ஆட்சி காலம். அப்போது சக மாணவத் தோழர்களை இணைத்துக்கொண்டு திருச்சி வீதிகளில் போவோர் வருவோருக்கெல்லாம் பல நாட்கள் ஷூ பாலீஷ் போட்டு, அதனால் கிடைத்த பணத்தை முதலமைச்சர் வறட்சி நிவாரண நிதிக்கு அனுப்பினார். இந்த அனுபவம் அவருக்கு சமூகப் பணியில் நாட்டத்தை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக்குக்கு எதிரான மக்கள் இயக்கம் போன்றவற்றை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

உதகை அரசு கலைக் கல்லூரி மாணவரான இவர் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர். தாய்மொழியாம் தமிழ் மொழிமீது மிகுந்த பற்று கொண்ட இவர் தமிழைப் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் மிகமிக அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

தற்போது செம்மலர் இலக்கிய இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றும் சோழ. நாகராஜன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'புதிய ஆசிரியன்' எனும்  பல்சுவை இதழில் எழுதிவருகிறார். மேலும் சில சிற்றிதழ்களிலும், இந்து தமிழ், தினமணி போன்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது எழுதுகிறார்.

தழல் பதிப்பகம் எனும் சிறிய பதிப்பு முயற்சியின் மூலம் இளம் படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிடும் பணியினையும் செய்துவருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1) வெறும் கோழிகளல்ல... (கவிதைகள்),

2) ரொம்ப தூரமில்ல... (நாட்டுப்புறப் பாடல்கள்),

3) சினிமா: சில மனிதர்களும் சில சர்ச்சைகளும் (கட்டுரைகள்),                     

4) அவர்தான் கலைவாணர் (வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்).

பெற்ற விருதுகள், பரிசுகள்

1. இலயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் வழங்கிய வீதி விருது- 2019;

 2. மதுரை யாதவர் கல்லூரி - தெ.நாகேந்திரனார் கட்டளை விருது;

3. இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு வழங்கிய 'தமிழ்ச் சுடர்' - 2018 விருது;

4. ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை வழங்கிய 'கலைவாணர் கொள்கைச் செம்மல்' விருது;

5. புதுச்சேரி கவிதை வானில் வழங்கிய 'சமுதாய இலக்கியச் சுடர்' விருது;

6. மதுரை நிலா இலக்கிய மன்றம் வழங்கிய 'பாடும் கலைநிலா' விருது.

இணைய இணைப்புகள்