Jul 28, 2021

எழுத்தாளர் என்.நன்மாறன்

 தொகுப்பு : வீ.ஜெகனாதன்

            "எதிர்காலம் பட்டுப் போய்விடாது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எதிர்காலத்தை உருவாக்குவது நிகழ்காலம்தான். எதிர்காலத்திற்கான திட்டமிடுவதும் முன்னேறுவதும் அதை நோக்கி பயணிப்பதும் நிகழ்கால மாந்தர்களுடைய பணியாக இருக்க வேண்டும்"  என்று அழுத்தமாக சொல்லும் இராமலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட தோழர் நன்மாறன் இடதுசாரி சிந்தனையாளர்.

            71 வயதைக் கடந்த தோழர் நன்மாறன் வே.நடராசன் - குஞ்சரத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக மதுரையில் பிறந்தவர். இவரது இணையர் என்.சண்முகவள்ளி. என்.குணசேகரன், என்.இராசசேகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

            களச்செயல்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக விளங்கும் தோழர் நன்மாறன் அவர்கள் 2001, 2006 என இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறார்.

            மதுரை அழகரடியில் ஆறுமுகம் பிள்ளை பள்ளி யில் (தொந்தி வாத்தியார் பள்ளி) தன் பள்ளிப்படிப்பைத் தொடங்கி, கல்லூரி படிப்பையும் முடித்து, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றியவர். நல்ல எண்ணம் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு வருவதற்கான தகுதி  எனக் கூறும் நன்மாறன் அவர்கள் தான் செய்து வந்த காவல்துறை பணியை விட்டு விலகி இலக்கிய கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, தமுஎகச கலை  இரவுகள் என தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டவர்.

            தந்தை வே.நடராசன் அவர்கள் பஞ்சாலை தொழிலாளி. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.  கட்சியின் மீதான அடக்குமுறை காலங்களில் விசாரணைக் கைதியாக மதுரைச் சிறையில் இருந்தவர்.  லாவணிப் பாடல்கள், தெம்மாங்கு, அழகர் வர்ணிப்பு மற்றும் சில திரைப்பட பாடல்களை அட்சரம் பிசகாமல் டேப் என்னும் கருவியை இசைத்தபடி பாடுவதில் வல்லவர்.

            சோவியத் நாடு’, ‘தாமரைஆகிய இதழ்களை சந்தா கட்டி வீட்டிற்கே வரவழைத்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய தந்தையார், மதுரை மாவட்ட மத்திய நூலகத்தையும் இவருக்கு அடையாளம் காட்டினார்.  தொடர் வாசிப்பின் மூலம் மு.., அகிலன், கல்கி, பி.எஸ்.ராமையா, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன் போன்ற பலரின் எழுத்துகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

            மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நூலகம் சென்று படிக்கும் பழக்கம் ஏற்பட்டதால், தான் படித்த செய்திகளை, கதைகளை பள்ளியில் வகுப்பில் சக மாணவர்களிடம் வந்து விவரித்துச் சொல்லுவார். அவ்வாறு சொல்லிப் பழகியதே தன் பேச்சுக் கலைக்கான பயிற்சி என்கிறார்.

            பள்ளியில் பயிலும்போதே தமிழ்ச் செய்யுள்கள்களை மனனம் செய்து ஒப்பிப்பதோடு மட்டுமல்லாமல், முழுப் பாடத்தையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக திகழ்ந்தார். பள்ளித் தமிழாசிரியர் மணிமொழியன்  அவர்கள் இவரைசொற்பொழிவு மன்னன்என்று அழைத்துப் பாராட்டினார். மாணவப் பருவத்திலேயே சக மாணவர்களுடன் இணைந்து கையேடு வெளியிட்டிருக்கிறார்.

            பள்ளியில் மாணவர் மன்ற செயலாளராகவும், மதுரை நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முதல் ஆண்டில் மாணவர் பேரவைத் தலைவராகவும், சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி மாநில செயலாளராகவும் பங்காற்றியிருக்கிறார். வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரசு நிவாரண உதவி கேட்டுப் போராடி சிறை சென்றிருக்கிறார்.

            கல்லூரியில் படித்தபோது அன்றைய பல்கலைக்கழக துணைவேந்தர் நே.து.சுந்தரவடிவேலு அவர்களால் "இந்த ராமலிங்கம் சந்திர மண்டலத்தில் மனிதர் குடியேறும் போது அவர்களுக்கும் தமிழ் கற்றுத் தரவேண்டும்" என்று பாராட்டப்பட்டார்.

            தவத்திரு குன்றக்குடி அடிகளார், .பொ.சி., சங்கரய்யா, ஆர். உமாநாத் ஆகியோரின் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் தன்னுடைய பேச்சின் மூலம் ஆழமான விஷயத்தைக்கூட சட்டென புரிய வைப்பவர். மிகுந்த எள்ளலுடன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதனாலேயேமேடைக் கலைவாணர்என எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.

            தனது வீட்டருகே இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து நடிகர்கள் மறந்து போன வசனங்களை நினைவுபடுத்தும் வேலையைச் செய்து வந்ததில் அதன் வழியே எழுதத் தொடங்கியவர். கண்ணதாசன், மனிதன் போன்ற இதழ்களைப் படித்ததில், துவக்க காலத்திலேயேநெஞ்சில் நீ’, ‘புதியதோர் உலகம்’, ‘இதிலென்ன தவறுஎன்ற மூன்று நாடகங்கள் எழுதி இருக்கிறார். மதுரை வானொலியில்மண்சட்டிஎன்ற நாடகம் ஒலிபரப்பானது.

            இவர் மேடையில் பேசிய பேச்சு, ‘சமூகமும் இலக்கியமும்என்ற தலைப்பில் செம்மலர் இதழில் கட்டுரையாக வெளிவந்து வரவேற்பு பெற்றது.

            1968 இல் குறிஞ்சி இதழை நடத்திவந்த நெடுமாறன் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவாகஊழியர் கலை எழுச்சி மன்றம்என்ற அமைப்பு இருந்தது.  இதில் எம்.ஆர்.எஸ்., மணி, புலவர் ராஜாமணி போன்றோர் இருந்தனர். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். 1971 இல் தேர்தல் பிரச்சார மேடைகளில் முதன்முதலாக பேச ஆரம்பித்தார்.

            சிறுவயதிலேயே வறுமையில் வாழும் மக்களுடன் வாழ்ந்ததால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு இன்றளவும் அதன் வழியில் பயணிப்பவர்.

            சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், .டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.

            சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும். என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப சிறந்த வாசிப்பாளர். ‘பள்ளிப் படிப்பு பலம், நூல் வாசிப்பு பக்கபலம், இரண்டும் இணையும்போது நாம் வாழ்வு சிறக்கும்என்பதை அடுத்த தலைமுறைக்கான அறிவுரையாக வழங்குகிறார்.

            மனித நேயம், மக்கள் ஒற்றுமை, சமுதாய மாற்றம்இவற்றையே தன் படைப்புகளின் நோக்கமாகக் கொண்டு, அதன் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார்.

            மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார்.

            தமுஎகசவில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1. சின்ன பாப்பாவுக்கு செல்லப்பாட்டு

2. மார்க்ஸ் வரலாறு

3. ஏங்கெல்ஸ் வரலாறு

4. லெனின் வரலாறு

5. ஸ்டாலின் வரலாறு

6. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பயில்வது எவ்வாறு?

பெற்ற பரிசுகள் / விருதுகளின் பட்டியல்

1. தமிழக காவல்துறையால் நடத்தப்படும் சிறுவர் அரங்கம் சார்பில் வேலூரில் நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

2. சுவாமி சதானந்தா மணி விழாவில் வழங்கப்பட்டஅரசியல் நவரத்தினம்என்ற விருது

3. தமிழ்நாடு வல்லரசு பார்வர்ட் பிளாக் சார்பில் வழங்கப்பட்டதேவர் திருமகனார்விருது

4. நேரு யுவகேந்திரா நெல்லை பாலு சார்பில் வழங்கப்பட்டசேவைச் செம்மல்விருது.

இணைய இணைப்புகள்