Jul 29, 2021

எழுத்தாளர் ஜோதி பாரதி

 தொகுப்பு : கு.ஹேமலதா

                எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பல குரல் கலைஞர், சொற்பொழிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் ஜோதி பாரதி அவர்கள் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில், 2.6.1963 ல் பழனியாண்டி- முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

                கவிஞர் ஜோதி பாரதி அவர்களின் இயற்பெயர் எஸ்.பி. செல்வராஜ். அவரது முதல் கவிதையான 'பாரதி முரசு' என்ற தலைப்பில் உள்ள பாரதியையும், தங்கை செல்வஜோதியின் மேல் கொண்ட பாசத்தினால்  அவரது பெயரில் உள்ள ஜோதியையும் இணைத்து 'ஜோதி பாரதி' என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.

                தற்போது தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மனைவி அம்பிகா செல்வராஜ், மகன் S.P.S.கெளதம் விக்னேஷ்வரன் பொறியியல் படித்து தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

                தேனி மாவட்டம் போடி C.P.A. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,1981 இல் பாரதியாரின் நூற்றாண்டை போற்றும் விதம் கல்லூரி வெளியிட்ட ஆண்டுவிழா மலரில் இவரது முதல் கவிதை 'பாரதி முரசு' வெளியானது. அவருடைய கல்லூரி காலத்தில், நண்பர் இரவிச்சந்திரனுடன் இணைந்து இலக்கியச் சிந்தனை கொண்ட கவிதைகளை எழுதியும், நாடக அரங்கேற்ற முயற்சிகளையும் செய்துள்ளார். கவியரசு வைரமுத்து மற்றும் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக திரைத்துறையில் ஒரு இயக்குனராக தடம் பதிக்கும் கனவுடன் இருந்த கவிஞர் ஜோதி பாரதி, தனது தாயாரின் திடீர் மரணமும், அதைத் தொடர்ந்து குடும்பத்தை காக்கும் பொறுப்பினாலும்  தனது கனவினைக் கைவிட்டார்.

                தன்னுடைய பால்யகால நண்பரும், பிரபல நாவலாசிரியருமான தோழர் ம.காமுத்துரையுடன் ஒரே நூற்பாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்தார். அதே வேளையில், மதுரையில் இருந்து வெளிவந்த தினசரி நாளிதழில் இவரது காதல் கவிதை வெளிவந்து இவரது கவிஞர் முகம் வெளியில் தெரியத் தொடங்கியது. தொடர்ந்து தேனி மாவட்ட தோழர்கள் அல்லி உதயன், தேனி சீருடையான், பொன்விஜயன், பா. ராமமூர்த்தி, ந.சேதுராமன், ம.காமுத்துரை, பீர் முகமது அப்பா, இதயகீதன் ஆகியோரின் தோழமை மற்றும் வழிகாட்டுதலிலும் கவிதைகள் எழுதியும், கவியரங்கங்களிலும்  பங்கேற்று வந்துள்ளார்.

                இவரது கவிதைகள் ஆனந்த விகடன், செம்மலர், தீக்கதிர், வண்ணக்கதிர், வாரமலர் போன்ற முன்னணி இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆம் ஆண்டு 'ராஜ் தொலைக்காட்சி'யில் கவி மேடை என்ற நிகழ்வில் தோன்றி கவிமுழக்கம் செய்திருக்கிறார்.

                இவரது ஆசிரியப்பணி, இலக்கிய  படைப்புகளுக்கிடையே 'கவிஞர் சூர்யதாஸ் கவிதைகளில் முற்போக்கு சிந்தனைகள்' என்ற தலைப்பில் தமிழாய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 'ம.காமுத்துரை படைப்புகளில் மண்ணும் மனித உறவுகளும்' என்ற தலைப்பில் தமிழாய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு பட்டமளிப்பு விழாவில், அன்றைய தமிழக ஆளுநர் மேதகு C.H.வித்யா சாகர் ராவ் அவர்களின் கரங்களால் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வுப் பணியினையும், இலக்கியப் பணியினையும் சிறப்பிக்கும் விதம் நாகாலாந்து பல்கலைக்கழகம் Doctor of Literature (D.Lit) என்ற 'முதுமுனைவர்'பட்டத்தை வழங்கியது.

                இவரது கவிதை படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களுக்கு மைல்கல்லாக கடந்த வருடம் முகநூல் வரலாற்றில் ஒரு கின்னஸ் சாதனை ஏற்படுத்தியிருக்கிறார். 1.4.2020 முதல் 31.3.2021 வரை உலக அளவில் 85 க்கும் மேற்பட்ட பல்வேறு முகநூல் குழுமங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று 4149 வெற்றிச் சான்றிதழ்களை பெற்று கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூக் கவிதை, நவீன கவிதை, சிறுகதை, பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

        முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உடல் ரீதியாக மிகுந்த பாதிப்பு அடைந்திருந்தாலும், இலக்கியத்தின் மேல் கொண்ட தீராத காதலாலும், அவரது மனைவி தரும் ஊக்கத்தாலும் பல படைப்புகளை புனைந்து வருகிறார். தமுஎகச அல்லிநகரம் கிளையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

1.அக்னிச் சிறகுகள் (1999)

2.தீராத் தீ (2009)

3.சூரியத் தூரிகை (2018)

பெற்ற பரிசுகளும்,விருதுகளும்

1.தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் பெற்ற 'கவியருவி' விருது(2000)

2.தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற 'சிகரம் தொட்ட ஆசிரியர்கள்' போட்டியில் கணிதப் பாடத்தில் முதலிடம் (2006)

3.ஆதித்தனார் பிறந்த தின விழாவில் பெற்ற 'சிறந்த இலக்கியப் படைப்பாளி சாதனையாளர் விருது'(2007)

4.தமிழ்நாடு நூலகத் துரையின் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் 'கலை இலக்கிய சாதனையாளர் விருது'(2008)

5.புதுதில்லி 'தி பெங்குவின் பப்ளிஷிங் ஹவுஸ்' வழங்கிய 'Rising Personalities of India' விருது (2009)

6.ஆசியாவின் சாதனையாளர்களைப் பற்றி வெளியிடும் 'Asian Admirable Achievers' என்ற புத்தகத்தின் 10வது பதிப்பில் இவரை பற்றிய தகவல்கள் உள்ளன.(2018)

7.தினமலர் நாளிதழ் வழங்கிய "இலட்சிய ஆசிரியர்" விருது (2019)

இணைய இணைப்புகள்