Aug 18, 2021

ஆய்வாளர் அ. பகத்சிங்

 தொகுப்பு : பிரேமாவதி நீலமேகம்

            "பழங்குடிகள் என்றாலே, இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, அரைகுறை ஆடையுடன், விலங்குகளின் எலும்புகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, 'கைய்யோ, முய்யோ' என்று பேசுவதும் அரைகுறை ஆடையுடன் நடனமாடுவதும்தான் அவர்களுக்கான அடையாளமாக நம் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது."

            மேற்கண்ட வாக்கியத்தோடு தொடங்குகிறது 'வாழும் மூதாதையர்கள்' என்ற நூல். பழங்குடிகள் என்றால் யார், மனித வரலாற்றில் அவர்களுக்கு இருக்கின்ற தவிர்க்க முடியாத பங்கு என்ன, வரலாற்று ஆய்வாளர்களும் சூழலியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து அவர்களுக்கு முதன்மைத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பது ஏன் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது அந்த நூல்.


            அந்நூலின் ஆசிரியர் . பகத்சிங் அவர்கள் சென்னை எண்ணூரில் பிறந்து வளர்ந்தவர். சென்னைவாசியாக இருந்த போதிலும் பழங்குடி மக்களைப் பற்றிய ஆய்வில் மிகுந்த முனைப்போடு பங்காற்றி வருகிறார்.

            வீர அருண் மற்றும் கலாவதி இவர்களின் மகனாக 1984 இல் பிறந்த . பகத்சிங் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்து, சென்னை பல்கலை கழகத்தில் எம்.. மானிடவியல் படிப்பையும், புதுவை பல்கலைக்கழகத்தில் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுப் படைப்புகளையும் முடித்திருக்கிறார். தற்போது புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

            தன்னுடைய இளமுனைவர் பட்ட ஆய்வுக்காக ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகளின் நிலையைப் பற்றிய ஒரு கள ஆய்வு   2008 முதல் 2009 வரை நெல்லை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வின் தொகுப்பே முள்கிரீடம் என்ற பெயரில் 2012ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. இதுவே இவரின் முதல் நூலாகும்.  இந்த நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், 2012 ஆம் ஆண்டுக்கான சு.சமுத்திரம் நினைவு விளிம்பு நிலை மக்களுக்கான சிறந்த நூல் விருது கிடைத்துள்ளது.

            அவர் படித்தது மானிடவியல் என்பதால் அத்துறை சார்ந்து பழங்குடிகளைப் பற்றிய ஆராய்ச்சியும் தேடலும் தொடர்ந்து கொண்டிருந்தது.  பல்வேறு பழங்குடி இன மக்களுடன் நேரடியாக பயணித்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வைப் பற்றிய பல புரிதல்களை அவருக்கு அளித்துள்ளன. அதன் தொடர்ச்சியாக பழங்குடியினருடன் ஏற்பட்ட அனுபவங்களைக் கட்டுரைகளாக தொகுக்கும் முயற்சியில்சோளகர் வாழ்வும் பண்பாடும்என்ற குறுநூலை 2014 இல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலினைத் தொடர்ந்து பல்வேறு பழங்குடி இன மக்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையேனும் செய்து விடவேண்டும் என்ற நோக்கோடு, தன்னுடைய நண்பர் சண்முகானந்தம் அவர்களின் உதவியோடு, காடு, உயிர் போன்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

            இவற்றின் தொகுப்பே தற்போதுவாழும் மூதாதையர்கள்என்ற நூலாக வெளி வந்துள்ளது.  ஆதிக் குடிகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்துதல் என்பது குறைவு. அந்த ஆவணப்படுத்துதலைத் தற்போது இவரது நூல் மூலம் துவக்கி இருப்பது வருங்கால சந்ததியினருக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

            இதுவும் முழுத் தொகுப்பு அல்ல. இன்னும் தொகுக்கப்பட வேண்டிய பழங்குடியின வரலாறு ஏராளமாக உள்ளது. அவற்றை முடிந்த அளவு தொகுக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.

        மீனவர்களின் பாரம்பரிய தொழில் மற்றும் மேலாண்மைஎன்ற தலைப்பில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக சோழமண்டல மீனவர்களின் வாழ்வியல், பண்பாடு, வரலாறு பற்றி ஆய்வு செய்து வருகின்றார். மீனவர்களின் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள் சார்ந்தும் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். சென்னையின் பண்பாட்டு அடையாளமான கானாப்பாடல்கள் பற்றி சமூக மானிடவியல் நோக்கில் ஆய்வு செய்துவருகின்றார்.

அரசியல், சமூகம் சார்ந்த அபுனைவு எழுத்துக்களில் கவனம் செலுத்தினாலும், இனவரைவியல்,  சமூகவரலாறு சார்ந்த புனைவுகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளார். தமுஎகச வடசென்னை மாவட்டத்தின் துணை செயலாளராக பங்காற்றி வருகிறார்.

            "பலமுனை நெருக்கடிகளைச் சந்திப்பவர்களாகப் பழங்குடிகள் உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் சமூக - பொருளாதார நெருக்கடியும் பாதிப்புகளும் பொது வெளிச்சத்துக்கு வராமலேயே போகின்றன. வனம் என்பது இன்று வணிக மையமாகப் பாவிக்கப்படுவதால், பழங்குடிகளை வெளியேற்றப் பல்வேறு சதி செயல்கள் அரங்கேற்றப்படுகிறது. அரசும் இந்த வணிக மயத்தை ஊக்குவிக்கவே செய்கிறது. மறுபுறம் பழங்குடிகளை வளர்த்துவிட மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் யாவும் பழங்குடிகளின் உள்ளார்ந்த சமூகப் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக இல்லாமல் பொதுச் சமூகத்தின் தேவைகளை அவர்களின் மீது திணிப்பதாக மட்டுமல்லாமல், அவர்களை வனத்துக்கு வெளியே கொண்டு வர நெருக்கடி உருவாக்குவதாகவே உள்ளது.

            புலிகள் பாதுகாப்புக்காக இப்போது கையாளப்படும் முறைகள்கூட மறைமுகமாகப் பழங்குடிகளை வனத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து பழங்குடிகளைப் பாதுகாப்பது என்பது சூழலியல் பாதுகாப்போடு சேர்ந்தது. எனவே, பொதுச் சமூகத்துக்கு பழங்குடிகளின் வாழ்க்கை குறித்து இன்னும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதற்கு பழங்குடியியல் ஆய்வுகளும் இலக்கியமும் அதிகம் வெளிவர வேண்டும்என்று தன்னுடையவாழும் மூதாதையர்நூல் வெளியீட்டில் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் . பகத்சிங் அவர்கள்.

வெளிவந்துள்ள நூல்கள்

1. முள்கிரீடம் - ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் - ஒரு கள ஆய்வு (எதிர் வெளியீடு)

2. சோளகர் - வாழ்வும் பண்பாடும் (எதிர் வெளியீடு)

3. வாழும் மூதாதையர்கள் (உயிர் பதிப்பகம்)

விருதுகள்

1. தமுஎகசவின் சு.சமுத்திரம் நினைவு விளிம்பு நிலை மக்களுக்கான சிறந்த நூல் விருது

இணைய இணைப்புகள்