Aug 17, 2021

எழுத்தாளர் ராஜசங்கீதன்

 தொகுப்பு : நேயா புதுராஜா

            "எத்தனை இடர்கள் வந்தாலும் அதை என்னால் தாண்டி வரும் போது உன்னாலும் வர முடியும்" என்ற உத்வேகமான வாக்கியத்தை தன் தோழமைகளுக்கு சொல்லித்தேற்றும் தோழர். ராஜ சங்கீதன் அவர்களின் பூர்வீகம் மதுரையில் உள்ள திருமங்கலம். 1983 ம் ஆண்டில் தோழர்.பி.ஜே.ராஜய்யா, ரூபி பிளாரன்ஸ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை பிரபல பத்திரிக்கையாளர், தாய் ஆசிரியராக பணியாற்றியவர். ராஜசங்கீதன் அவர்களின் இணையர் தோழர்.கவிதா கஜேந்திரன் அவர்கள் தற்போது திருவல்லிக்கேணி பகுதிக்கான "அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்" அமைப்பின்  தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் நம் நாடு முழுவதும் நடத்தப்படும் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு  முன்களப்பணியாளராகவும் செயலாற்றுகிறார்.

            ராஜசங்கீதன் அவர்கள் சிறு வயதிலேயே அப்பாவின் எழுத்தின் தாக்கத்தால் தானும் எழுத வேண்டும் என்ற முனைப்பில் ஐந்து வயதில் முதல் கதை புனைந்திருக்கிறார். அந்த வயதிலேயே எழுத்தின் மீதான நாட்டம் தொடங்கியள்ளது. தன் பள்ளிப்படிப்பை மதுரை மற்றும் சென்னையில் முடித்தார். இளம் வயதில் ரஷ்ய இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்படத்துறையின் மீது  இருந்த ஆசையின் காரணமாக தொலைதூரக் கல்வி முறையில் பட்டதாரியானார். அந்த காலகட்டத்தில் திரைப்படத்துறையில் இயங்க வேண்டும் என்பதற்காக அதற்கான முழுவீச்சில் தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். வாசிப்பின் வழியே தான் சுய படைப்பு என்பது போல் பல்வேறு திரைப்படங்களின் பார்வையாளாராக இருந்தபடியால் இன்றும் அவரது திரைப்படங்கள் சார்ந்த கட்டுரை, படிப்போரைக் கவரும் வகையில் உள்ளது.

            பி.பி.ஓ வேலையில் இருக்கும் போது, வாழ்வின் நடுவே ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க புத்தகங்களும், எழுத்தும் துணை புரிந்ததாக குறிப்பிடுவார். அந்த காலகட்டத்தில்  "வாசக சாலை" யின் உறுப்பினரான நிலையில் தொடர்து முகநூலில் வந்த இவரது கட்டுரைகள் பல தரப்பு மக்களை ஈர்த்தது. தோழர்களின் வற்புறுத்தலை அடுத்து அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து  "சொக்கட்டான் தேசம்" என்ற புத்தகமாக "வாசகசாலை"யின் பதிப்பாக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட்டார். இதில் சமூகம், சினிமா, அரசியல், திரைப்படங்கள், ஆளுமைகள் என அவை பேசாத தளங்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு கட்டுரைகளும் அற்புதமாக இருக்கிறது. இதன் பின் பல்வேறு கூட்டங்களில் பேச இவருக்கு அழைப்பும் வந்திருக்கிறது. தொடர்ந்து மிக சிறந்த பேச்சாளராகவும், கட்டுரையாளராகவும் செயலாற்றி வருகிறார். தமுஎகச வில் சேர்ந்த குறுகிய காலத்தில் தமுஎகச மத்திய சென்னை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேலும் "பூவுலகின் நண்பர்கள்" என்ற அமைப்பினரோடு சேர்ந்து செயலாற்றி வருகிறார்.

            மிகச்சிறந்த மனித உரிமை செயல்பாட்டாளர் திரு.ராம் புனியானி, சென்னையில் "இந்திய மாதர் தேசிய சம்மேளனம்" ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய உரையை, "மதவாத தேசியம்" என்ற தலைப்பில் ராஜசங்கீதன் அவர்கள்  தமிழில் மொழிப்பெயர்த்து அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

            பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய இவர், இப்போது தமிழகத்தின் பிரபலமான தனியார் தொலைகாட்சியின் செய்திப் பிரிவில் வேலை செய்கிறார். ஊடகத்துறை வழியே சினிமாத்துறைக்குள் நுழைய வேண்டும் என்பதே அந்தத் துறையை தேர்ந்தெடுக்க காரணம் எனவும் சொல்வார்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளில் கூட காலநிலை மாற்றத்தை பற்றிய அவரது கட்டுரை முகநூலில் வெளியாகி உள்ளது, ஏற்கனவே இது பற்றிய யூடியூப் உரைகளும், கட்டுரைகளும் இவர் வருங்கால சமூகத்தின் மேல் உள்ள அக்கறையைக் காட்டுகிறது. சமரசம் இல்லா நடுநிலையான இவரது படைப்புகள் தொடர்ந்து சமூகத்தின் நிலையை பறைச்சாற்றுகின்றன.

வெளியான புத்தகங்கள்

1) சொக்கட்டான் தேசம்-வாசகசாலை வெளியீடு

2) மதவாத தேசியம்-பாரதி புத்தகாலய வெளியீடு

இணைய இணைப்புகள்